கட்டணமா, கந்து வட்டியா? வங்கிகளின் அடாவடிக்கு தீர்வு என்ன?

19 Jun

அண்மைக்காலமாக, வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக கட்டணங்களை நிர்ணயிக்கும் போக்கு வங்கிகளிடையே அதிகரித்து வருகிறது. சிறப்பு சேவைகளை வழங்கவும், சேவைகளின் தரத்தை உயர்த்தவும் இந்தக் கட்டணங்கள் விதிக்கப்படுவதாக வங்கி நிர்வாகங்கள் கூறுகின்றன. இதனால் வங்கி நிர்வாகங்கள் மீதும், மத்திய அரசு மீதும் மக்களின் அதிருப்தி பெருகி வருகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு மேற்கொண்ட உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், நாடு முழுவதும் வங்கி மூலமான பணப் பரிமாற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை வங்கிக் கணக்கில் வராமலே கணக்கின்றி புழக்கத்தில் இருந்து வந்த ரொக்கப்பணம் வங்கி மூலமான பரிமாற்றத்துக்கு வர மத்திய அரசின் நடவடிக்கை வித்திட்டுள்ளது.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளின் போது பல சிரமங்கள் நேரிட்டபோதும், அவற்றைத் தாங்கிக் கொண்டு அரசுக்கு மக்கள் ஆதரவளித்தனர். நாட்டிலுள்ள கருப்புப் பணத்தை ஒழிக்க அந்த நடவடிக்கை தேவை என்றுணர்ந்த அவர்கள் ரொக்கப் பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோதும் அரசை ஆதரித்தனர்.

அரசின் அந்த நடவடிக்கை காரணமாக தற்போது சுமார் ரூ. 16.8 லட்சம் கோடி ரொக்கம் வங்கிக் கணக்குகளுக்குள் வந்துள்ளது. இதன்மூலமாக பல வங்கிகளின் நிதியிருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், வங்கி முறையை நம்பி தங்கள் பணத்தைச் செலுத்திய பலருக்கும் வங்கிகள் தற்போது தொந்தரவு தரத் துவங்கி இருக்கின்றன.

நாட்டிலுள்ள வங்கிகளைக் கண்காணித்து முறைப்படுத்துவது மத்திய ரிசர்வ் வங்கி. எனினும் வங்கிகளின் நிதிச் செயல்பாடுகளில் முறையற்ற தன்மை தெரியவரும்போது மட்டுமே ரிசர்வ் வங்கி சாட்டையைச் சுழற்றும்; வங்கிகளின் அன்றாடச் செயல்பாடுகளில் ரிசர்வ் வங்கி தலையிடுவதில்லை.

வங்கிகளின் சேவைக் கட்டணங்கள், குறைந்தபட்ச சேமிப்பு இருப்பு வரையறைகள், சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ள வங்கிகளுக்கு தன்னாட்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தன்னாட்சி அதிகாரத்தை பல வங்கிகள் தவறாகப் பயன்படுத்துகின்றன.

அண்மையில் நாட்டின் மாபெரும் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, மாதாந்திர சராசரி குறைந்தபட்ச சேமிப்பு இருப்பை அதிகரித்தது. பெரு நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5,000, மாகரங்களில் ரூ. 3,000, நகர்ப்புறங்களில் ரூ. 2,000, கிராமப்புறங்களில் ரூ. 1,000 என இத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைந்தபட்ச சராசரி கையிருப்பை வைத்திராத வாடிக்கையாளர்களுக்கு ரூ. 20 முதல் ரூ. 100 வரை அபராதக் கட்டணம் விதிக்கப்பட உள்ளதாகவும் ஸ்டேட் பாங்க் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மாபெரும் சுமையாகும்.

எந்த ஒரு வாடிக்கையாளரும் ரூ. 500 குறைந்தபட்ச இருப்பு வைத்திருந்தால் போதும் என்ற நிலை முன்னர் இருந்தது. பின்னர் அது ஆயிரம் ரூபாயாக அதிகரித்தது. எனினும் சில தனியார் வங்கிகள் இந்த இருப்புத் தொகையை அதிகரித்தன. அதன்மூலமாக வங்கிகளின் கையிருப்பு அதிகரித்து அவற்றின் பணச்சுழற்சிக்கு உதவின.

ஆனால், பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க்கும் தனியார் வங்கிகள் போலச் செயல்படுவதை எவ்வாறு ஏற்பது? தவிர, அரசு நடவடிக்கையால் தற்போது அனைத்து வங்கிகளின் நிதியிருப்பும் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் குறைந்தபட்ச சராசரி இருப்பை அதிகரிக்க வேண்டிய தேவை என்ன?

உண்மையில், ஸ்டேட் பாங்க் நிர்வாகத்தின் நோக்கம், வரவு- செலவு இல்லாமல் செயலற்றிருக்கும் வங்கிக் கணக்குகளைக் குறைப்பதாக இருக்கக் கூடும். அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கையாள விரும்பாத வங்கி ஊழியர்களின் நிர்பந்தம் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம். ஏற்கெனவே மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக வங்கி ஊழியர் சங்கங்கள் போராட்டங்களை அறிவித்ததை மறந்துவிட முடியாது.

இதேபோல, ஐஎம்பிஎஸ் முறையில் மின்னணு பணப்பரிமாற்றத்துக்கு சேவைக்கட்டணம், காசோலைக் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவை அந்த வங்கியின் வாடிக்கையாளர் சேவை குறித்த கொள்கையை கேள்விக்குறி ஆக்குகின்றன. தவிர, ரொக்கப் பரிமாற்றங்களைக் குறைக்க விரும்பும் மத்திய அரசின் நோக்கத்துக்கு தடையாகவும் இந்தச் செயல்பாடுகள் உள்ளன.

பழைய ரூ. 500, ரூ. 1000 மதிப்பு ரூபாய் நோட்டுகள் அனைத்தும் புழக்கத்திலிருந்து திடீரென அகற்றப்பட்டபோது அதற்கு இணையாக புதிய ரூபாய் நோட்டுகளை விடுவிக்க முடியவில்லை. அதனால் அப்போது பெரும் ரொக்கத் தட்டுப்பாடு நிலவியது. ஆனால், ஜனவரி இறுதிக்குப் பிறகு இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு 80 சதவிகித ஏடிஎம்கள் முழுமையாக இயங்கத் துவங்கின. ஆனால், அண்மைக்காலமாக, இந்த ஏடிஎம்கள் பல சரிவர இயங்குவதில்லை.

2016 டிசம்பரில் இருந்த நிலைக்கே பல ஏடிஎம்கள் சென்றுவிட்டன. டிசம்பரில் மூடப்பட்ட பல ஏடிஎம்களும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் மீண்டும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல இடங்களில் ஸ்டேட் பாங்க் ஏடிஎம்கள்கூட முழுமையாகச் செயல்படுவதில்லை.

மத்திய அரசின் முயற்சியால் உருவான ரூபே பற்று அட்டைகளை பல தனியார் ஏடிஎம்கள் நிராகரிப்பதையும் காண முடிகிறது. இது மத்திய அரசு மீதான அதிருப்தியாக வடிவெடுத்து வருகிறது. ஆனால் வங்கி நிர்வாகங்கள் இதுகுறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ரிசர்வ் வங்கியும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதில்லை.

அனைத்து நிதிசார் நடவடிக்கைகளும் ரொக்க முறையில் அல்லாது வங்கிகள் மூலமாகவும் மின்னணுப் பரிமாற்ற முறையிலும் நடைபெற வேண்டும்; அதுவே கறுப்புப்பணப் புழக்கத்தைக் குறைக்கும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ளது. அதற்கு உறுதுணை புரிய வேண்டிய வங்கிகளின் செயல்பாடோ இதற்கு நேர்மாறாக இருக்கிறது.

வங்கிகளின் இந்தச் செயல்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் வங்கிகள் மீது நம்பிக்கை இழக்க வாய்ப்புண்டு. சேவைகளி மீதான அதீத கட்டணங்களும் வாடிக்கையாளருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறைகளும் கந்துவட்டிக்காரர்களை நோக்கியே வாடிக்கையாளர்களைத் தள்ளும். இதை வங்கி நிர்வாகங்கள் உணர வேண்டும்.

 

வங்கிகளை மாற்றும் காலம் வருகிறது!

அலைபேசி எண்ணை மாற்றாமலே அலைபேசி சேவை நிறுவனங்களை வாடிக்கையாளர்கள் மாற்றிக் கொள்ளும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. இதன்படி, தங்களுக்கு திருப்தி அளிக்காத சேவை நிறுவனத்திலிருந்து பிடித்தமான வேறொரு நிறுவனத்துக்கு மாற முடிகிறது. இதேபோல, வங்கி வாடிக்கையாளர்களும் தங்கள் சேமிப்பு வங்கி கணக்கு எண்ணை மாற்றாமலே, வேறு வங்கிகளுக்கு மாறும் காலம் விரைவில் வர உள்ளது.

எஸ்.எஸ்.முந்த்ரா

தற்போது இந்தத் திட்டம் யோசனை வடிவிலேயே இருந்தாலும், மாறிவரும் அதிநவீனத் தொழில்நுட்பங்களால், இந்த வசதி விரைவில் சாத்தியமாகும் வாய்ப்புகள் தென்படுகின்றன. அனைத்து வங்கிக் கணக்கும் தற்போது மின்நணு மயமாக்கப்பட்டு விட்டன. ஆதார், பான், அலைபேசி எண் இணைப்புகளால் வங்கி நடைமுறைகள் எளிதாகிவிட்டன. வங்கிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே பணப் பரிமாற்றங்களை வாடிக்கையாளர்களால் செய்ய முடிகிறது. எனவே, வங்கித் துறையின் அடுத்தகட்ட மைல்கல்லாக, வங்கிகளை மாற்றிக்கொள்ளும் வசதி விரைவில் கிடைக்கும். அப்போது, தங்களுக்கு முழுமையான திருப்தி அளிக்காத எந்த வங்கியும் வாடிக்கையாளரைத் தக்கவைக்க முடியாது.

இந்த யோசனையை இரண்டாண்டுகளுக்கு முன்னர் முன்வைத்தார், ரிசர்வ் வங்கியின் துணை இயக்குநர் எஸ்.எஸ்.முந்த்ரா. வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் தரும் வகையில் செயல்படக் கூடாது என்கிறார் அவர். அவரது கருத்துகள் இதோ…

  • வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு எவ்வளவு வைத்திருக்க வேண்டும் என்பதையும், சிறப்பு சேவைகளுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிப்பது என்பதையும் தீர்மானிக்கும் சுதந்திரம், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த உரிமையை, சாதாரண வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க மறுப்பதற்கான வாய்ப்பாகக் கருதக் கூடாது.
  • வங்கிகள் விதிக்கும் கட்டணங்கள் நியாயமானதாகவும், வாடிக்கையாளர்களால் ஏற்கத் தக்கதாகவும் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் அவை அமைந்துவிடக் கூடாது.
  • வங்கிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அமைப்புக்கு (Banking Ombudsman) சமீபகாலமாக அதிக அளவில் புகார்கள் வந்துள்ளன. இந்த அமைப்பு 1995-இல் நிறுவப்பட்டது. அன்றுமுதல் இன்று வரையிலான காலகட்டத்தில், வங்கிகள் மீதான புகார்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியுள்ளது (ஜூலை 2015- ஜூன் 2016) இந்த ஆண்டுதான்.
  • வங்கி விதிகள் மற்றும் தர நெறிமுறைகளை (BCSBI) மீறி வங்கி நிர்வாகங்கள் செயல்பட்டதாக வந்த புகார்களின் சதவிகிதம் 2010-11-இல் 24 %. அது 2016-16-இல் 34 % ஆக அதிகரித்துள்ளது.
  • ஓய்வூதியம் பெறுவோர், தவிப்புக்குள்ளாவதும், காசோலை பரிமாற்றங்களில் குழப்பம் நேர்வதும், வாடிக்கையாளர் (KYC) ஆவணங்களில் பிழைகள் மிகுவதும் பல புகார்களுக்கு காரணமாக உள்ளன. இந்நிலையில், வங்கி சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்துவது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்.
  • நவீனத் தொழில்நுட்பங்களால் வங்கி செயல்பாடுகள் மாற்றம் பெற்றுள்ளன. எனவே, வங்கிகளை மாற்றிக்கொள்ளும் வசதி (Account Number Portability) விரைவில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். அப்போது தனது வங்கிக் கிளைக்கு வராமலே வாடிக்கையாளர்கள் வேறு வங்கிக்கு சத்தமின்றி மாறிவிடும் காட்சிகளைக் காண முடியும். அதற்குள் வங்கிகள் தங்கள் போக்கில் மாற்றம் கொண்டுவருவது அவசியம் என்கிறார் எஸ்.எஸ்.முந்த்ரா.

 

தினமணி (வர்த்தகம் சிறப்புப் பக்கம்)- 19.06.2017

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: