நிலவுப் பயணத்துக்கு அடிகோலியவர்

3 Jan

kasturirangan-2

கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன்

சந்திரயான் திட்டம் மூலமாக நிலவை ஆராயும் நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது இந்தியா. அதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகளை மேற்கொண்டு, அத்திட்டம் நம் நாட்டில் துவங்கப்படக் காரணமாக இருந்தவர், இஸ்ரோ முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன்.

கொச்சி மாகாணம் (கேரள மாநிலம்), எர்ணாகுளத்தில் 1940, அக்டோபர் 24-இல் கஸ்தூரிரங்கன் பிறந்தார். அவரது குடும்பம் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டது.

1953-இல் மாணவப்பருவத்தில் ஒருமுறை, அஹமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் விஞ்ஞானி விக்ரம் சாராபாயைச் சந்திக்கும் வாய்ப்பு கஸ்தூரிரங்கனுக்கு கிடைத்தது. அதற்குமுன் வெளிநாடு சென்று படித்து அங்கேயே பணியில் அமரத் திட்டமிட்டிருந்த அவரது மனதை, சாராபாயுடனான 10 நிமிட சந்திப்பு மாற்றிவிட்டது. இயற்பியல் படிக்க வேண்டும். இந்தியாவிலேயே ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தை அவரிடம் சாராபாய் விதைத்துவிட்டார். இது கஸ்தூரிரங்கனே மாணவர்களிடம் கூறிய நிகழ்வு.

அதன்படி, மும்பையின் மாதுங்காவில் ராம்நாராயண் கல்லூரியில் பயின்ற அவர், மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றார். பிறகு அஹமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆய்வுக் கூட்த்தில் பணியாற்றினார். அப்போது, விண்வெளி இயற்பியல் தொடர்பான படிப்பில் (Experimental High energy Astronomy) அங்கேயே பிஹெச்.டி. பட்டம் (1971) பெற்றார்.

அதையடுத்து அங்கேயே தனது இயற்பியல், விண்வெளியியல் ஆய்வுகளை கஸ்தூரிரங்கன் தொடர்ந்தார். பிறகு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (இஸ்ரோ) அவரது பணிக்களம் மாறியது.

இஸ்ரோவில் பலநிலைகளில் பணியாற்றிய கஸ்தூரி ரங்கன், ஆரம்பத்தில் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். நாட்டின் முதல் பரிசோதனை புவி ஆய்வு செயற்கைக்கோள்களான பாஸ்கரா- 1 (1979), பாஸ்கரா-2 (1981) திட்டப்பணிகளின் திட்ட இயக்குநராக அவர் பணியாற்றினார். அவை ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டன. அதன்பிறகு இந்திய விண்வெளி ஆய்வுத் திட்டங்கள் விரைவு பெற்றன. அப்போது இந்தியாவுக்கான ஏவுகலன், இந்திய தேசிய செயற்கைக் கோள் (INSAT- 2) ஆகிவற்றின் தயாரிப்பில் கவனம் செலுத்தினார். இத்திட்டம், பின்னாளில் 1992-இல் வெற்றி பெற்றது. தவிர, இந்திய தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் (IRS-1A, 1B), அறிவியல் செயற்கைக்கோள்கள் தொடர்பான ஆய்வுகளிலும் அவர் ஈடுபட்டார். அவை முறையே 1988, 1991-இல் ஏவப்பட்டன.

துருவ சுற்றுப்பாதையில் ஏவக்கூடிய பி.எஸ்.எல்.வி. செயற்கைக் கோள், புவிநிலைப்பாதையில் ஏவக்கூடிய ஜி.எஸ்.எல்.வி. செயற்கைக் கோள்களை (PSLV, GSLV) ஏவும் ராக்கெட்களின் தயாரிப்பில் இந்திய விஞ்ஞானிகளின் கவனம் சென்றது. அவை முறையே 1993-லும் 2001-லும் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டன. அதற்கான ஆய்வுகளில் கஸ்தூரிரங்கன் ஈடுபட்டார்.

1994-இல் இஸ்ரோ நிறுவனத்தின் தலைவராக கஸ்தூரிரங்கன் பொறுப்பேற்றார். அவரது தலைமையில் பல முக்கியமான திட்டங்கள் செயல்வடிவம் பெற்றன. செயற்கைக்கோள் ஏவுகலன் தயாரிப்பில் நாடு தன்னிறைவு பெறத் தேவையான பல ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டன.

நாட்டின் தொலையுணர்வு செயற்கைக்கோள்களான ஐ.ஆர்.எஸ்- 1சி (1995), ஐ.ஆர்.எஸ் -1டி (1997), கடலியல் கண்காணிப்பு செயற்கைக்கோள்களான ஐ.ஆர்.எஸ் – பி3 (1996), ஐ.ஆர்.எஸ் –பி4 (1999) ஆகியவற்றை ஏவியதில் அவருக்கு பெரும் பங்குண்டு.

2000-இல் நிலவுக்கு பயணிக்கும் விண்கலத்தை உருவாக்குவதற்கான ஆய்வுகள் துவக்கப்பட்டன. அதனை துவக்க காலத்தில் கஸ்தூரிரங்கன் வடிவமைத்தார். அதற்கான அடிப்படை ஆராய்ச்சிப் பணிகள் தீவிரமடைந்தன. 2003, ஆக. 15-இல் அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், நிலவுக்குச் செல்லும் இந்திய ஆராய்ச்சிப் பயணம் துவக்கப்படுவதாக முறைப்படி அறிவித்தார்.

பின்னாளில் (2008, அக்டோபர்) நிலவுக்கு ஏவப்பட்ட சந்திரயான்-1 விண்கலம், நிலவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய 6 உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இணைத்தது. அந்த ஆய்வுக்கலம் 2009 ஆகஸ்ட் வரை செயல்பாட்டில் இருந்து, நிலவு குறித்த பல ஆய்வுத் தகவல்களை அளித்தது. தற்போது சந்திரயான்-2 ஆய்வுக்கலம் 2018-இல் ஏவப்பட உள்ளது.

2003-இல் இஸ்ரோவிலிருந்து கஸ்தூரிரங்கன் ஓய்வு பெற்றார். அதன்பிறகும், விண்வெளி விஞ்ஞானியாக உயர் ஆற்றல் கொண்ட எக்ஸ்ரே கதிர்கள், காமா கதிர்கள், வான் ஒளியியல் ஆகிய துறைகள் தொடர்பான ஆய்வுகளில் அவர் ஈடுபட்டுள்ளார். வளிமண்டலத்தில் கீழ் அடுக்குகளில் அண்டக் கதிர்களின் தாக்கம் குறித்த அவரது ஆய்வுகள் குறிப்பிடத் தக்கவை.

வானியல் கண்காணிப்பகம் (Optical Astronomy) தொடர்பான ஆய்வுகளிலும் அவர் கவனம் செலுத்தினார். அதற்கான கண்காணிப்பு ஆய்வகங்களை நிறுவுவதிலும் அவர் ஈடுபாடு காட்டினார். வானியல், விண்வெளிப் பயன்பாட்டியல், விண்வெளி அறிவியலில் இதுவரை 244 ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ள கஸ்தூரிரங்கனுக்கு, 16 பல்கலைக்கழகங்களின் கௌரவ முனைவர் பட்டங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 6 நூல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டிலும் பல வெளிநாடுகளிலும் உள்ள முக்கியமான அறிவியல் அகாதெமிகளில் அவர் உறுப்பினராக உள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 1994-ஆம் ஆண்டு முதல் 2003-ஆம் ஆண்டு வரை அவர் பணியாற்றினார். தற்போது அவர் பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் அகாதெமியின் தலைவராகவும், இந்திய அறிவியல் காங்கிரஸின் பொதுத் தலைவராகவும் அவர் உள்ளார். 2012-லிருந்து தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.

இந்திய தேசிய அறிவியல் அகாதெமி, இந்திய தேசிய பொறியியல் அகாதெமி, இந்திய விண்வெளி ஆய்வு சங்கம், இந்திய வானிலை ஆய்வு சங்கம், மூன்றாம் உலக நாடுகளுக்கான அறிவியல் அகாதெமி (TWAS) ஆகியவற்றில் அவர் அங்கம் வகிக்கிறார். சர்வதேச விண்வெளி ஆய்வு சங்கம், சர்வதேச விண்வெளியியல் அகாதெமி உள்ளிட்ட பல உலக அமைப்புகளிலும் அவர் அங்கம் வகிக்கிறார். ஐ.நா. விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துகான மையத்தின் (UN-CSSTE) தலைவராகவும், ராமன் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1983), ஆரியப்பட்டா பதக்கம் (2000), இந்திய அறிவியல் காங்கிரஸின் ஆசுதோஷ் முகர்ஜி நினைவு விருது (2004), சர்வதேச தொலையுணர்வு சங்கத்தின் ப்ராக் பதக்கம் (2004), இஸ்ரோவின் வாழ்நாள் சாதனையாளர் விருது (2008), விக்ரம் சாராபாய் விண்வெளியியல் விருது (2009), இந்திய அரசின் பத்மஸ்ரீ (1982), பத்மபூஷண் (1992), பத்மவிபூஷண் (2000) உள்ளிட்ட பல விருதுகள், கௌரவங்களை கஸ்தூரிரங்கன் பெற்றுள்ளார்.

“இப்போது சூரியனை ஆராயும் ஆதித்யா-1 விண்கலத்தை நாம் உருவாக்கி வருகிறோம். (2020-இல் இது ஏவப்பட உள்ளது). 5 டன் செயற்கைக்கோளை தாங்கிச் செல்லும் திறனுடன் கூடிய  ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டையும் நாம் வடிவமைத்துள்ளோம். அவை முழுமை அடையும்போது வெளிநாடுகளின் எந்த உதவியும் இன்றி விண்வெளியில் நம்மால் கோலோச்ச முடியும். நமது நாட்டின் தேவைகளை இஸ்ரோ வெகுவாகப் பூர்த்தி செய்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மிகவும் முதிர்ச்சி பெற்றுவிட்டது” என்கிறார் கஸ்தூரிரங்கன். அவரது கூற்றில் வெளிப்படும் பெருமிதம் இந்தியர் ஒவ்வொருவரும் உணர வேண்டியது.

-தினமணி இளைஞர்மணி (03.01.2017)

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: