நிறமாலையியலில் சாதனைகள் நிகழ்த்தியவர்

23 Aug

KRRao 2

கோட்செர்லக்கோட்ட ரங்காதம ராவ்

இயற்பியலில்  நிறமாலையியல் (Spectroscopy) என்பது ஒரு பொருளுக்கும் மின்காந்தக் கதிர்வீச்சுக்கும் இடையிலான தொடர்பைப் பற்றி ஆராயும் துறையாகும்.  ஆரம்பத்தில் கண்ணுக்குப் புலப்படும் ஒளியை ஆராய்வதை மட்டுமே இச்சொல் குறித்து வந்தது. ஒரு பொருள் வெப்பமுறும்பொழுது வெளியிடும் ஒளியின் பண்புகளைப் பற்றியும்,  ஒரு பொருள் மீது அளிக்கப்படும் ஒளியை அப்பொருள் எப்படிக் கடத்துகிறது,  அப்பொருளுள் என்னென்ன விளைவுகள் ஏற்படுத்துகின்றன என்பது உள்ளிட்ட ஒளி – பொருள் உறவாட்ட நிகழ்வுகள் பற்றியும் ஆரம்பத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

பிறகு, கண்ணுக்குப் புலனாகா மின்காந்த அலைகள் தவிர,  ஆற்றல் அலைகளானது துகள்கற்றையாக இயங்கி ஒரு பொருளுடன் தொடர்புபடும் நிகழ்வுகளும் இத்துறைக்குள் சேர்ந்தன. நிறமாலை என்னும் சொல்லில் உள்ள  ‘நிறம்’ என்பது நமது கண்களுக்குப் புலனாகும் ஒளியலைகள் மட்டுமல்லாது, எல்லா அலைநீளங்களையும் கொண்ட மின்காந்த அலைவரிசையையும் குறிக்கும். அணுக்கதிரியக்கத்தையும் நிறமாலையியலில் ஆராய்வது மிக முக்கியமான பிரிவாக தற்போது வளர்ந்து வருகிறது. இந்தத் துறையை இந்தியாவில் வளர்த்த பெருமைக்குரியவர், கோட்செர்லக்கோட்ட ரங்காதம ராவ். சுருக்கமாக பேராசிரியர் கே.ஆர்.ராவ்.

தற்போதைய ஆந்திரத்தின் விஜயநகரத்தில், 1898, செப். 9-இல் பிறந்தார் கே.ஆர்.ராவ். அவரது தந்தை சென்னை மாகாணத்துக்கு உள்பட்ட அஞ்சல்துறையில் அதிகாரியாக இருந்ததால், ஆண்டுதோறும் அவரது பணியிட மாற்றத்துக்குத் தக்கபடி குடும்பமும் இடம் பெயர்ந்துகொண்டே இருந்தது.

1904 முதல் 1906 வரை விஜயநகரில் மகாராஜா பள்ளியில் ஆரம்பக்கல்வி கற்றார். பிறகு, விஜயநகரில் உள்ள் லண்டன் மிஷன் பள்ளி, மசூலிப்பட்டினத்தில் இந்து உயர்நிலைப் பள்ளி, சிபிஎம் உயர்நிலைப் பள்ளிகளில் படித்த அவர், ஏவிஎன் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். விஜயநகரில் உள்ள மகாராஜா கல்லூரியில் படித்து இயற்பியலில் பி.ஏ. பட்டம் பெற்றார் (1920). அடுத்து திருச்சியில் பயின்று, இயற்பியலில் எம்.ஏ. பட்டம் பெற்றார் (1923).

அதையடுத்து, ஆராய்ச்சிப் படிப்புக்காக, சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் (1924). அங்கு சக மாணவர் ஏ.எல்.நாராயணனுடன் இணைந்து நிறமாலையியல் ஆய்வுகளில் ஈடுபட்டார். அப்போது, நாட்டிலேயே முதல்முறையாக சென்னை பல்கலைக்கழகத்தில் முதல்தரமான நிறமாலையியல் ஆய்வகத்தை உருவாக்கும் பணிகளில் இருவரும் ஈடுபட்டனர். அந்த சமயத்தில், பிழைமாறா நிறமாலைமாணி, குவார்ட்ஸ் படிக நிறமாலைமாணி போன்ற திறன் குறைந்த கருவிகளே அங்கு இருந்தன. அதன்மூலமாக இத்துறையில் தீவிர ஆராய்ச்சிகளைச் செய்ய முடியாது என்று உணர்ந்த ராவ், கொல்கத்தா சென்றார்.

அங்கு, பிரபல விஞ்ஞானி சர் சி.வி.ராமன், இந்திய அறிவியல் வளர்ச்சி சங்கத்தில் நவீனக் கருவிகளுடன் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார். அங்கு 10 அடி விட்ட குழி ஆடியுடன் கூடிய நவீன நிறமாலைமாணி இருந்தது. அங்கு கண்களுக்குப் புலப்படும் ஒளிக்கதிர்களை மட்டுமின்றி, புறஊதாக் கதிர்கள், அகச்சிவப்புக் கதிர்கள் போன்றவற்றையும் ராவ் ஆராய்ந்தார். அவரது ஆராய்ச்சிக்காக 1928-இல் டி.எஸ்சி. பட்டம் வழங்கப்பட்டது.

அதே ஆண்டில், ஆந்திர பல்கலைக்கழகம் சார்பில், வெளிநாடு சென்று ஆராய்ச்சி புரிய ராவ் தேர்வு செய்யப்பட்டார். அது, அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அதன்படி இங்கிலாந்து சென்ற ராவ், லண்டன் இம்பீரியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 1930- 1932 காலகட்டத்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டார். அப்போது பேராசிரியர் ஏ.ஃபௌலரின் மேற்பார்வையில் அணுக்கதிர் நிறமாலை (Atomic Spectroscopy) குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். இறுதியில், தனது ஆய்வுக்காக டி.எஸ்சி. பட்டம் பெற்றார்.

இதனிடையே, 1930-இல் நிறமாலையியலில் மேம்பட்ட ஆராய்ச்சிக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள வாய்ப்புகளை அறிய ஜெர்மனிக்கும் ஸ்வீடனுக்கும் ராவ் சென்றார். ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள தேசிய அளவையியல் நிறுவனத்தில் (PTB) பேரா. எஃப்.பாஸ்சனின் கீழ்  ஆறு மாதங்களும், ஸ்வீடனின் உப்சாலாவில் பேரா. மானேசெய்பானின் கீழ் வெற்றிட நிறமாலை (Vaccum Spetroscopy) குறித்து ஆறு மாதங்களும் ஆராய்ச்சிகளில் அவர் ஈடுபட்டார்.

அவரது ஆராய்ச்சி ஈடுபாடு மிகத் தீவிரமாக இருந்தது. தனது ஆராய்ச்சியின்போது, சொந்த செலவில், ஜெர்மனியின் பாட்ஸ்டமில் வெற்றிட நிறமாலைமாணியை ராவ் உருவாக்கி நிறுவினார். அதன்பிறகு, நாடு திரும்பிய ராவ், அணுக்கதிர் நிறமாலையியலில் பல முன்னோடி ஆய்வுகளை நிகழ்த்தினார்.

1949-இல் ஆந்திர பலகலைக்கழகக் கல்லூரிகள் அனைத்துக்கும் பொதுவான ஒரே முதல்வராக ராவ் நியமிக்கப்பட்டார். 1957 வரை அந்தப் பொறுப்பை திறம்பட நிறைவேற்றினார். திருப்பதியில் வெங்கடேஸ்வரா பலகலைக்கழகம் துவக்கப்பட்டபோது, 1954-இல் அதன் சிறப்பு அதிகாரியாகவும் ராவ் பணியாற்றினார். 1966 முதல் 1972 வரை, ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியராக ராவ் இருந்தார்.

1925-இல் வட்டாடி பெர்ரம்மாவை ராவ் மணந்தார். இத்தம்பதிக்கு 4 மகன்களும் 3 மகள்களும் பிறந்தனர். தேசியவாதியான ராவ், எளிய கதர் ஆடை உடுத்துவதை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார். 1972, ஜூன் 20-இல் விசாகப்பட்டினத்தில் ராவ் மறைந்தார்.

அறிவியல் சாதனைகள்:

பேராசிரியர் கே.ஆர்.ராவ், இந்தியாவில் நிறமாலையியல் துறையின் முன்னோடி ஆவார். இரட்டை அணு  மூலக்கூறு மற்றும் பல அணு மூலக்கூறு நிறமாலையியல் ஆய்வகத்தை உருவாக்க ராவ் தீவிரமாகப் பாடுபட்டார். மின்னணு நிலைமாற்றத்தில் அதிக பிரிதிறன் அதிர்வுக் கட்டமைப்பைக் கண்டறிய இந்த ஆய்வு வசதி (Diatomic and Polyatomic Molecular Spectroscopy laboratory dealing with High Resolution Vibrational structure in electronic transitions) பயன்படுகிறது.

அகச்சிவப்புக் கதிர்களை கிரஹித்தல், புற ஊதாக்கதிர்களை கிரஹித்தல், ராமன் விளைவு (Raman scattering), உடனொளிர்தல் (Fluorescence), நின்றொளிர்தல் (Phosphorescence), படிக நிறமாலையியல் பிரிவுகளிலும் அவர் பல ஆய்வுகளை நிகழ்த்தினார். ‘டை எலக்ட்ரிக்’ மின்தடைகளை ஆராயும் நுண்கதிர் அலை ஆய்வுக் கருவிகளையும் ராவ் நிறுவினார்.

அணுக்கரு இயக்க நிறமாலையியலை இந்தியாவில் துவக்கியவரும் ராவ் தான். மின்காந்த அதிவெண் நிறமாலையியலை வளர்த்ததில் அவரது பங்களிப்பு முக்கியமானது. அதன் துணைப்பிரிவுகளாக அணுக்கரு மின்காந்த ஒத்திசைவு (Nuclear Magnetic Resonance -NMR), எதிர்மின்னணு சுழற்சி ஒத்திசைவு (Electron Spin Resonance (ESR), அணுக்கரு நான்முனைவு ஒத்திசைவு (Nuclear Quadrupole Resonance -NQR) ஆகியவை தற்போது வளர்ந்துள்ளன.

1963-இல் ஆந்திரத்தில் நிறுவப்பட்ட ஆந்திரப்பிரதேச அறிவியல் அகாதெமியின் நிறுவன உறுப்பினராக ராவ் இருந்தார். அவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல சர்வதேச அறிவியல் சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன.

இயற்பியலை நாட்டில் வளர்க்க வேண்டும் என்பதற்காக, தனது தந்தை கோட்சர்லக்கோட்ட வெங்கட நரசிங்க ராவ் பெயரில் கல்வி உதவித்தொகையை உருவாக்கி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார் ராவ். அதேபோல ஆராய்ச்சி உதவித்தொகை ஒன்றையும் தனது தந்தை பெயரில் ராவ் நிறுவிச் சென்றுள்ளார்.

இந்திய அறிவியலுக்கு ராவ் ஆற்றிய பணிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில், கொல்கத்தாவில் உள்ள இந்திய தேசிய அறிவியல் கல்வி நிறுவனம் ஆண்டுதோறும் கே.ஆர்.ராவ் நினைவு சொற்பொழிவு விருதை 1979-ஆம் ஆண்டுமுதல் வழங்கிவருகிறது. நிறமாலையியலில் சிறந்த பங்களிப்பு நல்கும் விஞ்ஞானிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

-தினமணி இளைஞர்மணி (23.08.2016)

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: