நீதிக்கான போராட்டம்

26 Jul

Piyush Manush

சமுதாயத்தில் தவறிழைப்பவர்களைத் திருத்தவும், கொடிய குற்றங்களைச் செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கவும்தான் சிறைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பான இருப்பிடமாகவும், அப்பாவிகளுக்கு ரண வேதனை அளிக்கும் சித்ரவதைக் கூடமாகவும் நமது சிறைகள் மாறி வருகின்றன. அதற்கான நிரூபணம்தான், சமூக சேவகர் பியூஸ் மானுஸ் சேலம் மத்திய சிறைக்குள் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கும் நிகழ்வு.

முறையான மாற்றுப்பாதை அமைத்த பிறகே மேம்பாலப் பணியைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சேலத்தில் முள்ளுவாடி ரயில்வே கேட் மேம்பாலப் பணிகளை எதிர்த்து ஜூலை 8-இல் போராட்டம் நடத்தினார் பியூஸ் மானுஸ்.

அப்போது, அரசு அதிகாரிகளின் பணியைத் தடுத்ததாகக் கூறி, பியூஸ் மானுஸýம் அவருடன் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது விசாரணைக் கைதியாக மட்டுமே. அந்த வழக்கு நடந்து முடியும்போதுதான் அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் உண்மையா என்பது தெரியவரும். அவர்கள் செய்தது குற்றமானால் தண்டனையும் அளிக்கப்படும். அதுவே நமது நீதி பரிபாலன முறை.

சிறைக்குள் அடைக்கப்படும் விசாரணைக் கைதிகளை பத்திரமாகப் பராமரிக்க வேண்டியது சிறை நிர்வாகத்தின் கடமை. விசாரணைக் கைதிகளை காவல்துறையின் தாக்குதலிலிருந்து சட்டப்படி காக்கும் கேடயம் என்றும்கூட சிறையைச் சொல்லலாம். ஆனால், சிறைக்குள் சென்ற பியூஸ் மானுஸ் அன்றிரவே 20-க்கு மேற்பட்ட சிறைக்காவலர்களாலும் சிறைக் கண்காணிப்பாளராலும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்.

இந்தத் தாக்குதல் குறித்து சில நாள்கள் கழித்தே அவரைக் காணச் சென்ற அவரது மனைவி மோனிகாவுக்குத் தெரியவந்தது. அதனை அவர் வெளியுலகுக்குத் தெரிவித்த பின், சமூக வலைத்தளங்களில் பியூஸ் மானுஸýக்கு ஆதரவாக மாபெரும் பிரசாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வின் மூலமாக நமது சிறைச்சாலைகளின் அவலட்சணம் வெளிப்பட்டிருக்கிறது.

சிறைக்காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு, தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட பியூஸ் மானுஸ் (40) சாதாரணமானவரல்ல; தனது சமூகப்பணிகளால் சேலம் பகுதிக்கே கெüரவத்தை ஏற்படுத்தியவர். “சேலம் மக்கள் குழு’ என்ற தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தி, அதன்மூலமாக சுற்றுச்சூழலைக் காக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருபவர் அவர்.

அவரது குடும்பத்தினர் ராஜஸ்தானைப் பூர்வீகக் கொண்டவர்கள் எனினும், சேலத்திலேயே பிறந்து வளர்ந்தவர்; படிக்கும் காலத்திலேயே மாணவராக பல போராட்டங்களில் பங்கேற்றவர்; ஜிண்டால், கெம்பிளாஸ்ட், மால்கோ போன்ற பெருநிறுவனங்களுக்கு எதிராகப் போராடி, சூழல் மாசுபாட்டுக்கு எதிரான மக்கள் கருத்தைத் திரட்டியவர் பியூஸ் மானுஸ்.

குறிப்பிட வேண்டிய அவரது முக்கியமான பணி, பல நீர்நிலைகளை மக்கள் பங்களிப்புடன் தூர்வாரி புத்துயிரூட்டியதாகும். சேர்வராயன் மலைப்பகுதியில், கன்னங்குறிச்சி அருகிலுள்ள மூக்கனேரி பறவைகள் சரணாலயம் பாழ்பட்டுக் கிடந்தபோது, மக்களை ஒருங்கிணைத்து அதை 2010-இல் தூர் வாரினார். 55 ஏக்கர் பரப்பிலான அந்த ஏரியில் 45 மண் திட்டுகளை உருவாக்கி, ஆயிரக் கணக்கான மரங்களை நட்டு வளர்த்தார். இன்று 4.5 லட்சம் கன லிட்டர் நீருடன் மூக்கனேரி நிரம்பி, வெளிநாடுகளிலிருந்து வலசை வரும் பல்லாயிரம் பறவைகளின் புகலிடமாக மாறியிருக்கிறது.

குமரகிரி ஏரி, அரிசிபாளையம் குளம், சத்திரம் குளம், பள்ளபட்டி குளம் ஆகியவற்றையும் அவரது தலைமையிலான மக்கள் குழு புனரமைத்தது. தவிர, தருமபுரி பகுதி மலைக்காடுகளைக் காக்கும் கையில் நண்பர்கள் குழுவுடன் அங்கு அமைத்த கூட்டுறவுப் பண்ணை மூலமாக, ஆயிரக் கணக்கான மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

இந்த சமூகப்பணிகளால் சிறந்த இளைஞர் விருது பெற்றவர் பியூஸ் மானுஸ். அவரது நீர்நிலை பாதுகாப்புப் பணிகள் முன்னுதாரணமானவையாகப் பின்பற்றப்படுகின்றன. கடந்த டிசம்பரில் சென்னை, கடலூர் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, சேலம் வட்டாரத்திலிருந்து அதிக அளவில் நிவாரணப் பொருள்களை சேகரித்து அனுப்பினார் பியூஸ் மானுஸ். அத்தகைய துடிப்புள்ள குடிமகன் தான் சேலம் சிறைக்குள் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார்.

ஆபாசமாக சித்திரிக்கப்பட்டதால் அண்மையில் சேலத்தில் இளம்பெண் வினுபிரியா தற்கொலை செய்துகொண்டபோது, அதற்கு காவல் துறையினரும் ஒரு காரணம் என்று கூறி போராட்டங்களில் ஈடுபட்டார் அவர். தவிர, தனது பொதுநலப் பணிகளுக்காக, பலதரப்பட்ட அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் வெறுப்பையும் அவர் ஈட்டியிருக்கிறார். தற்போது சிறைக்குள் வைத்து அவர் தாக்கப்பட்டதன் பின்புலம் அதுவே என்று கூறப்படுகிறது.

அவருடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு பிணையில் விடுதலை கிடைத்தபோதும், அவர் மட்டும் மேலும் சில நாட்கள் சிறைக்குள் இருக்குமாறு செய்யப்பட்டது. சிறைக்காவலர்கள் மட்டுமல்லாது, சிறைக்கைதிகள் கூட தன்னைத் தாக்கியதாக, சிறையிலிருந்து வெளிவந்த பின் அவர் கூறியிருக்கிறார். அதற்கு, தேசியக்கொடியை அவர் எரித்ததால் கைது செய்யப்பட்டதாக சிறைக்குள் வதந்தி பரப்பப்பட்டதே காரணம் என்று தெரிகிறது.

இது மிக மோசமான அவதூறாகும். தங்கள் சுயநலத்துக்காக காவல்துறையினர் நடத்திய அத்துமீறலுக்கு தேசியக்கொடியை காரணமாகக் கற்பிப்பது, அவர்கள் செய்த குற்றத்தை விட ஆபத்தானது.

சிறையில் தன்னைத் தாக்கியவர்கள் மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகாரளிக்க இருப்பதாகவும், சிறைக் கண்காணிப்பாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.

பியூஸ் மானுஸ் போன்ற பொதுநல சேவகருக்கே சிறையில் இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலையை என்னென்பது? சிறைக்குள் தனக்கு நேர்ந்த அவலம் வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்றும் அவர் கூறியிருக்கிறார். அவரது நீதிக்கான போராட்டம் வெல்ல வேண்டும். அதிகார வர்க்கத்தின் ஆணவச் செயல்பாடுகளுக்கு அப்போதுதான் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

-தினமணி (26.07.2016)

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: