இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி வல்லுநர்

6 Jun

வி.கே. சாரஸ்வத்

இந்தியாவின் ராணுவ ஆயுதத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே இயங்கும் நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி, அபிவிருத்தி அமைப்பு (Defence Research and Development Organaisation- DRDO). ஏவுகணைத் தொழில்நுட்பத்தை வல்லரசு நாடுகள் வழங்க மறுத்த நிலையில், இந்திய விஞ்ஞானிகள் அதை ஒரு சவாலாக ஏற்று, உள்நாட்டிலேயே வடிவமைத்த ஏவுகணைகளையும் நவீன ஆயுதங்களையும் தயாரித்து சாதனை படைத்தனர். அதன் பின்புலத்தில் இயங்கிய நிறுவனம் டிஆர்டிஓ.

இந்நிறுவனத்தில் சுமார் 42 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியவர், பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையில் நிபுணரான விஜய் குமார் சாரஸ்வத். சுருக்கமாக வி.கே. சாரஸ்வத். சிறந்த கண்டுபிடிப்பாளராகவும், தொலைநோக்குப் பார்வை கொண்ட தொழில்நுட்பவியலாளராகவும் அவர் போற்றப்படுகிறார்.

மத்தியப்பிரதேச மாநிலம், குவாலியரில், 1949, மே 25-ஆம் தேதி, மார்வாரி பிராமணக் குடும்பத்தில் பிறந்தார் விஜய்குமார் சாரஸ்வத்.

குவாலியரிலுள்ள மாதவ் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியலில் பி.இ. பட்டம் (1970) பெற்ற அவர், பெங்களூரு, இந்திய அறிவியல் கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார் (1972). ஹைதராபாத்திலுள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எரிசக்தி பொறியியலில் (Combustion Engineering) பிஎச்.டி. பட்டமும் (2000) அவர் பெற்றுள்ளார்.

முதுநிலைப் பட்டம் படித்து முடித்தவுடன், டிஆர்டிஓவில் சாரஸ்வத் பணியில் சேர்ந்தார். அதன் ஒரு துணை நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி அபிவிருத்தி ஆய்வகத்தில் (DRDL) அவரது பணி துவங்கியது.

டிஆர்டிஓவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அவர், நாட்டின் முதல் திரவ உந்துவிசை ராக்கெட் என்ஜினை (Liquid Propulsion Rocket Engine) வடிவமைத்ததில் (டெவில் திட்டம்) பெரும்பங்கு வகித்தார். முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட அந்த ராக்கெட் என்ஜினின் வெற்றி, இந்திய விண்வெளி ஆய்விலும், பாதுகாப்புக்கான ஏவுகணை தயாரிப்பிலும் புரட்சியை ஏற்படுத்தியது.

அதன் அடுத்த கட்டமாக பிருத்வி ஏவுகணை 1988-இல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அதையடுத்து, 1989, செப்டம்பரில், பிருத்வி, தனுஷ் ஏவுகணை அபிவிருத்தித் திட்டங்களின் திட்ட இயக்குநராக சாரஸ்வத் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இயங்கிய விஞ்ஞானிகளின் அயராத உழைப்பால், பிருத்வி ஏவுகணையின் மூன்று வகைகள் தயாராகின.

1,000 கி.கி. வெடிபொருளுடன் தரையிலிருந்து 150 கி.மீ. தொலைவுக்குப் பாய்ந்து தரையிலக்கைத் தாக்கும் பிருத்வி-1 (1994), விமானத்திலிருந்து 250 கி.கி. வெடிபொருளுடன் 350 கி.மீ. தொலைவுக்குப் பாய்ந்து இலக்கைத் தாக்கும் பிருத்வி-2 (1996), கப்பலிலிருந்து 250 கி.கி. வெடிபொருளுடன் 750 கி.மீ. தொலைவுக்குப் பாய்ந்து இலக்கைத் தாக்கும் பிருத்வி-3 (2004) ஆகியவை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன. இவை மூன்றும் தரைப்படை, விமானப்படை, கப்பற்படையில் சேர்க்கப்பட்டு, ராணுவத்தின் வலு அதிகரிக்கப்பட்டது.

இதனிடையே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிப்பில் டிஆர்டிஓ கவனம் செலுத்தியது. அதன் விளைவாக அக்னி வரிசை ஏவுகணைகள் தயாராகின. அத்திட்டத்திலும் முதன்மை வடிவமைப்பாளராக சாரஸ்வத் பணிபுரிந்தார்.

வளிமண்டல எல்லையைத் தாண்டி, புவியிலிருந்து 100 கி.மீ. உயரத்தில் (Exo and Endo Atmosphere) இயங்க வல்ல ராக்கெட்களைத் தயாரிப்பது சவாலான பணியாகும். நம்மிடமிருந்த குறைந்தபட்சத் தொழில்நுட்பம், கட்டுப்படுத்தப்பட்ட நிதியாதாரத்தைக் கொண்டு, இத்திட்டத்தை நிறைவேற்றியதில் அவரது பங்களிப்பு சிறப்பு வாய்ந்தது.

இதனிடையே டிஆர்டிஓவின் இமாரத் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும் (2001- 2005), வான்வெளிப் பாதுகாப்பு திட்ட இயக்குநராகவும் (1998- 2009) சாரஸ்வத் பொறுப்பு வகித்தார். 2005 முதல் 2009 வரை, ஏவுகணைகள் திட்டத்தின் ஆராய்ச்சி அபிவிருத்தி திட்ட தலைமைக் கட்டுப்பாட்டாளராக அவர் பணிபுரிந்தார்.

2009 செப்டம்பரில் டிஆர்டிஓ நிறுவனத்தின் தலைவராக சாரஸ்வத் பொறுப்பேற்றார். 2013 மே வரை அப்பதவியிலிருந்த அவர், பாதுகாப்பு வியூகம் மிகுந்த பல நடவடிக்கைகளை எடுத்தார். இக்காலகட்டத்தில், மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்புத் துறை செயலாளராகவும் அவர் பொறுப்பு வகித்தார்.

அக்னி-5 ஏவுகணை 2012, ஏப்ரல் 12-இல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டபோது, 8,000 கி.மீ. தொலைவுக்கு அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஏவுகணை கொண்ட நாடாக இந்தியா உருவானது. அதிவேக ஏவுகணையான செளர்யா (2011) தயாரிப்பிலும் சாரஸ்வத் ஈடுபட்டார்.

தேஜாஸ் இலகுரக போர் விமானத்திலில் இருந்தும், ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தும், அக்னி ஏவுகணையைச் செலுத்தத் தேவையான நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார். அதன்மூலமாக வெவ்வேறு தளங்களிலுருந்து வேறுபட்ட இலக்குகளைத் தாக்க வல்ல திறனை இந்திய ராணுவம் பெற்றது.

மேலும், சூரிய ஒளியில் மின்வசதி பெறும் பசுமை வீடுகள் திட்டம், மனிதக்கழிவுகளை உயிரி முறையில் நீர்க்கச் செய்யும் திட்டம், அவசரகால சத்துணவான ஆகார் திட்டம், வெடிபொருள் கண்டுபிடிப்புக் கருவிகள், டெங்கு- சிக்குன் குன்யா நோய்களைக் கண்டறியும் சாதனங்கள் ஆகியவற்றை சாரஸ்வத்தின் வழிகாட்டலில் டிஆர்டிஓ விஞ்ஞானிகள் உருவாக்கினர்.

சென்னை ஐஐடி-யில் புதிய கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சி மையம் நிறுவப்படவும், ராணுவ வீரர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கும் ‘மிலிட்’ மையம் அமைக்கப்படவும், கணினி நெருக்கடிகளை உடனுக்குடன் கையாளும்  ‘சிஇஆர்டி’ மையம் அமைக்கப்படவும் சாரஸ்வத்தின் முயற்சிகளே காரணமாகின.

கிர்கிஸ்தானில் உயிரி அறிவியல் ஆராய்ச்சி மையமும், ஹைதராபாத்தில் ஏரோஸ்பேஸ் சிறப்புப் பொருளாதார மண்டலமும், புதிய சர்வதேச விமான நிலையமும் அமைக்கப்பட சாரஸ்வத் முயற்சிகளை மேற்கொண்டார். அவரது வழிகாட்டலில், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்திலும், மும்பை ஐஐடியிலும் மேம்பட்ட எரிசக்தி ஆய்வு மையங்கள் துவங்கப்பட்டன.

2013 முதல் 2015 வரை ஹைதராபாத் ஐஐடியில் ஹோமி பாபா இருக்கை பேராசிரியராகப் பணிபுரிந்த சாரஸ்வத், புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

இந்திய தேசிய பொறியியல் அகாதெமி, இந்திய விண்வெளியியல் சங்கம், இந்திய பொறியாளர் கழகம், இந்திய கருவிமயமாக்கல் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளில் உறுப்பினராக உள்ள சாரஸ்வத், 18 பல்கலைக்கழகங்களின் கௌரவ முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

இந்திய அரசின் பத்மஸ்ரீ (1998), பத்மபூஷண் (2013), இந்திய அறிவியல் காங்கிரஸின் விக்ரம் சாராபாய் நினைவு விருது (2011), ராமகிருஷ்ணா- விவேகானந்தா சர்வதேச அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது (2011), டிஆர்டிஓவின் சிறந்த விஞ்ஞானி விருது (1987), அக்னி விருது (1989), இந்திய விண்வெளியியல் சங்கத்தின் ஆரியபட்டா விருது (2011) உள்ளிட்ட பல விருதுகளை வி.கே.சாரஸ்வத் பெற்றுள்ளார்.

முந்தைய திட்டக் குழுவுக்கு மாற்றாக தற்போதைய மத்திய அரசால் நிறுவப்பட்ட  ‘நீதி ஆயோக்’ கொள்கைக் குழு, இந்தியாவை வலுப்படுத்தத் தேவையான திட்டங்களை வகுத்து வருகிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி வல்லுநரான விஞ்ஞானி சாரஸ்வத்தின் அனுபவத்தைப் பயன்படுத்தும் வகையில், ‘நீதி ஆயோக்’ குழுவில் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டு, 2015 பிப்ரவரி முதல் வழிகாட்டி வருகிறார்.

“நாட்டை வலுப்படுத்த வேண்டுமானால், பாதுகாப்புத் துறையில் நாம் தன்னிறைவு அடைந்தாக வேண்டும். அதற்கு தனியார் துறையினரும் தளவாட உற்பத்தியில் களமிறங்குவது அவசியம்” என்கிறார் வி.கே.சாரஸ்வத்.

 

தினமணி இளைஞர்மணி (06.06.2017)

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: