ரிசாட் செயற்கைக் கோளின் திட்ட இயக்குநர்

31 May

ந.வளர்மதி

உலக அரங்கில் இந்தியா முதன்மை பெற அறிவியல் துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கடும் உழைப்பை நல்கி வருகிறார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் 2015-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி ந.வளர்மதி.

கதிரலை உணர் கருவி (Radar) மூலமாக விண்ணிலிருந்து புவிப்பரப்பை படமெடுத்து அனுப்பவல்ல ரிசாட்-1 (RISAT-1) செயற்கைக் கோளை 2012, ஏப்ரல் 26-இல் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி – சி9 ராக்கெட் விண்ணில் நிலைநிறுத்தியது. அந்த ரிசாட்-1 செயற்கைக் கோளின் திட்ட இயக்குநராகப் பணிபுரிந்தவர் தமிழகத்தைச் சேர்ந்தவரான வளர்மதி.

1858 கி.கி எடையுள்ள ரிசாட்-1, ஒரு புவிநோக்கு செயற்கைக் கோள் ஆகும். இதன் திட்டச் செலவு ரூ.490 கோடி முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது என்ற சிறப்பு இதற்குண்டு. இதிலுள்ள செயற்கை துளை கதிரலை உணர் கருவி (Synthetic Aperture Radar), இரவிலும், கடும் பனிமூட்டத்திலும், மேகத் திரளை ஊடுருவியும் படமெடுக்கும் திறன் கொண்டது.

160 X 4 mbps தரவுகளைக் கையாளக் கூடியது இந்த செயற்கைக்கோள் 3m – 50m அலகு துல்லியமாக புவிவட்டப் பாதையிலிருந்து புவிப்பரப்பைப் படமெடுக்கும் கேமராக்கள் இதில் உள்ளன. எடுக்கப்படும் படங்களை செயற்கைக் கோளிலேயே அதிக அளவு சேமிக்கவும், விரிவுபடுத்திக் காணவும் இயலும்.

இந்த  ‘ரிசாட்-1’ செயற்கைக் கோள், நாட்டின் இயற்கைச் சீற்ற மேலாண்மைக்கும், வேளாண்மைத் திட்டமிடலுக்கும் உறுதுணையாக உள்ளது. வனப்பகுதி கண்காணிப்பு, வெள்ளச் சேதத் தடுப்பு, நெல் சாகுபடி பரப்பளவு கணக்கீடு ஆகிய பணிகளுக்கு உதவும் இந்த செயற்கைக் கோளை ராணுவப் பணிகளுக்கும் பயன்படுத்த முடியும். இதன் ஆயுள் 5 ஆண்டுகள்.

இதற்கு முந்தைய ரிசாட்-2 செயற்கைக் கோள், இஸ்ரேல் நாட்டுத் தயாரிப்பான ரேடாருடன் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இத்துறையில் இந்தியா தன்னிறைவு பெறும் இலக்குடன் தீட்டப்பட்ட ரிசாட்-1 செயற்கைக் கோள் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருந்து சாதனை படைத்தார் ந.வளர்மதி. அதன் மூலம் இஸ்ரோவில் திட்ட இயக்குநரான இரண்டாவது பெண் விஞ்ஞானி என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

அவருக்கு முன், ஜிசாட் (GSAT-12) செயற்கைக் கோள் திட்ட இயக்குநராக இருந்து சாதனை (2011) படைத்தவர் விஞ்ஞானி டி.கே. அனுராதா. இந்த பெண் விஞ்ஞானிகளின் அடியொற்றி, பலநூறு பெண்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பணிபுரிகிறார்கள்.

தமிழகத்தின் அரியலூரில், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் – ராமசீதா தம்பதியின் மகளாக 1960-இல் பிறந்தார் வளர்மதி.

அரியலூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் பள்ளிப் படிப்பை முடித்த வளர்மதி, அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி அறிமுக வகுப்பில் தேறினார். அடுத்து, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து மின்னியலில் பி.இ. பட்டம் பெற்றார்.

மேற்படிப்புக்கு சென்னை சென்ற வளர்மதி, அண்ணா பல்கலைக்கழகத்தில், மின்னணுவியல் மற்றும் தொடர்பியலில் எம்.இ. பட்டம் பெற்றார்.

படிப்பை முடித்தவுடன், டி.ஆர்.டி.ஓ.விலிருந்தும், இஸ்ரோவிலிருந்தும் ஒரே நேரத்தில் பணி வாய்ப்புகள் வளர்மதிக்கு வந்தன. இஸ்ரோ தனது சாதனைகளை நிகழ்த்தத் தொடங்கியிருந்த காலகட்டம் (1984) அது. இஸ்ரோவை வளர்மதி தேர்ந்தெடுத்தார்.

அந்நிறுவனத்தில் பல நிலைகளில் பணிபுரிந்த வளர்மதி, தனது கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறினார். இன்சாட்-2ஏ, ஐஆர்எஸ்-1சி, ஐஆர்எஸ்-1டி, டிஇஎஸ் செயற்கைக் கோள் திட்டப் பணிகளில் அவர் பணிபுரிந்தார்.

இதனிடையே வங்கி அதிகாரி வாசுதேவனுடன் திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயும் ஆனார். ஆயினும் வளர்மதியின் விஞ்ஞானப் பணிகளுக்கு குடும்பக் கடமைகள் தடையாக நிற்கவில்லை. தினசரி 18 மணிநேரம் உழைக்க வேண்டியிருந்த நிலைகளிலும்கூட குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால், இஸ்ரோ நிறுவனப் பணிகளை அவர் நிறைவேற்றினார்.

அதன் விளைவாக, செயற்கைக் கோள் தயாரிப்புத் திட்டத்தின் மேலாளராக வளர்மதி நியமிக்கப்பட்டார். (2002). ரிசாட்-1 திட்டம் தொடங்கப்பட்டபோது, அதன் திட்ட துணை இயக்குநரானார். 2011-இல் அதன் திட்ட இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். சுமார் பத்தாண்டுகால கடின உழைப்பால் உள்நாட்டிலேயே உருவான ரிசாட்-1 செயற்கைக் கோளின் வெற்றிப் பயணம் 2012-இல் சாத்தியமானது.

தற்போதும் இஸ்ரோ நிறுவனத்தில் வேறு சில திட்டப் பணிகளில் வளர்மதி ஈடுபட்டுள்ளார். “தீவிர ஈடுபாடும், கடின உழைப்பும், சக ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பும்தான் ரிசாட்-1 திட்ட வெற்றிக்குக் காரணம்” என்கிறார் வளர்மதி.

“பெண்களாலும் ஆண்களுக்கு நிகராக சாதனை நிகழ்த்த முடியும். அதற்கான ஆற்றல் பெண்களுக்கு இயல்பிலேயே உள்ளது” என்றும் அவர் கூறுகிறார்.

குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் கலாம் நினைவாக தமிழக அரசு நிறுவிய கலாம் விருதை, 2015-இல் முதல்முறையாக வளர்மதி 2015-இல் பெற்றார். மேலும் பல விருதுகளுக்கான அவரது சாதனைப் பயணம் தொடர்கிறது.

 

தினமணி இளைஞர்மணி (30.05.2017)

 

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: