ஹைட்ரோகார்பன் திட்டம்: தீர்வு என்ன?

10 Apr

நாடு முழுவதும் 31 பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அனுமதி அளித்து 17 தனியார் நிறுவனங்கள், 4 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் மார்ச் 27-இல்  கையெழுத்திட்டுள்ளது மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம். இவற்றில் புதுக்கோட்டை மாவட்டம்- நெடுவாசலும், புதுவை யூனியன் பிரதேசம்- காரைக்காலும் தமிழ்நாடு படுகையில் வருபவை.

நெடுவாசலில் விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டத்தின்போது அளித்த உறுதிமொழிக்கு மாறாக மத்திய அரசு செயல்படுவதாக, இந்த ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம், விவசாயிகளுக்கு உண்மை நிலையை விளக்கி அவர்களது ஒப்புதலுடன் மட்டுமே திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், அதற்கு மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது.

நாடு முழுவதும் 10 படுகைகளில் (அசாம்- 9, குஜராத்- 5, தமிழ்நாடு- 2, ஆந்திரம்- 4, ராஜஸ்தான்- 2, ம.பி.- 1, மும்பை- 1 மும்பை கடற்பகுதி- 5, கட்ச் கடற்பகுதி- 1, கிருஷ்ணா-கோதாவரி -1) ஹைட்ரோகார்பன் எடுக்க உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டுமே இத்திட்டத்துக்கு எதிர்ப்பு காணப்படுகிறது. இதன் பின்னணியில் திட்டம் குறித்த தவறான புரிதல்கள் இருப்பதை மறுக்க முடியாது.

முதலில் இவ்விஷயத்தை நாம் உணர்வுப்பூர்வமாக அன்றி அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும். அதற்கு அரசியல் லாவணி தவிர்க்கப்படுவதும் அவசியம். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது (2009) ஹைட்ரோகார்பன் கண்டுபிடிப்பு மற்றும் துரப்பணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட இடம்தான் நெடுவாசல். ஆனால்  இத்திட்டத்துக்கு முன்னர் அனுமதி வழங்கிய காங்கிரஸýம் திமுகவும் அரசியல் காரணங்களுக்காக தற்போது எதிர்க்கின்றன.

பொதுவாகவே விவசாய நிலங்களை அரசுப் பயன்பாட்டுக்காக கையகப்படுத்தினால், அந்த நிலத்துக்கு உரிய விலையும் நஷ்டஈடும் அரசால் கொடுக்கப்படுவதில்லை. இதற்கு முன்னர் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு அரசு உரிய தொகையை சரியான நேரத்தில் அளித்திருந்தால், இப்போது நெடுவாசலில் பிரச்னையே நேரிட்டிருக்காது என்பது விஷயம் அறிந்தவர்களின் கருத்து.

நெடுவாசல், காரைக்கால் விவசாயிகளுடனும், தமிழகம், புதுவை மாநில அரசுகளுடனும் பேசி, இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார். அதன் பொருள், விவசாயிகள் பாதிக்கப்படாமல், இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முனையும் என்பதுதான்.

இந்நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டத்தின் அடிப்படை என்ன என்பது குறித்தும், அதன் சாதக- பாதகங்கள் குறித்தும் விரிவாக அலச வேண்டியுள்ளது.

நமது தேவையும் இறக்குமதியும்:

எரிவாயு உற்பத்தியில் இந்தியா ஓரளவுக்கு தன்னிறைவு அடைந்துள்ளது. 1950-களில் இந்தியாவில் 69 டிரில்லியன் (லட்சம் கோடி) கனஅடி இயற்கை எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டது. அதில் 42  டிரில்லியன் கன அடி தற்போது பயன்படுத்தப்படுகிறது. ஆனால், முக்கிய திரவ எரிபொருள்களுக்கு அடிப்படையான கச்சா எண்ணெய்க்கு (பெட்ரோலியம்) நாம் இன்னமும் வெளிநாட்டு இறக்குமதியையே சார்ந்துள்ளோம்.

நாட்டில் பெட்ரோலியம் இருப்பதாகக் கண்டறியப்பட்ட 26 படுகைகளில் 7-இல் மட்டுமே முழு அளவில் தற்போது உற்பத்தி நடைபெறுகிறது. இவற்றில் இன்னமும் 75 சதவீத இயற்கைவளம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

உலக அளவில் பெட்ரோலியத்தைப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாமிடம் (தினசரி தேவை- 4.45 லட்சம் பீப்பாய்) வகிக்கிறது. ஆனால் தேவையுடன் உற்பத்தியை ஒப்புநோக்கினால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு காணப்படுகிறது. நமது தேவையில் சுமார் 90 சதவீதத்தை இறக்குமதி மூலமாகவே நாம் நிறைவு செய்கிறோம்.

2014-15-இல் இந்தியா ரூ. 7 லட்சம் கோடி மதிப்புக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது (189.4 மில்லியன் டன் கச்சா எண்ணெய்). நமது ஒட்டுமொத்த இறக்குமதியில் பெட்ரோலிய இறக்குமதியின் அளவு 60 சதவீதமாகும். இதனால் நமக்கு ஆண்டுதோறும் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுகிறது. வரும் ஆண்டுகளில் இந்நிலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

புதிய திட்டங்களின் நோக்கம்:

ஆகவேதான், இந்தியாவில் ஏற்கெனவே கண்டறியப்பட்டு எடுக்கப்படாமல் உள்ள கச்சா எண்ணெய் வளத்தைப் பயன்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. உலக அளவில் பெட்ரோலிய இருப்பு குறைந்துவரும் நிலையில் இது தவிர்க்கப்பட முடியாத நடவடிக்கையும் கூட.

இந்தியாவில் ஹைட்ரோகார்பன் இயக்குநரகத்தின் கீழ் 26 படுகைகளில் பெட்ரோலியம், எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், பெரிய அளவிலான துரப்பணத் திட்டங்களை மேற்கொள்ளும் அளவுக்கு நமது நாட்டில் கச்சா எண்ணெய் வளம் (மும்பை கடற்பகுதி, கட்ச் வளைகுடா தவிர்த்து) இல்லை. எனவே, கண்டுபிடிக்கப்பட்ட சிறு எண்ணெய் வயல்கள் திட்டம் (Discovered Small Field-DSF) மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.

இதன் நோக்கம், குறைந்த முதலீட்டில் நாட்டின் இயற்கைவளத்தைப் பயன்படுத்துவதாகும். இத்திட்டத்தில் தான் நெடுவாசல் வருகிறது. இங்குள்ள இயற்கைவளத்தின் பரப்பளவு 10.4 சதுர கி.மீ. இங்கு 4,30,000 டன் இயற்கை எரிவாயுவும் அதே அளவுக்கு கச்சா எண்ணெயும் இருக்கின்றன.

இதற்கு முன் புதிய துரப்பண உரிமக் கொள்கை  (NELP) நடைமுறையில் இருந்தபோது (1997- 2016), அதன் கெடுபிடியான விதிமுறைகளால், எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கவில்லை. இந்நிலையை மாற்ற தற்போதைய மத்திய அரசு திட்டமிட்டு, சிறு எண்ணெய் வயல்கள் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் நிலப்பகுதிகளில் 26 இடங்களும், கடற்பகுதியில் 20 இடங்களும் கண்டறியப்பட்டு, அவற்றில் தனியார் பங்களிப்புடன் எண்ணெய் வயல்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டது.

இதன் நோக்கம், 2022-இல் நமது நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 10 சதவீதத்தைக் குறைப்பது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்காக அரசின் விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டு, “இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் தொழில் முனைவோருக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த 31 வயல்களிலிருந்தும் தினசரி 15,000 பீப்பாய் கச்சா எண்ணெயும், 20 லட்சம் கனஅடி எரிவாயுவும் கிடைக்கும் என்றும், அதன்மூலமாக, 46,400 கோடி நிகர வருவாய் கிடைக்கும் என அரசு மதிப்பிடுகிறது.
இதில் காப்புரிமத் தொகையாக ரூ. 5,000 கோடியும், வருவாய்ப்பங்காக ரூ. 9,300 கோடியும் அரசுக்குக் கிடைக்கும். வருவாய்ப் பகிர்வு அடிப்படையில் எண்ணெய் வயலை அமைக்கும் நிறுவனமும் லாபம் பெறும். தவிர, 37,500 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

திடீர் எதிர்ப்புக்கு காரணம் என்ன?

தமிழகத்தின் நெடுவாசலிலும், புதுவையின் காரைக்காலிலும், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 2009-இல் இப்பகுதியில் நிலத்தைக் கையகப்படுத்தியபோது, விவசாயிகளிடம் குத்தகை அடிப்படையில் விலை பேசப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட இடங்களில் அடிப்படை சோதனைகள் நடைபெற்று இயற்கைவளத்தின் அளவு கணக்கிடப்பட்டுவிட்டது.

ஆனால், இங்கு எண்ணெய் வயல்கள் அமைக்கப்பட்டால், விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற பிரசாரம் தற்போது எழுந்துள்ளது. தவிர கச்சா எண்ணெய் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என்ற அச்சமும் உருவாகியுள்ளது. கச்சா எண்ணெய் எடுக்கப்படும்போது உருவாகும் வீழ்படிவால் மண்வளம் பாதிக்கும்; அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

எதிர்ப்பாளர்கள் கூறுவதில் சில உண்மைகள் இருப்பினும், அவர்கள் அதீதமாக அச்சுறுத்துவதாகவே தோன்றுகிறது. குறிப்பாக பாறை எரிவாயுவுடன் (ஷேல் காஸ்) இயற்கை எரிவாயுவை அவர்கள் குழப்பிக் கொள்கின்றனர்.

பாறை எரிவாயு, அதிக ஆழத்தில் கடினமான பாறை அடுக்குகளிடையே இருந்து மிகுந்த அழுத்தம் கொடுத்து வெளியே எடுக்கப்படுவதாகும். மாறாக, நெடுவாசலிலும் காரைக்காலிலும் மென்பாறை அடுக்குகளிடையே உள்ள எரிவாயுவும் கச்சா எண்ணெயும் எடுக்கப்படுகின்றன. இவற்றை எடுக்க அதிக புற அழுத்தம் அளிப்பதோ, அதிக தண்ணீரோ தேவையில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதேபோல, இந்த சிறு எண்ணெய் வயலை அமைக்க 120 அடி நீளமும் 120 அகலமும் கொண்ட மிகக் குறைந்த அளவு இடமே போதுமானது. நமது நிலத்தடி நீர்மட்டம் அதிகபட்சம் 300 மீட்டர் (1000 அடி) வரை உள்ளது. அதுவரை மட்டுமே நம்மால் ஆழ்குழாய்க் கிணறு அமைக்க முடியும். ஆனால், கச்சா எண்ணெயோ 1000 மீட்டர் (3000 அடி) ஆழத்துக்குக் கீழேதான் பெறப்படுகிறது. எனவே நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்கின்றனர் பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள்.

நடுநிலையான தீர்வு என்ன?

இத்திட்டத்தை விவசாயிகள் எதிர்ப்பதற்கு, அவர்களது நில உரிமை பாதிப்புக்குள்ளாவது முக்கிய காரணம். அதற்கேற்ற வகையில் விவசாயிகளுக்கு ஈட்டுத்தொகையும் வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டால், எதிர்ப்பு இருக்காது.  அப்பகுதியில் கிடைக்கும் இயற்கை வளத்தின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை நில உரிமையாளர்களுக்கும், வட்டார மக்களுக்கும் பகிர்ந்து வழங்குவது சிறப்பான தீர்வாக இருக்கும்.

பொதுவாகவே எந்த ஒரு அரசுத் திட்டத்தையும் சந்தேகத்துக்குரியதாக்கி அரசை எதிர்த்துப் போராடுவது அரசு சாரா தன்னார்வ (என்.ஜி.ஓ.) அமைப்புகளின் மனநிலையாகும். இதற்காக வெளிநாட்டு நிறுவனங்களின் நிதியுதவி பெறப்படுவதாகவும் புகார்கள் உண்டு.

இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதிலோ, விவசாய நிலங்கள் காக்கப்பட வேண்டும் என்பதிலோ யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், ஹைட்ரோகார்பன் போன்ற இயற்கை வளங்கள் எல்லா இடங்களிலும் கிடைக்காது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். நெடுவாசலில் இதை எடுக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் அனைவருமே, பெட்ரோலியப் பொருள்களின் உதவியுடன் வாழ்பவர்கள் தான்.

முன்னொரு காலத்தில் சிக்கிமுக்கிக் கல்லை உரசி நெருப்பை உருவாக்கினான் மனிதன். அதுவே அவனது உலகை வெல்லும் பயணத்தில் முதலடி. பிறகு காட்டை அழித்து நாடாக்கினான் மனிதன். இயற்கை வளங்களைக் கொண்டு, தனது பகுத்தறிவாலும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளாலும் புதிய உலகை அவன் அமைத்திருக்கிறான். இந்தத் தொடர்பயணத்தை நிறுத்தவோ, மீண்டும் காட்டு வாழ்க்கைக்குத் திரும்பவோ யாராலும் இயலாது என்பது நிதர்சனம்.

நமது எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய பிற நாடுகளைச் சார்ந்திருப்பதும் ஆபத்தானது. எனவே, ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுடன் விவசாயிகள் விரிவாகப் பேசி, தங்களுக்குச் சாதகமான பலன்களைப் பெறுவதுதான் விவேகமாக இருக்கும்.

ஹைட்ரோகார்பன் எடுக்கப்படும் இடம் தவிர்த்து சுற்றுப்புற நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதி பெறுவதும் கூட சாத்தியமானதே.
எனவே, உசுப்பிவிடும் போராட்டக்காரர்களிடமிருந்து விலகி நின்று, நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடாமல், விவசாயிகள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் இது அவர்களது எதிர்காலம் மட்டுமல்ல… நம் அனைவருடையதும் கூட.

 


ஹைட்ரோகார்பன் என்பது என்ன?

இதை ‘நீரகக் கரிமம்’ என்று தமிழில் சொல்லலாம். ஹைட்ரஜன், கார்பன் அணுக்கள் இணைந்த வேதிச்சேர்மமே ஹைட்ரோகார்பன்.

ஆக்சிஜனுடன் இணைந்து எரியும் தன்மை கொண்ட இது, நிலத்தடியில் கிடைக்கும் இயற்கை எரிபொருள்களின் (நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு) முதன்மைக்கூறாக உள்ளது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் புதையுண்ட தாவரங்களே நிலைமாறி எரிபொருளாகின்றன. திடவடிவத்தில் நிலக்கரியாகவும், திரவ வடிவத்தில் கச்சா எண்ணெயாகவும், வாயு வடிவத்தில் மீத்தேனாகவும் இவை கிடைக்கின்றன. இவற்றைக் கண்டறிய விஞ்ஞானரீதியான முறைகள் உள்ளன. பொதுவாக வண்டல் படுகைகளில் ஹைட்ரோகார்பன் இருப்பு அதிகமாகக் கண்டறியப்படுகிறது.

ஆழ்கடலில் சில இடங்களில் கச்சா எண்ணைய் பீறிட்டு மிதந்து தீப்பிடிப்பது வழக்கம். அதனை நமது முன்னோர் “கொள்ளிவாய்ப் பிசாசு’ என்று அழைத்துண்டு. அதுவே கடலின் ஆழத்திலுள்ள மீத்தேன் என்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்கெனவே பல இடங்களில் நிலக்கரியும் கச்சா எண்ணெயும் எடுக்கப்படுகின்றன. நெய்வேலி நிலக்கரியும், அசாம் எண்ணெய் வயல்களும், கட்ச் வளைகுடா இயற்கை எரிவாயுவும் அனைவரும் அறிந்தவை.

நாடு முழுவதும் உள்ள இந்த இயற்கைவளத்தை,  ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் பல பிரிவுகளாகப் பகுத்து நிர்வகித்து வருகிறது.
நமது நாட்டில், 31.4 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் புவி அடுக்குகளில் ஹைட்ரோ கார்பன் வளம் இருப்பு உள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

 


எதிர்ப்புகளால் இழப்பு யாருக்கு?

அரசின் புதிய கட்டமைப்புத் திட்டங்களை எதிர்ப்பது அரசு சாரா நிறுவனங்களின் இயல்பாகவே மாறிவிட்டது. பல நெடுஞ்சாலைத் திட்டங்களும், வளர்ச்சித் திட்டங்களும் இந்த மனோபாவத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு சிறந்த அண்மைக்கால உதாரணங்கள், குஜராத்தில் அமைக்கப்பட்ட நர்மதை அணை கட்டுமானமும் தமிழகத்தில் நிறுவப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையமும் தான்.

கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம், 1988-இல் வடிவமைக்கப்பட்டது. அதன் முதலிரு அலகுகளுக்கு ரூ. 39,747 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், 2011-இல் திடீரென மக்களிடையே கிளப்பிவிடப்பட்ட பீதியால் உருவான போராட்டம், திட்டத்தை தாமதப்படுத்தியது. அதை மீறி மத்திய, மாநில அரசுகள் திட்டத்தை 2016-இல் நிறைவேற்றின. ஆனால் திட்டமிட்டதைவிட ரூ. 4,000 கோடி கூடுதல் செலவானது. இப்போது தமிழகத்தின் மின்வெட்டைக் குறைப்பதில் கூடங்குளம் அணு மின்நிலையம் பிரதானப் பங்கு வகிக்கிறது.

மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் நர்மதை நதியை குஜராத் எல்லையில் தடுத்து சர்தார் அரோவர் அணை அமைப்பதன் மூலமாக, வறட்சிப் பகுதியான குஜராத்தை மேம்படுத்த 1979-இல் திட்டமிடப்பட்டது. இதற்கு 1988-இல் ரூ. 6,406 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

ஆனால், அணைக் கட்டுமானத்தால் பலரது வாழ்வுரிமை பாதிக்கப்படுவதாகவும், இயற்கைக்கு மாறாக அணையைக் கட்டக் கூடாது என்றும் கூறி, மேதா பட்கர் உள்ளிட்ட தன்னார்வலர்கள் போராடினர். இருப்பினும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திட்டத்துக்கு சாதகமாகக் கிடைத்தது.

அந்த அணையை அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி கட்டி முடித்தார். அணை கட்டுவதால் மூழ்கும் விவசாய நிலங்களுக்கு அறிவிக்கப்பட்ட ஈட்டுத்தொகையைவிட அதிகமாகவே அவரது அரசு அளித்ததால், விவசாயிகள் அத்திட்டத்தை பிறகு எதிர்க்கவில்லை.

இப்போது மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு 1,450 மெ.வா. மின்சாரமும், குஜராத், ராஜஸ்தானில் 18,700 சதுர கி.மீ. பரப்பளவுக்கு பாசன வசதியும் அளிப்பதாக நர்மதை அணை உருவெடுத்துள்ளது.

எனினும், 2008-இல் இதைக் கட்டி முடித்தபோது செலவினம் ரூ. 39,240 கோடியாகிவிட்டது. நர்மதை அணையை எதிர்த்து சிலர் போராடியதன் விளைவு, அதன் திட்டச் செலவு அதிகரித்ததுதான். இந்தச் செலவு அதிகரிப்புச் சுமை மக்களான நம் மீது விழுவதுதான்.

 


இந்தியா பெட்ரோலியம்: தேவை, உற்பத்தி, இறக்குமதி

2015-16 ஆண்டு புள்ளிவிவரம்:
பயன்பாடு/ தேவை:
கச்சா எண்ணெய்- 233 மில்லியன் டன்
எரிவாயு- 47.85 பில்லியன் கன மீட்டர்
பெட்ரோலியப் பொருள்கள்- 184.674 மில்லியன் டன்
உற்பத்தி:
கச்சா எண்ணெய்- 36.950 மில்லியன் டன்
எரிவாயு- 32.249 பில்லியன் கன மீட்டர்
பெட்ரோலியப் பொருள்கள்- 231.92 மில்லியன் டன்
இறக்குமதி:
கச்சா எண்ணெய்- 202.851மில்லியன் டன் (மதிப்பு: ரூ. 4.16 லட்சம் கோடி)
எரிவாயு- 16.558 மில்லியன் டன் (ரூ. 456 கோடி)
பெட்ரோலியப் பொருள்கள்- 28.3 மில்லியன் டன்
(குறிப்பு: கச்சா எண்ணெய் விலைச்சரிவால் 2014-15-இல் ரூ. 7 லட்சம் கோடியாக இருந்த இறக்குமதி மதிப்பு 2015-16-இல் ரூ. 4.16 லட்சம் கோடியாகக் குறைந்தது)
இருப்பு:
கச்சா எண்ணெய்-  754 மில்லியன் டன்
எரிவாயு- 1497 பில்லியன் கன மீட்டர்

-தினமணி (வர்த்தகம் சிறப்புப் பக்கம்)- 10.04.2017

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: