தோல் தொழில்நுட்பத்தில் புதுமைகளைப் புகுத்தியவர்

18 Jul

எலவார்த்தி நாயுடம்மா

உலக தோல் பொருள் உற்பத்தியில் இந்தியா 13 சதவீதம் வகிக்கிறது. காலணிகள் தயாரிப்பில் இந்தியா உலக அளவில் 9 சதவீத உற்பத்தியுடன் இரண்டாமிடம் வகிக்கிறது; இதில் தோலாலான காலணிகளின் பங்களிப்பு 50 சதவீதம்.

சென்ற நிதியாண்டில் நாட்டின் தோல் பொருள்கள் ஏற்றுமதி மதிப்பு ரூ. 39,000 கோடி. உள்நாட்டு அளவில் தோல் பொருள்களின் வர்த்தக மதிப்பு ரூ. 78,000 கோடி. மொத்தமாக தோல் தொழில் வர்த்தகத்தின் மதிப்பு ரு. 1.17 லட்சம் கோடி.

இத்துறையை நம்பி சுமார் 25 லட்சம் தொழிலாளர்கள் வாழ்கின்றனர்; இவர்களில் 35 வயதுக்கு உள்பட்டோரின் எண்ணிக்கை 55 சதவீதம்; பெண்களின் எண்ணிக்கை 30 சதவீதம்.

தமிழகம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்கள் தோல் தொழிலில் பெரும்பங்கு வகிக்கின்றன. தேசிய அளவில் தோல் பொருள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 40 சதவீதம்.

இந்தப் புள்ளிவிபரங்களை இங்கு சுட்டிக்காட்ட காரணம் இருக்கிறது. தோல் பதனிடுதல், தோல் பொருள் உற்பத்தியில் இந்தியா சாதித்திருப்பதன் பின்னணியில் ஒரு விஞ்ஞானியின் கடின உழைப்பு இருக்கிறது. அவர்தான், எலவார்த்தி நாயுடம்மா.

தாழ்த்தப்பட்டோர் மட்டுமே ஈடுபட்ட தோல் பதனிடும் துறையில் அறிவியல்ரீதியான மாற்றங்களை அறிமுகப்படுத்தி, அதை பொருளாதார ரீதியான தொழில்துறையாக இந்தியாவில் வளர்த்தெடுத்தவர் நாயுடம்மா தான்.

சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திட்டு, அதன்மூலமாக, தோல் தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்தினார் நாயுடம்மா. மக்கள்நலனே அறிவியலின் இறுதி விளைவாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர், அதனாலேயே ‘மக்கள் விஞ்ஞானி’ என்று போற்றப்படுகிறார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டம், தெனாலி அருகிலுள்ள எலவாரு கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில், 1922, செப். 22-இல் பிறந்தார் நாயுடம்மா. தந்தை அஞ்சய்யா;  தாய் ராகவம்மா. அவர்களது குடும்பத்தில் முதல் குழந்தையை பெண் குழந்தையாகவே சீராட்டுவார்கள். அவ்வாறுதான் அவருக்கு நாயுடம்மா என்ற பெயர் அமைந்தது.

கிராமத்திலேயே பள்ளிக் கல்வி பயின்ற அவர், குண்டூர் ஏ.சி.கல்லூரியில் புதுமுக வகுப்பை முடித்தார். அடுத்து காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தொழிலக வேதியியல் பிரிவில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார்.

அதையடுத்து, அவரது ஆசிரியர் சேஷாசலம் சௌத்ரி பரிந்துரைத்தபடி, சென்னையிலிருந்த தோல் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து தோல் தொழில்நுட்பம் படித்தார். 1943-இல் இக்கல்லூரியிலேயே ரூ. 17 என்ற மாத ஊதியத்தில் விரிவுரையாளராக இணைந்தார் நாயுடம்மா.

அங்கு தனது கடின உழைப்பு, ஆராய்ச்சி ஆர்வம், திறன் மேம்பாடு ஆகியவற்றால் விரைவில் கவனம் பெற்றார். அவரை மேற்படிப்புக்காக 1946-இல் பிரிட்டனுக்கு  அனுப்பியது கல்லூரி நிர்வாகம்.

லண்டனில் தோல் வர்த்தகர் தொழில்நுட்பக் கல்லூரியில் ஓராண்டுப் பயிற்சி பெற்ற நாயுடம்மா,  அடுத்து ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.  பென்சில்வேனியாவிலுள்ள லேஹை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தோல் தொழில்நுட்பத்தில் எம்.எஸ். பட்டமும் பிஎச்.டி. பட்டமும் பெற்ற அவர், 1951-இல் நாடு திரும்பினார். தோல் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற முதல் இந்தியர் நாயுடம்மா தான்.

அவர் நாடு திரும்பிய போது, சென்னை தோல் தொழில்நுட்பக் கல்லூரி,  மத்திய தோல் ஆராய்ச்சி நிலையமாக (Central Leather Research Institute- CLRI-  1948) மாறியிருந்தது. மத்திய அறிவியல், தொழிலக ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் (சி.எஸ்.ஐ.ஆர்.) அங்கமாக அது இயங்கியது.

1951-இல் மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் உதவி இயக்குநராக நாயுடம்மா நியமிக்கப்பட்டார். அடுத்த இரு வாரங்களிலேயே அதன் துணை இயக்குநரானார். அங்கு அவர் தனது வெளிநாட்டுக் கல்வி அனுபவங்களைக் கொண்டு, தோல் பதனிடுதல் தொழில்நுட்பத்தில் பல புதுமைகளைப் புகுத்தினார்.

1957-இல் சி.எல்.ஆர்.ஐ.யின் இயக்குநர் ஓய்வு பெற்றார். அப்போது, அதன் தற்காலிக இயக்குதராகப் பொறுப்பேறார் நாயுடம்மா. அப்போது அவருக்கு வயது 35 மட்டுமே.   மத்திய ஆராய்ச்சி நிலையம் ஒன்றின் தலைவராக மிக இளம் வயதில் ஒருவர் பொறுப்பேற்பதா என்ற கேள்வி எழுந்தது. அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவிடம் இந்த விவகாரம் சென்றது. நேரு நேர்காணலுக்கு நாயுடம்மாவை அழைத்தார். அவரிடம் ‘சி.எல்.ஆர்.ஐ.யின் இயக்குநராக நீங்கள் நியமிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டார் நேரு.

அதற்கு நாயுடம்மா,  ‘பாரம்பரிய முறையில் செய்யப்படும் தோல் தொழிலில் அறிவியல் ரீதியான மாற்றங்களைப் புகுத்தி, தோல் உற்பத்திக் கலைஞர்களின் சமூக, பொருளாதார உயர்வுக்குப் பாடுபடுவேன்’ என்றார். அந்தப் பதிலும், அதை நாயுடம்மா சொன்ன விதமும் பிரதமர் நேருவுக்குப் பிடித்துப் போனது.  அவர் சி.எல்.ஆர்.ஐ.யின் இயக்குநராக 1958-இல் நியமிக்கப்பட்டார். அன்றுமுதல் 1971 வரை சுமார் 13 ஆண்டு காலம் இயக்குநராகப் பணியாற்றிய,  அந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப மாற்றங்களுக்கும்,  விரைவான வளர்ச்சிக்கும் காரணமானார்.

அவரது பதவிக்காலத்தில் தேசிய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் தோல் ஆராய்ச்சிக்கான மாபெரும் மையமாக சி.எல்.ஆர்.ஐ. உருவெடுத்தது. தோல் தொழிலில் கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடையில் இருந்த வேற்றுமைகளை நாயுடம்மா களைந்தார்.

தோல் பதப்படுத்துவதில் பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்ட முறைகளுக்கு மாற்றாக வேதியியல் முறையில் பதப்படுத்துவதை நாயுடம்மா ஊக்குவித்தார். ஆரம்பத்தில் அந்த ரசாயனப் பொருள்கள் மீது கிராம மக்களுக்கு சந்தேகம் இருந்தது. அவர்களை சென்னை சி.எல்.ஆர்.ஐ.க்கு வரவழைத்து செய்முறை விளக்கம் அளித்து அவர்களின் நம்பிக்கையை ஈட்டினார். சி.எல்.ஆர்.ஐ.க்கு அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்துபோகும் அளவுக்கு நெருக்கத்தை அவர் உண்டாக்கினார். அதன்மூலமாக தோல் பதனிடுவதில் மேம்பாடு ஏற்பட்டு தரமான தோல் உற்பத்தியானது.

அமெரிக்காவில் தோல் தொழிற்சாலைகளில் கடைபிடிக்கப்பட்ட நவீனத் தொழில்நுட்பங்களை இந்தியாவில் அவர் அறிமுகப்படுத்தினார். அதன்மூலமாக, அதுவரை தாழத்தப்பட்டவர்கள் மட்டுமே செய்துவந்த தோல் தொழில் அனைத்து சமூகத்தினரும் செய்யும் தொழிலாக மாறியது. தொழில்ரீதியான ஜாதிப் பாகுபாட்டை இவ்விஷயத்தில் நாயுடம்மா மாற்றிக் காட்டினார். ஊரக வளர்ச்சியில் தோல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஓர் அங்கமாக்கினார் அவர்.

நாயுடம்மா இறை நம்பிக்கை அற்றவர். அதே சமயம் அதை பிறர் மீது திணிக்க மாட்டார். சமூக ஏற்றத் தாழ்வுகளை தொழில்துறை முன்னேற்றமே போக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் அவர். “நான் பிறப்பால் விவசாயி; தொழிலால் தாழ்த்தப்பட்டவன்’’ என்று அவர் பலமுறை வேடிக்கையாகச் சொன்னதுண்டு.

தரமான தோல உற்பத்தியானவுடன் அதை மதிப்புக் கூட்டும் பொருளாக ஏற்றுமதி செய்தால் தான் அதிக லாபம் கிடைக்கும் என்று உற்பத்தியாளர்களுக்கு அவர் வழிகாட்டினார். அறிவியலை ஆராய்ச்சிக்கானதாக மட்டுமின்றி, பயன்பாட்டு அறிவியலாகவே அவர் கண்டார். அவரது வழிகாட்டலில் புதிய தோல் பொருள்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றை விற்பனை செய்வதற்காக, ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளை முதல்முறையாக இந்தியாவில் அவர் நடத்தினார். அதன்மூலமாக, வெளிநாட்டு வர்த்தகர்கள் இந்திய தோல் பொருள்களை நாடி வந்து வாங்கினர்.

அவரது பணியைப் பாராட்டி, இந்திய அரசு 1971-இல் பத்மஸ்ரீ விருது வழங்கியது. அதே ஆண்டு,  சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். அப்போது நாடு முழுவதும் பல துறைகளில் செயல்பட்ட மத்திய ஆய்வகங்களில் சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டார்.

1977-இல் நாட்டில் ஆட்சி மாறியது. ஜனதா கட்சி சார்பில் மொரார்ஜி தேசாய் பிரதமரானவுடன், தனது பதவியை நாயுடம்மா ராஜினாமா செய்தார். அவருக்கு ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகிய காங்கிரஸ் கட்சியின் பிரதமர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததால் இம்முடிவை எடுத்தார். ஆனால், தேசாய் அவர் பதவியில் தொடருமாறு கூறினார். இருப்பினும் பத்வியில் நீடிக்க மறுத்து சென்னை திரும்பிய நாயுடம்மா, மீண்டும் தனது தாய்வீடான சி.எல்.ஆர்.ஐ.க்கே வந்து பேராசிரியர் பணியில் ஈடுபட்டார்.

1980-இல் மீண்டும் பிரதமரான இந்திரா காந்தி, அவரை தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1981 ஜூனில் நியமித்தார். அங்கு அவர் மேற்கொண்ட சீர்த்திருத்தப் பணிகளுக்கு அதிகாரிகள் மட்டத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. அதையடுத்து 1982 அக்டோபரில் அப்பணியிலிருந்தும் வெளியேறினார். மீண்டும் அவர் சென்னை சி.எல்.ஆர்.ஐ.க்கே வந்தார். அவரது எண்னம் முழுவதும் சி.எல்.ஆர்.ஐ. நிறுவனத்தை மேம்படுத்துவதிலேயே இருந்தது. 1984-இல் அவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோதும், கௌரவப் பேராசிரியராகவும் வழிகாட்டியாகவும் சி.எல்.ஆர்.ஐ.யில் தொடர்ந்தார்.

சர்வதேச அளவில் தோல் தொழில்நுட்பத்தில் நிபுணராக மதிக்கப்பட்ட நாயுடம்மா, 54 நாடுகளுக்கு பணி நிமித்தமாகவும், ஆராய்ச்சிகளுக்காகவும் சென்றிருக்கிறார். யுனெஸ்கோ, யு.என்.டி.பி, யுனிடோ போன்ற ஐ.நா. அமைப்புகளின் ஆலோசகராக அவர் விளங்கினார். ஐ.நா.வின் கல்வி மற்றும் அபிவிருத்திக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் (COSTED) தலைவராக 1980 முதல் 1985 வரை பதவி வகித்த அவர், வளரும் நாடுகளிடையே தொழில்நுட்ப்ப் பரவலுக்கு பல நடவடிக்கைகளை எடுத்தார்.

இந்த அமைப்பின் சர்வதேச நிகழ்வில் பங்கேற்க ரஷ்யா சென்ற நாயுடம்மா இந்தியா திரும்புகையில், அவர் பயணித்த ஏர் இந்தியா- கனிஷ்கா விமானம் நடுவானில் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. 1985, ஜூன் 23-இல் நடந்த அந்த விபத்தில் நாயுடம்மா உள்பட 329 பயணிகள் பலியாகினர்.

தனது முதல் மனைவி சீதாதேவியின் மரணத்துக்குப் பிறகு நாயுடம்மா டாக்டர் பாவனாவை திருமணம் செய்தார். அவரது பணிகளில் பாவனா மிகவும் உறுதுணையாக இருந்தார். நாயுடம்மா விமான விபத்தில் இறந்த செய்தியை அறிந்த்வுடன் பாவனா தற்கொலை செய்துகொண்டார். நாயுடம்மா- சீதாதேவி தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

சென்னையில் செயல்படும் ஸ்ரீ ராஜா- லட்சுமி அறக்கட்டளை, நாயுடம்மாவுக்கு 1983-இல் ராஜா- லட்சுமி விருதை வழங்கியது. தேசிய அளவிலும் உலக அளவிலும் மேலும் பல விருதுகளை அவர் பெற்றுள்ளார். கனடாவில் இயங்கும் சர்வதேச வளர்ச்சிக்கான ஆராய்ச்சி மையம், தனது பிரதான அரங்கத்துக்கு நாயுடம்மா என்று பெயரிட்டு கௌரவித்துள்ளது.

தெனாலியில் உள்ள டாக்டர் நாயுடம்மா நினைவு அறக்கட்டளை, ஆண்டுதோறும் இந்தியாவில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளுக்கு நாயுடம்மா நினைவு விருது விருது வழங்கி வருகிறது. இதுவரை, வி.கே.ஆத்ரே, ஆர்.சிதம்பரம்,  எம்.எஸ்.சுவாமிநாதன், கே.கஸ்தூரிரங்கன், எம்.ஜி.கே.மேனன், விஜய்குமார் சாரஸ்வத் உள்ளிட்டோர் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.

தினமணி இளைஞர்மணி (18.07.2017)

 .

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: