உறவின் பெருமை

5 Sep

familyplus

அண்மையில் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த ஆய்வு மாணவர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு நம் நாட்டில் உள்ள குடும்ப அமைப்பு பெருத்த வியப்பை ஏற்படுத்தியிருந்தது. அதுமட்டுமல்ல, நமது குடும்பங்களில் காணப்படும் உறவுமுறைகள் அவருக்கு திகைப்பை ஏற்படுத்தின.

மேலைநாடுகளிலும் குடும்பங்கள் உண்டு. ஆனால் அவர்களது உறவுமுறைகள் மிகவும் குறுகிய வட்டத்தில் அடங்கிவிடுபவை. எனவே தான் பல உறவுமுறைகளுக்கு அவர்களிடம் சொற்களே இல்லை. உதாரணமாக, மாமா, சித்தப்பா ஆகிய உறவுகளுக்கு ஆங்கிலத்தில்   ‘அங்கிள்’ என்ற ஒரு சொல்லே பொதுவானதாக உள்ளது. அதுபோலவே, அத்தை, சித்தி போன்ற உறவுமுறைகளுக்கும்  ‘ஆன்டி’ என்பதே பொதுச்சொல். ஆனால் நமது சொற்களஞ்சியத்திலோ உறவுப் பெயர்களுக்கு தனிப் பட்டியலே உண்டு.

அம்மா, அப்பா, அண்ணன், அக்கா (தமக்கை), தம்பி, தங்கை, கணவன், மனைவி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, தாய்மாமா (அம்மான்), மாமி, அத்தை, மாமா, தாத்தா (அப்பச்சி, அம்மச்சி), பாட்டி (அப்பத்தா, அம்மத்தா), மாமனார், மாமியார், சம்பந்தி, மகன், மகள், மருமகன், மருமகள், மாப்பிள்ளை, மைத்துனர், பங்காளி, மைத்துனி, சட்டகர், அத்தான், அண்ணி, ஓரகத்தி, அத்திம்பேர், அம்மாஞ்சி, அத்தாத்தை, பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளுப் பேத்தி, எள்ளுப் பேரன், எள்ளுப் பேத்தி…

உறவுகளால் நிறைந்தவை நமது குடும்பங்கள். இந்தப் பெயர்ச்சொற்களே வெளிநாட்டு நண்பருக்கு மயக்கம் ஏற்படுத்தின. இதுபோன்ற உறவுகளைக் கொண்டாடும் வாழ்வியல் வெளிநாட்டினருக்குப் புதியதுதான். ஆனால், அண்மைக்காலமாக, நாமும் உறவுமுறைகளின் சிறப்பம்சங்களை இழந்து வருகிறோம்.

பிறப்பின் அடிப்படையில் ரத்தத் தொடர்பு உள்ளவர்களால் உருவாகுபவையே உறவுகள். ஒருவருக்கொருவர் உதவவும், இன்ப, துன்பங்களில் உடனிருக்கவும் உறவுகள் முக்கியமானவை. அவர்களுக்குப் பிறகே நண்பர்களும், அண்டை வீட்டினரும், சக ஊழியர்களும் வருகின்றனர்.

நமது தாத்தா, பாட்டி காலத்தில், வீட்டு விசேஷங்களிலும், துக்க நிகழ்வுகளிலும் பெரும் உறவினர் படை கலந்துகொண்டதைக் கண்டிருக்கிறோம். திருமணங்கள் 4 நாட்கள் நிகழ்ந்த காலமும் உண்டு. உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் வீட்டு விசேஷங்களில் குறிப்பிடத்தக்க கடமையுண்டு. இன்று நமது வீடுகளில் நிலவரம் எப்படி?

தொழில் நிமித்தமாக உறவுகளைப் பிரிந்து வாழும் நிர்பந்தமான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். அதைவிட, குடும்பக் கட்டுப்பாட்டு முறையால் நமது குடும்பத்தை நாமே குறுக்கிக் கொள்ளும் அவலச் சூழலில் நாம் சிக்குண்டிருக்கிறோம்.

நாட்டின் மக்கள்தொகையைக் கட்டுப்பாட்டில் வைக்க அரசு பெருமுயற்சி செய்கிறது; குடும்பக் கட்டுப்பாட்டு பிரசாரமும் பெரிய அளவில் செய்யப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு குடும்பக் கட்டுப்பாடு தேவையே. அதேசமயம், ஒவ்வொரு பெற்றோரும் ஒற்றைக் குழந்தையுடன் மக்கட்செல்வத்தை குறுக்கிவிடுவது தேவையா என்ற கேள்வி எழுகிறது.

நமது முன்னோர் மக்கட்செல்வத்தை குடும்பச் சுமையாகக் கருதவில்லை; சமுதாய விழுதுகளாகவே கருதினார்கள். பதினாறு பேறுகளில் முதன்மையானது மக்கட்செல்வம் என்பதால்தான் நமது தாத்தாக்களின் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் 10-க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தார்கள்.

அந்தக் குடும்பங்களில் குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்தபோது, தங்களுக்கான வாய்ப்புகளை அவர்களே உருவாக்கினார்கள். அதன்மூலமாக குடும்பங்கள் உயர்ந்தன. தமிழகத்தின் முன்னணி தொழில் குடும்பங்கள் பல அவ்வாறு உருப்பெற்றவையே.

ஆனால் இன்று, பெரும்பாலான மக்கள்  ‘அளவான குடும்பம்- வளமான வாழ்வு’ என்ற கோட்பாட்டில் மூழ்கி, ஒற்றைக் குழந்தையுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு தனித்து வளரும் குழந்தைளுக்கு உறவுமுறைகள் எப்படி அமையும்? உடன் பிறந்தவர்கள் இல்லாமல், பிற உறவுமுறைகள் மலர்வது எப்படி?

குடும்பக் கட்டுப்பாட்டை கடந்த இரண்டு தலைமுறைகளாக தீவிரமாகப் பின்பற்றியதன் விளைவாக, இப்போது பல வீடுகளில் மாமா, அத்தை, சித்தப்பா, பெரியம்மா போன்ற உறவுமுறைகளே இல்லாது போய்விட்டது. தற்போதைய தலைமுறையிலோ, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற சகோதர உறவுகளின்றி, ஒற்றை மகவாக வளரும் குழந்தைகளே அதிகம்.

இவ்வாறு தனித்து செல்லமாக வளரும் குழந்தைகள் மூர்க்கமாகவும் பிடிவாத குணம் படைத்தவர்களாகவும் மாறுவதாக உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தக் குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது பெருத்த உறவு வெற்றிடம் ஏற்படுவது திண்ணம். இத்தகைய துர்பாக்கிய நிலை பெரும்பாலான உயர், நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் மிகுதியாகக் காணப்படுகிறது.

தற்போதைய பொருளாதாரச் சூழலில் ஒரு குழந்தையை வளர்ப்பதே சிரமம் என்க்கிறார்கள். இப்படி நமது பெரியவர்கள் நினைத்திருந்தால் நாம் பிறந்திருப்போமா?

உண்மையில் நமது தாத்தா- பாட்டிகள் இறை நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் மிகுந்தவர்களாக இருந்தார்கள். கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு மக்கட்செல்வத்தை அவர்கள் பெருக்கினார்கள். மங்கலமான மனைமாட்சியின் நன்கலம் நன்மக்கட்பேறு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

ஆனால் நமக்கோ இறை நம்பிக்கையும் இல்லை; தன்னம்பிக்கையும் இல்லை. அதனால்தான் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் வளர்க்க முடியுமா என்று மலைக்கிறோம்; நமது குழந்தைகளின் உறவுமுறைகளை முளையிலேயே கிள்ளி எறிகிறோம்.

குடும்பக் கட்டுப்பாட்டை கடுமையாக அமல்படுத்திய சீனாவிலேயே தற்போது இரு குழந்தைகளைப் பெற்றெடுக்குமாறு அரசு வலியுறுத்துகிறது. நாம் எப்போது உறவின் பெருமையை உணரப் போகிறோம்?

 

-தினமணி (05.09.2016)

.

Leave a comment