நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழக விஞ்ஞானி

31 May

GNRamachandran1

ஜி.என்.ராமசந்திரன்

விருதுகள் தான் பலரை உலகுக்கு அடையாளம் காட்டுகின்றன. ஆனால், அதீதத் திறமையிருந்தும் பலருக்கு உரிய விருதுகள் உரிய காலத்தில் கிடைப்பதில்லை. அதனால் உலகின பரவலான கவனத்துக்கு அவர்கள் வராமலே போய்விடுகிறார்கள். அத்தகையவர்களுள் குறிப்பிடத் தக்கவர், தமிழகத்தைச் சேர்ந்த இயற்பியல், உயிரியல் விஞ்ஞானியான ஜி.என்.ராமசந்திரன்.

திருநெல்வேலி அருகே உள்ள கோபாலசமுத்திரத்தில், ஜி.ஆர்.நாராயணன்- லட்சுமி அம்மாள் தம்பதியரின் மகனாக, 1922, அக். 8-இல் பிறந்தார் ராமசந்திரன். தந்தை, கேரளத்தின் எர்ணாகுளம் கல்லூரியில் கணிதப் பேராசிரியரியராக இருந்தார்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் பி.எஸ்சி. ஹானர்ஸ் பட்டம் (1939) பெற்ற அவர், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார். துவக்கத்தில் மின்பொறியியலில் சேர்ந்தபோதும், தனது ஆர்வம் இயற்பியலில் இருப்பதை உணர்ந்து துறை மாறிய அவர், உலகப் புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானியான சர்.சி.வி.ராமனின் வழிகாட்டலில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அந்த ஆராய்ச்சி ஏட்டை சென்னை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து முதுநிலை பட்டம் பெற்றார். 1947-இல் டி.எஸ்சி. பட்டமும் பெற்றார்.

பிறகு கேம்பிரிட்ஜ் சென்ற ராமசந்திரன், அங்குள்ள காவண்டி லேபாரட்டரியில் ஆய்வாளாராகப் பணிபுரிந்தார் (1947- 1949). அங்கு எக்ஸ் கதிர்களின் கலப்புச் சிதறல் குறித்து (X Ray Diffuse Scattering) ஆராய்ச்சி செய்தார். அவருக்கு உலகப் புகழ் பெற்ற படிகவியல் (Crystallography) விஞ்ஞானியான சர் வில்லியம் ஆல்பிரட் வூஸ்டர் வழிகாட்டியாக இருந்தார். அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் பிஎச்.டி. பட்டம் பெற்றார்.

பிறகு நாடு திரும்பிய அவர், பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார் (1949). இவரது பணிச்சிறப்பை கேள்வியுற்ற சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ஆற்காடு லட்சுமணசாமி முதலியார்,  பல்கலைக்கழகத்தில் பணிபுரியுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.

அவரது அழைப்பை ஏற்று 1952-இல் ராமசந்திரன் சென்னை பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைத் தலைவர் பொறுப்பில் அமர்ந்தார். அங்கும் தனது படிகவியல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.

தனது பணிக்காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் கிறிஸ்டலோகிராபி மற்றும் உயிரி இயற்பியல் துறையை நவீனக் கருவிகளுடன் உருவாக்கினார். இன்று தேசிய அளவில் மிகச் சிறந்த ஆராய்ச்சி நிலையமாக அது விளங்குகிறது.

இயற்பியலில் நிபுணத்துவம் பெற்ற ராமசந்திரன், உயிரியலிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார். எக்ஸ் கதிர் படிகவியல், அணு காந்தவியல், புரதக் கூறியல், மூலக்கூறு உயிரியல் உள்ளிட்ட பல்துறைகளின் ஒருங்கிணைப்புடன் ஆராய்ச்சி மேற்கொள்ளும் திறன் அவருக்கு இருந்தது.

1954-இல், சக விஞ்ஞானியான கோபிநாத் கர்த்தா (1927- 1984) உடன் இணைந்து மூலக்கூறு உயிரியலில் புரதங்களின் கட்டமைப்பு பற்றிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார் ராமசந்திரன். தசைநார்ப் புரதத்தின் மும்மடி சுருள் வடிவம் (Triple Helical Structure of Collagen) குறித்த அவரது ஆய்வறிக்கை, புரதக்கூறுகள் பற்றிய தொடர் ஆராய்ச்சிக்கு உதவுகிறது.

எக்ஸ் கதிர் நுண்ணோக்கிகளில் பயன்படுத்தும் எதிரொளிப் படிகக் கண்ணாடியை ராமசந்திரன் உருவாக்கினார். அது இன்று படிக வரைவியலில் (Crystal Topography) தொடர் ஆராய்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.

புரதக்கூறுகளின் (Peptide) கட்டமைப்பை அறிய உதவும்   ‘ராமசந்திரன் வரைபடம்’  (Ramachandran Plot) என்ற கண்டுபிடிப்பை 1962-இல் அவர் உருவாக்கினார். மூலக்கூறு உயிரியலில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக இது கருதப்படுகிறது.

1970-இல் இந்திய அறிவியல் கழகத்தின் துணைப்பிரிவாக, மூலக்கூறு உயிரி இயற்பியல் பிரிவை ராமசந்திரன் நிறுவினார். அது இன்று மேம்படுத்தப்பட்ட உயிரி இயற்பியல் படிப்புகளுக்கான மையமாக புகழ் பெற்றுள்ளது.

1971-இல் சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து விலகிய ராமசந்திரன், மீண்டும் பெங்களூரு, இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்தார். அங்கு அவரது ஆராய்ச்சிகள் தொடர்ந்தன.

சக விஞ்ஞானி ஏ.வி.லட்சுமி நாராயணனுடன் இணைந்து, எக்ஸ் கதிர் வரைவியல் தொடர்பான புதிய படிமுறையை (Algorithm) 1971-இல் அவர் உருவாக்கினார். அதன்மூலமாக, மிகத் துல்லியமான, தெளிவான எக்ஸ் கதிர் படங்களை எடுக்கும் அதி நவீன ஸ்கேனிங் இயந்திரங்கள் இப்போது தயாரிக்கப்படுகின்றன.

அவரது புரதவியல் பங்களிப்புக்காக நோபல் பரிசுக்காக ராமசந்திரன் பரிந்துரைக்கப்பட்டார். தவிர, சர்வதேச கிறிஸ்டலோகிராபி சங்கம் அவருக்கு எவால்டு விருதை வழங்கி கௌரவித்தது.

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1961), பிரிட்டனின் எஃப்.ஆர்.எஸ். (1999), இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் ஃபெல்லோஷிப் உள்ளிட்ட பல கெüரவங்களை அவர் பெற்றுள்ளார்.

1998-இல் மனைவி ராஜலட்சுமியின் மறைவுக்குப் பிறகு, தனிமையில் வாடிய அவர் பார்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டார். 2001, ஏப். 7-இல் சென்னையில் அவர் காலமானார்.

இயற்பியலிலும் உயிரியலிலும் பல முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய விஞ்ஞானி ஜி.என்.ராமசந்திரன் ஆவார். சிறந்த பேராசிரியராகவும் அவர் திகழ்ந்தார். ஆயினும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல், இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்குக் காரணமான தமிழக விஞ்ஞானியான அவரை தமிழகத்திலேயே பலரும் அறியாமல் உள்ளோம். ராமசந்திரன் போன்ற முன்னோடிகளை நினைவுகூர்வதன் மூலமாகவே, நாம் மேலும் வளர முடியும்.

 

-தினமணி இளைஞர்மணி (31.05.2016)

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: