அண்டார்டிகாவை ஆராய்ந்த பெண் விஞ்ஞானி

14 Mar

அதிதி பந்த்

நிலம் தெரியாத அளவுக்கு எங்கும் பனி படர்ந்திருக்கும் பரந்து விரிந்த பூமி. சத்தமில்லாத, வேகமான பனிக்காற்று. மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 30 டிகிரி செல்சியல் வரையிலான உடலை ஊடுருவும் குளிர்ச்சி. இதுதான் அண்டார்டிகா. புவியின் தென்துருவத்திலுள்ள மனிதர் வாழாக் கண்டம்.

பென்குவின் பறவைகளும் சில கடல்வாழ் உயிரினங்களும் மட்டுமே அண்டார்டிகாவில் வாழ்கின்றன. அங்கு செல்லும் மனிதர்களின் விரல்கள் உணர்ச்சியற்றுப் போகும். தகுந்த பாதுகாப்புக்கவசம் இல்லாவிட்டால் சில மணி நேரத்தில் உடல் செயலிழந்து மரணம் நிச்சயம்.

பனி உறைந்த பகுதி என்பதால் புவி அடுக்குகளில் மாசற்ற தன்மை இங்கு மட்டுமே காணப்படுகிறது. எனவே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நிலவியல் மாற்றங்களை அறிய பொருத்தமான இடமாக இப்பகுதி உள்ளது.

இத்தகைய ஆபத்தான பகுதியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபடுவது அதனால்தான்.

நிலவியல், புவியியல், மானுடவியல், கடலியல், உயிரியல் விஞ்ஞானிகளுக்கு தகவல் சுரங்கமாகவும், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சில ஆய்வுகளுக்கு ஆதாரமாகவும் உள்ள அண்டார்டிகாவில் இந்தியாவும் 1981-இல் ஆராய்ச்சியில் கால் பதித்தது.

பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது, அதற்கான முயற்சிகள் துவங்கின. அண்டார்டிகா ஆய்வில் பிற எந்த நாடுகளுக்கும் இந்தியா சளைத்ததில்லை என்று நிரூபிக்கும் விதமாக, அண்டார்டிகாவில்  ‘தக்ஷிண கங்கோத்ரி’ என்ற ஆய்வு மையம் ராணுவ உதவியுடன் 1984-இல் அமைக்கப்பட்டது.

பனிப்புயலில் இம்மையம் மூழ்கிய பிறகு, 2010-இல் ‘மைத்ரி’ என்ற ஆய்வு மையமும், 2015-இல்  ‘பாரதி’ என்ற ஆய்வு மையமும் அங்கு நிறுவப்பட்டன.

இம்மையங்களில் பாதுகாப்பான சூழலில் இருந்தவாறு இந்திய விஞ்ஞானிகள் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளில் அண்டார்டிகா மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCAOR) ஈடுபட்டுள்ளது.

இதுவரை 25-க்கு மேற்பட்ட முறை விஞ்ஞானிகள், ராணுவப் பணியாளர்கள் கொண்ட இந்தியக் குழுவினர் அண்டார்டிகாவில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவற்றில் மூன்றாவது, ஐந்தாவது ஆய்வுக் குழுக்களில் (1983) இடம்பெற்றவர் மகாராஷ்டிர பெண் விஞ்ஞானியான அதிதி பந்த்.

அண்டார்டிகாவில் கால் பதித்த முதல் இரு பெண் விஞ்ஞானிகளில் கடலியல் நிபுணரான அதிதியும் ஒருவர். மற்றொருவர், மேற்கு வங்கத்தைச் சார்ந்த கட்டமைப்பு நிலவியல் நிபுணரான சுதிப்தா சென்குப்தா.

மகாராஷ்டிரத்தின் பூனாவில் 1950-இல் பிறந்தவர் அதிதி பந்த். புனா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. பயின்ற அதிதிக்கு, அவரது தந்தையின் நண்பர் அளித்த புத்தகம் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உயிரியலாளரான அலிஸ்டர் ஹார்டியின் ‘தி ஓபன் சீ’ என்ற அந்நூலில் இடம்பெற்ற கடல்வாழ் மிதவை உயிரிகள், பாசிகள் குறித்த தகவல்கள், கடலியல் மீது அதிதியின் ஆர்வத்தை அதிகரித்தன.

அடுத்து அமெரிக்க அரசின் கல்வி உதவித்தொகை பெற்று, அந்நாட்டிலுள்ள ஹவாய் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கடல் அறிவியல் (M.S.- Marine Science) பாடத்தில் எம்.எஸ். பட்டம் பெற்றார் அதிதி. பிறகு, லண்டன் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட வெஸ்ட்ஃபீல்டு கல்லூரியில் படித்து பிஎச்.டி. பட்டம் பெற்றார். ‘கடற்பாசிகளின் உடலியங்கியல்’  என்ற தலைப்பில் அவரது முனைவர் பட்ட ஆய்வு அமைந்தது.

வெளிநாடு படிக்கச் சென்ற தங்கள் மகள் அங்கேயே நல்ல சம்பளத்தில் பணி புரிவார் என்று அவரது குடும்பத்தினர் நம்பிக் கொண்டிருந்த வேளையில், அதைத் தவிர்த்து, 1973-இல் இந்தியா திரும்பினார் அதிதி. அந்தக் காலகட்டம், இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்திலிருந்தது. தவிர, அவர் படித்த கடலியலுக்கு பொருத்தமான பணி கிடைப்பதும் சிரமமாக இருந்தது. ஆயினும் தாய்நாட்டிலேயே பணிபுரிவது என்று அதிதி தீர்மானித்தார்.

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கூட்டமைப்பில் (சிஎஸ்ஐஆர்) ஆய்வு அலுவலராக 1973-இல் இணைந்த அவர் 1974 வரை அங்கு பணிபுரிந்தார்.
சிஎஸ்ஐஆர் விஞ்ஞானி பேராசிரியர் என்.கே.பணிக்கர் கோவாவில் தேசிய கடலியல் ஆராய்ச்சி நிறுவனத்தை (National Institute of Oceanography -NIO) 1966-இல் நிறுவியவர். புவியியலின் ஒரு பிரிவான கடலியல் துறை, சூழலியல், பெருங்கடல் நீரோட்டங்கள், கடலலைகள், புவித்தட்டுக் கடமைப்பு, கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வுகள் அடங்கியதாகும். இவற்றை ஆராய்வது தேசிய கடலியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணி. பணிக்கரின் வழிகாட்டலில், அந்நிறுவனத்தில் 1974-இல் இணைந்தார் அதிதி பந்த்.

1973 முதல் 1976 வரை இந்திய கடல் பகுதிகளை அவர் இடம்பெற்ற குழுவினர் விரிவாக ஆராய்ந்தனர். குறிப்பாக மேற்கு கடற்கரை பகுதியில் கடல்நிலை ஆராய்ச்சியில் அதிதி ஈடுபட்டார். அவரது பல ஆய்வறிக்கைகள் இந்திய கடற்பகுதிகள் குறித்த முன்னோடி ஆய்வறிக்கைகளாக அமைந்தன.

இந்நிலையில்தான் அண்டார்டிகாவில் இந்திய ஆராய்ச்சி துவங்கியது. அக்குழுவில் இடம்பெற்ற அதிதி 1983-இல் அண்டார்டிகா கண்டத்துக்கு இருமுறை சென்றார். அவரது அண்டார்டிகா ஆய்வுகள் தனி நூலாக வெளியாகியுள்ளன.

1990-இல் தேசிய கடலியல் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து விலகிய அதிதி, தேசிய வேதியியல் ஆய்வகத்தில் இணைந்தார். அங்கு 2005 வரை அவர் பணியாற்றினார். முந்தைய துறைக்கு சற்றும் தொடர்பற்ற புதிய பணியிலும் முழு ஈடுபாட்டுடன் ஆய்வுகளில் அவர் ஈடுபட்டார். உணவுப் பொருள்கள் தொடர்பான நொதிகள் குறித்த ஆய்வுகளில் அங்கு அவர் பணி புரிந்தார். தனது ஆராய்ச்சிகள் தொடர்பாக 5 காப்புரிமைகளைப் பெற்றுள்ள அதிதி பந்த், 67 ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

ஆண்கள் மட்டுமே கோலோச்சும் கடலியல் துறையிலும் தனது அர்ப்பணிப்பான பணிகளால் முத்திரை பதித்த அதிதி பந்த், இந்திய பெண் விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பெற்று, மகளிருக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

 

-தினமணி இளைஞர்மணி (14.03.2017)

 

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: