விண்வெளி ஆய்வுக்கு நவீனக் கருவிகளை உருவாக்கியவர்

28 Feb

 

ஏ.எஸ்.கிரண்குமார்

ஏ.எஸ்.கிரண்குமார்

கடந்த 2017, பிப்ரவரி 15-ஆம் தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வரலாற்றில் ஒரு பொன்னாள். இதுவரை பல அரிய சாதனைகளை இஸ்ரோ நிகழ்த்தியிருந்தாலும், பிப். 15-இல் 104 செயற்கைக்கோள்களுடன் விண்ணைச் சாடிய பிஎஸ்எல்வி-சி37 ராக்கெட், உலக அளவில் இந்தியாவின் மதிப்பை சிகரத்துக்கு உயர்த்தியது.

அந்தச் சாதனையின் பின்புலத்தில் இருந்து இஸ்ரோ நிறுவனத்தை வழிநடத்தியவர் அதன் தற்போதைய தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார். செயற்கைக்கோள்களில் பொருத்தப்படும் கருவிகள் குறித்த நிபுணத்துவத்திலும், அவற்றை இயக்கும் திறனிலும் ஆழ்ந்த அனுபவம் கொண்ட அவர், இந்திய விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும், இந்திய அரசின் விண்வெளித் துறை செயலராகவும் 2015 முதல் உள்ளார்.

இஸ்ரோவின் துணை நிறுவனமான அகமதாபாத்திலுள்ள விண்வெளிப் பயன்பாட்டு மையத்தில் (Space Application Centre- SAC) 1975 முதல் 2015 வரை பல நிலைகளில் பணிபுரிந்த கிரண்குமார், இந்திய செயற்கைக்கோள்களில் பொருத்தப்படும் அதிநவீனக் கருவிகளை வடிவமைத்ததிலும் அவற்றை வளர்த்தெடுத்ததிலும் பிரதானப் பங்கு வகித்தவர். அவரது தலைமையிலான குழுவினர் 50-க்கு மேற்பட்ட செயற்கைக்கோள் கருவிகளை உருவாக்கியுள்ளனர்.

கர்நாடக மாநிலம், ஹாஸன் மாவட்டம், அலூரில், லிங்காயத்து குடும்பத்தில், 1952, அக். 22-இல் பிறந்தார் அலூரு சீலின் கிரண்குமார். சுருக்கமாக ஏ.எஸ்.கிரண்குமார்.

பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட தேசியக் கல்லூரியில் இயற்பியலில் பி.எஸ்சி. ஹானர்ஸ் பட்டமும் (1971), மின்னணுவியலில் எம்.எஸ்சி. பட்டமும் (1973) பெற்ற கிரண், பெங்களூரு ஐஐஎஸ்சி-யில் பயின்று, இயற் பொறியியலில் எம்.டெக். பட்டம் (1975) பெற்றார்.

படிப்பை முடித்தவுடன், இஸ்ரோவின் எஸ்ஏசி-யில் இணைந்தார். சுமார் 40 ஆண்டுகாலம் அங்கு பணிபுரிந்த அவர். அதன் இயக்குநராக உயர்ந்தார். 2012-இல், அதன் மின் ஒளியியல் கருவிக் குழுமத்தின் இயக்குநரானார்; 2015 முதல் தற்போது வரை இஸ்ரோவின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

அறிவியல் பங்களிப்பு:

விண்வெளிப் பயணம், செயற்கைக்கோள்கள் ஆகியவற்றுக்கான விண்வெளிப் பயன்பாட்டுக் கருவிகளை வடிவமைத்தல், மின் ஒளியியல் உருவ உணர் கருவிகளை (Electro-Optical Image Sensors) உருவாக்குதல் ஆகியவற்றில் கிரண்குமார் நிபுணர்.

பாஸ்கரா செயற்கைக்கோள்களில் (1979, 1981) பொருத்தப்பட்டிருந்த டி.வி. கேமரா முதல், சந்திரயான் (2008), மங்கள்யான் (2013) விண்கலன்களில் பொருத்தப்பட்ட நவீனக் கருவிகள் வரை, விண்ணிலிருந்து புவியைக் கண்காணித்து தகவல்களை அளிக்கும் பல கருவிகளை அவரது தலைமையிலான குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

சந்திரயான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள புவிப்பரப்பு வரைபட கேமரா, ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் உள்ளிட்ட 5 நவீனக் கருவிகளை கிரண்குமார் வடிவமைத்தார்.

புவியின் தாழ்வட்டப் பாதை (LEO), புவிநிலைச் சுற்றுப் பாதை (GEO) ஆகிவற்றில் நிலைநிறுத்தப்படும் செயற்கைக்கோள்களில் பொருத்தப்படும் இக்கருவிகள், பல்லாயிரம் கி.மீ. தொலைவிலிருந்து புவியின் மேற்பரப்பு, சமுத்திரம், வளிமண்டலம் ஆகியவற்றைக் கூர்ந்து படம் பிடித்து, வானிலை அறிவிப்பு, மீன்வளம், கடல் நீரோட்டம், இயற்கைச் சீற்ற எச்சரிக்கை, கனிமவளம் அறிதல், தொலைதொடர்பு, வானொலி, புவிப்பரப்பு வரைபடம், தேசப் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களில் உதவுகின்றன.

மூன்றடுக்கு இமேஜிங் கருவிகளை நிர்மானித்ததிலும், மூன்றாம் தலைமுறை இமேஜிங் கருவிகளை உருவாக்கியதிலும், கிரண் குழுனரின் பங்களிப்பு முக்கியமானது. இன்சாட்-3டி, ரிசோர்ஸ்சாட், மைக்ரோசாட், கார்டோசாட், சந்திரயான், மங்கள்யான் உள்ளிட்டவற்றில் அவை இயங்குகின்றன.

இந்திய தொலையுணர்வு சங்கத்தின் சாதனையாளர் விருது (1994) மற்றும் பாஸ்கரா விருது (2007), வாஸ்விக் விருது (1998), விண்வெளி பயணவியல் சங்கத்தின் விருது (2001), இஸ்ரோவின் சாதனையாளர் விருது (2006), சர்வதேச விண்வெளிப் பயணவியல் அகாதெமியின் குழு சாதனை விருதுகள் (2008, 2013), இந்திய அரசின் பத்மஸ்ரீ (2014) உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் கெüரவங்களையும் கிரண்குமார் பெற்றுள்ளார்.

76 ஆய்வுக் கட்டுரைளை எழுதியுள்ள கிரண்குமார், பல் கல்வி நிறுவனங்களின் கௌரவ முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

தேசிய பொறியாளர் அகாதெமி, சர்வதேச விண்வெளியியல் அகாதெமி ஆகியவற்றில் உறுப்பினராக உள்ள கிரண்குமார், உலக வானிலையியல் சங்கம், புவிக் கூர்நோக்கு செயற்கைக்கோள் குழு, இந்தோ-யுஎஸ் விண்வெளிக் கூட்டுப்பணிக் குழு ஆகியவற்றில் இந்தியப் பிரதிநிதியாக இடம்பெற்றுள்ளார்.

விண்ணிலேயே நிரந்தரமாகச் செயல்படும் விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று கூறும் கிரண்குமார், அதற்கான திசையில் இஸ்ரோ நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.

-தினமணி இளைஞர்மணி (28.02.2017)

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: