Archive | April, 2017

இந்திய நூலகவியலின் தந்தை

25 Apr

எஸ்.ஆர்.ரங்கநாதன்

நூலகங்கள் அறிவின் திருக்கோயில்கள். மனித ஞானத்தின் புத்தக வடிவ ஆதாரங்கள் ஒரே இடத்தில் சேகரித்து வைக்கப்படும் கருவூலங்களாக நூலகங்கள் திகழ்கின்றன. இந்த நூலகங்களை நிர்வகிப்பது ஒரு கலையாக மட்டுமின்றி தகவல் சார் அறிவியலாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறையை இந்தியாவில் வளர்த்தெடுத்தவர், தமிழகத்தைச் சேர்ந்த நூலகவியல் மேதையான எஸ்.ஆர்.ரங்கநாதன்.

கணிதவியலாளர், கல்வியாளர், எழுத்தாளர், நூலகர் எனப் பல முகங்களை உடையவர் ரங்கநாதன். நூலகங்களில் புத்தகங்களை பாதுகாப்பாக சேமிக்கும் “கோலன் தொகுப்பு முறை’யை உருவாக்கியவர் அவர். நூலக நெறிமுறைகளுக்கான சட்டத்தை உருவாக்கியவரும் அவர்தான். அது மட்டுமல்ல, இந்தியாவில் நூலகத் துறையின் வளர்ச்சிக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தவர், தனது சொத்துகளையும் தானம் செய்தவர் ரங்கநாதன். எனவேதான், அவரை  ‘இந்திய நூலக அறிவியல், ஆவணக் காப்பகம் மற்றும் தகவல் அறிவியலின் தந்தை’ என்று அவர் போற்றப்படுகிறார். Continue reading

இந்தியாவின் கோள் அறிவியல் நிபுணர்

18 Apr

அனில் பரத்வாஜ்

விண்வெளியில் சுழலும் கோள்களின் நிலையையும் அவற்றின் சூழலையும் அறிவதில் விஞ்ஞானிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கோள்சார் அறிவியல் (Planetory Science) எனப்படும் இத்துறையில், உலக நாடுகள் ஆலோசனை பெறும் நிபுணராக இந்தியாவின் அனில் பரத்வாஜ் மதிக்கப்படுகிறார். அவர் சனி கோளின் வளையங்கள் எக்ஸ் கதிர்களை உமிழ்வதைக் கண்டறிந்தவர் ஆவார்.

உத்தரப்பிரதேச மாநிலம், முர்சானில் 1967, ஜூன் 1-இல் பிறந்தார் அனில் பரத்வாஜ். லக்னோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எஸ்சி. பட்டமும் (1985) எம்.எஸ்சி. (1987) பட்டமும் பெற்ற அவர், காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் மொழியில் பட்டயப் படிப்பு (1989) முடித்தார். Continue reading

குடிநீர் சுத்திகரிப்புக் கருவியை உருவாக்கியவர்

11 Apr

அசோக் காட்கில்

இந்தியாவிலும் வங்கதேசத்திலும் 1993-இல் பரவிய காலரா நோயால் ஆயிரக் கணக்கானோர் பலியாகினர். அதற்கு மாசு படிந்த குடிநீரே காரணம் என்று கண்டறியப்பட்டது. அதைக் கண்ட விஞ்ஞானி ஒருவர், தூய குடிநீரை உறுதிப்படுத்தும் சாதனத்தை வடிவமைக்க உறுதி பூண்டார்.

நோய் பரப்பும் வைரஸ், பாக்டீரியா கிருமிகளை புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்தி அழிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த அவர், மிகக் குறைந்த செலவில் இயங்கும்  ‘யு.வி.வாட்டர் ஒர்க்ஸ்’ கருவியை உருவாக்கினார். அந்தக் கருவியால் உலகப் புகழ் பெற்ற அந்த விஞ்ஞானி, அமெரிக்கா வாழ் இந்தியரான அசோக் காட்கில்.

அறிவியலை மக்கள்நலனுக்கான சாதனமாக மாற்றுவதில் திறன் படைத்தவர் காட்கில். வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கான ஆற்றல் மேம்பாட்டு ஆராய்ச்சியிலும்,  கொள்கை உருவாக்குவதிலும் அவர் நிபுணராக மதிக்கப்படுகிறார். Continue reading

ஹைட்ரோகார்பன் திட்டம்: தீர்வு என்ன?

10 Apr

நாடு முழுவதும் 31 பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அனுமதி அளித்து 17 தனியார் நிறுவனங்கள், 4 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் மார்ச் 27-இல்  கையெழுத்திட்டுள்ளது மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம். இவற்றில் புதுக்கோட்டை மாவட்டம்- நெடுவாசலும், புதுவை யூனியன் பிரதேசம்- காரைக்காலும் தமிழ்நாடு படுகையில் வருபவை.

நெடுவாசலில் விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டத்தின்போது அளித்த உறுதிமொழிக்கு மாறாக மத்திய அரசு செயல்படுவதாக, இந்த ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம், விவசாயிகளுக்கு உண்மை நிலையை விளக்கி அவர்களது ஒப்புதலுடன் மட்டுமே திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், அதற்கு மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது.

நாடு முழுவதும் 10 படுகைகளில் (அசாம்- 9, குஜராத்- 5, தமிழ்நாடு- 2, ஆந்திரம்- 4, ராஜஸ்தான்- 2, ம.பி.- 1, மும்பை- 1 மும்பை கடற்பகுதி- 5, கட்ச் கடற்பகுதி- 1, கிருஷ்ணா-கோதாவரி -1) ஹைட்ரோகார்பன் எடுக்க உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டுமே இத்திட்டத்துக்கு எதிர்ப்பு காணப்படுகிறது. இதன் பின்னணியில் திட்டம் குறித்த தவறான புரிதல்கள் இருப்பதை மறுக்க முடியாது.

முதலில் இவ்விஷயத்தை நாம் உணர்வுப்பூர்வமாக அன்றி அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும். அதற்கு அரசியல் லாவணி தவிர்க்கப்படுவதும் அவசியம். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது (2009) ஹைட்ரோகார்பன் கண்டுபிடிப்பு மற்றும் துரப்பணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட இடம்தான் நெடுவாசல். ஆனால்  இத்திட்டத்துக்கு முன்னர் அனுமதி வழங்கிய காங்கிரஸýம் திமுகவும் அரசியல் காரணங்களுக்காக தற்போது எதிர்க்கின்றன.

பொதுவாகவே விவசாய நிலங்களை அரசுப் பயன்பாட்டுக்காக கையகப்படுத்தினால், அந்த நிலத்துக்கு உரிய விலையும் நஷ்டஈடும் அரசால் கொடுக்கப்படுவதில்லை. இதற்கு முன்னர் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு அரசு உரிய தொகையை சரியான நேரத்தில் அளித்திருந்தால், இப்போது நெடுவாசலில் பிரச்னையே நேரிட்டிருக்காது என்பது விஷயம் அறிந்தவர்களின் கருத்து.

நெடுவாசல், காரைக்கால் விவசாயிகளுடனும், தமிழகம், புதுவை மாநில அரசுகளுடனும் பேசி, இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார். அதன் பொருள், விவசாயிகள் பாதிக்கப்படாமல், இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முனையும் என்பதுதான்.

இந்நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டத்தின் அடிப்படை என்ன என்பது குறித்தும், அதன் சாதக- பாதகங்கள் குறித்தும் விரிவாக அலச வேண்டியுள்ளது. Continue reading

உரங்களின் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய மேதை

4 Apr

வசந்த் ஆர். கோவாரிக்கர்

விவசாயத்தின் முக்கிய இலக்கு உணவு உற்பத்தியை அதிகரிப்பதே. அதற்கு உதவும் காரணிகளில் முக்கிய இடம் வகிப்பவை உரங்கள். அதிலும் செயற்கையாக உருவாக்கப்படும் ரசாயன உரங்களின் தேவை மிகுந்துள்ளது.

அந்த வகையில், நாம் பயன்படுத்தும் உரங்களின் தன்மைகள் குறித்த முழுமையான விவரங்களின் தொகுப்பு, ஆராய்ச்சி மாணவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும், விவசாயிகளுக்கும் உதவி புரியக்கூடியதாக இருக்கும்.

அதற்காகவே, உலகில் முதல்முறையாக, 4,500 உரவகைகளின் விவரணத் தொகுப்பை கலைக்களஞ்சியமாக உருவாக்கினார், இந்திய விஞ்ஞானியான வசந்த் ரஞ்சோட் கோவாரிக்கர். அவரது தலைமையிலான குழுவினர் பல ஆண்டுகள் பாடுபட்டுத் தொகுத்த ‘உரங்களின் கலைக்களஞ்சியம்’ என்ற நூல் (Fertilizer Encyclopedia- 2008), வேதியியல் துறை மாணவர்களின் அறிவுக் கருவூலமாகத் திகழ்கிறது.

இந்நூலில், 4,500 உர வகைகளின் தயாரிப்பு முறைகள், அவற்றிலுள்ள ரசாயனக் கலப்புப் பொருள்கள், அதன் சமன்பாடுகள், அவற்றின் பிரத்யேகப் பயன்பாடுகள், உரங்களால் ஏற்படும் சூழல் பாதிப்புகள், மண்ணில் ஏற்படுத்தும் உயிரியல் மாற்றங்கள், விளைச்சல்- பொருளாதார விளைவுகள் உள்ளிட்ட பல அம்சங்களைத் தொகுத்துள்ளனர்.

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியியலாளரான நார்மன் போர்லே, “உரங்களின் கலைக்களஞ்சியம் நூல், கல்வியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் விலைமதிப்பற்ற ஆவணமாகும்” என்று புகழ்கிறார்.

இதனை உருவாக்கிய விஞ்ஞானி வசந்த் கோவாரிக்கர், விண்வெளியியல் விஞ்ஞானி என்பது குறிப்பிட வேண்டிய தகவல். ராக்கெட் இயக்கத்துக்குத் தேவையான திட எரிபொருளை உருவாக்கியவர்; இந்திய பருவமழைக் கணிப்புக்கான 16 அம்சப் பரிசோதனை முறையை உருவாக்கியவர்; மக்கள்தொகைப் பெருக்கத்தை சாதகமாக மாற்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சியை (Skill Development) துவக்கியவர் எனப் பல முகங்களைக் கொண்ட மேதை அவர். Continue reading