புரதக்கூறுகளை ஆராயும் உயிரி வேதியியல் விஞ்ஞானி

2 May

பத்மநாபன் பலராம்

தற்காலத்தில் வளர்ந்துவரும் முக்கியமான துறையாக உயிரி வேதியியல் துறை (Bio Chemistry) உள்ளது. உயிரினங்களுக்குள் நிகழும் வேதியியல் செயல்முறைகளை ஆராயும் துறை இது. புரதங்கள், கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு, கரு அமிலங்கள் ஆகியவை குறித்த ஆய்வை இத்துறை மேற்கொள்கிறது.

இவற்றில் புரதக்கூறுகள் குறித்த ஆராய்ச்சியில் நிபுணராக விளங்குகிறார் விஞ்ஞானி பத்மநாபன் பலராம்.  பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) இயக்குநராக இருந்தவரான அவர், மூலக்கூறு உயிரி இயற்பியல், உயிரி கரிம வேதியியல் பிரிவுகளிலும் நிபுணராவார்.

மகாராஷ்டிரத்தில் 1949, பிப்ரவரி 19-இல் பிறந்தார் பத்மநாபன் பலராம். புணாவிலுள்ள பெர்கூஸன் கல்லூரியில் வேதியியலில் பி.எஸ்சி. பட்டம் (1967) பெற்ற அவர், காண்பூர் ஐஐடியில் எம்.எஸ்சி. பட்டம் (1969) பெற்றார்.

முனைவர் பட்ட ஆய்வுக்காக அமெரிக்காவின் கார்னெகி மெலான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர், 1972-இல் பிஎச்.டி. பட்டம் பெற்றார்.

முனைவர் பட்டத்துக்குப் பிந்தைய ஆய்வாக, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அங்கு நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கரிம வேதியியல் விஞ்ஞானி ராபர்ட் பர்ன்ஸ் வுட்வோர்டுடன் இணைந்து ஓராண்டு காலம்  ‘எரித்ரோமைசின்’  என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி குறித்து ஆய்வு நடத்தினார்.

1973-இல் நாடு திரும்பிய பலராம், பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் விரிவுரையாளராக இணைந்தார். அங்கு 1977-இல் உதவி பேராசிரியராகவும், 1982-இல் இணை பேராசிரியராகவும், 1986-இல் பேராசிரியராகவும் பணி உயர்வு பெற்றார்.

ஐஐஎஸ்சி நிறுவனத்தின் மூலக்கூறு உயிரி இயற்பியல் துறைக்கு தலைவராகவும் (1995- 2000), உயிரி அறிவியல் துறையின் தலைவராகவும் (2000- 2005) இருந்த அவர், அதன் இயக்குநராக 2005-இல் பதவியேற்றார். 2014 வரை அப்பொறுப்பில் அவர் வழிகாட்டினார்.

பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழு உறுப்பினர், இந்திய அறிவியல் அகாதெமி, இந்திய தேசிய அறிவியல் அகாதெமி, மூன்றாம் உலக நாடுகளின் அறிவியல் அகாதெமி ஆகியவற்றின் உறுப்பினர், பல அரசுக் குழுக்களில் உறுப்பினராக பலராம் இருந்துள்ளார். தொழில்நுட்ப நிபுணர் சாம் பிட்ரோடா தலைமையிலான தேசிய அறிவுசார் ஆணையத்திலும் பலராம் மூன்றாண்டுகள் உறுப்பினராக இருந்தார்.

இந்திய தேசிய அறிவியல் அகாதெமியின் இளம் விஞ்ஞானி விருது (1977), சிஎஸ்ஐஆரின் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1986), ஜி.டி.பிர்லா விருது (1994), மூன்றாம் உலக நாடுகள் அறிவியல் அகாதெமியின் விருது (1994), இந்திய அரசின் பத்மஸ்ரீ (2002), பத்மபூஷண் (2014) விருதுகளை பத்மநாபன் பலராம் பெற்றுள்ளார்.

அறிவியல் பங்களிப்பு:

இயற்கையான புரதக்கூறுகள் (Peptides), வடிவமைக்கப்பட்ட  புரதக்கூறுகளின் கட்டமைப்பு, உறுதி, உயிரியல் செயல்முறை ஆகியவை குறித்த ஆராய்ச்சியில் பலராம் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆராய்ச்சியில் புதுமையாக, அணுக்கரு காந்த அதிர்வு நிறமாலையியல் (NMR), அகச்சிவப்பு நிறமாலையியல், எக்ஸ் கதிர் படிகவியல் தொழில்நுட்பங்களை அவர் பயன்படுத்தினார்.

புரதக்கூறுகளில் வினையாற்றும் ஆல்பா அமினோ ஐஸோபியூட்ரிக் அமிலம் தொடர்பாக அமெரிக்க விஞ்ஞானி இஸபெல்லா கார்லேவுடன் இணைந்து அவர் மேற்கொண்ட ஆய்வு முன்னோடியானதாகும்.

அவரது வழிகாட்டலில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட ராமகிருஷ்ணன் நாகராஜ் உள்ளிட்ட பலர் பிரபல விஞ்ஞானிகளாக உள்ளனர்.

காலத்துக்கேற்ப புதிய ஆய்வுத் துறைகள் உருவாவது அவசியம் என்று கூறும் அவர், ஐஐஎஸ்சி நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது அங்கு பல புதிய துறைகளை துவக்கினார்.

இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள், வாழ்க்கை வரலாறுகள், சோதனை முடிவுகளை பதிவு செய்து, ‘கரன்ட் சயின்ஸ்’ அறிவியல் சஞ்சிகை நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி வருகிறது. அதன் ஆசிரியராக (2005- 2013) பலராம் செயல்பட்டார். மேலும் பல ஆராய்ச்சி இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் அவர் இடம் பெற்றுள்ளார்.

400-க்கு மேற்பட்ட ஆய்வறிக்கைகளை பலராம் வெளியிட்டுள்ளார். தங்கள் முன்னாள் மாணவரான பத்மநாபன் பலராம் நிகழ்த்தியுள்ள சாதனைகளை கௌரவிக்கும் வகையில், கான்பூர் ஐஐடி சிறந்த முன்னாள் மாணவருக்கு பலராம் பெயரில் விருது வழங்குகிறது.

 

-தினமணி இளைஞர்மணி (02.05.2017)

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: