அணு ஆற்றலில் தன்னிறைவுக்கு உழைத்தவர்

28 Dec

anil-kakodkar

அனில் ககோட்கர்

இந்தியாவின் மின்னுற்பத்தியில் அணு ஆற்றல் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இதற்கான அடிப்படைப் பணிகளில் ஈடுபட்டு, அணுசக்தியில் நாட்டை தன்னிறைவு காணச் செய்தவர் அணுவியல் விஞ்ஞானி அனில் ககோட்கர்.

பர்வானி மாகாணத்தில் (தற்போதைய ம.பி.) விடுதலைப் போராட்ட வீரர் புருஷோத்தம் ககோட்கரின் மகனாக 1943, நவம்பர்11-இல் அனில் ககோட்கர் பிறந்தார்.  பர்வானி,  கர்கான் பகுதிகளில் அவரது ஆரம்பக் கல்வி நிகழ்ந்தது.

உயர்கல்விக்காக மும்பை சென்ற அவர், ரூபாரேல் கல்லூரியிலும், மும்பை பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட வீரமாதா ஜீஜாபாய் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றார். இயந்திரவியலில் பி.இ. பட்டம் பெற்ற அவர் (1963), அணு ஆற்றல் நிறுவனத்தில் ஓராண்டு முதுநிலைப் பயிற்சி பெற்றார்.

அதையடுத்து 1964-இல் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) பணியில் சேர்ந்தார். அங்கு பணியாற்றியபோதே, பிரிட்டனின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சோதனைமுறை அழுத்தப் பகுப்பாய்வில் (Experimental Stress Analysis) எம்.எஸ்சி. பட்டம் பெற்றார் (1969).

பிறகு நாடு திரும்பிய அவர், அப்போது நாட்டில் தீவிரமடைந்திருந்த அணுக்கரு ஆராய்ச்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஹோமி ஜஹாங்கீர் பாபா, ராஜா ராமண்ணா போன்ற முன்னோடிகளின் பாதையில் பயணித்த அனில், இந்தியாவின் எதிர்கால அணுசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான திட்டங்களில் கவனம் செலுத்தினார்.

அவரது பணிகளில் முதன்மையானது, 1970-களில் துருவா அணு உலை நிறுவிய குழுவில் பங்கேற்றதாகும். அதையடுத்து செயலிழந்ததாக அறிவிக்கப்பட்ட இரு அணு உலைகளை கல்பாக்கத்தில் மறுநிர்மாணம் செய்தார்.

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட உயரழுத்த கணநீர் அணு உலை தொழில்நுட்பத்தை (Pressurised Heavy Water Reactor Technology) உருவாக்குவதற்கான அணியை வழிநடத்தி, அதில் அனில் வெற்றியும் பெற்றார்.

இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தில் மூன்றாவது நிலை, தோரியம் (Thorium) தனிமத்தைப் பயன்படுத்துவதாகும். யுரேனியத்துக்கு மாற்றாக புதிய அணுக்கரு மூலப்பொருளாக,உலகிலேயே அதிக அளவில் தமிழகத்தில் கிடைக்கும் தோரியம் மூலத்தைப் பயன்படுத்துவதன் வாயிலாக, பிற நாடுகளைச் சார்ந்திருந்த நிலையும் மாறியது. இத்திட்டத்தில் ஆழ்ந்த ஈடுபாடு காட்டிய அனில், அதன்மூலமாக அணு ஆற்றலில் நாடு தன்னிறைவு அடைவதற்கான பணிகளில் ஈடுபட்டார்.

அணு ஆற்றல் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான யுரேனியத்தை இந்தியாவுக்கு அளிக்க வல்லரசு நாடுகள் தயங்கியபோது, அதற்கு மாற்றாக, தோரியம்- யுரேனியம் 233மூலப்பொருளையும் புளூட்டோனியத்தை இயக்குபொருளாகவும் கொண்ட, மேம்பட்ட  கணநீர் அணு உலைகளை வடிவமைப்பதில் அனில் தலைமையிலான குழு கவனம் செலுத்தியது.

அணு உலைகளை மேம்படுத்தும் முடுக்கி அமைப்பு, அதிக வெப்பநிலையைத் தாங்கும் ரியாக்டர்கள் (அணுக்கரு உலைகள்),மறுசுழற்சித் தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் அனில் ககோட்கரின் ஆய்வுப் பணிகள் தொடர்ந்தன.

இந்தியாவின் அணு ஆயுதத் தயாரிப்புத் திட்டத்துக்கு பங்களிப்பு நல்கியவர்களுள் அனில் ககோட்கர் பிரதானமானவர். அமைதிக்கான அணு ஆயுத சோதனையை இந்தியா 1974 மே 18-இல் பொக்ரானில் நிகழ்த்தியபோது,  அதற்கான குழுவில் அவரும் இடம் பெற்றிருந்தார்.

1998 மே 13-இல் பொக்ரானில் இரண்டாவது முறையாக அணுவெடிப்பு சோதனை நிகழ்த்தப்பட்டபோது, அதை முன்னின்று நடத்தியவர் அனில் ககோட்கர் தான். அப்போது பல உலக நாடுகள் இந்தியாவுக்கு பல்வேறு அறிவியல், பொருளாதாரத் தடைளை விதித்தபோதும், உள்நாட்டுத் தொழில்நுட்ப உதவியுடன் தடைகளை மீறி இந்தியா வெல்ல, அவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவின் அயராத உழைப்பு காரணமானது.

அணுசக்தித் துறையின் வளர்ச்சிக்காக தனது பணிக்காலம் முழுமையும் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடலில் ஈடுபட்டவர் ககோட்கர். பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக அவர் 1986-இல் பொறுப்பேற்றார். அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், இந்திய அணுசக்தித் துறை அமைச்சகச் செயலாளராகவும் 2000 முதல் செயல்பட்டார். இத்துறையில் சுமார் 250 ஆய்வறிக்கைகளை ககோட்கர் வெளியிட்டுள்ளார்.

மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் (ஐஐடி- மும்பை) இயக்குநர் குழுத் தலைவராக 2006-15-இல் பொறுப்பு வகித்த ககோட்கர், ஐஐடி சீர்திருத்தத்திற்கான உயர்மட்டக் குழுவின் தலைவராகவும் இயங்கினார்.

இந்திய அறிவியல் அகாதெமி, இந்திய தேசிய அறிவியல் அகாதெமி, இந்திய தேசிய பொறியியல் அகாதெமி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆய்வு உறுப்பினராக அவர் உள்ளார். சூரிய சக்தி நிறுவனத்தின் ஆரம்பகாலத் தலைவர், பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஹோமி பாபா இருக்கை பேராசிரியர், சர்வதேச அணுசக்தி அகாதெமியில் மதிப்புறு உறுப்பினர், இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் உறுப்பினர்,  அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையத்தில் (CERN) இந்தியா சார்பில் பார்வையாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர் ககோட்கர். தற்போது,  இந்திய தேசிய பொறியியல் அகாதெமியின் சதீஷ் தவான் இருக்கை மதிப்புறு பேராசிரியராக உள்ளார்.

உணவு பதப்படுத்துதல், வித்துகள் பாதுகாப்பு, புற்றுநோய்க்கான சிகிச்சை ஆகியவற்றிலும் அணுக்கதிரியக்கத்தைப் பயன்படுத்துவது குறித்து அனில் ஆய்வு செய்துள்ளார்.உள்ளாட்சிகளில் சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரித்தல், அதிலுள்ள உப்பை நீக்குதல் தொடர்பான கழிவுநீர் மேலாண்மைக்கான ஆய்விலும் அவர் ஈடுபட்டார்.

அறிவியல் துறையில் திறம் மிகுந்த மனிதசக்தியை உருவாக்கும் முனைப்பில் பல கல்வி நிறுவனங்களைத் துவக்க அவர் காரணமாக இருந்தார். அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் (NISER), அணு ஆற்றல் துறையின் கீழ் மும்பை பல்கலைக்கழகத்தில் அடிப்படை அறிவியல் மையம் (CBS), ஹோமி பாபா தேசிய கல்வி நிறுவனம் (HBNI) ஆகியவை அவற்றில் முக்கியமானவை. விசாகப்பட்டினம், ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூரு ஆகிய இடங்களிலும் புதிய ஆய்வு மையங்களை அவர் அமைத்தார்.

இந்திய அரசின் பத்மஸ்ரீ (1998), பத்மபூஷண் (1999), பத்மவிபூஷண் (2009), நாயுடம்மா நினைவு விருது (2002), ஹோமி பாபா வாழ்நாள் சாதனையாளர் விருது (2010), மஹாராஷ்டிர மாநிலத்தின் மஹராஷ்டிர பூஷண் (2012) உள்ளிட்ட கௌரவங்களையும், விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

இன்று உலக அளவில் அணு ஆயுத நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளதற்கும், அணு ஆற்றல் வழங்கும் நாடுகள் குழுமத்தில் (Nuclear Suppliers Group- NSG) இணையும் திறன் பெற்றுள்ளதற்கும் பின்னணியில், அனில் ககோட்கரின் தொடர் உழைப்பும் தலைமையும் உள்ளன என்று சொன்னால் அது மிகையல்ல.

 

-தினமணி இளைஞர்மணி (27.12.2016)

 

.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: