நிலவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பியவர்

18 Oct

mayilsamy-aannadurai

மயில்சாமி அண்ணாதுரை

 ‘சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என்று நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய மகாகவி பாரதியின் கனவை நிறைவேற்றியிருக்கிறார் மற்றொரு தமிழர். அவர், தமிழகத்தைச் சார்ந்த விண்ணியல் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. நிலவை ஆராய இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) அனுப்பிய ‘சந்திரயான்’ செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநர் அவர்.

தமிழகத்தின் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி கிராமத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் மகனாக, 1958, ஜூலை 2-இல் பிறந்தார் அண்ணாதுரை. தந்தையின் பெயரான மயில்சாமியுடன் இணைந்து அவரது பெயர் மயில்சாமி அண்னாதுரை என்று நிலைத்துவிட்டது.

அண்ணாதுரை, தனது ஆரம்பக் கல்வியை கோதவாடியிலும், பிறகு கிணத்துக்கடவு அரசுப் பள்ளியிலும் படித்தார். அவர்களது குடும்பம் வசித்த நல்லட்டிபாளையத்திலிருந்து தினசரி 5 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்றே அவர் படித்தார்.   “தமிழ்வழிக் கல்வியில் படித்தாலும் கிராமப்புற மாணவரும் சாதிக்க முடியும். வசதிக் குறைபாடுகள் கல்விக்கு தடையாக இருப்பதில்லை’’ என்று தனது வாழ்வனுபவத்தைக் குறிப்பிடுகையில் அண்ணாதுரை கூறுவது வழக்கம்.

கோவை அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் இளநிலை பொறியியல் பட்டமும் (1980), பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் பயன்பாட்டு மின்னணுவியலில் முதுநிலை பொறியியல் பட்டமும் (1982) பெற்றார் அண்ணாதுரை.

படிப்பை முடித்தவுடன் பல வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் வந்தபோதும், அவற்றை நாடாமல், இஸ்ரோ நிறுவனத்தில் இளநிலை ஆய்வாளராக 1982-இல் சேர்ந்தார். மிக விரைவிலேயே, தனது திறமையால், செயற்கைக்கோள் முடுக்கியை உருவாக்கும் அணியின் தலைவராக 1985-இல் நியமிக்கப்பட்டார்.

1988-இல் செயற்கைகோள் விண்கலன் இயக்க மேலாளராகவும், 1994-இல் இன்சாட் (India’s National Communication satellite) செயற்கைக்கோள் திட்டத்தின் துணை இயக்குநராகவும், இன்சாட் -2 சி திட்டத்தின் இயக்குநராகவும் உயர்ந்தார். இன்சாட்- 2டி (1997), இன்சாட் -3பி (1999), இன்சாட் – 2இ (2000), ஜிசாட்-1 (2001), இன்சாட்- 3இ (2003) திட்டங்களின் திட்ட இயக்குநராகவும் அவர் பணியாற்றினார். கல்விக்கு உதவும் செயற்கைகோள் திட்டமான எஜுசாட் திட்டத்தின் உதவி திட்ட இயக்குநராக 2003-இல் நியமிக்கப்பட்டார்.

தன்க்கு அளிக்கப்பட்ட அனைத்து பணிகளிலும் சீரிய முறையில் பணியாற்றி, இஸ்ரோ சாதனைகளின் அங்கமாக மிளிர்ந்த அண்ணாதுரைக்கு, 2004-ல்  ‘சந்திரயான்’ திட்ட இயக்குநர் என்ற உயரிய பணி அளிக்கப்பட்டது.

பூமியின் துணைக்கோளான சந்திரன், விண்வெளியில் பூமியிலிருந்து பல ஆயிரம் மைல் தொலைவிலுள்ளது. அங்கு மனிதர் வாழ உகந்த சூழல் உள்ளதா என்பது குறித்து அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஏற்கனவே ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், சந்திரனை ஆராயும் திட்டத்தில் இஸ்ரோவும் இணைந்ததன் மூலமாக, விண்வெளித் துறையில் இந்தியா முத்திரை பதித்துள்ளது. இத்திட்டத்துக்கு ‘சந்திரனுக்கு ஒரு பயணம்’ என்று பொருள்படும் ‘சந்திரயான்’  என்று பெயரிடப்பட்டது.

மூன்று படிநிலைகள் கொண்டது இந்த ஆராய்ச்சித் திட்டம். அதில் முதல் படிநிலை 2008-இல் நிறைவடைந்தது. 2008, அக். 22-இல், ‘சந்திரயான் -1’ என்ற 1380 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளைத் தாங்கியபடி, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணைச் சாடியது.

3,84,400 கி.மீ. தொலைவிலுள்ள சந்திரனை நெருங்கிய அந்த ராக்கெட் நிலவின் சுற்றுப்பாதையில் ஆராய்ச்சிச் செயற்கைகோளை 2008, நவ. 8-இல் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. நிலவுக்கு அனுப்பிய ஆளில்லாத செயற்கைக்கோளான சந்திரயான், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தது.

சந்திரனின் ஈர்ப்பு விசை, பூமியின் ஈர்ப்பு விசை, சூரிய மண்டலத்தின் இடையூறுகள் உள்ளிட்ட அனைத்தையும் அவதானித்து, மிகத் துல்லியமாகக் கணக்கிட்டால் மட்டுமே, முதல் முயற்சிலேயே இதனை சாதிக்க முடியும். அதனைச் செய்ததன் மூலமாக, உலகில் வேறெந்த வல்லரசு நாட்டுக்கும் இணையாக இந்திய விஞ்ஞானிகளின் அறிவும் திறனும் நிரூபிக்கப்பட்டது. அதிலுள்ள 11 கருவிகள் மூலமாக, நிலவின் கதிரியக்கம், நீர்நிலைகள், தனிமங்கள், பருவநிலை உள்ளிட்டவை ஆராயப்படுகின்றன.

இதன் அடுத்தகட்டம், ரஷ்ய உதவியுடன் கூடிய, 2018-இல் அனுப்ப்ப்பட உள்ள சந்திரயான் -2 ஆகும். அது நிலவின் மேற்பரப்பில் இறங்கி அதிலிருந்து கல், மண், தாதுக்களை வெட்டி எடுத்து வரும் திறம் கொண்டதாக இருக்கும். நிலவில் ஓர் ஆராய்ச்சிக்கூடத்தை எப்பகுதியில் அமைப்பது என்பதையும் சந்திரயான் -2 தீர்மானிக்கும்.

இதன் அடுத்த கட்ட்த்தில், சந்திரயான் -3 ஏவப்பட்டு ஆராய்ச்சிகள் மேலும் வலுப்படும். சந்திரயான் -4 மூலமாக நிலவுக்கு மனிதனை அனுப்புவதே இறுதி இலக்கு. இவ்வாறாக தெளிவான திட்டமிடலுடன் உழைக்கும் இஸ்ரோ அமைப்பில், இத்திட்டத்தை வழிநடத்துபவராக அண்ணாதுரை விளங்குகிறார்.

சந்திரயான் திட்டங்களின் இயக்குநராக மட்டுமல்லாது, இந்தியாவின் முதல் நுண்ணலை செயற்கைக்கோள் உள்ளிட்ட தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் (Indian Remote Sensing –IRS Satellite) , செவ்வாய்க் கிரகத்தை ஆராயும்  ‘மங்கள்யான்’ செயற்கைக்கோள் திட்டங்களின் தலைமை இயக்குநராகவும் அண்ணாதுரை உள்ளார். வானிலையை துல்லியமாக அறிய உதவும் அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளை (2015) அனுப்பிய குழுவின் இயக்குநரும் அவரே.

மங்கள்யான் (Mangalyaan)  அல்லது செவ்வாய் சுற்றுகலன் திட்டம் (Mars Orbiter Mission),  செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் (ISRO) 2013 நவம்பர் 5 அன்று வெற்றிகரமாகச் செலுத்தப்பட்ட ஆளில்லாத விண்கலம் ஆகும்.  இந்த விண்கலம் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய்க் கோளின்  சுற்றுப்பாதையில்  வெற்றிகரமாக இணைந்தது. இதன் மூலம்,  முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு செயற்கைக்கோள்   அனுப்பிய முதலாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

சந்திரன், செவ்வாய் மட்டுமல்லாது சூரியனை ஆராயும் ஆதித்யா-1 செயற்கைக் கோளை 2019-இல் விண்ணில் ஏவும் திட்ட்த்தையும் மயில்சாமி அண்ணாதுரை வழிநடத்துகிறார். தற்போது பெங்களூரிலுள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக உள்ள மயில்சாமி அண்ணாதுரை, தொடரும் விண்வெளித் திட்டங்களுக்கு தலைமை தாங்கி வருகிறார். பத்மஸ்ரீ விருது (2016) அளித்து இந்தைய அரசு அவரை கௌரவித்துள்ளது.

சந்திரயான் திட்டத்துக்காக 3 சர்வதேச விருதுகள், 4 விண்வெளி ஆய்வு விருதுகள், 5 முனைவர் பட்டங்கள், பல்வேறு அமைப்புகளின் கௌரவ விருதுகளைப் பெற்றுள்ள அண்ணாதுரை,  ‘கையருகே நிலா, அறிவியல் களஞ்சியம்’ ஆகிய இரு விஞ்ஞான நூல்களை எழுதியுள்ளார். மேலும், மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும்வகையில், பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொண்டு ஊக்குவித்து வருகிறார்.

-தினமணி இளைஞர்மணி (18.10.2016)

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: