வானொலி இயற்பியல் ஆய்வின் முன்னோடி

4 Jul

சிசிர் குமார் மித்ரா

இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகரமான முதல் கண்டுபிடிப்பு வானொலி. மின்காந்த அலைகள் மூலமாக ஒலியைக் கடத்தி வேறிடத்தில் கேட்கச் செய்ய முடியும் என்று 1901-இல் நிரூபித்தார் இத்தாலிய விஞ்ஞானி மார்கோனி. அதற்கு முன்னதாக, 1894-இல் வானொலி அலைகளின் இயக்கம் குறித்த திட்டவட்டமான முடிவுகளை செயல்முறையுடன் நிருபித்திருந்தார் இந்திய விஞ்ஞானி ஜெகதீச சந்திர போஸ். போஸின் அடியொற்றி, இந்தியாவின் வானொலி இயற்பியல் ஆராய்ச்சியை வலுப்படுத்தியவர் சிசிர் குமார் மித்ரா.  

பிரிக்கப்படாத வங்க மாகாணத்தில், கொல்கத்தாவில், 1890, அக். 24-இல் பிறந்தார் சிசிர் குமார் மித்ரா. அவரது தந்தை ஜெயகிருஷ்ணா, ஆசிரியர். தாய் சரத்குமாரி, மருத்துவர். சூடான காற்றால் இயங்கும் பலூன் பறப்பதை சிறு வயதில் பார்த்த சிசிர் குமாருக்கு அறிவியல் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதுவே  இந்தியாவின் முன்னோடி விஞ்ஞானிகளில் ஒருவராக அவரை மாற்றியது.

சிசிர் சிறுவனாக இருந்தபோது அவரது குடும்பம் பாகல்பூருக்கு இடம் பெயர்ந்தது. அங்கு அவரது பள்ளிக்கல்வி கழிந்தது. இந்நிலையில் அவரது தந்தையின் திடீர் மறைவு, குடும்பத்தை நிர்கதியாக்கியது. ஆயினும், அவரது தாய், சிசிரின் உயர்கல்வியில் கவனம் செலுத்தினார்.

கொல்கத்தா பலகலைக்கழகத்தின் மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பயின்ற அவர், இயற்பியலில் பி.எஸ்சி. பட்டமும் (1912), எம்.எஸ்சி. பட்டமும் (1914) பெற்றார். அங்கு அவர் பிரபல விஞ்ஞானிகள் பிரபுல்ல சந்திர ராய், ஜெகதீச சந்திர போஸ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

சில மாதங்கள் போஸின் ஆய்வுக் கூடத்தில் சிசிர் உடன் பணியாற்றினார். ஆசிரியர் தொழிலுக்கான எஃப்.ஏ. படிப்பிலும் தேறிய அவர், குடும்பச் சூழல் காரணமாக, கொல்கத்தாவில் உள்ள பங்குரா கிறிஸ்தவக் கல்லூரியில் விரிவுரையாளராக 4 ஆண்டுகள் பணி புரிந்தார். 1916-இல் லீலாவதி தேவியை அவர் மணம் புரிந்தார்.

இதனிடையே, புகழ்பெற்ற கல்வியாளரான ஆசுதோஷ் முகர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது, அங்கு முதுநிலை அறிவியல் ஆராய்ச்சிப் படிப்புக்கான பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியைத் துவக்கினார். அதன் முதல் அணியில் சேருமாறு சிசிருக்கு ஆசுதோஷ் அழைப்பு விடுத்தார். அதையேற்று 1916-இல் அங்கு சென்ற அவர், ஆய்வுப் படிப்பில் சேர்ந்தார். அங்கு இயற்பியல் விஞ்ஞானி சி.வெங்கட்ராமன் பேராசிரியராக இருந்தார். அவரது வழிகாட்டலில் ஒலி விலகல், ஒளியின் விளிம்பு விளைவு ஆகியவை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சிசிர் குமார், 1919-இல் டி.எஸ்சி. பட்டம் பெற்றார்.

பிறகு மேற்படிப்புக்காக ஃபிரான்ஸ் சென்ற சிசிர் குமார், சோர்போன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானி சார்லஸ் ஃபேப்ரியின் ஆய்வுக்குழுவில் இணைந்து மின்காந்த அலைகளின் அலைநீளம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார். அதன் அடிப்படையில் 1923-இல் இரண்டாவது டி.எஸ்சி. பட்டத்தையும் அவர் பெற்றார்.

பிறகு ரேடியம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானி மேரி கியூரியின் ஆய்வகத்தில் சிறிதுகாலம் இணைந்து, அவருடன் ஆய்வுகளில் ஈடுபட்டார் சிசிர். அதையடுத்து நான்சி பகலைக்கழகத்தில் விஞ்ஞானி கட்டன் உடன் இணைந்து வானொலி வால்வுகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அப்போது அவரது கவனம், வானொலி இயற்பியலில் திரும்பியது. ஜெகதீஸ சந்திர போஸின் தொடர்பாலும், அவரது கண்டுபிடிப்புகள் மீதான ஆர்வத்தாலும், தொலைதொடர்பு இயற்பியலில் (Radio Physics) அவரது ஆர்வம் திசை மாறியது.

1923-இல் நாடு திரும்பிய சிசிர் குமார் மித்ரா, கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கைரா இருக்கைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு சி.வி.ராமன், டி.எம்.போஸ் ஆகியோருடன் சேர்ந்து முதுநிலை இயற்பியல் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வந்தார்.

கல்லூரியில் பாடம் நடத்துவதுடன், கம்பியில்லா தகவல் தொடர்புக்கான ஆய்வகத்தை அங்கு நிறுவும் முயற்சியிலும் அவர் தொடர்ந்து ஈடுபட்டார். அதன் விளைவாக, 1923-இல் அங்கு கம்பியில்லா தொடர்பு ஆய்வகம் நிறுவப்பட்டது.  மேலும், வளிமண்டல ஆய்வுகளிலும் பல்கலைக்கழகம் ஈடுபட அவர் தூண்டுகோலாக இருந்தார். சிசிர் குமாரின் முயற்சியால் எம்.எஸ்சி. மாணவர்களுக்கு வயர்லெஸ் தொழில்நுட்பம் என்ற சிறப்புப் பாடம் கிடைத்தது.

அடுத்து இந்தியாவில் வானொலி ஒலிபரப்புக்கான முதல் டிரான்ஸ்மீட்டரை (2CZ) 1925-இல் சிசிர் குமார் கொல்கத்தாவில் நிறுவினார். பின்னாளில் 1927-இல் இந்திய ஒலிபரப்பு ஸ்தாபனம் அரசால் நிறுவப்பட்டபோது அந்த மையம் மூடப்பட்டது.

சிசிர் குமாரின் முயற்சியால் அயனி மண்டல  (Ionosphere)  ஆராய்ச்சித் துறை 1930-இல் கொல்கத்தாவில் நிறுவப்பட்டது. ஆசியாவிலேயெ அதுதான் அயனி மண்டல ஆய்வில் முதல் ஆய்வகமாகும். கொல்கத்தா நகர் மீதான அயனி மண்டல வரைபடத்தையும் அவர் தயாரித்தார்.

புவியிலிருந்து 60 கி.மீ. உயரம் முதல் 1,000 கிமீ. உயரம் வரையுள்ள உயர் வளிமண்டலம், அயனி மண்டலம் எனப்படுகிறது. வானொலி இயக்கத்தில் பேரிடம் வகிப்பது, இந்த மண்டலம் குறித்து மித்ரா கண்டறிந்த தகவல்களே. செயற்கைக்கோள்களின் இயக்கத்துக்கான அடிப்படையையும் அத்தகவல்கள்  கொண்டுள்ளன.

அயனிமண்டலத்தைப் பற்றி சிசிர் குமார் மித்ரா கண்டறிந்த கருத்துகள் இயற்பியல் உலகில் புகழ்பெற்றவை. அயனிமண்டலத்திலுள்ள  ‘இ’  அடுக்கு விஞ்ஞானிகளுக்கு புதிராகவே இருந்து வந்தது. சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்வீச்சே இந்த ‘இ’ அடுக்கு உருவாகக் காரணம் என்று மித்ரா கண்டுபிடித்தார்.

இரவில் வானத்தைப் பார்க்கும்போது அது அடர் கருமையாக இல்லாமல் சற்று வெளிர் நிறமாக்க் கானப்படும்.  அதற்கு இரவு-வான ஒளிர்வு என்று பெயர். அயனிமண்டலத்திலுள்ள ’எஃப்’  அடுக்கிலுள்ள அயனிகள் உமிழும் ஒளியினால்தான் இந்த ஒளிர்வு ஏற்படுகிறது என்பதை மித்ரா கண்டறிந்தார்.

சர்வதேச அளவிலான விஞ்ஞானிகள் மாநாட்டில் கலந்துகொண்ட முதல் இந்திய விஞ்ஞானி மித்ரா தான். 1932-இல் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச துருவ ஆண்டு மாநாட்டில் மித்ரா பங்கேற்று, அயனி மண்டலம் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார். 1942-இல் இந்திய அரசு உதவியுடன் தேசிய வானொலி ஆராய்ச்சிக் குழுவை மித்ரா அமைத்தார்.

1947-இல் ஆசியாட்டிக் சொஸைட்டி மூலமாக மித்ரா வெளியிட்ட உயர் வளிமண்டலம் (The Upper Atmosphere) என்ற ஆய்வறிக்கை உலக அளவில் புகழ் பெற்றது.

மித்ராவின் தொடர் முயற்சியால், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில்   வானொலி இயற்பியல் மற்றும் மின்னணுவியல் இன்ஸ்டிட்யூட் (Institute of Radio Physics and Electronics, Calcutta)  1949-இல் நிறுவப்பட்டது.

அயனி மண்டல ஆய்வுக்காக கொல்கத்தாவிலிருந்து 45 கி.மீ. தொலைவில் ஹரிங்கதாவில் அவர் 1950-இல் நிறுவிய அயனிமண்டல கள நிலையம் (Harringhata Ionosphere Field Station)  இன்றும் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது.

1955-இல் பல்கலைக்கழகப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோதும், மதிப்புறு பேராசிரியராக அவர் செயல்பட்டார். பிறகு புதிதாக உருவான மேற்கு வங்க பள்ளிக்கல்வி வாரியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று 6 ஆண்டுகள் அதை வழிநடத்தினார்.

1963-இல் தேசிய ஆராய்ச்சிப் பேராசிரியராக மித்ரா நியமிக்கப்பட்டார். வளிமண்டல இயற்பியலில் புதிய சோதனைகளை மேற்கொள்ள அவர் தயாரானபோது, காலம் அவரைப் பிரித்தது. 1963, ஆக. 13-இல் தனது 72-வது வயதில் கொகத்தாவில் அவர் காலமானார்.

இந்திய தேசிய அறிவியல் அகாதெமி உறுப்பினர் (1935), பிரிட்டிஷ் பேரரசின் கௌரவ உறுப்பினர் (MBE- 1938), ராயல் சொஸைட்டி உறுப்பினர் (1958), இந்திய அரசின் பத்மபூஷண் (1962) உள்ளிட்ட பல கௌரவங்களை சிசிர் குமார் மித்ரா பெற்றுள்ளார்.

மித்ராவைப் பாராட்டும் விதமாக, நிலவிலுள்ள ஒரு விண்கல் வீழ் பள்ளத்துக்கு, மித்ரா பெருங்குழி (Crater Mitra) என்று சர்வதேச விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். இந்தியாவின் வளிமண்டல இயற்பியல், வானொலி இயற்பியல் துறைகளின் முன்னோடியாக சிசிர் குமார் மித்ரா போற்றப்படுகிறார்.

 

-தினமணி இளைஞர்மணி (04.07.2017)

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: