குடிநீர் சுத்திகரிப்புக் கருவியை உருவாக்கியவர்

11 Apr

அசோக் காட்கில்

இந்தியாவிலும் வங்கதேசத்திலும் 1993-இல் பரவிய காலரா நோயால் ஆயிரக் கணக்கானோர் பலியாகினர். அதற்கு மாசு படிந்த குடிநீரே காரணம் என்று கண்டறியப்பட்டது. அதைக் கண்ட விஞ்ஞானி ஒருவர், தூய குடிநீரை உறுதிப்படுத்தும் சாதனத்தை வடிவமைக்க உறுதி பூண்டார்.

நோய் பரப்பும் வைரஸ், பாக்டீரியா கிருமிகளை புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்தி அழிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த அவர், மிகக் குறைந்த செலவில் இயங்கும்  ‘யு.வி.வாட்டர் ஒர்க்ஸ்’ கருவியை உருவாக்கினார். அந்தக் கருவியால் உலகப் புகழ் பெற்ற அந்த விஞ்ஞானி, அமெரிக்கா வாழ் இந்தியரான அசோக் காட்கில்.

அறிவியலை மக்கள்நலனுக்கான சாதனமாக மாற்றுவதில் திறன் படைத்தவர் காட்கில். வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கான ஆற்றல் மேம்பாட்டு ஆராய்ச்சியிலும்,  கொள்கை உருவாக்குவதிலும் அவர் நிபுணராக மதிக்கப்படுகிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில், 1950, நவம்பர் 15-இல் பிறந்தார் அசோக் காட்கில். கான்பூரில் அவரது பள்ளிக்கல்வி கழிந்தது. மும்பை பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர் இயற்பியலில் பி.எஸ்சி. பட்டம் (1971) பெற்றார். அடுத்து, கான்பூர் ஐஐடி-யில் எம்.எஸ்சி. (1973) பட்டம் பெற்றார்.

மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற அசோக் காட்கில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் (1975) பெற்றார்; அடுத்து, இயற்பியலில் பிஹெச்.டி. பட்டமும் (1979) பெற்றார்.

படிப்பு முடிந்ததும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் லாரன்ஸ் பெர்க்லே தேசிய ஆய்வகத்தில் விஞ்ஞானியாக இணைந்தார். 1980 முதல் 1983 வரை, அங்குள்ள ஆற்றல், சூழியல் துறையை அவர் வழிநடத்தினார்.

சூரிய ஒளி ஆற்றலை வெப்பச்சலனம் மூலமாக பயன்படுத்துதல் குறித்த ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டார். வெப்பச்சலனத்தின் போக்கை முப்பரிமாணத்தில் கணினி நிரலாக்கும் இரு பெருந்திட்டங்களிலும் அவர் ஈடுபட்டார். அந்த கணினி நிரல்கள் பிரான்ஸ், ஸ்வீடன், கனடாவில் உள்ள பல ஆய்வு நிறுவனங்களில் நிறுவப்பட்டுள்ளன.

அடுத்து பிரெஞ்ச் அரசின் அழைப்பை ஏற்று,  பாரிஸ் பல்கலைக்கழகத்தின் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் 1981, மார்ச்- ஆகஸ்ட் காலகட்டத்தில் வருகைதரு விஞ்ஞானியாக வழிகாட்டினார். கணினிப் பகுப்பாய்வுகள் மூலமாக சூரிய ஒளி ஆற்றலை சேமிக்கும் முறைகளை மேம்படுத்த அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கு காட்கில் பயிற்சி அளித்தார்.

அதையடுத்து இந்தியா வந்த அசோக் காட்கில், டாடா ஆற்றல் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் (TERI) 1983 முதல் 1988 வரை ஆய்வுக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் ஆராய்ச்சித் திட்டங்களில் அவர் பல எரிசக்தி சேமிப்புக் கருவிகளை உருவாக்கினார். திட எரிபொருள் ஸ்டவ்களை மேம்படுத்தினார். இந்த அனுபவம் பின்னாளில் சூடான் நாட்டு மக்களுக்கான பிரத்யேக அடுப்பை உருவாக்கியபோது அவருக்கு உதவிகரமாக இருந்தது.

ஒளிவிளக்குகளில் தொழில்நுட்ப மாற்றம் மூலமாக மின்சக்தியை சேமிக்கும் திட்டங்களையும் காட்கில் முன்வைத்தார். தனது ஐந்தாண்டுப் பணிக்காலத்தில் ஆய்வு நிறுவனத்தின் முதன்மை திட்ட ஆய்வாளராக அவர் இருந்தார்.

1988-இல் அமெரிக்கா திரும்பிய காட்கில், மீண்டும் லாரன்ஸ் பெர்க்லே தேசிய ஆய்வகத்தில் மூத்த விஞ்ஞானியாக இணைந்தார். அங்கு சூற்றுச்சூழல், ஆற்றல் தொழில்நுட்பப் பிரிவின் குழுத்தலைவராக இயங்கும் அவர், கதிரியக்கப் பொருள்கள், ஆவியாகும் வேதிப்பொருள்கள், திரவ நிலைக்கு  அழுத்தப்பட்ட வாயுக்களை கொண்டுசெல்கையில் நேரிடும் காற்று மாசைக் கட்டுப்படுத்துவது குறித்த கோட்பாட்டு ஆய்வுகளில் கவனம் செலுத்தினார்.

உள்ளரங்குகளை மிகு தூய்மையாகப் பராமரிக்கும் தொழில்நுட்பம், குடிநீரில் கிருமி நீக்கம், வளரும் நாடுகளுக்கான ஆற்றல் சேமிப்புத் திட்டங்களை அவர் வடிவமைத்தார்.

வெப்பப் பெயர்ச்சி, திரவ இயக்கவியல், வளர்ச்சிக்கான தொழில்நுட்ப வடிவமைப்பு ஆகிய துறைகளில் காட்கில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். அவரது கண்டுபிடிப்புகள், எளிய அறிவியல் கோட்பாடுகளில் இயங்கும், செலவு குறைந்த வடிவமைப்புகளாகும்.

யு.வி.வாட்டர் ஒர்க்ஸ் கருவி:

வங்க மக்கள் காலராவால் பாதிக்கப்பட்டபோது அவர் உருவாக்கிய யு.வி. தொழில்நுட்பம், மிகவும் எளிமையானது. 40 வாட் திறனுடைய புறஊதாக் கதிர்களை வெளியிடும் பல்பை நீரில் மூழ்கவைத்து, அந்தக் கதிரின் தாக்கத்தால் கிருமிகளை அழிக்க முடியும் என்று அவர் நிரூபித்தார். கிருமிகளை புற ஊதாக் கதிர்கள் கொல்லும் என்ற கருத்து புதியதல்ல. அதேசமயம், புற ஊதாக் கதிர்களை குடிநீர் சுத்திகரிப்புக்கு ஏற்ற விதமாக கருவியாக வடிவமைத்ததில் தான் காட்கிலின் நிபுணத்துவம் வெளிப்பட்டது.

இந்தக் கருவி மூலமாக, நிமிடத்துக்கு 15 லிட்டர் குடிநீரில் கிருமிநீக்கம் செய்ய முடிந்தது. 2000 மக்கள்தொகை கொண்ட கிராமத்தில் இக்கருவியை நிறுவினால், ஆண்டுக்கு சுமார் ரூ. 120 செலவில் தனிநபருக்கு சுத்தமான குடிநீர் வழங்க முடிந்தது. இதன் செலவு குறைந்த தொழில்நுட்பம் காரணமாக மிக விரைவில் உலகெங்கும் பரவலாகியது.

மிகச் சிறந்த கண்டுபிடிப்பாக  ‘யு.வி.வாட்டர் ஒர்க்ஸ்’ (UV Waterworks) தேர்வு செய்யப்பட்டுள்ளது இதற்காக, பாப்புலர் சயின்ஸ் விருது (1996), சூழலுக்கு உகந்த சிறந்த கண்டுபிடிப்பு விருது (1996), அமெரிக்க தேசிய அருங்காட்சியகத்தின் நம்பிக்கைக்குரிய விஞ்ஞானி விருது (1998), மாசாசூசெட்ஸ் கல்வி நிறுவனத்தின் கண்டுபிடிப்பாளர் விருது (1999), தொழில்நுட்பத்தை தொழில்துறைப் பயன்பாட்டுக்கு மாற்றிய சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது (2000) உள்ளிட்ட பல விருதுகளை அசோக் காட்கில் பெற்றார்.

எரிபொருள் சேமிப்பு அடுப்பு:

ஆப்பிரிக்க நாடான சூடானில் டார்ஃபர் பகுதியில் 2003-இல் உள்நாட்டுக் கலவரம் வெடித்தபோது, எரிபொருளான விறகு சேகரிக்க அநாட்டுப் பெண்கள் சிரமப்பட்டனர். கலவரக் கும்பல்கள் பெண்களை நாசப்படுத்திய நிலையில், சூடான் நாட்டு பெண்களுக்கு உதவும் வகையில் புதிய அடுப்பு ஒன்றை அசோக் காட்கில் உருவாக்கினார். லாரன்ஸ் பெர்க்லே தேசிய ஆய்வகத்தில் அவர் மேற்கொண்ட ஆய்வுகளின் விளைவாக, குரைந்த எரிபொருளில் செயல்படும் அடுப்பு உருவானது. அதற்கு பெர்க்லே-டார்ஃபர் அடுப்பு ( Berkeley-Darfur Stove) என்று பெயரிட்டார்.

அந்நாட்டு மக்களுக்கு உதவ, தன்னார்வ அமைப்பு ஒன்றையும் அவர் 2015 வரை நிர்வகித்தார். அந்த அமைப்பு சுமார் 40,000 அடுப்புகளை டார்ஃபர் பெண்களுக்கு வழங்கியது. இத்திட்ட்த்தால் அசோக் காட்கிலின் புகழ் பரவியது. அவருக்கு பல்வேறு சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டன. அமெரிக்க கண்டுபிடிப்பாளர்கள் அவையில் அவர் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார் (2014). ஆற்றல் சேமிப்புக்கான சிரந்த தொழில்நுட்பம் என்ற விருதும் (2004), அமெரிக்க இயற்பியல் சங்கத்தின் விருதும் (2015), மேலும் பல விருதுகளும்  இந்தக் கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டன.

இந்திய தேசிய பொறியியல் அகாதெமி (2015), அமெரிக்க தேசிய பொறியியல் அகாதெமி (2013), அமெரிக்க இயற்பியலாளர் சங்கம், இந்திய சூரிய ஆற்றல் சொசைட்டி உள்ளிட்ட பல நிறுவனங்களில் அசோக் காட்கில் கௌரவ உறுப்பினராக உள்ளார். 110 ஆய்வறிக்கைகளையும், 120 ஆய்வரங்கக் கட்டுரைகளையும் அவர் அளித்துள்ளார். குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் தொடர்பாக 4 காப்புரிமைகளையும், பிற கண்டுபிடிப்புகள் தொடர்பாக மேலும் 6 காப்புரிமைகளையும் காட்கில் பெற்றுள்ளார்.

லாரன்ஸ் -பெர்க்லே தேசிய ஆய்வகத்தில் விஞ்ஞானியாகவும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கட்டுமானம்,  சூழியல் பொறியியல் துறை பேராசிரியராக அவர் தற்போது பணிபுரிகிறார். இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் கட்டுமானப் பொறியியல் தொடர்பான ஆலோசனைக் குழுக்களில் அசோக் காட்கில் இடம்பெற்று ஆலோசனை வழங்குகிறார்.

உன்னதமான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறனுள்ள புத்திசாலிகளான விஞ்ஞானிகள் நூற்றுக் கணக்கானோர் நம்மிடையே உள்ளனர். அவர்களுக்கு தங்கள் கண்டுபிடிப்புகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவரத்தான் தெரிவதில்லை என்கிறார் அசோக் காட்கில்.

“கனவு காணுங்கள். உங்கள் லட்சியம் உயர்ந்ததாக இருக்கட்டும். அதேசமயம், உங்கள் கால்கள் நிலத்தில் ஆழப் பதிந்திருக்கட்டும். உங்கள் கண்டுபிடிப்புகளை பயன்பாட்டுக்குக் க்ண்டுவருவதிலும், அதற்கு காப்புரிமை பெறுவதிலும் உறுதியாக இருங்கள்” என்று இளம் விஞ்ஞானிகளை அறிவுறுத்துகிறார் அவர்.

 

-தினமணி இளைஞர்மணி (11.04.2017)

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: