அன்றுபோல் இன்று இல்லை

31 Mar

தமிழ்நாட்டிலுள்ள கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இரு பருவத் தேர்வு (செமஸ்டர்) முறையை 1977-இல் சென்னை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது. உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், கற்பித்தலில் கல்லூரி ஆசிரியர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் அந்த முறை கொண்டுவரப்பட்டது.

செமஸ்டர் முறையில் ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்கள் அகமதிப்பீட்டுக்கு ஒதுக்கப்பட்டன. தவிர ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு எழுத வேண்டி வந்தது. அதற்கு மாநிலம் முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது.

எந்த ஒரு புதிய முறை அறிமுகமாகும்போதும் அது குறித்த சந்தேகங்கள் எழுவது இயல்பு. அப்போது தமிழ்நாட்டில் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் செ.அரங்கநாயகம். அதிமுக ஆட்சியைப் பிடித்த ஆரம்பகாலம் அது. மாணவர்களின் போராட்டத்தால் அரசுக்கு சங்கடமான சூழல் உருவாகி இருந்தது.

திருப்பூர் அரசு கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக சார்பு மாணவர் பிரதிநிதிகள் சிலர், கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து செமஸ்டர் முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க சென்னை சென்றனர். அவர்களது கருத்துகளை அமைச்சர் கவனமுடன் கேட்டார்.

பிறகு,  “இந்த செமஸ்டர் முறை தமிழகத்துக்கு மட்டும் கொண்டுவரப்படவில்லை. நாடு முழுவதும் கல்லூரிக் கல்வியின் தரத்தை உயர்த்த முயற்சிகள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியே இது. இதில் மாணவர்களாகிய உங்களுக்கு என்ன சிரமம் இருக்கிறது?” என்று கேட்டார் அமைச்சர் அரங்கநாயகம்.

“ஆசிரியர்களின் அகமதிப்பீட்டுக்கு 40 சதவீத மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருப்பதால் அவர்களின் கட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர ஆண்டுக்கு இருமுறை தேர்வு எழுதுவது சிரமமாக இருக்கும்” என்றார்கள் மாணவர்கள்.

“இது நல்லதுதானே? அப்போதுதானே கல்வித்தரம் உயரும்? இதில் என்ன பிரச்னை, மாணவர்கள் படிப்பதைத் தவிர?” என்று சிரித்தபடியே சொன்ன அமைச்சர், “போய் படிக்கிற வேலையைப் பாருங்கள்”  என்றார்.

எனினும், மாணவர் பிரதிநிதிகளின் விருப்பத்துக்காக, அப்போது பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த மால்கம் ஆதிசேஷையாவைச் சந்திக்கவும் அமைச்சர் ஏற்பாடு செய்தார். அவர்தான் இந்த இரு பருவத் தேர்வு முறை, அக மதிப்பீட்டு முறைகளை கல்லூரிகளில் அறிமுகப்படுத்தியவர்.

அமைச்சரிடம் உரிமையுடன் வாதிட்ட மாணவர் பிரதிநிதிகள், மால்கம் ஆதிசேஷையாவை நேரில் பார்த்தவுடன், தங்கள் கோரிக்கையை வலியுறுத்த முடியாமல் திணறினர். அவரோ, மாணவர்களின் தோள்களில் தட்டிக் கொடுத்து, “கஷ்டப்பட்டுப் படித்தால்தான் முன்னேற முடியும்” என்று சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பிவிட்டார்.

இந்த நினைவுகளை அதிமுக பிரமுகரும் முன்னாள் மாணவர் பிரதிநிதியுமான நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டபோது, எப்படிப்பட்ட கல்வியாளர்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றனர் என்ற வியப்பு ஏற்பட்டது. கூடவே, தற்போதைய நிலையை ஒப்பிட்டுப் பார்த்தபோது, நமது வீழ்ச்சியின் வேகம் கண்டு மிகுந்த வருத்தமும் ஏற்பட்டது.

மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) தொடர்பாக இப்போது தமிழகத்தில் பெரும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த இந்திய மருத்துவ கவுன்சிலும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும் எடுத்துள்ள முதல் நடவடிக்கையே நீட் தேர்வு. இதற்கு ஆதரவாக சென்ற ஆண்டு உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.

ஆயினும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு கோரி மாணவர்கள் சார்பில் அரசியல் கட்சிகளால் வலியுறுத்தப்பட்டது. பலதரப்பிலும் எழுந்த நிர்பந்தத்தை அடுத்து, அன்றைய முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தி, சென்ற கல்வியாண்டில் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றார். அதற்கென மத்திய அரசு சார்பில் அவசரச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. அப்போதே இந்த விலக்கு 2016-17 கல்வியாண்டுக்கு மட்டுமே என்று தெளிவுபடுத்தப்பட்டது.

இப்போது 2017-18 கல்வியாண்டுக்கான மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான காலம் நெருங்குகையில், நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதனிடையே தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

அண்மையில், இவ்விவகாரம் தொடர்பாக தமிழக அரசைக் கண்டித்த சென்னை உயர் நீதிமன்றம், “தமிழக மாணவர்கள் மீது அரசுக்கு நம்பிக்கை இல்லையா? கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக தமிழக மாணவர்களை பிற மாநில மாணவர்களிடமிருந்து தரம் தாழ்த்துவதா? சட்டத் திருத்தம் கொண்டுவருவது அவமானமாக இல்லையா?” என்றெல்லாம் கேள்வி கேட்டது.

நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள் அசாதாரணமானவை. ஆனால், வெகுமக்கள் கருத்து என்ற கோணத்தில் நீட் தேர்வுக்கு அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இத்தேர்வை நடத்துவதும், அகில இந்திய அளவிலான தேர்வுக்கு உகந்ததாக தமிழக பள்ளிக்கல்வித் தரம் இல்லாததும்தான் நீட் தேர்வை எதிர்ப்பதற்கான காரணங்கள். இதை எதிர்ப்பதன் மூலமாக, தமிழக கல்வித்தரம் சரிந்துள்ளதை மாநில அரசும் நமது அரசியல் கட்சிகளும் ஏற்கின்றன. இதை சரிப்படுத்தப் போவது எப்போது?

அலை நின்ற பிறகே கடலில் குளிப்பேன் என்று அடம் பிடிப்பது அறிவுடைமையாக இருக்காது. எனவே, தற்போதைய தமிழக மாணவர்களின் தரத்தை அறிய நீட் தேர்வுக்கு தமிழகம் உடன்படுவது ஒன்றே வழி. அதிலிருந்து கிடைக்கும் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு பள்ளிக் கல்வியில் சீர்திருத்தம் செய்ய முற்படுவதுதான் புத்திசாலித்தனம்.

இதில் விசித்திரம் என்னவென்றால், நீட் தேர்வை மாணவர்கள் எதிர்ப்பதற்கு முன்னதாகவே, அரசும் கட்சிகளும் கொடி பிடிப்பதுதான்.

1977-இல் செமஸ்டர் முறைக்கு எதிராக மாணவர்கள் போராடியபோது, அதை தமிழக அரசு கண்டிப்புடன் அணுகிய தன்மை, இப்போது இல்லை. சுமார் 40 ஆண்டுகளில் நமது கல்வியும் அரசியலும் எந்த அளவுக்கு வீழச்சியைச் சந்தித்துள்ளன என்பதை இதிலிருந்தே உணர முடிகிறது.

உலகப் புகழ் பெற்ற கல்வியாளரான மால்கம் ஆதிசேஷையா போன்ற கல்வியாளர்களும் இன்றில்லை. அன்றைய முதல்வர் எம்ஜிஆர் போன்ற அரசியல் ஆளுமைகளும் இன்றில்லை. இதை மாணவர் சமுதாயம் புரிந்துகொண்டு, தங்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய முக்கியமான தருணம் இது.

-தினமணி (31.03.2017)

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: