செயற்கை அறிவுத்திறன் ஆய்வில் முன்னோடி

20 Sep

 

raj-reddy1

ராஜ் ரெட்டி

இது கணினி யுகம். மனித அறிவுடன் போட்டியிடக் கூடிய கணினிகளையும் இயந்திர மனிதர்களையும் உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால், மனித மூளையை இன்னமும் கணினியால் வெல்ல முடியவில்லை. எனினும், செயற்கை அறிவுத்திறனில் (Artificial Intelligence) விஞ்சும் வகையில் கணினியின் திறத்தைக் கூட்டும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த ஆராய்ச்சிகளில் உலக அளவில் முன்னோடியாக இருப்பவர், அமெரிக்காவில் வாழும் இந்தியரான ராஜ் ரெட்டி.

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் காட்டூர் என்ற இடத்தில் விவசாயக் குடும்பத்தில் 1937, ஜூன் 13-இல் பிறந்தவர், தபலா ராஜகோபால் ரெட்டி. அறிவியல் உலகில், ராஜ் ரெட்டி என்ற பெயரே நிலைத்துவிட்டது.

சென்னையில் கிண்டி பொறியியல் கல்லூரியில் (பின்ணாளில் அண்ணா பல்கலைக்கழகம்) கட்டுமானப் பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்ற ராஜ் ரெட்டி (1958), மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றார். அங்கு நியூ சவுத் வேல்ஸ் பலகலைக்கழகத்தில் எம்.டெக். பட்டம் பெற்றார் (1960).

பிறகு, அங்கேயே ஐபிஎம் நிறுவனத்தில் பயன்பாட்டு அறிவியல் பிரதிநிதியாக பணிபுரிந்தார் (1960- 63). அதையடுத்து ஆராய்ச்சிப் படிப்புக்காக, அமெரிக்காவின்  ஸ்டான்ஃபோர்ட் பலகலைக்கழகம் சென்றார். அங்கு கணிப்பொறியியலில் 1966-இல் பி.ஹெச்டி. பட்டம் பெற்றார். பிறகு, அங்கேயே, கணிப்பொறியியல் துறையில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார். 1969 வரை அங்கு பணிபுரிந்தார்.

அதையடுத்து, அமெரிக்காவின் கார்னெகி மெலான் பல்கலைக்கழகத்தின்  கணிப்பொறியியல் துறையில் துணைப் பேராசிரியராக 1969-இல் இணைந்தார். அங்கேயே முழுநேரப் பேராசிரியராக 1973-லும், பல்கலைக்கழகப் பேராசிரியராக 1984-லும் பதவி உயர்வு பெற்றார்.

கார்னெகியில் தானியங்கிகளை உருவாக்கும் ரோபோட்டிக்ஸ் இன்ஸ்டிட்யூட்டை (Robotics Institute) 1979-இல் ராஜ் ரெட்டி நிறுவினார். அதன் நிறுவன இயக்குநராக 1991 வரை இருந்து அந்த நிறுவனத்தை வளர்த்தார்.

1991 முதல் 1999 வரை, கார்னெகி பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டார்.  அப்போது, மொழித் தொழில்நுட்ப கல்வியகம், மனித- கணினி இடையீட்டுக் கல்வியகம், தானியங்கிகள் குறித்த படிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான மையம், மென்பொருள் ஆராய்ச்சி கல்வியகம் (Language Technologies Institute, Human Computer Interaction Institute, Center for Automated Learning and Discovery,  the Institute for Software Research) ஆகியவற்றை ராஜ் ரெட்டி உருவாக்கினார். இந்த நிறுவனங்கள் அனைத்துமே தானியங்கியலை (Robotics) மேம்படுத்துவதில் பெரும்பங்கு வகித்து வருகின்றன.

ராஜ் ரெட்டி அமெரிக்கக் குடியுரிமை பெற்றவராக இருந்தபோதும் ஆண்டுக்கு ஒருமுறை தாய்நாடு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்தியாவில் கணிப் பொறியியலில் முன்னேற்றம் காண வேண்டும் என்பது அவரது அவா. ஹைதராபாத்தில் 1998-இல் நிறுவப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துக்கான சர்வதேச கல்வி நிறுவனத்தின் (IIIT- Hyderabad) வழிகாட்டும் குழுவுக்கு அவர் தலைவராக உள்ளார். தவிர, தெலங்கானாவின் பாஸரில் உள்ள ராஜீவ் காந்தி அறிவுத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் அவர் செயல்படுகிறார்.

அமெரிக்க அதிபரின் தகவல் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (PITAC)  துணைத் தலைவராகவும் ராஜ் ரெட்டி 1999 முதல் 2001 வரை இருந்தார். அமெரிக்காவின் செயற்கை அறிவுத்திறன் ஆராய்ச்சி சங்கத்தின் (American Association for Artificial Intelligence) நிறுவன உறுப்பினராகவும், 1987- 89-இல் அதன் தலைவராகவும் ராஜ் இருந்தார். நெருக்கடிநிலை மேலாண்மைக்கான இந்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் (EMRI) உறுப்பினராகவும், ஆரோக்கிய மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் (HMRI) உறுப்பினராகவும் அவர் செயல்பட்டார். EMRI  நிறுவனம் தான் ஆபத்துகால மருத்துவ சேவைகளை அளிக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தனியார் பங்களிப்புடன் இந்தியாவில் அளிக்கிறது.

தற்போது, அமெரிகாவின் பிட்ஸ்பர்கில் குடும்பத்துடன் வசிக்கும் ராஜ் ரெட்டி, கார்னெகி மெலான் பலகலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் ரோபாட்டிக்ஸ் பள்ளியின் சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

முன்னோடி ஆராய்ச்சிகள்: செயற்கை அறிவுத்திறன் குறித்த ஆராய்ச்சியில் ராஜ் ரெட்டி முதன்மையானவராகக் கருதப்படுகிறார். ஆரம்பத்தில் ஸ்டான்ஃபோர்ட் பலகலைக்கழகத்தின் செயற்கை அறிவுத் திறன் ஆய்வகத்திலும், 1969 முதல் கார்னெகி மெலான் பல்கலைக்கழகத்திலும் அவரது ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. அவை பொதுவாக பேச்சு, பார்வை, மொழி தொடர்பான ரோட்டிக்ஸ் குறித்தவை. மனிதரின் பேச்சைப் புரிந்துகொண்டு செயல்படும் தானியங்கிகளை உருவாக்கும் ஆய்வுத் திட்டம் இது. தவிர, தானியங்கிகள் மொழிகளை உணரும் வகையில் மேம்பட்ட ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் ராஜ் ரெட்டியும் அவரது குழுவினரும் நடத்திய இடையறாத ஆராய்ச்சியின் பலனாக, வரலாற்றுச் சிறப்பு மிக்க பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர்.

மனிதக் கட்டளைக்கு தானியங்கி பணிதல் (voice control of a robot), அதிக அளவிலான சொற்பிரயோகங்களை உணர்தல் (large vocabulary connected speech recognition), காட்சிகளை அவதானித்தல் (Analysis of Natural Scenes), தன்னாட்சி பெற்ற தானியங்கி முறைகள் (Autonomous Robotic Systems), சிறப்பு இலக்குகளுக்கான கணினி வடிவமைப்புகள் (Task Oriented Computer Architectures) ஆகியவை அவற்றில் குறிப்பிடத் தக்கவை.

தகவல்களை உலகம் முழுவதும் பயன்படுத்துவதற்கான வழிமுறையும் (Universal Access to Information) ராஜால் உருவாக்கப்பட்டது. ராஜ் ரெட்டி உருவாக்கிய  ‘ஹியர்சே ஐ’ (Hearsay I) தொழில்நுட்பம், தொடர்ச்சியான பேச்சை கிரஹிக்கும் தானியங்கிகளை உருவாக்குவதற்கான கண்டுபிடிப்புகளில் முதன்மையானதாகும். இத்துறையில் மேலும் பல கண்டுபிடிப்புகளை ராஜ் நிகழ்த்தியுள்ளார்.

சமூகத்தின் சேவைக்காகவே தொழில்நுட்பம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் ராஜ் ரெட்டி. அவரது முனைப்பால், பிரான்ஸில் 1981-இல் Centre Mondial Informatique et Ressource Humaine என்ற ஆராய்ச்சி நிறுவனம் ஆமைந்தது. அதன் தலைமை விஞ்ஞானியாக ராஜ் செயல்பட்டார். சீனாவில் உள்ள தனது சக விஞ்ஞானிகளுடன் இணைந்து, அனைத்துலக எண்ம நூலகத் திட்டத்தை (Universal Digital Library Project) 1995-இல் ராஜ் ரெட்டி துவக்கினார். உலகம் முழுவதும் இதுவரை வெளியான, வெளியாகும் ஆயிரம் நாளிதழ்களின் செய்திகளைத் தொகுக்கும் இத்திட்டத்தின் படி, யுனெஸ்கோ இணையதளங்களில் அவற்றை உலகம் முழுவதும் படிக்கலாம்.

உலகம் முழுவதிலும் இருந்து கௌரவங்கள், விருதுகள் பல ராஜ் ரெட்டியை நாடி வந்துள்ளன. 2001-இல் பத்மபூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது. சர்வதேச கணிப்பொறி சங்கத்தின் டூரிங் விருது 1994-இல் ராஜுக்கு வழங்கப்பட்டது. 1984-ல் பிரான்ஸின் உயரின் லீஜன் ஆஃப் ஹானர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஓகவா பரிசு (2004), டொனால்டு வாக்கர் விருது (2005), ஹோண்டா பரிசு (2005), அமெரிக்காவின் உயரிய வென்னேவர் புஷ் விருது (2006) உள்ளிட்ட விருதுகளையும், பல்வேறு பல்கலைக்கழகங்களின் கௌரவ முனைவர் பட்டங்களையும் ராஜ் ரெட்டி பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் மேம்படுத்தப்பட்ட செயற்கை அறிவுத்திறன் ஆராய்சிகளுக்கான சங்கம், மின்னியல், மின்னணுவியல் பொறியாளர்களுக்கான சங்கம், அமெரிக்க ஒலி அறிவியல் சங்கம் ஆகியவற்றில் ஆராய்ச்சி உறுப்பினராக ராஜ் ரெட்டி உள்ளார். அமெரிக்க தேசிய பொறியியல் அகாதெமி, இந்திய தேசிய அறிவியல் அகாதெமி, சீன பொறியியல் அகாதெமி, இந்திய தேசிய பொறியியல் அகாதெமி ஆகியவற்றிலும் அவர் அறுப்பினராக உள்ளார்.

செயற்கை அறிவுத்திறன் குறித்த ஆராய்ச்சிகளில் ராஜ் ரெட்டியின் இடம் தனித்தன்மை வாய்ந்தது மட்டுமல்ல, முன்னோடியானதும் கூட. மனிதன் நினைப்பதை விட வேகமாகச் சிந்தித்து இயங்கும் ஆற்றலுடன் தானியங்கி இயந்திர மனிதனை உருவாக்கும் தீவிர முயற்சிகளில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அம்முயற்சி நிறைவுறும்போது, ராஜ் ரெட்டியின் பங்களிப்புகளுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.

 

-தினமணி இளைஞர்மணி (20.09.2016)

 

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: