பொது சார்பியல் கோட்பாட்டை இந்தியாவில் வளர்த்தவர்

20 Jun

பி.சி.வைத்யா

ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடும் சிறப்பு சார்பியல் கோட்பாடும்,  சென்ற நூற்றாண்டில் அறிவியல் உலகில் புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திட்டவை. அண்டவியலில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான கருதுகோள்கள் அவை. அவற்றில் பொது சார்பியல் கோட்பாட்டின் இந்தியப் பிரதிநிதி போலவே இயங்கினார், இங்குள்ள கணிதப் பேராசிரியர் ஒருவர். அது மட்டுமல்ல, பொது சார்பியல் கோட்பாட்டின் (General  Theory of Relativity)  சிக்கலான சமன்பாடுகளை விடுவிப்பதற்கான புதிய வழிமுறையையும் அவர் உருவாக்கினார். அவர், பேராசிரியர் பிரஹலாத் சுனிலால் வைத்யா. சுருக்கமாக பி.சி.வைத்யா என்று அழைக்கப்படுகிறார்.

பி.சி. வைத்யாவின் கண்டுபிடிப்பு,  ‘வைத்யா மெட்ரிக்’ என்று அவர் பெயரிலேயே உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. கணிதப் பேராசிரியர், கோட்பாட்டு இயற்பியல் விஞ்ஞானி, கல்வியாளர், சுதந்திரப் போராட்ட வீரர், எழுத்தாளர், காந்தியவாதி எனப் பன்முகங்களைக் கொண்டு, மனித சக்தியின் எல்லையற்ற தன்மைக்கு நிரூபணமாக விளங்கியவர் அவர்.

குஜராத் மாநிலத்தின் ஜூனாகாட் மாவட்ட்த்தில், ஷாபூரில் 1918, மே 23-இல் பிரஹலாத் சுனிலால் வைத்யா பிறந்தார். பவநகரில் ஆரம்பக்கல்வி கற்ற பின், மும்பை யூசுப் இஸ்மாயில் கல்லூரியில் கல்லூரி புதுமுக வகுப்பை முடித்தார். மும்பையில் இருந்த ராயல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்லூரியில் சேர்ந்து கணிதம் மற்றும் இயற்பியலில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். அங்கேயே, பயன்பாட்டு கணிதத்தில் எம்.எஸ்சி. பட்டமும் பெற்றார்.

படிப்பை முடித்தபின் அதே கல்லூரியில் இளநில மாணவர்களுக்கு திரிகோணவியலும் எண்ணியலும் கற்பித்து வந்தார். ஆனால், அந்தக் கல்லூரியின் நிர்வாகத்தை புனித சேவியர் கல்லூரி கையகப்படுத்தியபோது, நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1941-இல் அங்கிருந்து பணிவிலகினார்.

பி.சி.வைத்யா சுதந்திரப் போராட்ட ஆர்வலர். மகாத்மா காந்தியின் கருத்துகளால் கவரப்பட்டு அஹிம்சை வழியில் போராட்டங்களை நடத்தியவர். சக சுதந்திரப் போராட்ட வீரர் பிருத்வி சிங் ஆசாத் உடன் இணைந்து, அஹிம்சக் வியாயம் சங்கம் சார்பில் ஓர் உடற்பயிற்சிக் கல்லூரியை அவர் அதே ஆண்டு நிறுவினார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கும் இளைஞர்கள் நல்ல உடல்திறனுடன் போராட வேண்டும் என்பதற்காகவே அந்தக் கல்லூரி செயல்பட்டது. இதனிடையே, கணிதப் பாடத்தை தனிக்கல்வியாக மாணவர்களுக்கு அளித்து வந்தார்.

பிரபல விண்வெளி இயற்பியல் விஞ்ஞானியான ஜெயந்த் நார்லிக்கரின் தந்தை வி.வி.நார்லிக்கர் அப்போது காசி ஹிந்து பலகலைக்கழகத்தில் பொது சார்பியல் கோட்பாட்டுத் துறையில் பேராசியராகப் பணிபுரிந்து வந்தார். அதையறிந்த வைத்யா, அவருடன் இணைந்து பொது சார்பியலை ஆராய விருப்பம் தெரிவித்து 1942-இல் கடிதம் எழுதினார். வி.வி.நார்லிக்கர் அதை மிகுந்த மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். அதன்படி, தனது மனைவி, கைக்குழந்தை குமுத் ஆகியோருடன் வாராணசி பயணமானார் வைத்யா.

அங்கு நார்லிக்கருடன் இணைந்து பத்து மாதங்கள் தீவிரமான ஆய்வுகளில் வைத்யா ஈடுபட்டார். ஆனால், அவரது குடும்பத்தைப் பராமரிக்க உரிய ஊதிய  வரவு இல்லாததால், அங்கிருந்து மீண்டும் குஜராத் திரும்பினார் வைத்யா.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அப்போது மகாத்மா காந்தி துவங்கி இருந்தார். அவரது காலவரையற்ற உண்ணாவிரதம் காரணமாகவும், இரண்டாம உலகப் போர்ச் சூழலாலும் எங்கும் குழப்பம் மிகுந்திருந்தது. அப்போதுதான், வெளிநேர வடிவியல் (SpaceTime Geomtery)  என்ற கோட்பாட்டு இயற்பியல் சிந்தனை அவரது மூளையில் மின்னலாகப் பளிச்சிட்டது. அதை தொடர்ந்து ஆராய்ந்த அவர், ஒரு புதிய கருதுகோளை உருவாக்கினார். அதுவே பின்னாளில் ‘வைத்யா மெட்ரிக்’  (Vaidya Metric) என்று புகழ்பெற்ற கோட்பாடாகும். அதை அவர் கண்டறிந்தபோது அவருக்கு வயது 24 மட்டுமே!

அதன் பிறகு சூரத், ராஜ்கோட், மும்பை ஆகிய இடங்களில் பல கல்வி நிறுவனங்களில் 1948 வரை கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1947-48-இல் சில மாதங்கள் மும்பையிலுள்ள டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நாட்டின் அணுவியல் தந்தையான ஹோமி பாபாவுடன் இணைந்து பணிபுரிந்தார். குடும்பத்துக்கு குடியிருப்பு வசதி அளிக்க முடியாததால் அங்கிருந்தும் வெளியேறி, மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பினார்.

1947 முதல் 1971 வரை, வல்லப நகரிலுள்ள வி.பி.கல்லூரி, அகமதாபாத்திலுள்ள குஜராத் கல்லூரி, விசா நகரிலுள்ள எம்.என்.கல்லூரி, குஜராத் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பிரிவு ஆகியவற்றில் வைத்யா கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இதனிடையே, 1949-இல் கணிதத்தில் பிஹெச்.டி. பட்டம் பெற்றார்.

அப்போது மும்பை பலகலைக்கழகத்தின் ஸ்பிரிங்கர் ஆராய்ச்சி உதவித்தொகை வைத்யாவுக்குக் கிடைத்தது. அதன் அடிப்படையில், தனது கண்டுபிடிப்பான ‘வைத்யா மெட்ரிக்’ அடிப்படையில் ஓர் ஆய்வறிக்கையைத் தயாரித்து அமெரிக்க விஞ்ஞானி ஓபன் ஹீமருக்கு அனுப்பி வைத்தார். அதைப் பாராட்டிய அவர் அமெரிக்க இயற்பியல் சங்கத்தின் சஞ்சிகைக்கு அதை அனுப்பி வைத்தார். அந்த ஆய்வுக் கட்டுரை 1951-இல் வெளியானது. அப்போதே உலக அளவில் அது பரவலான பாராட்டுகளைப் பெற்றது.

ஈர்ப்பு விசை தொடர்பான ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டின் சிக்கலான சமன்பாடுகளுக்கு அதில் நிறைவான தீர்வு அளிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னரே பலர் இந்தத் திசையில் பணிபுரிந்திருந்தாலும், வைத்யாவின் புதிய அணுகுமுறை மாறுபட்டதாக இருந்தது.

ஐன்ஸ்டீனின் சமன்பாடுகளுக்கு கணிதம், ரிமேனியன் வடிவியல் ஆகியவற்றால் தீர்வு காணலாம். ஏற்கனவே ‘ஸ்க்வார்னஸ்ட் சொல்யூசன்ஸ்’ இத்துறையில் இருந்தது. கோள வடிவிலான விண்மீன்களின் வடிவியலை அது விளக்கியது. ஆனால் அந்த முறை, விண்மீன்களின் வெளிப்புறத்தை வெற்றிடமாகக் கருதியது.

இந்நிலையில், விண்மீன்களின் வெளிவட்டாரக் கதிர்வீச்சுக்கும் ஈர்ப்பு விசைக்கும் தொடர்புண்டு என்றார் வைத்யா. விண்மீன்களின் கதிர்வீச்சுக்கும் குறிப்பிடத்தக்க அளவு ஈர்ப்புவிசை உண்டு என்றார் அவர். அதை நிரூபிக்கும் விதமாக அவர் தனது  ‘வைத்யா மெட்ரிக்’ கருதுகோளைக் கொண்டு, ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் சமன்பாடுகளுக்கு தீர்வு கண்டார். அதை விஞ்ஞான உலகம் ஏற்றது. அன்று முதல் இன்று வரை, பொது சார்பியல் கோட்பாடு குறித்த ஆராய்ச்சிகளின் அடித்தளமாக வைத்யாவின் கருதுகோள் விளங்கி வருகிறது. அதனால் அவர் உலக அளவில் பிரபலமானார்.

கல்வியாளர்:

1969-இல் .வி.வி.நார்லிக்கரின் அறுபதாவது ஜெயந்தி கொண்டாடப்பட்ட்து. அப்போது சார்பியல் கோட்பாட்டு விஞ்ஞானிகள் சங்கமாக இணைந்து ஆய்வுகளில் ஈடுபட வேண்டும் என்று வைத்யா வேண்டுகோள் விடுத்தார். அதன் விளைவாக பொது சார்பியல் மற்றும் ஈர்ப்புவிசைக்கான இந்திய கூட்டமைப்பு (Indian Association for General Relativity and Gravitaation- IAGRG ) உருவானது. அதன் நிறுவனத் தலைவராக நார்லிக்கரும் நிறுவன உறுப்பினராக வைத்யாவும் பொறுப்பேற்றனர்.  இன்றும் அந்த அமைப்பு சிறப்பாக இயங்கி வருகிறது. அங்கு பயிற்சி பெற்ற பல விஞ்ஞானிகள் உலக அளவில் பல நாடுகளில் தங்கள் திறைமையை நிரூபித்து வருகிறார்கள்.

1960-களில், குஜராத்தைச் சேர்ந்த சக விஞ்ஞானி விக்ரம் சாராபாயை வைத்யா சந்தித்தார். அப்போது அகமதாபாத்தில் கணித ஆய்வகம் அமைக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தார். அதையேற்று சாராபாய் அங்கு அடிக்கல் நாட்டினார். அந்நிறுவனம் இன்று, விக்ரம் சாராபாய் சமுதாய அறிவியல் மையமாக இயங்கி வருகிறது.

1971-இல் குஜராத் மாநில அரசுதப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக வைத்யா நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திலும் 1977-78-இல் அவர் பணிபுரிந்தார்.

1978- 1980-இல் குஜராத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வைத்யா பணிபுரிந்தார். அப்போது கணிதப் பாடத்தை எளிமையாக மாணவர்கள் புரிந்துகொள்ளச் செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டார். அச்சமயத்தில் அவர் கேட்ட கேள்வி அவரது சிறப்பான இயல்பை வெளிப்படுத்தியது: “நான்தான் நாட்டில் அதிக ஊதியம் பெறும் கணிதப் பேராசிரியர். எனது பணியை எம்.எஸ்சி. மாணவர்களுக்கு கணிதம் கற்பிப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டுமா?”

அப்போது கணித ஆசிரியர்களை மேம்படுத்தும் திட்டங்களையும் பயிற்சி வகுப்புகளையும் அவர் அறிமுகப்படுத்தினார். சூரத்தில் உள்ள காந்தி வித்யாபீடம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் வைத்யா பணிபுரிந்துள்ளார்.

பல உலக நாடுகளுக்கு பயணம் செய்து கணிதம் வளர்த்தவர் வைத்யா. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாண பல்கலைக்கழகம், பிரிட்டனின் லண்டன் பலகலைக்கழகம், யார்க் பல்கலைக்கழகம், நியூகேஸ்டில் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகைப் பேராசிரியராக (1964- 1973) வைத்யா செயல்பட்டார். அயர்லாந்தின் டூப்ளின் அறிவியல் கழகத்திலும், இத்தாலியின் கோட்பாட்டு இயற்பியலுக்கான சர்வதேச மையத்திலும் வருகைதரு விஞ்ஞானியாகவும் அவர் இயங்கினார்.

பொது சர்பியல் கோட்பாடு தொடர்பான ஆறாவது சர்வதேச மாநாடு கோபன்ஹேகன் நகரில் நடைபெற்றது அதில் அவர் கலந்துகொண்டார். பாரிசில் அவர் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவு பெரும் வரவேற்பைப் பெற்றது.

1964-இல் குஜராத் கணித மண்டலத்தை நிறுவிய வைத்யா, அதன் தலைவராக 1968 வரை பொறுப்பேற்று வழிநடத்தினார். கணிதத்தை சமுதாயத்தின் அனைத்து நிலைகளுக்கும் பரவச் செய்வதே அதன் இலக்காக இருந்தது. கணிதம் நமது பாரம்பரியக் கலாசாரத்தின் இன்றியமையாத ஒரு பகுதி என்று அவர் கூறிவந்தார்.

எழுத்தாளர்:

வைத்யா சிறந்த எழுத்தாளரும் ஆவார். தனது கல்வி அனுபவங்களை  ‘சாக்கட்டியும் துடைப்பானும்’ என்ற தலைப்பில் (Chalk and Duster) அவர் எழுதியிருக்கிறார்.ஓர் ஆசிரியர் எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கான தூண்டுதல்கள் பல அதில் உள்ளன.

கணிதத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் அவர் 1960-களில் துவக்கிய ‘சுகணிதம்’ என்ற கணிதவியல் சஞ்சிகை, பல்லாயிரம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் மீது ஈர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஸ்விட்சர்லாந்திலிருந்து வெளிவரும் சர்வதேச அறிவியல் சஞ்சிகையான  ‘General Relativity and Gravitation’  இதழின் நிறுவன உறுப்பினராக வைத்யா இயங்கியுள்ளார்.

‘அகில பிரமாண்டம், தசாப்த முறை-ஏன்? தாத்தாவின் அறிவியல் கதைகள், எது நவீன கணிதம்? கணித தரிசனம்’ ஆகிய நூல்களை குஜராத்தி மொழியில் வைத்யா எழுதியுள்ளார்.  தனது வெளிநாட்டுப் பயண அனுபவங்களை  ‘அமெரிக்காவும் நானும்’ என்ற தலைப்பில் நூலாக அவர் வெளியிட்டார். 30-க்கு மேற்பட்ட சர்வதேச ஆய்வுக் கட்டுரைகளையும் வைத்யா எழுதியுள்ளார்.

இந்திய அறிவியல் அகாதெமி, இந்திய தேசிய அறிவியல் அகாதெமி, கொல்கத்தா கணிதவியல் சங்கம், பலகலைக்கழகங்களிடையிலான விண்வெளியியல் உயராய்வு மையம் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்த வைத்யா, இந்திய கணிதவியல் சங்கத்தில் தலைவராகவும் (1976-77), கணித பாடத் திட்டத்தை மாற்றி அமைக்கும் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

காந்தியவாதியான பி.சி.வைத்யா, மிகவும் எளிமையானவர். பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அன்றே, தனக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்ட காரை மறுத்து சொந்த மிதிவண்டியில் வீடு திரும்பியவர் அவர்; அதன் பிறகும் பல ஆண்டுகள் மிதிவண்டியிலேயே பல்கலைக்கழகம் வந்து மானவர்களுக்கு சுய விருப்பத்துடன் பாடம் நடத்தியவர்.

காந்தி குலாய், கணிதப் புத்தகங்கள், மெல்லிய புன்னகை- ஆகியவற்றை அடையாளமாகக் கொண்டு இலங்கிய பி.சி.வைத்யா, முதுமை நோய்கள் காரணமாக வாழ்வின் இறுதிக்காலத்தில் வீட்டிலேயே முடங்கினார். அகமதாபாத்தின் ஷ்ரத்தா நகரில் 2010, மார்ச் 12-இல் அவர் காலமானார். அவரது 4 மகள்களும் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.

கணிதவியல் மேதை பி.சி.வைத்யாவின் வாழ்வே ஒரு தவம் போல விளங்கியது. எந்த ஆசையும் அற்ற அவரை நாடி பல அரசுப் பொறுப்புகள் வந்தன. அவற்றிலும், மாணவர்களுக்கு கணிதப் பாடத்தை விரும்பும் வகையில் கொண்டுசேர்ப்பதையே தலையாய கடமையாக அவர் கருதினார். அவரது பெயரில் அமைந்த பொது சார்பியல் கோட்பாட்டுக் கருதுகோள், உலக விஞ்ஞானிகளை இன்றும் வழிநடத்துகிறது.

 

தினமணி இளைஞர் மணி (20.06.2017)

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: