இந்திய நூலகவியலின் தந்தை

25 Apr

எஸ்.ஆர்.ரங்கநாதன்

நூலகங்கள் அறிவின் திருக்கோயில்கள். மனித ஞானத்தின் புத்தக வடிவ ஆதாரங்கள் ஒரே இடத்தில் சேகரித்து வைக்கப்படும் கருவூலங்களாக நூலகங்கள் திகழ்கின்றன. இந்த நூலகங்களை நிர்வகிப்பது ஒரு கலையாக மட்டுமின்றி தகவல் சார் அறிவியலாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறையை இந்தியாவில் வளர்த்தெடுத்தவர், தமிழகத்தைச் சேர்ந்த நூலகவியல் மேதையான எஸ்.ஆர்.ரங்கநாதன்.

கணிதவியலாளர், கல்வியாளர், எழுத்தாளர், நூலகர் எனப் பல முகங்களை உடையவர் ரங்கநாதன். நூலகங்களில் புத்தகங்களை பாதுகாப்பாக சேமிக்கும் “கோலன் தொகுப்பு முறை’யை உருவாக்கியவர் அவர். நூலக நெறிமுறைகளுக்கான சட்டத்தை உருவாக்கியவரும் அவர்தான். அது மட்டுமல்ல, இந்தியாவில் நூலகத் துறையின் வளர்ச்சிக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தவர், தனது சொத்துகளையும் தானம் செய்தவர் ரங்கநாதன். எனவேதான், அவரை  ‘இந்திய நூலக அறிவியல், ஆவணக் காப்பகம் மற்றும் தகவல் அறிவியலின் தந்தை’ என்று அவர் போற்றப்படுகிறார்.

சுதந்திரத்துக்கு முந்தைய சென்னை மாகாணத்தின் தஞ்சை மாவட்டம், சீர்காழியில் நிலச்சுவான்தார் ராமாமிர்த அய்யர்-சீதாலட்சுமி தம்பதியருக்கு 1892, ஆகஸ்ட் 9-இல் பிறந்தார் ரங்கநாதன். சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன் என்பதன் சுருக்கமே எஸ்.ஆர்.ரங்கநாதன்.

ரங்கநாதன் ஆறு வயதாக இருக்கும்போதே தந்தை காலமானார். எனவே, அவரை தாய்வழி தாத்தா வளர்த்தார். அவரது ஆரம்பக் கல்வி, சீர்காழி சபாநாயக முதலியார் உயர்நிலைப் பள்ளியில் கழிந்தது (1897- 1908).  1909-இல் மெட்ரிக் தேறினார் ரங்கநாதன்.

அதே ஆண்டில். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் சேர்ந்து கணிதத்தில் பி.ஏ. முடித்தார் (1913). அங்கேயே எம்.ஏ. பட்டமும் (1916) பெற்ற அவர், சைதாப்பேட்டையில் இருந்த ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் பயின்று ஆசிரியர் பயிற்சி உரிமமும் பெற்றார் (1917).

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தபோது அங்கு கணிதப் பேராசிரியராக இருந்த எட்வர்ட் பி.ராஸ் அவரை மிகவும் கவர்ந்தார். பின்னாளில் அவர் பேராசிரியராகப் பரிமளித்தபோது எட்வர்டின் தாக்கம் அவரிடம் மிகுதியாக வெளிப்பட்டது.

படிப்பை முடித்தவுடன், மங்களூரிலும் கோயம்புத்தூரிலும் உள்ள அரசு கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் துறைகளில் உதவி விரிவுரையாளராக ரங்கநாதன் பணிபுரிந்தார் (1917- 1921); 1921 ஜூலையில் சென்னை மாநிலக் கல்லூரியில் கணிதவியல் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவரது பாட வகுப்புகள் மாணவர்களால் மிகவும் ரசிக்கும் படியாகவும் ஆர்வத்துடன் காத்திருக்கத் தூண்டும்படியாகவும் விளங்கின. பாடத் திட்டத்துக்கு மேற்பட்டு மாணவர்களின் திறமையைப் பட்டை தீட்டும் விதமாக விவாதங்கள், கருத்தரங்குகள், செய்முறைப் பயிற்சிகளில் மாணவர்களை அவர் ஈடுபடுத்தினார். இந்த அனுபவம், பின்னாளில் நூலக அறிவியல் துறையில் புதிய மாணவர்களை வளர்க்க அவருக்கு அடிப்படையாக அமைந்தது.

இதடையே, 1907-இல் அவருக்கு அந்தக் கால முறைப்படி ருக்மணி என்ற சிறுமியை திருமணம் செய்து வைத்தனர். 1928-இல் ஒரு விபத்தில் அவர் இறந்தார். அதையடுத்து சாரதா என்ற பெண்ணை 1929-இல் அவர் திருமணம் செய்தார். அவர்களது மகன் யோகேஸ்வர் இயந்திரக் கருவி வடிவமைப்பு நிபுணராக உலக அளவில் புகழ்பெற்றார்.

கல்லூரிப் பணி ரங்கநாதனுக்கு மிகவும் திருப்தி அளித்தபோதும் அதில் கிடைத்த ஊதியம் குடும்ப நிர்வாகத்துக்கு போதுமானதாக இல்லை. எனவே, அவர் நண்பர்களின் அறிவுரைப்படி, சென்னை பலகலைக்கழகத்தில் 1924 ஜனவரியில் நூலகராக இணைந்தார். அதன் முதல் நூலகர் அவர்தான். ஆனால், மாணவர்களுடன் தொடர்பற்ற பணியாகவும், அலுப்பூட்டும் தொழிலாகவும் நூலகர் பணி அவருக்குத் தோன்றியது. பேராசிரியர் பணியை விட நூலகர் பணி அதிக ஊதியம் அளிப்பதாக இருந்தபோதும், அதை அவர் விரும்பவில்லை. எனவே, மீண்டும் மாநிலக் கல்லூரிக்கு சென்றார் அவர்.

ஆயினும் மாநிலக் கல்லூரி முதல்வர் டங்கன், ரங்கநாதனின் கருத்தை ஏற்கவில்லை. நூலகர் பயிற்சிக்காக லண்டன் சென்று திரும்பும் வரை அவரது பணியிடத்தை நிரப்பாமல் வைத்திருப்பதாகவும், அப்போதும் நூலகர் பணி அலுப்பூட்டினால் தாராளமாக பேராசிரியர் பணிக்குத் திரும்பலாம் என்றும் அவர் கூறினார்.

அதையடுத்து, லண்டன் பல்கலைக்கழகத்தின் நூலகவியல் பள்ளியில் (1924- 25) நூலக அறிவியலில் பயிற்சி பெற்றார் ரங்கநாதன். அங்கு தலைமை நூலகர் டபிள்யூ.சி.பெர்விக் வழிகாட்டலில், குரோய்டன் பொது நூலகத்தில் செய்முறைப் பயிற்சி பெற்றார் அவர். அப்போது லண்டன் மாநகரின் பல நூலகங்களைப் பார்வையிடும் வாய்ப்பும், அங்கு நூலகங்கள் செயல்படும் முறைமையைக் கற்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தன. குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர், கல்வியாளர்கள் எனப் பலதரப்பினரும் எளிதில் பயன்படுத்தும் விதமாக நூலகத்தை அமைப்பது எப்படி என்று அங்கு அவர் புரிந்துகொண்டார். நூலகம் என்பது ஒரு மாபெரும் அறிவியக்கம் என்பதை உணர்ந்த அவர், இந்தியாவில் நூலகத் துறையை வளர்க்கும் லட்சியத்துடன் நாடு திரும்பினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் நூலகத்தை தனியொரு மனிதராக முன்னின்று சீர்ப்படுத்திய ரங்கநாதன், தான் உருவாக்கிய கோலன் நூற்பகுப்பு முறையை (Colan Classification- 1924) அதில் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.  பல்லாயிரக் கணக்கான புத்தகங்களை பல்வேறு துறைகள் வாரியாகப் பிரித்து, எளிதில் அடையாளம் கண்டு எடுக்கும் வகையில் அவற்றை அலமாரிகளில் அடுக்கி, அவற்றுக்கு வகைமைப் பட்டியலையும் தயாரித்தார் ரங்கநாதன். அதன்மூலமாக அவரது புகழ் பரவியது.

தகவல்களையும் ஆவணங்களையும் பொருட்களையும் தொகுத்து, பாதுகாத்து, சேமித்து, மீட்டெடுக்க உதவும் தொழில்நுட்ப அறிவியல்- ஆவணக அறிவியலாகும். அதன் ஒரு பகுதியே நூலக அறிவியல். அறிவியல் சார்ந்து, புள்ளியியல் உதவியுடன் புத்தகங்களை வகைமைப்படுத்தும்போது, அவற்றைப் பயன்படுத்துவதும், பாதுகாப்பதும் எளிதாகிறது. இத்துறையில் ரங்கநாதன் தனது ஆழ்ந்த ஈடுபாட்டாலும், தொடர்ந்த கடின உழைப்பாலும் மேதையாக உருவானார்.

நூலக அறிவியலின் ஐந்து விதிகள்:

மிக குறுகிய காலத்தில் நூலக அறிவியலில் நிபுணத்துவம் பெற்ற ரங்கநாதன், 1928-இல் நூலக அறிவியலின் ஐந்து அடிப்படை விதிகளை உருவாக்கினார். அவை உலகப் புகழ் பெற்றன.  அவற்றை இங்கு சுருக்கமாகக் காணலாம்.

  1. நூல்கள் பயன்பாட்டுக்கானவை
  2. ஒவ்வொரு வாசகருக்கும் அவரது நூல்
  3. ஒவ்வொரு நூலுக்கும் அதன் வாசகர்
  4. வாசகரின் நேரத்தை சேமிக்க வேண்டும்
  5. நூலகம் ஒரு வளரும் உயிரினம்.

இந்த 5 விதிகளின் அடைப்படையில், நூலகத்தை மிகவும் நேர்த்தியாகவும் பொறுப்புணர்வுடனும் பராமரிக்க வேண்டும் என்பதே இலக்காகும்.

அவரது தலைமையில் சென்னை நூலக சங்கம் 1928-இல் அமைந்தது. அதன் நிறுவனச் செயலாளராக 1945 வரை பொறுப்பில் இருந்தார். அவரது முயற்சியால், நூலக அறிவியல் பயிற்சிப் பள்ளி 1929-இல் துவங்கப்பட்டது. 1931-இல் சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு துறையாக நூலக அறிவியல் துவங்கப்பட்டது. அங்கு சான்றிதழ் படிப்புகள் (1931), பட்டயப் படிப்புகள் (1937), பட்டப் படிப்புகள் (1961) துவங்கப்பட்டன.

வகைப்பாட்டு அட்டை எண் (Classified Catalog Code- 1934), சங்கிலித் தொடர் உள்ளடக்கம் (Chain Indexing- 1938), நூலக மேலாண்மை வகைப்பாடு (1956) உள்ளிட்டவற்றை எஸ்.ஆர்.ரங்கநாதன் உருவாக்கினார். அது மட்டுமல்ல, நூலக அறிவியல் துறை வளர்ச்சிக்காக தனது பெரும் செல்வத்தை தானம் செய்து, பல அறக்கட்டளைகளை அவர் அமைத்தார்; நூலகத் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஊக்கப்பரிசுகள், உதவித் தொகைகள் வழங்கவும் ஏற்பாடு செய்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் 21 ஆண்டுகள் தீவிரமாகப் பணிபுரிந்த அவர், 1945-இல் விருப்ப ஓய்வு பெற்றார். அவரது கவனம் ஆராய்ச்சியில் குவிந்தது. தனது தொடர்ந்த ஆய்வின் பயனாக, 1948-இல் சென்னை பொது நூலகங்கள் சட்டத்தை வடிவமைத்த அவர், சட்ட்சபையிலும் அதை நிறைவேற்றச் செய்தார். அதை அடியொற்றி, பிற மாநிலங்களிலும் நூலக சட்டங்கள் பிற்பாடு உருவாக்கப்பட்டன. உள்ளாட்சி வரிவசூலில் குறிப்பிட்ட சதவிகிதத்தை நூலக வளர்ச்சிக்காக வழங்கவும், மாவட்ட நூலகக் குழுக்கள் அமைக்கவும், நூல்களை கொள்முதல் செய்யவும்  அந்தச் சட்டம் முறைமைகளை உருவாக்கியது.

காசி ஹிந்து பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் வேண்டுகோளை ஏற்று அங்கு சென்ற அவர், பல்கலைக்கழக நூலகத்தின் லட்சக் கணக்கான புத்தகங்களை வகைமைப்படுத்தினார் (1945-47).

பிறகு தில்லி சென்ற அவர், தில்லி பல்கலைக்கழக நூலகத்தையும் 1947-இல் புனரமைத்தார். அங்கு நூலக அறிவியலில் இளநிலை பட்டப் படிப்பும் துவங்கப்பட்டது. தில்லியில் இருந்த காலத்தில் அவரது சர்வதேசத் தொடர்புகள் அதிகரித்தன.  இந்திய நூலக சங்கத்தின் தலைவராகவும், சர்வதேச ஆவணக் காப்பக கூட்டமைப்பின் ஒரு பிரிவுக்கு தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவில் நூலகவியலின் வளர்ச்சிக்காக 30 ஆண்டுகாலத் திட்டத்தை அவர் வடிவமைத்தார். இந்திய தர நிர்ணய அமைப்பின் ஆவணக்குழுவை நிறுவியதிலும் அவரது பங்களிப்பு முக்கியமானது.  1957-இல் பெங்களூரு சென்ற அவர், அங்குள்ள நூலக ஆர்வலர்களுடன் இணைந்து, இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் துணை அமைப்பாக ஆவணக் காப்பக ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தை 1962-இல் நிறுவினார்.

ஸ்விட்சர்லாந்து, ஃபிரான்ஸ், அமெரிக்கா,  கனடா, பிரிட்டன், இலங்கை, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று நூலக மேம்பாட்டுக்கு உழைத்த அவர், அத்துறை தொடர்பான பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவிலும் வழிகாட்டினார். இவ்வாறாக, தேசிய அளவிலும், உலக அளவிலும் இடையறாது இயங்கிய ரங்கநாதன், பல புதிய துவக்கங்களை நூலக அறிவியல் துறையில் நிகழ்த்தினார்.

தவிர, 60-நூல்களையும், 2,000 கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு அவற்றுள் ஒன்று. இந்திய நூலக அறிவியலின் அடிப்படை நூல்கள் அவரால் எழுதப்பட்டவையே.

பிரிட்டிஷ் அரசின் ராவ் சாஹிப் பட்டம் (1933), இந்திய அரசின் பத்மஸ்ரீ (1957) உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும், பல கௌரவ முனைவர் பட்டங்களையும் ரங்கநாதன் பெற்றுள்ளார். தனது வாழ்வு முழுவதையும் நூலக வளர்ச்சிக்கான பயணமாகவே மாற்றிக்கொண்ட எஸ்.ஆர்.ரங்கநாதன், 1972, செப்டம்பர் 27-இல் தனது 80-வது வயதில் மறைந்தார்.

சென்னை, காசி, தில்லி, மும்பை, மைசூரு பல்கலைக்கழக நூலகங்களும், நாடாளுமன்ற நூலகமும், பெங்களூரு ஐஐடி, தில்லி எய்ம்ஸ், டேராடூன் வன ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் நூலகங்களும் ரங்கநாதனின் வழிகாட்டுதலில் மேம்படுத்தப்பட்டவை. அவரது அரிய சேவைகளை கௌரவிக்கும் வகையில், அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 12- ஆம் தேதி, தேசிய நூலக தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: