அண்டவியல் ஆய்வில் திருப்பத்தை உருவாக்கிய இந்தியர்

23 May

அபய் வசந்த் அஷ்டேகர்

பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கான காரணத்தை அறிய உதவும் ஆய்வுகளை அண்டவியல் (Cosmology) மேற்கொள்கிறது. இத்துறையில் புதிய திருப்பத்தை உருவாக்கிய கோட்பாட்டை வடிவமைத்தவராக, அமெரிக்கா வாழ் இந்திய விஞ்ஞானியான அபய் வசந்த் அஷ்டேகர் போற்றப்படுகிறார்.

பிரபஞ்சத்தை ஆராயும் கோட்பாட்டு இயற்பியல் விஞ்ஞானிகளை சென்ற நூற்றாண்டில் இரு பெரும் கோட்பாடுகள் வழிநடத்தின. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு (General Relativity Theory- 1915) அதில் முதன்மையானது. ஈர்ப்புவிசை (Gravity) காலவெளியின் (SpaceTime) ஒரு வடிவியல் பண்பு என்றார் ஐன்ஸ்டீன்.

அடுத்து மேக்ஸ் பிளாங்க் உள்ளிட்டவர்களால் நிறுவப்பட்ட குவான்டம் இயங்கியல் கோட்பாடு (Quantum Mechanics- 1920)  நுண்ணணுக்களின் கட்டுப்பாடற்ற இயக்கத்தை வரையறுத்தது.

ஆயினும் இவ்விரு கோட்பாடுகளுக்கும் ஒத்த தன்மையை உறுதிப்படுத்த இயலாமல் விஞ்ஞானிகள் தவித்து வந்தனர். இரு கோட்பாடுகளும் தன்னளவில் நிரூபிக்கப்பட்டவையாக இருப்பினும், இரண்டிலும் சில குறைபாடுகள் காணப்படுகின்றன.

இவ்விரண்டையும் இணைப்பதன் வாயிலாக, இரு கோட்பாடுகளின் நிறைவின்மையை பூர்த்தி செய்ய இயலும் என்ற பார்வையுடன் ஆராய்ந்த விஞ்ஞானிகளும் இருந்தனர்.

இந்நிலையில் தான், பொது சார்பியல் கோட்பாட்டில் பொருளின் திசை குறிப்பிடாததை உணர்ந்த இந்திய விஞ்ஞானி அபய் அஷ்டேகர், குவாண்டம் இயங்கியலை அத்துடன் இணைப்பதன் மூலமாக, புதிய கருத்தாக்கத்தை உருவாக்கினார். அது அபய் மாறிகள் (Abhay Variables- 1986) என்று அழைக்கப்படுகிறது.

அவருடன் இணைந்து பணிபுரிந்த விஞ்ஞானியான ரோஜர் பென்ரோஸ், பொது சார்பியல் கோட்பாட்டை குவான்டம் இயங்கியலுடன் இணைத்ததில் சிறந்த முயற்சி அஷ்டேகருடையது என்பதில் ஐயமில்லை என்கிறார்.

பின்னாளில், பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விசை மற்றும் குவான்டம் பண்புகளை விளக்கும் முயற்சியாக குவான்டம் சுற்று ஈர்ப்பு விசை (Loop Quantum Gravity) கோட்பாடு உருவாக்கப்பட்டது. அடுத்து குவான்டம் சுற்று அண்டவியல் கோட்பாடும் உருவானது. இவற்றின் நிறுவனராக அபய் அஷ்டேகர் மதிக்கப்படுகிறார்.

கல்விப் பயணம்:

மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூரில் 1949, ஜூலை 5-இல் பிறந்தார் அபய் வசந்த் அஷ்டேகர். அவரது தந்தை அரசு ஊழியராக இருந்ததால் அபயின் பள்ளிக்கல்வி பல இடங்களில் நிகழ்ந்தது.

அபய்க்கு 15 வயதாக இருந்தபோது,  ‘ஒன்று, இரண்டு, மூன்று,… முடிவிலி’ (One, Two, Three,… Infininity) என்ற நூலைப் படித்தார். ருஷ்யாவைச் சேர்ந்த அண்டவியலாளரான ஜார்ஜ் காமோவ் எழுதிய அந்த நூல், பிரபஞ்சத் தோற்றம் குறித்தது. அந்நூல், அபயின் மனதில் அண்டவியலில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது.

பிற்பாடு மும்பை சென்ற அபய், இயற்பியலில் பி.எஸ்சி. படித்தார். அப்போது. அங்கிருந்த டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (TIFR) வாரம் ஒருமுறை செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அங்கிருந்த விஞ்ஞானிகளுடனான சந்திப்புகள், அபயின் ஆய்வு மனப்பான்மையை உறுதிப்படுத்தின.

அந்த விஞ்ஞானிகள் அளித்த பரிந்துரைப்படி, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ரிச்சர்டு பி. ஃபேய்ன்மேனின் இயற்பியல் சொற்பொழிவுத் தொகுப்பைப் படித்தார் அபய். அந்த நூலின் இறுதிப்பகுதியில் இடம்பெற்றிருந்த செய்முறை வினாவுக்கான விளக்கம் தவறாக இருப்பதாக அபய்க்குத் தோன்றியது. அதுகுறித்து, விஞ்ஞானி ஃபேய்ன்மேனுக்கு கடிதம் எழுதினார், 20 வயதே நிரம்பிய அபய்.

ஃபேய்ன்மேன் அந்தத் தவறை உணர்ந்தார். பெருந்தன்மையுடன் அதை ஒப்புக்கொண்ட அவர், அதுகுறித்து அபய்க்கு கடிதமும் எழுதினார்! அந்தக் கடிதம் அபயின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட கடிதமானது.

இளநிலைப் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தபோதே, ஈர்ப்புவிசை குறித்த மேற்படிப்பை அமெரிக்காவில் எங்கு படிக்கலாம் என்பதற்கான தேடலில் அபய் ஈடுபட்டார். மும்பையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் நூலகத்துக்குச் சென்று, மேற்படிப்பு வாய்ப்புகள் தொடர்பாக அவர் தகவல்களைத் தேடி வந்தார்.

அங்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பி.எஸ்சி. முடித்தவுடன், டெக்சாஸ் பல்கலைக்கழகத்துக்கும், மேரிலேண்ட் பல்கலைக்கழகத்துக்கும் அவர் விண்ணப்பித்தார். அபய் முதுநிலைப் பட்டம் பெறாததால் அவர் ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட இயலாது என்று மேரிலேண்ட் பல்கலைக்கழகம் நிராகரித்துவிட்டது. அதேசமயம், டெக்சாஸ் பல்கலைக்கழகம் அவரை ஏற்றுக்கொண்டது. அதற்கு ஃபேய்ன்மேன் அவருக்கு எழுதிய கடிதமும், டாடா நிறுவன விஞ்ஞானிகளின் பரிந்துரைகளும் உதவின.

அமெரிக்கா சென்ற அபய், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஈர்ப்புவிசையியல் பட்டப்படிப்பை முடித்தார். பிறகு சிகாகோ சென்ற அவர், சிகாகோ பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானி பாப் ராபர்ட் கெரோச் மேற்பார்வையில் பிஎச்.டி. ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றார் (1974).

அமெரிக்கா வாழ் இந்தியரும் நோபல் பரிசு பெற்ற விண்வெளி இயற்பியல் விஞ்ஞானியுமான சுப்பிரமணியன் சந்திரசேகரின் (1910- 1995) தொடர்பு அபய் அஷ்டேகரின் வாழ்வில் பெரும் தாக்கம் செலுத்தியது.

சந்திரசேகரின் ஆலோசனைப்படி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சிறிதுகாலம் அபய் பணிபுரிந்தார். பிறகு அவரது அறிவுரைப்படி சிகாகோ திரும்பினார்.

அப்போது, மாசாசூசெட்ஸிலுள்ள ஈர்ப்புவிசை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சர்வதேச ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு முதல்பரிசு பெற்றார் (1977).

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் ஈர்ப்புவிசையியல் பேராசிரியராக (1983- 1985) பணிபுரிந்த அபய், பிறகு அமெரிக்கா திரும்பினார்.

நியூயார்க்கிலுள்ள சைராகஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியர் (1985- 1988), சிறப்புப் பேராசிரியர் (1988- 1992), பிராங்ளின் இருக்கை பேராசிரியர் (1992- 1993) ஆகிய நிலைகளில் பணிபுரிந்த அபய், தொடர் ஆய்வுகளிலும் ஈடுபட்டார்.

1993-இல் பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழகத்தில் இணைந்த அபய், தற்போது அங்கு எபர்லி இருக்கை இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தவிர, அந்தப் பல்கலைக்கழகத்தின் ஈர்ப்புவிசை மற்றும் அண்டவியல் கல்வி நிறுவனத்தின் இயக்குநராகவும் அவர் உள்ளார்.

உலகளாவிய கௌரவங்கள்:

தற்போது அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கேயே அபய் அஷ்டேகர் வசித்து வருகிறார். அவரது குவான்டம் சுற்று ஈர்ப்பு விசை கோட்பாடு, பிரபஞ்ச இயக்கத்தை ஆராய புதிய பாதையைக் காட்டியுள்ளது.

தவிர, பிரபஞ்சத் தேற்றத்துக்குக் காரணமாகக் கருப்படும் கருந்துளையின் வெப்பச் சிதறலை (Entropy of Black hole) 1999-இல் கணக்கீடு செய்தது அஷ்டேகர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு. அந்தக் கணக்கீடு, 1974-இல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகின்ஸ் கணக்கீடு செய்து அறிவித்த வெப்பச் சிதறல் மதிப்புக்கு ஒத்துப்போகிறது.

விஞ்ஞானி அபய் அஷ்டேகர் உலகளாவிய பல கௌரவங்களைப் பெற்றுள்ளார். சர்வதேச பொது சார்பியல் கோட்பாட்டு சங்கத்தின் உறுப்பினராகவும் (1989- 1998) தலைவராகவும் (2007-2010) அபய் தேர்வு செய்யப்பட்டார்.

ஓஹியோ பல்கலைக்கழகத்தின் வருகைப் பேராசிரியர் (1989), வாஸர்ஸ்டோர்ம் விருது (1992), இந்திய அறிவியல் அகாதெமி (1996), தேசிய அறிவியல் அகாதெமி (1997) ஆகியவற்றின் உறுப்பினர், அமெரிக்க இயற்பியல் சங்கத்தின் உறுப்பினர் (1997), இந்திய அறிவியல் அகாதெமியின் ராமன் இருக்கை பேராசிரியர் (2004- 2005), பெய்ஜிங் பல்கலைக்கழத்தின் வருகைப் பேராசிரியர் (2007- 2012), அமெரிக்க தேசிய அறிவியல் அகாதெமி உறுப்பினர் (2016) உள்ளிட்ட பல கௌரவங்களை அபய் அஷ்டேகர் பெற்றுள்ளார்.

அபய் எழுதிய பல நூல்கள், கோட்பாட்டு இயற்பியலில் முக்கியமானவையாக விளங்குகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது,  ‘Handbook of Space-Time’ ஆகும். அவர் நிறுவிய குவான்டம் சுற்று ஈர்ப்பு விசையியல், கோட்பாட்டு இயற்பியலில் புதிய துறையாகவே வளர்ந்து வருகிறது.

தினமணி இளைஞர்மணி (23.05.2017)

 

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: