பாரத ரத்தினமான வேதியியல் விஞ்ஞானி

7 Jun

சி.என்.ஆர்.ராவ்

சி.என்.ஆர்.ராவ்

“இந்தியாவில் அறிவியல் வளர்ச்சியை தகவல் தொழில்நுட்பத் துறை விழுங்கிவிட்டது. தகவல் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களில் எத்தனை பேர் பிஎச்.டி. ஆய்வு செய்கின்றனர் என்று பாருங்கள். பணம் சம்பாதிப்பது மட்டுமே இத்துறையின் இலக்காகி விட்டது. இதைத் தலைமுழுகினால் தான் அறிவியல் வளரும்…

அணுகுண்டு சோதனையும், ராக்கெட் ஏவுதலும் செயற்கைக்கோள்களும் தான் அறிவியல் வளர்ச்சியாக நம் நாட்டில் மதிக்கப்படுகின்றன. பாதுகாப்புத் துறை தொடர்புடைய பணிகளை மட்டுமே அரசுகள் அறிவியல் பணிகளாகப் பார்க்கின்றன. இவை உண்மையில் அறிவியல் வளர்ச்சி அல்ல; தொழில்நுட்ப சாதனைகள் மட்டுமே. இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற அடிப்படை அறிவியல் துறைகளில் நாம் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளோமோ, அதுதான் நமது நாட்டின் அறிவியல் வளர்ச்சி…’”

-இவை பாரதரத்னா விருது பெற்ற வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவின் உள்ளத்திலிருந்து வெளியான வார்த்தைகள். பல பிரதமர்களுக்கு அறிவியல் ஆலோசகராக இருந்துள்ள ராவ், அதற்காக அரசை விமர்சிக்கத் தயங்குவதில்லை. அதனால் சர்ச்சைகளில் சிக்கினாலும் அவர் கவலைப்படுவதும் இல்லை.

மைசூரு மாகாணத்தின் பெங்களூரில் 1934, ஜூன் 30-இல் பிறந்தவர் சிந்தாமணி நாகேச ராமசந்திர ராவ். சுருக்கமாக சி.என்.ஆர்.ராவ். இவரது தந்தை ஹனுமந்த நாகேச ராவ், தாய் நாகம்மா இருவரும் கல்வியாளர்கள். தந்தையிடமிருந்து  ஆங்கில அறிவையும் தாயிடமிருந்து இந்து சமய அறிவையும் பெற்ற ராவுக்கு, சிறு வயதில் வீட்டிலேயே ஆரம்பக் கல்வி கற்பிக்கப்பட்டது.

1944-இல் ஏழாம் வகுப்பு தேர்வான ராவ், பசவன்குடியிலுள்ள ஆச்சார்ய பாடசாலாவில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை 1947-இல் முடித்தார். பிறகு பெங்களூரு மத்திய கல்லூரியில் சேர்ந்து, தனது 17-வது வயதில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார்!

மேற்படிப்புக்காக பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்துக்குச் சென்ற அவர், வேதியியலில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றார் (1953). அங்கு உலகப்புகழ் பெற்ற வேதியியல் விஞ்ஞானியான லினஸ் பௌலிங்கின் The Nature of the Chemical bond  நூலைப் படித்தார். தனது வேதியியல் குருவாக அவரையே வரித்துக் கொண்டார்.

அவருக்கு கரக்பூர் ஐஐடியிலிருந்து உதவித்தொகையுடன் கூடிய மேற்படிப்புக்கு அழைப்பு வந்தது. அதேசமயம், மேலும் 4 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலிருந்தும் அவருக்கு அதேபோன்ற அழைப்பு வந்தது. இறுதியில், அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழகத்துக்குச் சென்ற ராவ், 1958-இல் தனது 24-வது வயதில் பிஎச்.டி. பட்டம் பெற்றார்!

அங்கு பயின்றபோது, வேதியியல் துறையில் நிறமாலை, எக்ஸ் கதிர்கள், எலக்ட்ரான் விளிம்பு வளைவு சோதனைகள் மூலமாக ரசாயன மூலக்கூறுகளை ஆராய்ந்தார். அப்போது அங்கு வந்த அவரது கனவு நாயகரான லினஸ் பௌலிங்கிடம் தனது ஆய்வு முடிவுகளைக் காட்டினார். அவற்றை ஏற்ற லினஸ் தனது ஆய்வேட்டில் அவற்றைக் குறிப்பிட்டார்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சிறிதுகாலம் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ராவ், 1959-இல் இந்தியா திரும்பினார். பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.

1963-இல் கான்பூரில் புதிதாகத் துவங்கப்பட்ட ஐஐடியின் வேதியியல் துறையில் இணைந்தார். அங்கு சென்ற ஓராண்டிலேயே துறைத் தலைவராக உயர்ந்தார். 1976 வரை அங்கு பல்வேறு வேதியியல் ஆராய்ச்சிகளில் ராவ் ஈடுபட்டார். இதனிடையே 1964-இல் இந்திய அறிவியல் அகாதெமியின் ஆய்வாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பிரபல விஞ்ஞானி சதீஷ் தவானின் அழைப்பை ஏற்று 1976-இல் மீண்டும் பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் மீண்டும் இணைந்த ராவ், அங்கு திடநிலை மற்றும் கட்டமைப்பு வேதியியல் (solid state and structural chemistry) துறையை உருவாக்கினார். 1984-இல் இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநரான ராவ், 1994 வரை அங்கு பணியாற்றினார்.

இத்தனை பணிகளுக்கு இடையிலும் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், பர்டியூ, கலிபோர்னியா உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களின் வருகைப் பேராசிரியராகவும் ராவ் பணிபுரிந்தார். 1989-இல் பெங்களூரில் தான் நிறுவிய ஜவாஹர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆய்வு மையத்தின் (JNCASR) கௌரவத் தலைவராக தற்போது செயல்பட்டு வருகிறார்.

ராவின் சாதனைகள்:

அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் உமிழும் அல்லது உட்கவரும் ஒளியைக் கொண்டு அவற்றின் தன்மையை உணர முடியும். இதற்கான சோதனையே வேதியியல் நிறமாலை (Spectroscopy). ராவ் இத்துறையில் பல வெற்றிகரமான ஆராய்ச்சிகளை நிகழ்த்தி பல புதிய முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

உலோக ஆக்ஸைடுகளின் வெப்பநிலையை உயர்த்தியும் குறைத்தும் அவற்றின் மின்கடத்தித் திறனைக் கண்டறிந்தார் ராவ். அந்தக் கண்டுபிடிப்புகள், மின்னியலிலும் மின்னணுவியலிலும் வெகுவாகப் பயன்படுகின்றன.

மின்சாரத்தை தடையின்றிக் கடத்தும் மீகடத்திகள் (Super conductors) குறித்தும், மிக நுண்ணிய நானோ பொருள்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் (Nano Technology) வேதியியலின் பயன்பாடு குறித்தும் ராவ் பிரதானமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.

சூப்பர் கம்ப்யூட்டர்கள் தயாரிப்பில் திடநிலை வேதியியலின் பங்களிப்பைப் பயன்படுத்த ராவின் ஆராய்ச்சிகள் வித்திட்டன. அண்மையில் இஸ்ரோவால் செலுத்தப்பட்ட மங்கள்யாண் செயற்கைக்கோள் திட்டத்திலும் ராவ் துணை நின்றார்.

சி.என்.ஆர்.ராவ் இதுவரை 1,500-க்கு மேற்பட்ட ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளார். தவிர, 45 நூல்களையும் எழுதியுள்ளார். 1985 முதல் 1989 வரையும், 2005 முதல் 2014 வரையும் 5 பிரதமர்களுக்கு அறிவியல் ஆலோசகராக ராவ் இருந்துள்ளார்.

உலகம் முழுவதிலுமுள்ள 60-க்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் கௌரவ முனைவர் பட்டங்களை அவர் பெற்றுள்ளார். அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஜப்பான், பிரேசில், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலுள்ள அறிவியல் கழகங்களின் கௌரவ உறுப்பினராக நியமிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானி ராவ் ஒருவரே. இதுவரை ஆறுமுறை நோபல் பரிசுக்காக அவர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.

உலகிலுள்ள வளர்ச்சி குன்றிய 40 நாடுகளில் விஞ்ஞான வளர்ச்சியை மேம்படுத்த, நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் விஞ்ஞானி அப்துஸ் சலாம் 1983-இல் நிறுவிய மூன்றாம் உலக நாடுகளின் அறிவியல் அகாதெமி (Third World Academy of Sciences) அமைப்பில் உறுப்பினராகவும், தலைவராகவும் ராவ் செயல்பட்டுள்ளார். இன்னும் 20 ஆண்டுகளில் உலக அளவில் அறிவியல் வளர்ச்சியில் வளரும் நாடுகளின் பங்களிப்பு 30 சதவீதமாக இருக்க வேண்டும் என்பது ராவின் கனவு.

இங்கிலாந்து பாரடே கழகத்தின் மார்லே விருது (1967), ராயல் சொûஸட்டியின் பதக்கம் (1981) ஹக்ஸ் பதக்கம் (2000), யுனெஸ்கோவின் ஐன்ஸ்டீன் விருது (1996), லண்டனின் எஃப்.ஆர்.எஸ் (1984), பிரான்ஸின் செவாலியே (2005), ருஷ்யாவின் நட்புறவு விருது (2009), ஜப்பானின் ஆர்டர் ஆப் ரைசிங் சன் (2015) உள்ளிட்ட உலக அளவிலான பல கௌரவங்களை ராவ் பெற்றுள்ளார்.

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1968), யுஜிசியின் சர் சி.வி.ராமன் விருது (1975), இந்திய தேசிய அறிவியல் அகாதெமியின் சத்யேந்திரநாத் போஸ் பதக்கம் (1980),  மேகநாத் சஹா விருது (1990), பத்மஸ்ரீ (1974), பத்ம விபூஷண் (1985), பாரத ரத்னா (2014) ஆகிய கௌரவங்களை உள்நாட்டிலும் ராவ் பெற்றுள்ளார்.

பெங்களூரில் இருந்தபடி, தேசத்தில் அறிவியல் வளர வேண்டும் என்ற நோக்கத்துடன், தனது  82-வது வயதிலும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டு வரும் சி.என்.ஆர்.ராவ்,   “இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி மிகவும் குறைவு. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தில் (ஜிடிபி) 2 சதவீதம் நிதி அறிவியல் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும்” என்கிறார். அதற்காக அரசாங்கத்தை விமர்சிக்கவும் அவர் தயங்குவதில்லை.

“நாட்டில் அறிவியல் மேலோங்க வேண்டும். எனது ஆதர்ஷ நாயகர் சர் சி.வி.ராமனும், எனது ஆய்வு குரு லினஸ் பௌலிங்கும் அதிகாரப் படிநிலை அறிவியலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள். அவ்வாறிருக்கும்போது, சம்பிரதாயங்களுக்கு எதிராக நான் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்கள்?” என்றும் கேட்கிறார் சி.என்.ராவ்.

கனவை விதைப்பவர்கள் ஓய்வதில்லை. அந்த வித்துக்கள் விளையாமலும் போவதில்லை.

தினமணி இளைஞர்மணி (07.06.2016)

.

 

Leave a comment