தங்க முதலீட்டுத் திட்டம்: நாட்டுக்கு நன்மை! மக்களுக்கும் லாபம்!

30 Jul

-எஸ்.குருமூர்த்தி

 (பகுதி- 1)
 கடந்த நவம்பர் 15-இல் பிரதமர் மோடி தங்க முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அப்போது நமது பெண்களின் வலிமை தங்கத்தில் உறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார் மோடி. மறுநாள் தில்லி பொருளாதார மாநாட்டில் பேசியபோது, தங்கத்துடனான பாரதக் கலாசார உறவை நினைவுகூர்ந்த பிரதமர், இந்திய தங்கப் பொருளாதாரத்தின் ஐந்து அம்சங்களைப் பட்டியலிட்டார்.
தனிநபர் சார்ந்த (மைக்ரோ) பொருளாதாரமாக உள்ள தங்க சேமிப்பு, தேசிய சேமிப்பாக மாறும்போது தங்க இறக்குமதியைக் குறைக்கும் பருப்பொருள் (மேக்ரோ) மாற்றுப் பொருளாதாரமாகிறது. இரண்டாவதாக, வீடுகளில் முடங்கியுள்ள தங்கத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும்.
 மூன்றாவதாக, பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பையும், நியாயமான வட்டியையும், தங்கத்தைக் கையில் வைத்திருக்காமலே பெற புதிய திட்டங்கள் உதவுகின்றன. நான்காவதாக, இத்திட்டங்கள் தனது முழு இலக்கை அடையும்போது, மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாவதுடன், தங்க இறக்குமதியும் குறையும். கடைசியாக, இத்திட்டங்கள், பொருளாதாரத்தை மறுசீரமைக்கும். இந்த ஐந்து அம்சங்களைத்தான் மோடி குறிப்பிட்டார்.

 பெண்மைப் பொருளாதாரம்:
அப்போது பிரதமர் சொல்லாமல் மறந்தது ஒன்று உண்டு. இந்த தங்க முதலீட்டுத் திட்டங்கள் அனைத்துமே சுதேசிச் சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பதுதான் அது. நவீன மேற்கத்தியப் பொருளாதாரம் தங்கத்தை ஆணாதிக்கச் சிந்தனையுடன் நோக்குகிறது. அவர்கள் பெண்களை மையப்படுத்திய இந்திய தங்கப் பொருளாதாரச் சிந்தனைகளை எள்ளி நகையாடுவார்கள்.
இந்தியப் பொருளாதாரத்தின் ஆன்மாவே பெண்மைத் தன்மையுடன்தான் உள்ளது. அதிக சேமிப்பு, கட்டுப்பாடான நுகர்வு, பாதுகாப்பான முதலீடு, குடும்ப அமைப்பு ஆகிய அம்சங்கள் அனைத்தும் இணைந்தே இந்தியப் பொருளாதாரத்தின் பெண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகின்றன.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தங்க முதலீட்டுத் திட்டங்கள் மூன்றுமே, மத்திய அரசின் கொள்கை வகுக்கும் குழுவான  ‘நிதி ஆயோக்’கின் நெறிமுறைகளுக்கு உகந்தவையாகும்.  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நிதி ஆயோக்கை நிறுவியபோது, இந்திய சிந்தனையுடன் கூடிய வளர்ச்சி மாதிரிகளை உருவாக்குமாறு அதனிடம் பரிந்துரைத்தது.
நாட்டின் வளர்ச்சியைத் திட்டமிடும் அறிவுஜீவிகளின் அமைப்பான நிதி ஆயோக்  ‘இந்தியாவுக்கு வெளியிலுள்ள எந்த ஒரு மாதிரியையும் இந்தியச் சூழலில் திணிக்கக் கூடாது’ என்று எச்சரிக்கப்பட்டது. ‘நமது வளர்ச்சிக்கான வழிமுறைகளை நமது பாணியிலேயே வகுக்க வேண்டும்’ என்பதுதான் அரசு வலியுறுத்திய கருத்து.
தற்போதைய தங்க முதலீட்டுத் திட்டங்கள் அந்த அடிப்படையிலேயே அமைந்துள்ளதைக் காண முடியும். இத்திட்டங்கள் நுண்ணிய அளவில் தனிநபர்களுக்கு எப்படி லாபத்தையும், பேரளவில் நாட்டுக்கு எப்படி நன்மையையும் கொண்டு வருகின்றன என்று பார்ப்போம்.
 தங்க வைப்புத் திட்டம்:
தற்போது இந்தியாவின் தங்கக் கையிருப்பு 22,000 டன் முதல் 40,000 டன் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. 1997 முதல் 2015 வரையிலான 18 ஆண்டுகளில் இந்தியாவின் தங்க இறக்குமதி அளவு 15,000 டன் ஆகும். இதில் மூன்றில் ஒரு பங்கு தங்கம் ஆபரணம் செய்யப் பயன்படாமல், தங்க நாணயங்களாகவும் பிஸ்கட்களாகவும் கட்டிகளாகவும் சேமிக்கப்படுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு சேமிக்கப்படும் 5,000 டன் தங்கத்தின் மதிப்பு சுமார் 160 பில்லியன் டாலர் (ரூ. 11.5 லட்சம் கோடி) ஆகும்.
இவ்வாறு முடங்கும் தங்கத்தை நிதியமைப்புக்குள் கொண்டுவருவதே தங்க முதலீட்டுத் திட்டங்களின் நோக்கம். பணத்தை வங்கியில் முதலீடு செய்வது போலவே, தங்கத்தையும் முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு முதலீடு செய்ய புதிய திட்டங்கள் வழிவகை செய்கின்றன.
முதிர்வுக்காலம் முடிந்தவுடன், முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்ய தங்கத்தின் அப்போதைய மதிப்புக்கு நிகரான பணத்தை 2.5 சதவீத வட்டியுடன் பெற முடிகிறது. இந்தப் பணத்தைக் கொண்டு, தாங்கள் முதலீடு செய்த அதே அளவு தங்கத்தை சந்தையில் அவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இதில் அவர்கள் கூடுதலாக வட்டியையும் பெறுவது சிறப்பம்சம்.
இவ்வாறு முதலீடு செய்யப்படும் தங்கத்தை வங்கிகள் என்ன செய்யும்? அந்தத் தங்கத்தை அரசு வெளியிடும் நாணயங்களுக்குப் பயன்படுத்தலாம். அல்லது இந்திய அரசின் தங்கசாலை நிறுவனத்துக்கோ, நகைக்கடைகளுக்கோ, பிற வங்கிகளுக்கோ விற்பனை செய்யலாம். அந்தத் தங்கத்தை இருப்பில் காட்டி பிற வங்கிகளில் கடனும் பெறலாம்.
இவ்வாறாக, தங்கத்தை முடக்காமல் சுழற்சிமுறையில் பொருளாதாரத்துக்கு உதவும் கருவியாக மாற்றுவதன் மூலமாக, தங்க இறக்குமதியைக் குறைக்கலாம். அதன்மூலமாக நமது அந்நியச் செலாவணியையும் மிச்சப்படுத்த முடியும்.
 தங்கப் பத்திரங்கள்:
அடுத்து பலவிதமான முதிர்வு அட்டவணைகளுடன் கூடிய தங்க முதலீட்டுப் பத்திரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி தங்கத்தை நேசிக்கும் எவரும் அதை தங்க உலோகமாக வாங்காமல், தங்கப் பத்திரமாக வாங்கி வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, சில வருடங்கள் கழித்து நிகழ உள்ள இல்லத் திருமணத்துக்கு 25 பவுன் நகை வாங்க விரும்பும் ஒருவர் அதே பவுன் மதிப்புக்கு தங்கப் பத்திரங்களை குறிப்பிட்ட காலத்துக்கு வங்கியில் வாங்கலாம். அந்தக் குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் பத்திரத்தை வங்கியில் சமர்ப்பித்து அதே 25 பவுன் தங்கத்துக்கான அப்போதைய விலை மதிப்பில் பெறலாம். இதற்கு கூடுதலாக 2.75 சதவீதம் வட்டியும் கிடைக்கும். இதைக் கொண்டு கூடுதலாக தங்கத்தை அவர் சந்தையில் வாங்க முடியும்.
எனினும் இத்திட்டத்தில் தனிநபர்கள் 500 கிராம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள தங்கத்தின் கையிருப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பத்திரங்களை வெளியிடுகிறது. எனவே பத்திரத்துக்கு உறுதியான பாதுகாப்பும் கிடைக்கிறது.
மூன்றாவதாக, இந்திய அரசு வெளியிட்டுள்ள அசோகச் சக்கரம் பெறித்த தங்க நாணயங்கள், சேமிப்பாளர்களுக்கு பெருமித உணர்வையும், அதிகபட்சத் தூய்மையையும் கூடுதலாக அளிக்கின்றன. இதற்கு முந்தைய அரசுகள் இவ்வாறு தங்க நாணயங்களை வெளியிடாததால்தான், வெளிநாட்டுத் தங்க நாணயங்களை கடத்தல்காரர்கள் பல்லாண்டுகளாகக் கடத்தி வர முடிந்தது.
 பரஸ்பரம் உதவிகரம்:
தங்க முதலீடு, தங்கப் பத்திரம், தங்க நாணயம் ஆகிய மூன்றும் இணைந்த இந்த முதலீட்டுத் திட்டங்கள் ஒன்றுக்கொன்று அனுசரனையானவை.
தங்க முதலீட்டுத் திட்டத்தால் வங்கியில் வரவாகும் தங்கம், இந்திய அரசின் நாணயத் தயாரிப்புக்குப் பயன்படும்;  நகைக்கடைகளுக்கு அதை விற்கவும் முடியும்; அதை ரொக்கப்பணம் போல 10 சதவீதம் வரை அதிக வட்டிக்கு கடனாகவும் வழங்க முடியும்.
தங்கத்தை முதலீடு செய்தவருக்கு வங்கி அளிக்கும் வட்டி 2.5 சதவீதம் மட்டுமே. ஆனால் வங்கிக்கோ அது கூடுதல் வருவாய் அளிக்கிறது. எனவே, யூக வணிகத்தில் தங்கத்தின் விலை மாறுபட்டாலும் வாடிக்கையாளருக்கோ வங்கிக்கோ பாதிப்பில்லாமல், லாபத்துடன் இத்திட்டம் செயல்படும்.
தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீட்டுத் தங்கத்துக்கு இணையான பணத்தின் மதிப்புக்கு பத்திரத்தை வங்கிகள் வழங்கும். இதற்கு உத்தரவாதமாக ரிசர்வ் வங்கிக் கருவூலத்தில் 557 டன் தங்கக் கையிருப்பு உள்ளது. இந்தப் பத்திரங்கள் அளிக்கும் உத்தரவாதத்தால், வாடிக்கையாளர் தங்கத்தை உலோகமாக வாங்க வேண்டியதில்லை. இதனால் தங்கத்தைப் பாதுகாக்கும் சிரமமும் குறைகிறது.
உலக அளவில் தங்கச் சுரங்கங்களில் பெறப்படும் தங்கத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவால் வாங்கப்படுகிறது. இந்நிலையில், தங்கம் உலோகமாக அல்லாது பத்திரமாக மாற்றப்படுவதால், தங்கத்தின் இறக்குமதி தானாகக் குறையும். இதனால் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை சரியும்போது ரிசர்வ் வங்கி மலிவாகவும் கூடுதலாகவும் தங்கத்தை கொள்முதல் செய்துகொள்ள முடியும்.
தங்கம் விலை சந்தையில் அதிகரிக்கும்போது ரிசர்வ் வங்கிக்கு சிக்கல் நேரிடும். இதை உத்தேசித்து ரிசர்வ் வங்கி முன்யூகச் சந்தையில் தங்கத்தை வாங்கி நஷ்டத்தைக் குறைத்துக் கொள்ள முடியும். அதேபோல தங்கத்தின் விலை குறைந்தால் பத்திர முதிர்வின்போது ரிசர்வ் வங்கிக்கு லாபம் கூடும்.
வங்கிகளுக்கு வழங்கப்படும் 6.5 சதவீத வட்டியுடன் ஒப்பிடுகையில் தங்கப் பத்திர முதலீட்டாளருக்கு வழங்கப்படும் 2.75 சதவீதம் வட்டி மிகவும் குறைவு. மொத்தத்தில் இந்த முறையானது, அதிக சிக்கல் இல்லாத, புத்திசாலித்தனமான லாபம் அளிக்கும் திட்டமாக, ரிசர்வ் வங்கிக்கு நஷ்டம் அளிக்காத திட்டமாக அமையும். இதனால் வாடிக்கையாளருக்கும் பாதகமில்லை. குறைந்த லாபம் என்றாலும் உறுதியான பாதுகாப்பு அவர்களுக்குக் கிடைக்கும்.
அரசு அறிவித்த மூன்று தங்க முதலீட்டுத் திட்டங்களும் ஒன்றுடன் ஒன்று பரஸ்பரம் பின்னிப் பிணைந்தவை. இவை மூன்றும் தொகுப்புத் திட்டங்களாகும். இவை மூன்றுமே தங்கத்துக்கு, பணத்துக்கு நிகரான மதிப்பையும், பணத்துக்கு நிகரான பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்றன.
தங்கத்துக்கு இந்தியாவில் என்றுமுள்ள கிராக்கி காரணமாக,  ‘தங்கமான முதலீடாக’ தங்கம் என்றும் இருக்கும். இத்தகைய கிராக்கி மேற்கத்திய நாடுகளில் எப்போதும் தங்கத்துக்கு இருப்பதில்லை.
தவிர, உலக நாணயங்களான அமெரிக்க டாலர், ஐரோப்பிய யூரோ, பிரிட்டன் ஸ்டெர்லிங் ஆகியவற்றுக்கு  இணையான வெளிநாட்டுச் செலாவணியாக தங்கம் உள்ளது. எனவே, தனிநபர்களுக்கு பாதுகாப்பான முதலீடாகவும் தேசத்துக்கு உறுதியான வெளிநாட்டுச் செலாவணியாகவும் தங்கம் திகழ்கிறது. புதிய தங்க முதலீட்டுத் திட்டங்களால் ரிசர்வ் வங்கிக்கு அந்நியச் செலாவணி இருப்பும் அதிகரிக்கும். அது தங்க முதலீட்டுத் திட்டங்களுக்கும் லாபகரமாக அமையும்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தங்கத்தை சொந்தமாக வைத்திருக்காமலே அதை உரிமையாக்கும் தன்மையால், இந்திய மக்களின் தங்கம் தொடர்பான பழக்க வழக்கங்கள் மாறும். அது இந்திய நலனுக்கு உகந்ததாகவும் பெண்மைத்தன்மை மிகுந்த தங்கப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாகவும் இருக்கும்.
குறிப்பு: இத்திட்டங்களில் முதலீடு செய்பவர் முதிர்வுக் காலத்தில் அதைத் திரும்பப் பெறும்போது கூடுதலாகப் பெறும் தொகைக்கு அரசு வரி விதிக்கக் கூடாது. ஏனெனில், தங்கத்தை வாங்கும்போது அதற்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படுவதில்லை. வேண்டுமானால், இத்திட்டத்தில் அரசு அளிக்கும் வட்டித் தொகைக்கு மட்டும் அரசு வரி விதித்துக் கொள்ளலாம்.

(தொடரும்)

அடுத்து:
(ஜூலை 2016)

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: