கல்வியாளராக மலர்ந்த அண்டக்கதிர் விஞ்ஞானி

3 May

யஷ்பால்

பேராசிரியர் யஷ்பால்

இந்தியாவின் உயர்கல்வியில் மாற்றம் தேவை என்று குரல் கொடுத்ததுடன், அதற்கான திட்ட அறிக்கையையும் தயாரித்து அளித்தவர், அண்டக்கதிர்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானியான பேராசிரியர் யஷ்பால்.

பிரிக்கப்படாத இந்தியாவின் ஜாங் மாவட்டத்தில் (தற்போதைய பாகிஸ்தான்) 1926, நவ. 26-இல் பிறந்தார் யஷ்பால். அவரது குடும்பம் ஹரியாணாவுக்கு குடிபெயர்ந்தது. கைதல் நகரில் அவரது பள்ளிப் பருவம் கழிந்தது.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்ற யஷ்பால் (1949), மும்பையிலுள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் (TIFR) இளம் விஞ்ஞானியாக இணைந்தார். அந்த உறவு 1983 வரை நீடித்தது. அங்கு அண்டக்கதிர்கள் (Cosmic Rays) குறித்த ஆய்வுக்குழுவில் அவர் உறுப்பினராக இருந்தார். இத்துறையில் பல ஆராய்ச்சி நூல்களை அவர் எழுதியிருக்கிறார்.

அங்கு பணியில் இருந்தபோதே முனைவர் பட்ட ஆய்வுக்காக பிரிட்டனின் மாசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரிக்குச் சென்று பயின்று, இயற்பியலில் பிஎச்.டி. பட்டம் பெற்றார் (1958). அதன்பிறகும் டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டார்.

1972-இல் இந்திய அரசு விண்வெளி ஆராய்ச்சித் துறையை நிறுவியது. அதற்கு முன்னதாகவே இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தனது பணிகளைத் துவங்கியிருந்தது. அதன் துணை அமைப்பாக, விண்வெளிப் பயன்பாடுகள் மையம் (Space Applications Centre-SAC) 1972-இல் ஆமதாபாத்தில் நிறுவப்பட்டது. அதன் முதல் இயக்குநராக யஷ்பால் 1973-இல் பொறுப்பேற்றார்.

இந்திய விண்வெளித் துறைக்காக, தொலை உணர்வு, தகவல் தொடர்பு, வளிமண்டல இயல், மென்பொருள், வன்பொருள் தயாரிப்பு, செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆகிய பணிகளில்   ‘சாக்’ ஈடுபட்டு வருகிறது. 1981 வரை யஷ்பால் அந்த நிறுவனத்தை திறம்பட நிர்வகித்தார்.

இந்தக் காலகட்டத்தில் செயற்கைக்கோள் வழி தொலைக்காட்சி கற்பித்தல் பயிற்சி திட்டம் (Satellite Instructional Television Experiment -SITE) யஷ்பாலின் முயற்சியால் உருவானது. இதன்மூலமாக, நாட்டின் ஊரகப் பகுதிகளுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக கொண்டு சேர்க்கப்பட்டன.

இஸ்ரோ நிறுவனத்திலும் விஞ்ஞானியாக 1980- 83 காலகட்டத்தில் யஷ்பால் செயல்பட்டார்.

நிறுவனங்களை உருவாக்கும் யஷ்பாலின் திறனை அறிந்த இந்திய அரசு, அவரை அதற்கான பணிகளில் ஈடுபடுத்தத் துவங்கியது.  1983-84-இல் மத்திய திட்டக் குழுவின் தலைமை ஆலோசகராக யஷ்பால் நியமிக்கப்பட்டார். 1984 முதல் 1986 வரை மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் செயலாளராகப் பணிபுரிந்தார். 1986 முதல் 1991 வரை, பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தலைவராகச் செயல்பட்டார்.

யுஜிசி தலைவராக இருந்தபோது, யஷ்பாலிடமிருந்த கல்வியாளர் வெளிப்பட்டார். உயர்கல்வித் துறையில் நிலவிய தேக்கத்தைப் போக்க அப்போது பல முயற்சிகளை அவர் மேற்கொண்டார். பல்கலைக்கழகங்களிடை மையங்களை (Inter-University Centres- IUC) நிறுவினார்.

உள்கட்டமைப்புக்கு பெருமளவு செலவிட இயலாத பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான நவீன வசதிகள் மற்றும் சேவைகளை, மையப்படுத்தப்பட்ட அமைப்பாக அளித்தல், நாடு முழுவதுமுள்ள ஆய்வாளர்கள், பேராசிரியர்களின் திறனை மேம்படுத்துதல், ஆராய்ச்சியாளர்களுக்கு உலகத் தரத்திலான நூலக வசதி, அதிநவீனக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதி ஆகியவற்றை ஐயுசி ஏற்பாடு செய்கிறது. தற்போது ஆறு விதமான பல்கலைக்கழகங்களிடை மையங்கள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன.

முதலாவதாக, 1994-இல் அணுக்கரு அறிவியல் மையம் தில்லியில் துவங்கப்பட்டது. அது தற்போது பல்கலையிடை முடுக்க மையம் (Inter University Accelerator Centre -IUAA) எனப் பெயர் மாறியிருக்கிறது. இது தற்போது 83 பல்கலைக்கழகங்கள், 54 கல்லூரிகள், 63 ஆய்வகங்களுக்கு ஆராய்ச்சி உதவிகளை அளிக்கிறது.

அதேபோல, புனாவிலுள்ள ஐயுசிஏஏ (IUCAA) விண்வெளியியல் மற்றும் விண்வெளி இயற்பியலுக்கான பல்கலையிடை மையமாக உள்ளது. இந்தூரிலுள்ள பல்கலை.களின் அறிவியல் ஆராய்ச்சிக்கான கூட்டமைப்பு (UGC-DAECSR), ஆமதாபாத்திலுள்ள தகவல் மற்றும் நூலக வலைப்பின்னல் (INFLIBNET), தில்லியிலுள்ள கல்வித் தகவல் தொடர்புக்கான கூட்டமைப்பு (CEC), பெங்களூரிலுள்ள தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை (NACC) ஆகிய அமைப்புகளும் இதே நோக்கத்துடன் இயங்குகின்றன. இவற்றை நிறுவியதில் யஷ்பாலின் பங்களிப்பு இன்றியமையாதது.

பள்ளிக் குழந்தைகளின் சுமைகளைக் குறைக்க யஷ்பால் தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழுவை 1993-இல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்தது. அக்குழு வழங்கிய பரிந்துரைகள் இந்திய பள்ளிக்கல்வியை சுமைகளற்றதாக மாற்றியதில் பெரும்பங்கு வகித்தன.

தேசிய கல்வி, ஆராய்ச்சி அபிவிருத்தி அமைப்பு (என்சிஇஆர்டி), தேசிய கல்வித்திட்ட வடிவமைப்புக்கான வழிகாட்டும் குழுவின் தலைவராக யஷ்பாலை நியமித்தது. அக்குழுவின் அறிக்கை 2005-இல் வெளியானது.

1995-இல் தேசிய ஆராய்ச்சி பேராசிரியராக யஷ்பால் அரசால் அறிவிக்கப்பட்டார். 1997-1999-இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் நேரு இருக்கை பேராசிரியராகவும் அவர் பணிபுரிந்தார்.

2007 முதல் 2012 வரை தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்தார் யஷ்பால். அச்சமயத்தில், உயர்கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆராய மத்திய அரசு யஷ்பால் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

அப்போது, பல்கலைக்கழகங்களை தரமுயர்த்துவது, நிகர்நிலை பல்கலைக்கழகங்களை முறைப்படுத்துவது, ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களை பல்கலைக்கழகத் தரத்தில் இயங்கச் செய்வது உள்ளிட்ட பல பரிந்துரைகளை யஷ்பால் 2009-இல் அளித்தார்.

கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு தேசிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பது அவரது முக்கியமான பரிந்துரையாகும். அதில் ஏஐசிடிஇ, மருத்துவ கவுன்சில் போன்ற தேசிய அளவிலான 13 கல்விக் கட்டுப்பாட்டு அமைப்புகளும் இடம்பெற வேண்டும் என்றார் யஷ்பால். இந்தப் பரிந்துரை இன்னமும் அரசால் நிறைவேற்றப்படவில்லை.

பல்வேறு தேசிய, உலக அளவிலான கல்வி, ஆராய்ச்சி அமைப்புகளில் உறுப்பினர், நிர்வாகி, ஆலோசகர் பொறுப்புகளில் யஷ்பால் இன்றும் உள்ளார். இந்திய இயற்பியல் சங்கம், தேசிய அறிவியல் அருங்காட்சியக கூட்டமைப்பு போன்றவற்றின் தலைவராகவும், பல பல்கலைக்கழகங்களின் வருகைப் பேராசிரியராகவும் யஷ்பால் இருந்துள்ளார்.

தகவல் தொடர்பை கிராம மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தியதில் யஷ்பாலின் பங்களிப்பைப் பாராட்டி, மார்கோனி அறக்கட்டளையால்  மார்கோனி சர்வதேச விருது 1980-இல் அவருக்கு வழங்கப்பட்டது.

தூர்தர்ஷன் வாயிலாக அறிவியலை எளிய முறையில் மாணவர்களிடம் சேர்க்கும் தொடர் நிகழ்ச்சிகளை அவர் நடத்தியிருக்கிறார். அறிவியல், கல்வி, ஆராய்ச்சி தொடர்பான பல நூறு கட்டுரைகளை அவர் ஊடகங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். அறிவியலை மக்களிடையே பரப்பியதற்காக யுனெஸ்கோவின் கலிங்கா விருது 2009-இல் யஷ்பாலுக்கு வழங்கப்பட்டது.

1976-இல் பத்மபூஷண், 2013-இல் பத்மவிபூஷண் விருதுகளை இந்திய அரசு அவருக்கு அளித்து கௌரவித்தது. மேலும் பல சர்வதேச, தேசிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

வாழ்நாள் சாதனையாளரான யஷ்பால் தனது 85-வது வயதிலும், அறிவியலையும் கல்வியும் இரு கண்களாகக் கருதி உழைத்துக் கொண்டிருக்கிறார்.

 

-தினமணி-இளைஞர்மணி (03.05.2016)

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: