தேசபக்திப் பயிர் வளர்க்கும் நூல்

8 Jul

 

thanjai-ve-gopalan‘சுதந்திர கர்ஜனை’ நூலுக்கு அறிமுக உரை

திரு. தஞ்சை வெ.கோபாலன் ஐயா அவர்கள், அற்புதமான மனிதர்; திருவையாறில் பாரதி இலக்கியப் பயிலரங்கத்தை தனியொரு நபராக நடத்தி வருபவர்; சிறந்த எழுத்தாளர்; தேசபக்தர். அவரது நட்புறவும் ஆசிகளும் எனக்கு பெரும் பலமாக இருந்து வருகின்றன.

கடந்த 03.07.2016-இல் வெளியிடப்பட்ட அவரது ‘சுதந்திர கர்ஜனை’ நூலுக்கு நான் எழுதிய அறிமுக உரையே இது…

***

Suthnthira karjanai (1857-1947) - wrapper

அறிமுக உரை எழுதும் அளவுக்கு நான் பெரியவன் அல்ல. தவிர.  திரு. தஞ்சை வெ.கோபாலன் ஐயா அவர்களுடன் ஒப்பிடுகையில் அடியேன் மிகவும் சிறியவன். ஆயினும், அவரது அன்பான உத்தரவை ஏற்றே இந்த அறிமுக உரையை இங்கு எழுதுகிறேன். மலர்மாலையில் இடம்பெறும் நாரும் மணம் பெறுவதுபோல, இந்த உரை அமையும் என்று நம்புகிறேன்.

15 ஆண்டுகளுக்கு முன் ஈரோட்டில் வசித்தபோது, அங்கிருந்த நண்பர்களுடன் சேர்ந்து  ‘பாரதி வாசகர் வட்டம்’ என்ற அமைப்பைத் துவங்கினோம்; வாராந்திர சந்திப்புகளில் மகாகவி பாரதியார் குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொள்வோம். அப்போதுதான், திருவையாறில் இயங்கிவரும் பாரதி இலக்கியப் பயிலரங்கம் குறித்துத் தெரியவந்தது. அஞ்சல் வழியில் மகாகவி பாரதியை அறிமுகப்படுத்துவதுடன் அதில் தேர்வும் நடத்தி சான்றிதழ் வழங்கும் அந்த நிறுவனம் குறித்து அறிந்தவுடன், அதன் அஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு பயிலரங்கத்தின் பாடப் புத்தகங்களைப் பெற்றேன்.

அவற்றைக் கண்டவுடன் எனக்கு ஏற்பட்ட ஆனந்தம் இப்போதும் நினைவில் இருக்கிறது. நம்மைப் போலவே பாரதி உபாசகர்கள் இருப்பது மட்டுமல்ல, நம்மைவிட அதிவேகமாக அவரது கருத்துகளைப் பரப்பும் பணியிலும் இருப்பதைக் கண்டால் மகிழ்ச்சி பெருகாதா என்ன? பிறகுதான் அதனை நடத்துபவர் திரு. தஞ்சை வெ.கோபாலன் ஐயா என்பது தெரிய வந்தது. ஆயினும் அவருடன் நெருங்கிப் பழகுவதற்கான நேரத்தை அப்போது இறைவன் எனக்கு அருளவில்லை.

2013-2014-இல் உலகம் முழுவதும் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி கொண்டாட்டங்கள் நிகழ்ந்தபோது, நான் அங்கம் வகிக்கும் தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டோம். சுவாமிஜியின் சிந்தனைகளை தமிழில் இணையத்தில் கொண்டுசெல்வது என்ற இமாலயப் பணி அது. அதற்காக ’விவேகானந்தம்150.காம்’ என்ற இணையதளத்தைத் துவக்கினோம். அப்போது,  நண்பர் ஒருவரின் உதவியால் திரு. தஞ்சை வெ.கோபாலன் ஐயா மீண்டும் தொடர்புக்கு வந்தார். அப்போதுதான் அவரிடம் தொலைபேசியில் முதல்முறையாகப் பேசினேன். எங்கள் இணையத் திட்டத்தைக் கூறியவுடன், அவர் அடைந்த மகிழ்ச்சி அவரது குரலிலேயே தெரிந்தது. தவிர, தானும் அதற்கு கட்டுரைகள் தருவதாகவும், தனது நண்பர்களையும் அந்தத் தளத்தில் எழுதச் செய்வதாகவும் உறுதி அளித்தார். சொன்னபடியே செய்தார்.

அதன்பிறகு தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலக் குழு அமைக்கப்பட்டபோது, எங்கள் வேண்டுகோளை ஏற்று, அதன் மாநில துணைத் தலைவராக பொறுப்பேற்க ஒப்புக் கொண்டார். எங்கள் தொடர்புகள் அதிகரித்தன.

ஒருநாள், தஞ்சாவூரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று அவரிடம் ஆசி பெற்றேன். அப்போதுதான், தனியொருவராக பாரதி இலக்கியப் பயிலரங்கை அவர் நடத்தி வருவதையும் அவரது குடும்ப விவரங்களையும் அறிந்தேன். தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல், தேசநலனே குறிக்கோளாகக் கொண்டு உழைக்கும் இத்தகைய பெருந்தகையோரால் தான், இந்த நாடு இன்றும் பல்லாயிரம் ஆண்டுகாலப் பாரம்பரியத்தின் இழை பிசகாமல் வாழ்கிறது என்பதை உணர்ந்தேன்.

அவரது வீட்டில் இருந்தபோது, நமது தேசத்துக்காகவே வாழ்ந்த வீரர்கள், தலைவர்கள், துறவிகள், ஆன்றோரை இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் விதமாக மற்றொரு இணையதளத்தைத் துவங்க வேண்டும் என்று ஆலோசித்தோம். அதன்படி மிக விரைவில்  ‘தேசமேதெய்வம்.வேர்ட்பிரஸ்.காம்’ என்ற இணையதளம் துவங்கப்பட்டது.

அதில் ஒவ்வொரு மாதமும் பிறந்த/ மறைந்த ஆன்றோர், சான்றோர், அருளாளர்கள், பலிதானிகள்,  மகான்கள், தலைவர்களின் நாட்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் அந்த நாளில் பிறந்த/  மறைந்த மகத்தான முன்னோடிகளைப் பற்றிய சிறு கட்டுரைகள் அதில் வெளியாகின. தற்போதும் இத்தளம் உயிர்ப்புடன் இயங்குகிறது. இதன் ஆசிரியர் குழுவில் இருந்து திரு. தஞ்சை வெ.கோபாலன் ஐயா வழிகாட்டி வருகிறார்.

ஒருமுறை, நமது சுதந்திரம் சும்மா வரவில்லை; கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் ஈட்டப்படவில்லை என்று பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை இரு பாகங்களில் எழுதி இணையத்துக்கு தருவதாக ஐயா கூறினார். அதன்படி, 1857 முதல் 1885 வரை முதல்கட்டமாகவும், 1885 முதல் 1947 வரை இரண்டாம் கட்டமாகவும் சுதந்திரப் போராட்டத்தைப் பகுத்துக் கொண்டு  40 அத்தியாயங்களில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை அய்யா எழுதினார். அது, ஒரு நாள் விட்டு ஒருநாள் ‘தேசமேதெய்வம்’ இணையதளத்தில் (நவ. 12, 2014 முதல் ஜன. 28, 2015 வரை) அக்கட்டுரைத் தொடர் வெளியானது. அப்போதே பரவலான வரவேற்பைப் பெற்றது.

இக்கட்டுரைத் தொடர் தற்போது நூல்வடிவம் பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நூல் இளைஞர்களிடையே பரவும்போது, தேசபக்திக் கனல் அவர்கள் நெஞ்சிலும் ஊற்றாகப் பெருக்கெடுக்கும் என்பது திண்ணம்.

இந்த நூலின் சிறப்புகளாக நான் கருதுபவை, பலரும் அறியாத அரிய தகவல்களை எந்தப் பாரபட்சமும் இன்றி சொல்லிச் செல்லும் ஆசிரியரின் திறன், படிக்கத் தெவிட்டாத தெள்ளு தமிழ் நடை ஆகியவை. மகாத்மா காந்தி தனிநபர் சத்தியாக்கிரகம் செய்ய முடிவெடுத்தவுடன் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் தான் ஆச்சார்ய வினோபா பாவே.  தியாகி தூக்குமேடை ராஜகோபாலன் என்ற பெயர் அவருக்கு வந்த காரணம்,  சின்ன அண்ணாமலையின் சுடுகாட்டுத் தீரம், தேசப் பிரிவினையின் வேதனையான விளைவுகள்,  சிறை அதிகாரியிடம் ராஜாஜி காட்டிய கம்பீரமான பெருந்தன்மை,  சென்னை வந்த நானா சாகேப்… எனப் பல தகவல்களின் களஞ்சியமாக இந்நூல் மிளிர்கிறது.

பெயர் மறக்கப்பட்ட எண்ணற்ற தியாகியரின் ரத்தம் தோய்ந்த திருப்பாதையில் நடை பயின்றே நாம் சுதந்திரம் பெற்றோம் என்பதை இந்நூல் நிறுவுகிறது. இதிலுள்ள தியாகியர் பெயரைத் தொகுத்தாலே, அனுமன் வால் போல நீளும். சுதந்திரத்தின் விலையை அறியாததால் தான் இன்று நாட்டில் லஞ்சமும் ஊழலும் பிரிவினைவாதமும் அதிகரித்திருக்கின்றன. இதற்கெல்லாம் ஒரே மருந்து, தேசபக்திப் பயிர் வளர்ப்பதே. அதற்கு இந்நூல் மிகவும் உறுதுணையாக இருக்கும்.

1857-இல் வெடித்த முதல் இந்திய சுதந்திரப் போரின் உடனடிக் காரணங்கள், அதற்குத் தலைமை ஏற்றவர்கள் செய்த தியாகங்கள், ஆயுத பலத்தால் அதை நசுக்கிய ஆங்கிலேய அரசின் ஆதிக்கம், மீரட் கலவரம், பகதூர் ஷாவின் கொடிய இறுதி நாட்கள், தாந்தியா தோபேயின் வீரம், ஜான்சிராணி லட்சுமிபாயின் தீரம், என அந்தக் காலகட்டத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர்.

முதல் இந்திய சுதந்திரப் போரின் வீழ்ச்சியால் நாட்டில் உருவான அரசியல் விழிப்புணர்வு 1885-இல் இந்திய தேசிய காங்கிரஸாக மலர்ந்தபோது அதை எந்த நோக்கத்துகாக நிறுவினர் என்பதை எந்த மனத்தடையும் இன்றிக் கூறுகிறார் ஆசிரியர். ஆங்கிலேயருக்கு உதவும் நோக்கில் துவங்கப்பட்ட காங்கிரஸ் சுதந்திரப் போராட்ட இயக்கமாக மாறக் காரணமான திலகர் உள்ளிட்ட தீவிரவாதிகள், கோகலே உள்ளிட்ட மிதவாதிகள், அவர்களிடையிலான மோதல்கள், மகாத்மா காந்தியின் வருகை, அவர் தலைமையில் நடைபெற்ற சட்ட மறுப்பு இயக்கம்,  ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், பகத்சிங்கின் பலிதானம், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் உருவாக்கிய பெருமித அலை உள்ளிட்டவற்றை வரிசைக்கிரமமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். அவரது சரித்திரத் தேர்ச்சியும் தமிழ்ப்புலமையும் எழுத்துகளில் நர்த்தனமிடுகின்றன.

தேசிய அளவிலான சுதந்திரப் போரில் தமிழகம் பின்தள்ளி இருக்கவில்லை. நெல்லை சதி வழக்கு, குலசேகரப்பட்டினம் சதி வழக்கு, சீர்காழி சதி வழக்கு, வாஞ்சியின் பராக்கிரமம், பாரதி- சிவா- வ.உ.சி. என்ற மும்மூர்த்திகளின் அர்ப்பணிப்பு ஆகியவை இந்திய வரலாற்றில் பொன்னெழுதுக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அவற்றை நிரல்படத் தொகுத்திருக்கிறார் ஆசிரியர்.

1939-ல் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தலில் நேதாஜி வென்றதும், மகாத்மா காந்தி அதை விமர்சித்ததால் காங்கிரஸிலிருந்து அவர் விலகியதும் சரித்திரத்தின் தவிர்க்க முடியாத பக்கம். அதேபோல, அஹிம்ஸை நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த காந்திஜியுடன் அவரது பிரதான சீடர்களான படேலும் நேருவுமே முரண்பட்டது,  சரித்திரத்தின் விசித்திரமான மற்றொரு பக்கம்.

காந்திஜியைத் தொடர்ந்து எதிர்த்த அம்பேத்கரை சட்ட அமைச்சராக்குமாறு அவரே நேருவை வலியுறுத்தியது மற்றொரு ஆச்சரியமான பக்கம். 1934-க்குப் பிறகு காங்கிரஸில் காந்திஜி உறுப்பினராகவே இல்லை என்பதும், ஆயினும் அவரே அக்கட்சியை முற்றிலும் கட்டுப்படுத்தும் மாலுமியாக இருந்தார் என்பதும் விந்தையான பக்கம்.

வைக்கம் போராட்டம் தமிழகத்தில் பரப்பப்படுவது போல பெரியாரால் நடத்தப்படவில்லை; கேரளத்தின் கே.பி.கேசவ மேனன், மன்னத்து பத்பநாபன் போன்றோரே அதை தலைமை தாங்கி நடத்தியவர்கள். அதற்குக் காரணமானவர் காந்திஜி என்பதும் மறைக்கப்பட்ட மற்றொரு பக்கம். சௌரி சௌரா காவல் நிலையம் எரிக்கப்பட்டவுடன் (1920) தான் அறிவித்த போராட்டத்தையே நிறுத்தி மன்னிப்பு கேட்ட காந்திஜியின் பெருந்தன்மையும் துணிவும் மறக்க முடியாத அரிய பக்கம்.

இத்தகைய அற்புதமான பக்கங்களால் நிறைந்தது தான் இந்திய வரலாறு. இந்தப் பக்கங்களை நமக்கு நினைவூட்டும் இனிய நூல் இது.

திரு. தஞ்சை வெ.கோபாலன் ஐயா அவர்களுடன் எனக்குக் கிடைத்த நட்புறவும் தோழமையும் இறைவன் அளித்த வரமென்றே கருதுகிறேன். ‘சஹ ஹிருதயர்கள்’ என்ற சொல் சமஸ்கிருதத்தில் உண்டு. ஒத்த சிந்தனை கொண்டவர்கள் என்று அதை தமிழில் கூறலாம்.  மகாகவி பாரதியே எங்களை இணைத்தவர். தேசபக்தி எங்களை மேலும் நெருக்கமாகப் பிணைத்தது. இன்று அவரது நூல்  ‘சுதந்திர கர்ஜனை’ வெளியாகும்போது,  ஸ்ரீராமரின் சேதுபந்தனதுக்கு உதவிய அணிலின் சிறிய பங்களிப்பு போலவே நானும் மகிழ்கிறேன்.

ஐயாவின் எழுத்தாளுமை அவரைப் போன்ற மேலும் பல எழுத்தாளர்களை உருவாக்கும். மகாகவி பாரதியின் அருள் பெற்ற சீலரான அவருக்கு, அன்னை பாரதியின் பேரருள் என்றும் உண்டு.

பாரத அன்னை வெல்க!

***

சுதந்திர கர்ஜனை

தஞ்சை வெ.கோபாலன்

332 பக்கங்கள், விலை: ரூ. 280 

கிடைக்கும் இடம்:

அனன்யா,

8/37, பிஏ.ஒய்.நகர்,

குழந்தை இயேசு கோவில் அருகில்

புதுக்கோட்டை சாலை,

தஞ்சாவூர்-613 005.

அலைபேசி: 94423 46504.

.

 

 

Advertisements

One Response to “தேசபக்திப் பயிர் வளர்க்கும் நூல்”

  1. Gopalan Venkataraman 12/07/2016 at 6:39 PM #

    என்னுடைய “சுதந்திர கர்ஜனை” நூலுக்கு எழுதிய முன்னுரையை திரு வமுமுரளி அவர்கள் இங்கு கொடுத்திருக்கிறார்கள். இது என்னுடைய 7ஆவது நூல். அனைத்துமே வரலாற்று நூல்கள். இந்த நூலை நான் எழுத தூண்டுதலாக இருந்தவர் திரு வ.மு.முரளி அவர்கள். தேசிய சிந்தனைக் கழகத்தின் நிர்வாகிகளில் ஒருவன் என்கிற முறையில் அதன் “தேசமே தெய்வம்” வலைத்தளத்தில் எழுதத் தொடங்கி இந்த வரலாற்றை 40 பகுதிகளாக எழுதினேன். இது வெளிவந்த போது திரு வ.மு.முரளி அவர்கள் உற்சாகப்படுத்தி எழுதத் தூண்டியதன் விளைவுதான் இந்த நூல் வெளியீடு. இது கடந்த 2016 ஜூலை 3ஆம் நாள் திருவையாற்றில் வெளியிடப்பட்டது. முனைவர் இராம.கெளசல்யா அவர்கள் தலைமையில் முன்னாள் அமைச்சர் உயர்திரு சீ.நா.மீ.உபயதுல்லா அவர்கள் வெளியிட்டார். தஞ்சை பரிசுத்தம் பொறியியல் கல்லூரி தாளாளரும், தொழிலதிபரும், பரிசுத்தம் ஓட்டலின் உரிமையாளருமான உயர்திரு சே.ப.அந்தோணிசாமி அவர்கள் முதல் பிரதியினைப் பெற்றுக் கொண்டு என்னைக் கெளரவப் படுத்தினார்கள். அந்த விழாவுக்கு வந்திருந்த ஏராளமான நண்பர்களும், அன்பர்களும் வாழ்த்தியதை என் வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாது. மீண்டும் அனைவருக்கும் நன்றிகள்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: