உரங்களின் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய மேதை

4 Apr

வசந்த் ஆர். கோவாரிக்கர்

விவசாயத்தின் முக்கிய இலக்கு உணவு உற்பத்தியை அதிகரிப்பதே. அதற்கு உதவும் காரணிகளில் முக்கிய இடம் வகிப்பவை உரங்கள். அதிலும் செயற்கையாக உருவாக்கப்படும் ரசாயன உரங்களின் தேவை மிகுந்துள்ளது.

அந்த வகையில், நாம் பயன்படுத்தும் உரங்களின் தன்மைகள் குறித்த முழுமையான விவரங்களின் தொகுப்பு, ஆராய்ச்சி மாணவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும், விவசாயிகளுக்கும் உதவி புரியக்கூடியதாக இருக்கும்.

அதற்காகவே, உலகில் முதல்முறையாக, 4,500 உரவகைகளின் விவரணத் தொகுப்பை கலைக்களஞ்சியமாக உருவாக்கினார், இந்திய விஞ்ஞானியான வசந்த் ரஞ்சோட் கோவாரிக்கர். அவரது தலைமையிலான குழுவினர் பல ஆண்டுகள் பாடுபட்டுத் தொகுத்த ‘உரங்களின் கலைக்களஞ்சியம்’ என்ற நூல் (Fertilizer Encyclopedia- 2008), வேதியியல் துறை மாணவர்களின் அறிவுக் கருவூலமாகத் திகழ்கிறது.

இந்நூலில், 4,500 உர வகைகளின் தயாரிப்பு முறைகள், அவற்றிலுள்ள ரசாயனக் கலப்புப் பொருள்கள், அதன் சமன்பாடுகள், அவற்றின் பிரத்யேகப் பயன்பாடுகள், உரங்களால் ஏற்படும் சூழல் பாதிப்புகள், மண்ணில் ஏற்படுத்தும் உயிரியல் மாற்றங்கள், விளைச்சல்- பொருளாதார விளைவுகள் உள்ளிட்ட பல அம்சங்களைத் தொகுத்துள்ளனர்.

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியியலாளரான நார்மன் போர்லே, “உரங்களின் கலைக்களஞ்சியம் நூல், கல்வியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் விலைமதிப்பற்ற ஆவணமாகும்” என்று புகழ்கிறார்.

இதனை உருவாக்கிய விஞ்ஞானி வசந்த் கோவாரிக்கர், விண்வெளியியல் விஞ்ஞானி என்பது குறிப்பிட வேண்டிய தகவல். ராக்கெட் இயக்கத்துக்குத் தேவையான திட எரிபொருளை உருவாக்கியவர்; இந்திய பருவமழைக் கணிப்புக்கான 16 அம்சப் பரிசோதனை முறையை உருவாக்கியவர்; மக்கள்தொகைப் பெருக்கத்தை சாதகமாக மாற்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சியை (Skill Development) துவக்கியவர் எனப் பல முகங்களைக் கொண்ட மேதை அவர்.

மகாராஷ்டிரத்தின் புணாவில், 1933, மார்ச் 25-இல் மராட்டியக் குடும்பத்தில் பிறந்தார் வசந்த் ரஞ்சோட் கோவாரிக்கர். கோலாப்பூரில் அடிப்படைக் கல்வியும், கல்லூரி இளநிலைக் கல்வியும் பயின்ற அவர், மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார்.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியலில் எம்.எஸ்சி. பட்டம் பெற்ற அவர், அதே துறையில் பிஎச்.டி. பட்டமும் பெற்றார். அவரது முனைவர் பட்ட ஆய்வுக்கு பிரபல விஞ்ஞானி எஃப்.ஹெச்.கார்னர் வழிகாட்டினார். திட- திரவப் பொருள்களிடையிலான வெப்பம் மற்றும் நிறை மாற்றங்கள் குறித்த வசந்த்தின் ஆய்வுக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. அப்போது கார்னர்- கோவாரிக்கர் கோட்பாடு (Garner-Gowarikar Theory) என்ற புதிய வேதியியல் கோட்பாடு (1965) உருவானது.

படிப்பு முடிந்தவுடன் பிரிட்டனின் ஹார்வெல் நகரிலுள்ள அணு ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்தார் வசந்த். அந்நிறுவனம், ராக்கெட் இயக்கத்துக்கான மோட்டார் தயாரிப்பில் ஈடுபட்டது. தவிர, ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் தேர்வுக்குழு உறுப்பினராகவும் அவர் செயல்பட்டார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் திறமையான இந்தியர்களை தாய்நாட்டுக்குத் திரும்ப அழைத்து வருவதில் நிபுணரான விஞ்ஞானி விக்ரம் சாராபாய், வசந்த் கோவாரிக்கர் பற்றிக் கேள்விப்பட்டார்; அவரைத் தொடர்பு கொண்டார். சாராபாயின் அழைப்பை ஏற்று 1967-இல் நாடு திரும்பினார் கோவாரிக்கர்.

இந்தியா விண்வெளித் துறையில் அப்போதுதான் காலடி எடுத்து வைத்திருந்தது. சாராபாயின் அறிவுரைப்படி, திருவனந்தபுரம் அருகே தும்பாவில் இருந்த புனித மேரி மகதலேனா தேவாலயக் கட்டடத்தில், வசந்த் கோவாரிக்கர், அப்துல் கலாம், இ.வி.சிட்னிஸ், பிரமோத் காலே, யு.ஆர்.ராவ் அடங்கிய அணி களமிறங்கியது. அங்கிருந்த மாட்டுத் தொழுவத்தை மாற்றியமைத்த ஆய்வகத்தில் தனது ராக்கெட் பொறியாளர் பணியைத் துவக்கினார் வசந்த்.

1972-இல் அந்த மையம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையமாக (VSSC) மாறியது. 1973-இல் அதன் ரசாயனம் மற்றும் பொருள்கள் பிரிவின் இயக்குநரானார் வசந்த்.

ராக்கெட் இயக்கத்தில் திட, திரவ எரிபொருள்கள் இரண்டுமே தேவை. ராக்கெட்டின் ஆரம்ப முடுக்கத்துக்கு திட எரிபொருள் கலவை (Solid Proppellant) பயன்படுத்தப்படுகிறது. இதனை உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் கோவாரிக்கர் தலைமையிலான குழுவினர் உருவாக்கினர்.

இதற்கென 5,500 ஏக்கர் பரப்பளவில் திட எரிபொருள் உற்பத்தி மையத்தை கோவாரிக்கர் தலைமையிலான குழுவினர் நிறுவினர். அதற்குத் தேவையான கச்சாப்பொருள்கள் ஆய்வு, அவற்றை பல பணி மையங்களில் தயாரிப்பது, அவற்றை ஒருங்கிணைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

1979-இல் விஎஸ்எஸ்சி-யின் இயக்குநராகப் பொறுப்பேற்ற அவர் 1985 வரை அப்பொறுப்பில் வழிகாட்டினார். 1980-இல் அவரது தலைமையின்கீழ், செயற்கைக்கோள் ஏவுகலனான எஸ்எல்வி-3 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அதன் மூலமாக, ராக்கெட் தொழில்நுட்பம் கொண்ட 6 உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது.

1987-இல் நாட்டில் கடும் வறட்சி ஏற்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD- India Meteorological Department) பருவமழையைக் கணிப்பதில் தவறிழைத்தது. அப்போது, பருவமழை முன்னறிவிப்பில் உதவுமாறு இஸ்ரோ விஞ்ஞானியான கோவாரிக்கருக்கு அரசு அழைப்பு விடுத்தது.

அதையேற்று, செயற்கைக்கோள்கள் மூலமாகக் கிடைக்கும் உலக அளவிலான 16 வகையான பருவநிலை புள்ளிவிரங்களின் (16 Parameters) அடிப்படையில் இந்திய பருவமழைக் கணிப்பு முறையை வசந்த் கோவாரிக்கர் உருவாக்கினார். அது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் சுதேசி வானிலை அறிவிப்பு முறையாகும். அந்த முறையின் மூலமாக துல்லியமான பருமழை முன்னறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிட இயன்றது.

நுகர்பொருள் விநியோகம், பயிர் சாகுபடி, எண்ணெய்வித்து இறக்குமதி, அணை நீர் நிர்வாகம், செயற்கை மழைக்கு முயற்சி போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள இந்த வானிலை முன்னறிவிப்புகள் துணை புரிகின்றன. இதன் காரணமாக, ‘இந்திய பருவமழை முன்னறிவிப்பு (Monsoon Forecast) முறையின் தந்தை’ என்று கோவாரிக்கர் அழைக்கப்படுகிறார்.

இந்திய அரசின் அறிவியல்- தொழில்நுட்பத் துறை செயலராக 1986 முதல் 1991 வரையும், பிரதமர் நரசிம்ம ராவின் அறிவியல் ஆலோசகராக 1991 முதல் 1993 வரையும் கோவாரிக்கர் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் வெளிநாடுகளிலிருந்த விஞ்ஞானிகள் பலர் தாயகம் திரும்பி ஆராய்ச்சிகளில் ஈடுபட ஊக்கமளித்தார்.

புணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், மராத்தி வித்நயான் பரிஷத் தலைவராகவும் (1994- 2000) அவர் பணிபுரிந்துள்ளார்.

இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது (1984), பத்மபூஷண் விருது (2008), ஃபை பவுண்டேஷனின் விருது, இந்திய விண்வெளியியல் சங்கத்தின் ஆரியபட்டா விருது மற்றும், பல்வேறு கல்வி நிறுவனங்களின் கெüரவ முனைவர் பட்டங்களை கோவாரிக்கர் பெற்றுள்ளார்.

விக்ரம் சாராபாயின் சீடராகவும், இஸ்ரோவின் மூத்த வழிகாட்டியாகவும் திகழ்ந்த வசந்த் ஆர். கோவாரிக்கர், தனது 81-வது வயதில், 2015, ஜனவரி 2-இல் புணாவில் காலமானார்.

-தினமணி இளைஞர்மணி (04.04.2017)

 

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: