சுதேசி இணைக் கணினியை உருவாக்கிய விஞ்ஞானி

13 Dec

 

ரோத்தம் நரசிம்மா

ரோத்தம் நரசிம்மா

இந்தியாவின் விண்வெளியியல் சோதனைகளுக்குத் தேவையான இணைக் கணினித் தொழில்துட்பத்தை (Parellel Computing) அளிக்க வல்லரசு நாடுகள் முன்வராதபோது, அதை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக, தேசிய விண்வெளி ஆய்வகம் 1986-இல் ஃப்ளோசால்வர் எம்கே1 (Flowsolver MK 1) என்ற சுதேசி வன்பொருளை வடிவமைத்தது. அந்தப் பணிக்கு தலைமை வகித்தவர் ரோத்தம் நரசிம்மா.

விண்வெளி விஞ்ஞானியும், திரவ இயக்கவியல் (Fluid Dynamics)  நிபுணருமான ரோத்தம் நரசிம்மா, இத்துறைகளில் 250 ஆய்வறிக்கைகளையும், 15 நூல்களையும் எழுதியுள்ளார்.

கர்நாடகத்தின் பெங்களூரில் 1933, ஜூலை 20-இல் பிறந்த ரோத்தம், அங்குள்ள ஆச்சார்ய பாடசாலா பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். பிரபல விஞ்ஞானி சர். சி.வி.ராமனின் உரையால் கவரப்பட்டு இயற்பியல் படிக்க விரும்பினாலும், சுதந்திர இந்தியாவில் பொறியியலின் தேவை அதிகமாக இருந்ததால், அவரது உயர்கல்வி பொறியியல் துறையில் நிகழ்ந்தது.

மைசூரு பல்கலைக்கழகத்தின் விஸ்வேஸ்வரையா பொறியியல் கல்லூரியில் இயந்திரவியலில் பி.இ. பட்டம் (1953) பெற்ற அவர், பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் (ஐஐஎஸ்சி) விண்வெளிப் பொறியியல் பட்டயப் படிப்பில் சேர்ந்தார். 1955-இல் அப்படிப்பை நிறைவு செய்த ரோத்தம், அங்கேயே ஆய்வு உதவியாளர் படிப்பிலும் இணைந்தார். அப்போது அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் பிரபல விஞ்ஞானியான பேராசிரியர் சதீஷ் தவான்.

தவானின் மேற்பார்வையில்  ‘A study of transition from laminar to turbulent flow in the boundary layer on a flat plate’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை அவர் சமர்ப்பித்தார். திரவ இயக்கவியலில் அந்த ஆய்வறிக்கை முன்னோடியானதாகும்.

அடுத்து மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற ரோத்தம், கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் (கால்டெக்) இணைந்து, விஞ்ஞானி ஹான்ஸ் லீப்மேன் வழிகாட்டலில்  ‘Some flow problems in rarefied gas dynamics’  என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு பிஎச்.டி. பட்டம் (1961) பெற்றார்.

1962-இல் நாடு திரும்பிய ரோத்தம், பெங்களூரு, ஐஐஎஸ்சி நிறுவனத்தின் விண்வெளிப் பொறியியல் துறையில் இணைந்தார். அங்கு பலநிலைகளில் பொறுப்பு வகித்த அவர் 1999-இல் அங்கிருந்து ஓய்வு பெற்றார்.

இதனிடையே, விண்வெளிப் பொறியியலுக்கு உதவி புரியும் வகையில் வளிமண்டல அறிவியல் மையத்தை 1982-இல் நிறுவிய ரோத்தம், அதன் தலைவராக 1989 வரை செயல்பட்டார். இந்நிறுவனம், தற்போது வளிமண்டல அறிவியல் மற்றும் கடலியல் ஆராய்ச்சி மையமாக விளங்குகிறது.

தேசிய விண்வெளி ஆய்வகத்தின் (என்ஏஎல்) இயக்குநராக 1984-இல் கூடுதல் பொறுப்பேற்ற ரோத்தம், 1993 வரை அதில் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தினார். அப்போதுதான் இணைக்கணினித் தொழில்நுட்பத்துக்கான ‘ஃப்ளோசால்வர் எம்கே1’ வன்பொருள் உருவாக்கப்பட்டது. அப்போது அதைத் தயாரிக்கத் தேவையான கட்டமைப்பு அரசுத் துறையில் இல்லாததால், விப்ரோ நிறுவனத்திடம் அப்பணி ஒப்படைக்கப்பட்டு, வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
தவிர, கண்ணாடியிழை பிளாஸ்டிக்கால் (Fibre Plastic)  உருவாக்கப்பட்ட விமானத்தையும் என்ஏஎல் வடிவமைத்தது.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்) நிறுவனத்திலும் ரோத்தம் 1977 முதல் 1979 வரை தலைமை திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்தார். அப்போது, ஹெச்ஏஎல், என்ஏஎல், ஐஐஎஸ்சி நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, இலகுரக போர் விமானத்துக்கான (LCA) ஆரம்பகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. பின்னாளில் உருவாக்கப்பட்ட தேஜாஸ் (2001), உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட போர்விமானமாகும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அறிவியல் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் ரோத்தம் நரசிம்மா செயல்பட்டார். இணைக்கணினி தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக உருவாக்க அவரது அரசுப் பணித் தொடர்பு காரணமானது.

ரோத்தம் நரசிம்மாவின் ஆராய்ச்சியில் முக்கியமானது, விமான இயக்கத்துக்கு உறுதுணையான விண்வெளி திரவ இயக்கவியல் ஆய்வுகளாகும். சீரடுக்கு (Laminor), கொந்தளிப்பு ஓட்டம் (Turbulant Flow) இரண்டுக்கும் இடையிலான பரிமாற்றங்கள், அதிர்வலைகள் (Shock waves), மேகங்களின் திரவ இயக்கவியல், புவி அண்மைப் பரப்பு காற்றின் வெப்பம், வளிமண்டல அடுக்குகள் ஆகியவை தொடர்பான பல ஆய்வறிக்கைகளை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்திய அறிவியல் அகாதெமியின் தலைவராக 1992 முதல் 1994 வரை இருந்தபோது பல்கலைக்கழக அளவில் அறிவியல் கல்வியை ஊக்குவிக்க பல முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது, Renosance என்ற அறிவியல் சஞ்சிகையை அவர் துவக்கினார்.

இஸ்ரோ, சிஎஸ்ஐஆர், விண்வெளி ஆணையம், இந்திய வானிலை சங்கம், இந்திய தேசிய அறிவியல் அகாதெமி உள்பட 20-க்கு மேற்பட்ட அரசு சார்பு அறிவியல் அமைப்புகளில் ரோத்தம் நரசிம்மா உறுப்பினர், நிர்வாகி போன்ற பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். தவிர 30-க்கு மேற்பட்ட அரசு சார்பு அமைப்புகளில் வழிகாட்டுதல் உறுப்பினராகவும் அவர் செயல்படுகிறார்.

விண்வெளி ஆணையத்தின் உறுப்பினராக (1989- 2012) இருந்தபோது, வானிலை ஆராய்ச்சி செயற்கைக்கோளை (Megha Tropques) வடிவமைக்க இந்தோ-பிரெஞ்ச் கூட்டு ஆராய்ச்சிக் குழுவுக்கு தலைமை வகித்தார் ரோத்தம். பின்னாளில் இஸ்ரோ ஆண்டிரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்தத்தில் ஊழல் நிகழ்ந்ததாக விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டதைக் கண்டித்து, விண்வெளி ஆணையத்திலிருந்து அவர் விலகினார்.

ஐஐஎஸ்சி பேராசிரியர் (1990- 1999), இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நேரு இருக்கை பேராசிரியர் (1989- 1990), பெங்களூரு ஜேஎன்சிஏஎஸ்ஆரின் ராமநாதன் இருக்கைப் பேராசிரியர், பெங்களூரிலுள்ள மேம்பட்ட படிப்புகளுக்கான தேசிய கல்வி மையத்தின் (என்ஐஏஎஸ்) இயக்குநர் (1997- 2004) பொறுப்புகளை வகித்த ரோத்தம், அமெரிக்காவின் நாசா, ஸ்ட்ராத்கிளைட் பல்கலைக்கழகம், பிரஸ்சல்ஸ் பல்கலைக்கழகம், அடிலெய்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகைப் பேராசிரியராகவும் உள்ளார்.

சிஎஸ்ஐஆரின் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1976), இந்திய பொறியாளர் சங்கத்தின் தேசிய வடிவமைப்பு விருது (1996), அந்திய அறிவியல் காங்கிரஸின் ஸ்ரீநிவாச ராமானுஜன் விருது (1998), இந்திய அரசின் பத்மபூஷண் (1987), பத்மவிபூஷண் (2013), மூன்றாம் உலக நாடுகளின் அறிவியல் அதாதெமி வழங்கும் டிரைஸ்ட் விருது (2008) உள்ளிட்ட 75 தேசிய விருதுகளையும், சர்வதேச அளவிலான கௌரவங்களையும் ரோத்தம் நரசிம்மா பெற்றுள்ளார்.

தனக்கு அளிக்கப்படும் எந்தப் பொறுப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதிலும், அதற்காக கடினமாக உழைப்பதிலும், அதில் தனது துறை அறிவை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதிலும் நிகரற்றவராக ரோத்தம் நரசிம்மா கருதப்படுகிறார். அவரது அறிவியல் பயணம் 83 வயதிலும் சோர்வின்றித் தொடர்கிறது.

-தினமணி இளைஞர்மணி (13.12.2016)

.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: