பலதுறை வித்தகரான படிக்காத மேதை

25 Jul

ஜி.டி.நாயுடு

மானுட முன்னேற்றத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் சாதனையாளர்களின் புதிய கண்டுபிடிப்புகளால்தான் எழுதப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிப்பாளர்களில் உயரிய நட்சத்திரமாகக் கருதப்படுகிறார். ஒருவர் கண்டுபிடிப்பாளராக இருக்க அவர் கற்றறிந்த விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை என்பதற்கு எடிசன் முன்னோடி உதாரணம். அந்த வகையில், இந்தியாவிலும் ஒரு பிறவி மேதை இருந்தார். பலதுறை வித்தகரான அவர்  ‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்டார். அவர்தான் தமிழகத்தின் ஜி.டி.நாயுடு.

ஆட்டொமொபைல்ஸ், மின்னியல், இயந்திரவியல், விவசாயம், புகைப்படவியல் ஆகிய துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜி.டி.நாயுடு, சிறந்த தொழில் வல்லுநரும் ஆவார். படிக்காத மேதையான அவர் உருவாக்கிய கல்வி நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளன.

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில், சூலூர் அருகே உள்ள கலங்கல் கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் 1893, மார்ச் 23-இல் பிறந்தார் கோபால்சாமி துரைசாமி நாயுடு (சுருக்கமாக ஜி.டி.நாயுடு).

சிறுவயதில் பள்ளி செல்ல நாட்டம் இல்லாமல் இருந்த துரைசாமி, ஆரம்பக் கல்வி மட்டுமே பயின்றார். ஆனால், தனது அறிவு தாகத்தால் பல துறை நூல்களைப் படித்து தனது அறிவை மேம்படுத்திக்கொண்டார்.

தனது ஊர் வழியாக லங்காஷையர் என்ற ஆங்கிலேயர் மோட்டார் சைக்கிளில் செல்வதை வியப்புடன் பார்ப்பார் இளைஞர் துரைசாமி. கோவையில் அதிகாரியாக இருந்த அவரை நேரில் சந்தித்து, அவரது வாகனத்தை ஓட்டப் பயிற்சி பெற்றார். பிறகு உனவகம் ஒன்றில் வேலை செய்து பெற்ற ஊதியத்தைச் சேமித்து, அந்த ஆங்கிலேயரிடம் இருந்து ரூ. 200 கொடுத்து அதே வாகனத்தை வாங்கிவந்தார்.

அந்த வாகனத்தை வீட்டுக்குக் கொண்டுவந்த துரைசாமி, அதை அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்துப் போட்டார். பிறகு அதை மீண்டும் ஒருங்கிணைத்தார். அதன்மூலமாக மோட்டார் சைக்கிள் இயங்கும் தத்துவத்தைப் புரிந்துகொண்டார். அப்போது அவரது வயது 20 மட்டுமே. அதுவே ஜி.டி.நாயுடு விஞ்ஞானியாக மாற வித்திட்ட நிகழ்வு.

இளம் வயதில் திருப்பூர் சென்று பஞ்சாலை துவங்கி பெரும் பொருளீட்டிய துரைசாமி, தொழிலை மேம்படுத்த மும்பை சென்றார்; ஆனால், அங்கு  தொழிலில் நஷ்டமடைந்து வீடு திரும்பினார். அதனால் அவர் சளைக்கவில்லை.

கோவையில் ஸ்டேன்ஸ் மோட்டார்ஸ் என்ற போக்குவரத்து நிறுவனத்தை நடத்திவந்த ஆங்கிலேயர் ஸ்டேன்ஸிடம் சென்று, மெக்கானிக் வேலை கேட்டார் துரைசாமி. ஆனால், ஸ்டேன்ஸுக்கு அவரைக் கண்டவுடன் வேறுவிதமான எண்ணம் தோன்றியது. அவரிடம் தனது பேருந்து ஒன்றை அளித்த ஸ்டேன்ஸ், தினசரி வசூலாகும் தொகையில் பெரும்பகுதியைத் தந்துவிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதையேற்று 1920-இல் பொள்ளாச்சியிலிருந்து பழனிக்கு துரைசாமியே அந்தப் பேருந்தை இயக்கினார்.

பேருந்து இயக்கம் அவருக்கு மீண்டும் செல்வத்தைத் தந்தது. அதையடுத்து,  நண்பர்களுடன் இணைந்து யுனைடெட் மோட்டார் சர்வீஸ் (யு.எம்.எஸ்.) என்ற பொது போக்குவரத்து நிறுவனத்தை துரைசாமி துவங்கினார். தமிழகத்தில் தனியாரால் துவங்கப்பட்ட முதல் போக்குவரத்து நிறுவனம் அது. அதன் வெற்றியால் துரைசாமி தமிழகம் அறிந்தவரானார்.

பேருந்தை இயக்கியபோது பல புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிந்தனைகள் துரைசாமிக்கு உதயமாகின. பயணச்சீட்டு வழங்கும் கருவி, என்ஜின் அதிர்வைக் கண்டறியும் கருவி (Vibrator Tester), பேருந்து புறப்பட்ட நேரத்தை பேருந்து நிலையத்தில் காட்டும் கருவி, பேருந்து என்ஜினைக் குளிர்விக்கும் ரேடியேட்டருக்கு இணையான மாற்றுக்கருவி ஆகியவற்றை உருவாக்கி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தனது நிறுவன ஓட்டுநர்கள் தங்குவதற்கு ஓய்விடம், பயணிகள் தங்குமிடம் ஆகிய வசதிகளை அந்தக் காலத்திலேயே அமைத்துக் காட்டினார். குறுகிய காலத்தில் 2,500 தொழிலாளர்களுடன் கூடியதாக யு.எம்.எஸ். வளர்ச்சி அடைந்தது. 1938-இல் ரூ. 18 லட்சம் மதிப்புள்ள தனது நிறுவனப் பேருந்துகள் அனைத்தையும் அரசிடம் இலவசமாக ஒப்படைத்தார் துரைசாமி. அதுவே பின்னாளில் அரசு போக்குவரத்து நிறுவனமாக மாறியது.

இன்று மின்சார மோட்டார் உற்பத்தியில் கோவை முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடித்தளமிட்டவர் துரைசாமி. நண்பரும் பொறியாளருமான டி.பாலசுந்தரம் நாயுடுவுடன் சேர்ந்து அவர் 1937-இல் உருவாக்கியதே, இந்தியாவின் முதல் மின்சார மோட்டார். பீளமேட்டில் இயங்கிய அவரது நேஷனல் எலக்ட்ரிக் ஒர்க்ஸ் (நியூ) நிறுவனமே அதைத் தயாரித்தது. மின்மோட்டாரை வர்த்தகரீதியாக உற்பத்தி செய்வதற்காக, துரைசாமியை பங்குதாரராகக் கொண்டு, டெக்ஸ்டூல் என்ற நிறுவனத்தை பாலசுந்தரம் நாயுடு துவங்கினார்.  கோவையின் ஆரம்பகால தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டது இந்நிறுவனமே.

1936-இல் நடைபெற்ற மாகாணத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார் துரைசாமி. ஆயினும் அவர் அரசியலில் ஆர்வமுடையவராகவே இருந்துவந்தார். மேலும் பல தேர்தல்களில் அவர் தோல்விகரமாகப் போட்டியிட்டுள்ளார்!  காமராஜர், வரதராஜுலு நாயுடு, பெரியார் ஈ.வெ.ராமசாமி, குருஜி கோல்வல்கர், சுப்பராயன் போன்ற பல்வேறு கொள்கைகள் கொண்டோரும் துரைசாமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரை தனது புகைப்படக் கருவியால் அவர் படம் பிடித்துள்ளார்.  ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரை அவர் சந்தித்திருக்கிறார்.

தொழில்துறையில் ஈடுபட்டபோது, தேவையான மனித வளத்தை உருவாக்க வேண்டியதன் தேவையை துரைசாமி உணர்ந்தார். அதையடுத்து பீளமேட்டில் அவர் ஆர்தர் ஹோப்ஸ் பொறியியல் கல்லூரியையும், ஆர்தர் ஹோப்ஸ் பாலிடெக்னிக்கையும் 1945-இல் துவங்கினார். அதன் முதல்வராகவும் அவரே பணியாற்றினார். ஆனால், 4 ஆண்டு பட்டப்படிப்பு தேவையில்லை; மாறாக இரண்டாண்டு படிப்பே போதும், மீதமுள்ள ஆண்டுகளில் மாணவர்கள் களப் பயிற்சி பெறலாம் என்ற தனது கருத்தை அரசு ஏற்காததால் அதிலிருந்தும் விலகினார். பின்னாளில் ஆர்தர் கல்லூரி கோவை தொழில்நுட்பக் கல்லூரியாகவும் (GCT, Coimbatore), ஆர்தர் பாலிடெக்னிக் அரசு பாலிடெக்னிக் ஆகவும் மாறின. ஆயினும், அப்பகுதி ஹோப்ஸ் காலேஜ் என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.

ஜெர்மனி நாட்டின் வெய்லர் நிறுவனத்துடன் இணைந்து 1966-இல் துரைசாமி நிறுவிய ஜிடீ வெய்லர் கூட்டு நிறுவனம், கடைசல் இயந்திரம், சி,என்.சி.லேத் போன்ற நவீன இயந்திரங்களை உருவாக்கி, கோவையின் தொழில்வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தது.

புதியன உருவாக்கும் ஆர்வத்தால், அவர் உருவாக்கிய புகைப்பட லென்ஸ் நகர்த்தும் கருவி (Distance Aduster), பழச்சாறு பிழியும் கருவி, பாட்டரியில் இயங்கும் சவரக் கருவி (Rasant Electric Razer- 1936), கால்குலேட்டர், காசு போட்டால் பாடும் கருவி, கார்பன் ரெசிஸ்டர், சப்பாத்தி தயாரிக்கும் கருவி, வாக்குப்பதிவு இயந்திரம்,  மண்ணெண்ணையில் ஓடும் விசிறி, இரும்புச் சட்டத்தில் உள்ள் வெடிப்புகளைக் கண்டறியும் கருவி (Magno Flex Testing Unit) மிகவும் மெல்லிய பிளேடு ((1/200 அங்குலம்- இதற்கு ஜெர்மனி அரசின் விருது 1936-இல் வழங்கப்பட்டது) ஆகியவற்றை துரைசாமி உருவாக்கினார்.

1941-இல் அவர் நிறுவிய யு.எம்.எஸ். ரேடியோஸ் நிறுவனம், 5 வால்வுகளில் இயங்கும் ரேடியோவை ரூ. 70 விலைக்கு விற்பனை செய்தது. இருவர் அமரக்கூடிய பெட்ரோலில் இயங்கும் சிறிய காரையும் 1952-இல் ரூ. 2,000 செலவில் உருவாக்கினார் துரைசாமி. ஆனால் ஆங்கிலேய அரசு உரிமம் வழங்க மறுத்ததால் அதன் உற்பத்தியை அவர் நிறுத்திவிட்டார்.

விவசாயத்திலும் வீரிய ஒட்டுரக உற்பத்தியில் ஆர்வம் காட்டிய துரைசாமி, விதையில்லா ஆரஞ்சு, நாரத்தை, அதிக விளைச்சல் தரும் பருத்தி (இதற்கு நாயுடு காட்டன் என்று பெயர் சூட்டினர் ஜெர்மானியர்!), துவரை, சோளம், பப்பாளி ரகங்களை உருவாக்கினார்.அவரது பண்ணைக்கு விஞ்ஞானிகள் சர்.சி.வி.ராமன், விஸ்வேஸ்வரையா உள்ளிட்டோர் வருகை தந்து பாராட்டினர். ஆயினும் அரசு அவரது கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை.

தனது கண்டுபிடிப்புகள், அறிவியல் சாதன சேகரிப்புகள் அனைத்தையும் கோவையில் ஓர் அருங்காட்சியகமாக 1967-இல் ஜி.டி.நாயுடு அமைத்தார். அதைக் காணும் எவரும் மனித ஆற்றலின் அளவற்ற சக்தியை வியக்காமல் இருக்க முடியாது. கோவை மாநகரின் குடிநீர்த் தேவைக்காக சிறுவாணி அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்துக்காக ஆய்வு நடத்தி முன்வரைவை உருவாக்கியவர்களுள் ஜி.டி.நாயுடுவும் ஒருவர்.

பலதுறைகளிலும் சாதனை படைத்த ஜி.டி.நாயுடு, 1974, ஜனவரி 4-இல் மறைந்தார். தனது கண்டுபிடிப்புகள் பலவற்றுக்கு அவர் காப்புரிமம் கோரவில்லை. அதிலிருந்து லாபம் சம்பாதிப்பது தவறு என்றே அவர் கருதினார்.

அரசின் அதீத வரிவிதிப்பு முறைக்கு எதிரானவராகவே வாழ்நாளெல்லாம் அவர் விளங்கினார். சுதந்திரச் சிந்தனையாளராக அவர் இருந்ததால், ஆங்கிலேய அரசும், சுதந்திர இந்திய அரசும் அவருக்கு உரிய கௌரவத்தை உரிய காலத்தில் வழங்கவில்லை. ஆயினும் கோவை மக்கள் நெஞ்சில் அவர் வாழ்கிறார். இந்திய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பணி என்றும் போற்றத் தக்கதாகவே இருக்கும்.

 -தினமணி இளைஞர்மணி (25.07.2017)

 

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: