Archive | September, 2016

ஆறாவது புலனை வடிவமைத்த அற்புத இந்தியர்

27 Sep
pranav-mistry

பிரணவ் மிஸ்திரி

தற்போதைய நவீன உலகின் அற்புதக் கண்டுபிடிப்பாகக் கருதப்படுவது, ஆறாம் புலன் எனப்படும் கணினித் தொழில்நுட்பம். இதை வடிவமைத்தவர், இந்தியாவின் பிரணவ் மிஸ்திரி (35).

கண், நாசி, நாக்கு, செவி, தோல் என்னும் ஐம்புலன்களால் மனிதன் உலகை உணர்கிறான். அவனால் கண்டுபிடிக்கப்பட்ட கணினியோ, அவனது சைகையைப் புரிந்துகொண்டு ஆறாம் புலனாக அவனை வழிநடத்துகிறது. இதுதான் பிரணவ் மிஸ்திரியின் ‘சிக்ஸ்த் சென்ஸ்’ தொழில்நுட்பத்தின் (Sixthsense) அடிப்படை. இதற்கான கருவிகளை இணைத்துக் காட்டியதில்தான் அவரது வெற்றி அடங்கி இருக்கிறது.

கழுத்தில் தொங்கும் ஒரு சிறிய கேமரா, கையடக்கமான புரொஜக்டர், நடமாடும் கணினி ஆகியவற்றின் தொகுப்புடன், அதை இயக்குபவரின் சைகைகள் பொருள்களின் மீது ஏற்படுத்தும் நிழலைத் தரவாகக் கொண்டு கணினியை இயக்குவதுதான் இந்தத் தொழில்நுட்பத்தின் சாராம்சம்.

அணியக் கூடிய கணினி (Wearable Computing) சாதனங்களின் அடிப்படை இதுவே. 1994-இல் ஸ்டீல் மான் என்ற எம்.ஐ.டி. விஞ்ஞானியால் உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, மிஸ்திரி அதை நடைமுறைப்படுத்திக் காட்டியபோது (2009), அவருக்கு வயது 28 மட்டுமே! Continue reading

Advertisements

செயற்கை அறிவுத்திறன் ஆய்வில் முன்னோடி

20 Sep

 

raj-reddy1

ராஜ் ரெட்டி

இது கணினி யுகம். மனித அறிவுடன் போட்டியிடக் கூடிய கணினிகளையும் இயந்திர மனிதர்களையும் உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால், மனித மூளையை இன்னமும் கணினியால் வெல்ல முடியவில்லை. எனினும், செயற்கை அறிவுத்திறனில் (Artificial Intelligence) விஞ்சும் வகையில் கணினியின் திறத்தைக் கூட்டும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த ஆராய்ச்சிகளில் உலக அளவில் முன்னோடியாக இருப்பவர், அமெரிக்காவில் வாழும் இந்தியரான ராஜ் ரெட்டி.

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் காட்டூர் என்ற இடத்தில் விவசாயக் குடும்பத்தில் 1937, ஜூன் 13-இல் பிறந்தவர், தபலா ராஜகோபால் ரெட்டி. அறிவியல் உலகில், ராஜ் ரெட்டி என்ற பெயரே நிலைத்துவிட்டது. Continue reading

உலகம் வியக்கும் அண்டவியல் விஞ்ஞானி

13 Sep
jeyant-narlikar

ஜெயந்த் விஷ்ணு நார்லிக்கர்

 

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா பலதுறைகளில் வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், அறிவியல் துறையில் நாம் இன்னமும் பெரும் வளர்ச்சி பெறவில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. இந்தக் கருத்து சரியானதல்ல. ஏனெனில், உலக அளவில் பல அறிவியல் சாதனைகளை நமது விஞ்ஞானிகள் நிகழ்த்தியிருக்கிறார்கள். அவற்றை நாம் அறியவில்லை என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். தவிர, நமது விஞ்ஞானிகள் பல வெளிநாடுகளில் நடைபெறும் ஆராய்ச்சிகளில் முதன்மை வகிக்கிறார்கள். அந்த ஆராய்ச்சியை நமது நாட்டிலேயே அவர்கள் செய்வதானால், நாம் மேலும் பெருமை பெற முடியும்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் தான், அண்டவியலில் உலகமே வியக்கும் இந்திய விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு  நார்லிக்கர். உலக விஞ்ஞானிகள் பலரும் அதிசயிக்கும் வண்ணம், அண்டவியல் கோட்பாடு ஒன்றை அவர் 1964-இல் அறிவித்தபோது அவருக்கு வயது 26 மட்டுமே. வானியலில் அவர் காலத்தை முந்தி அறிவித்த பல கருதுகோள்கள் இப்போது படிப்படியாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நம்மில் பெரும்பாலோருக்கு அவரது பெயரும்கூடத் தெரியாது. Continue reading

அரசியல் பிரசார இலக்கியம்

12 Sep

ninavivu-book

 எந்தப் பிரதிபலனும் பாராது, தங்களை வருத்திக்கொண்டு கற்பூரமாகத் தங்களை கரையவிட்ட தியாகியரால்தான் பல மாற்றங்கள் சமுதாயத்தில் நிகழ்ந்துள்ளன. லட்சியத்துக்காக வாழ்வதென்பது அண்மைக்காலமாக அனைத்து அரசியல் கட்சிகளிலும் அருகி வருகிறது. இந்நிலையில், பொதுவுடைமை இயக்கத்துக்காக தங்களை அர்ப்பணம் செய்த தியாகியரின் வரலாற்றை இந்நூலில் தொகுத்திருக்கிறார் எழுத்தாளர் கே.ஜீவபாரதி.

அரசியல் ஆர்வலர்களுக்கான கையேடாகத் திகழும்  இந்நூலில், பெரியோர் பலரது நினைவு நாட்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ப.ஜீவானந்தம், கே.பாலதண்டாயுதம், கே.டி.கே.தங்கமணி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சி.எஸ்.சுப்பிரமணியம், சாம்பவான் ஓடை சிவராமன், சின்னியம்பாளையம் தியாகிகள் ஆகியோருக்கான அஞ்சலிக் கட்டுரைகள், கொண்ட கொள்கைக்காக வாழ்ந்த அற்புதமான மனிதர்களை அறிமுகப்படுத்துகின்றன. இவை ஜனசக்தி, தாமரை உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளியானவை.

பொதுவுடைமை சித்தாந்தம் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, வேலு நாச்சியார், சுவாமி விவேகானந்தர், திருப்பூர் குமரன், கக்கன் போன்றவர்களைப் பற்றிய எழுத்தோவியங்களும், எழுத்தாளர்கள் தொ.மு.சி.ரகுநாதன், மாஜினி, சின்னக் குத்தூசி, சு.சமுத்திரம், வாலி ஆகியோர் குறித்த கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

பகத்சிங்கையும் ப.ஜீவானந்தத்தையும் ஒப்பிட்டு எழுதிய கட்டுரை மிகவும் சிறப்பு. யாசர் அராபத், இயக்குநர் மணிவண்ணன் குறித்த அஞ்சலிகளும் உண்டு. நூலாசிரியரின் தெளிவான எழுத்தோட்டமும், கொள்கைப்பிடிப்பும்  ஒவ்வொரு பக்கத்திலும் மிளிர்கின்றன. ஓர் அரசியல் பிரசார இலக்கியம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக இந்நூல் விளங்குகிறது.

***

நினைவு நாட்களும் நெஞ்சில் அலைகளும்

கே.ஜீவபாரதி

176 பக்கங்கள், விலை: ரூ. 135

மேன்மை வெளியீடு,
5/2, பெர்தோ தெரு,
ராயப்பேட்டை, வி.எம்.தெரு,
கில் ஆதர்ஷ் பள்ளி அருகில்,
சென்னை- 600 014,
தொலைபேசி: 044- 2847 2058.

.