பல லட்சம் மக்களைக் காத்த மருத்துவ விஞ்ஞானி

1 Aug

சர் உபேந்திரநாத் பிரம்மச்சாரி

1900-களில் வங்க மாகாணம் பல கொள்ளை நோய்களால் பந்தாடப்பட்டது. லட்சக் கணக்கான மக்கள் அந்நோய்களுக்கு பலியாகினர். அந்த நோய்களுக்கு சிகிச்சை அளித்ததுடன், காலா அஸார் என்ற கொடிய நோய்க்கு அற்புதமான மருந்தையும் கண்டுபிடித்தார் மருத்துவரான சர் உபேந்திரநாத் பிரம்மச்சாரி. அவர் கண்டறிந்த ‘யூரியா ஸ்டிபமைன்’ என்ற மருந்து, பல லட்சம் மக்களின் உயிரைக் காத்தது.

அன்றைய பிகார் மாகாணத்தின் மோங்கிர் மாவட்டம், ஜமால்பூரில் ரயில்வே மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றியவர் நீல்மோய் பிரம்மச்சாரி. புரி சங்கர மடத்தின் சந்யாசியாக இருந்த கோபால்பாரதி பிரம்மச்சாரியின் குடும்ப வழி வந்த அவர், பின்னாளில் ஜமால்பூர் நகராட்சி ஆணையராகவும் பணிபுரிந்தார். அவருக்கும் சௌரவ் சுந்தரிதேவிக்கும் மகனாக, 1873, டிச. 19-இல் பிறந்தார் உபேந்திரநாத் பிரம்மச்சாரி.

ஜமால்பூரில் கிழக்கு ரயில்வே ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்த அவர், ஹூக்லி மொஷின் கல்லூரியில் கணிதம், வேதியியலில் பி.ஏ. பட்டம் பெற்றார் (1893). அடுத்து கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் வேதியியலில் எம்.ஏ. (1894) பட்டம் பெற்றார். அங்கு அவருக்கு ஆசிரியராக இருந்தவர் பிரஃபுல்ல சந்திர ராய்.

அடுத்து, கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எல்.எம்.எஸ். மருத்துவச் சான்றிதழ் (1899) படிப்பையும் அவர் முடித்தார். அடுத்த ஆண்டே எம்.பி. பட்டமும் (அப்போதைய இளநிலை மருத்துவப் படிப்பு) பெற்றார். அதில் அவர் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று குட் ஏவ், மெக்லியாட் பதக்கங்களைப் பெற்றார்.

1899-இல் கொல்கத்தா மாகாண மருத்துவ சேவைப் பணியில் அவர் இணைந்தார். அங்கு ஆங்கிலேய மருத்துவரான சர் ஜெரால்ட் பாம்ஃபோர்டின் கீழ் அவர் பணிபுரிந்தார். பாம்ஃபோர்டு, உபேந்திரநாத்தின் திறமையை உணர்ந்தார்; அவரை டாக்கா மருத்துவக் கல்லூரியில் உடலியல் மற்றும் மருந்தியல் ஆசிரியராக 1901-இல் நியமித்தார். அங்கு கண்காணிப்பாளராக இருந்த சர் நீல் கேம்பல் உடன் இணைந்து பல ஆய்வுகளில் அவர் ஈடுபட்டார்.

இதனிடையே, 1902-இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எம்.டி. பட்டமும்,  உடலியலில் பிஎச்.டி. பட்டமும் பெற்றார். அப்போது ரத்த சிவப்பணுக்கள் சிதைவு (Haemolysis) குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். ரத்த சிவப்பணு ஆராய்ச்சியில் இன்றும் அவரது ஆய்வேடு முக்கியமான அடிப்படைத் தரவாக விளங்குகிறது.

கணிதம், வேதியியல், மருத்துவம், உடலியல் ஆகிய துறைகளில் ஆழ்ந்த ஞானம் பெற்ற உபேந்திரநாத் பிரம்மச்சாரி, 1905-இல் கொல்கத்தா, கேம்பல் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகவும் முதல் மருத்துவராகவும் சேர்ந்தார். அடுத்து வந்த 18 ஆண்டுகளும் அங்கு அவர் நிகழ்த்திய சாதனைகள் பல.

1923-இல் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் கூடுதல் மருத்துவராக இணைந்தார். 1927-இல் அரசுப் பணியிலிருந்து அவர் ஓய்வு பெற்றார். அதன்பிறகு கார்மைக்கேல் மருத்துவக் கல்லூரியில் வெப்ப மண்டல நோய்களுக்கான மருத்துவப் பேராசிரியராக இணைந்தார். பிறகு தேசிய மருத்துவக் கல்வி நிறுவனத்தின் வெப்ப மண்டல நோய்ப் பிரிவின் தலைவராகவும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் உயிரி வேதியியல் துறையின் கௌரவப் பேராசிரியராகவும் அவர் பணியாற்றினார்.

1924-இல் கொல்கத்தாவில் அவர் பிரம்மச்சாரி ஆராய்ச்சி நிறுவனத்தை உபேந்திரநாத் துவக்கினார். அந்நிறுவனம் தொற்றுநோய்களுக்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பு, தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டது. அவரது புதல்வர்கள் பணீந்திரநாத்தும், நிர்மல்குமாரும் அந்நிறுவனத்தைக் கவனித்துக் கொண்டனர். 1963 வரை அந்நிறுவனம் இயங்கியது.

காலா அஸாருக்கு மருந்து:

1900-களில் வங்க மாகாணம் மலேரியா, பர்த்வான் காய்ச்சல், குவாட்ரன் காய்ச்சல், கருநீர்க் காய்ச்சல், காலா அஸார், தொழுநோய்,  கொப்புளங்களை உருவாக்கும் லெய்ஷ்மேனியாசிஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தது. சுகாதாரக் குறைபாட்டால் ஏற்படும் இந்நோய்களால் பல லட்சம் மக்கள் மடிந்தனர். இவற்றுக்கு எதிரான சிகிச்சையில் ஈடுபட்ட உபேந்திரநாத், அந்த நோய்கள் குறித்து தீவிர ஆய்விலும் ஈடுபட்டார்.

இந்த நோய்கள் தொடர்பாக 150 ஆய்வறிக்கைகளை வெளியிட்ட அவர், பல புதிய சிகிச்சை முறைகளையும் அமல்படுத்தினார். பர்த்வான் காய்ச்சல் என்பது மலேரியாவும் காலா அஸாரும் சேர்ந்த கலவை என்பது அவரது முக்கியமான கண்டுபிடிப்பு (1911). அதற்கு கொய்னாவை கூட்டு மருந்தாகக் கொடுக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.

இந்த நோய்களில் மிகவும் அபாயமானது காலா அஸார் எனப்படும் கருங்காய்ச்சல். மணல் ஈக்களால் பரவும் ஓருயிரி ஒட்டுண்ணிக் கிருமியால் ஏற்படும் இந்நோயால் தாக்கப்படுவோருக்கு, தோல் நிறம் கருமையடைதல், உடல் எடை குறைதல், ரத்தசோகை, தூக்கமின்மை, பலவீனம், காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் தோன்றும். விரைவில் நோயாளியின் கல்லீரலும் மண்ணீரலும் பாதிக்கப்பட்டு, மரணம் நிகழும். இந்த நோய்  ஒருவரைத் தாக்கினால் அந்தக் குடும்பம் முழுவதையும் எளிதாகத் தொற்றும். இதனால் பல கிராமங்களில் ஆயிரக் கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். ஆப்பிரிக்கக் கண்டத்திலும் பல லட்சம் மக்கள் இந்நோயால் மடிந்தனர்.

இந்த நோய் வங்கத்தில் 1903-இல் முதன்முதலாக கண்டறியப்பட்டது. பொட்டாசியம் உப்பும் ஆர்சனிக் வேதிப்பொருளும் கலந்த கரைசலை ஊசி மூலம் உடலில் செலுத்துவதன் மூலமாக இந்நோய் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதன் பின்விளைவுகள் மோசமாக இருந்தன. இதற்கு மாற்று மருந்தைத் தயாரிக்கும் ஆராய்ச்சியில் உபேந்திரநாத் ஈடுபட்டார்.

அப்போது பயன்பாட்டில் இருந்த பாரா ஆர்சனிக் அமிலம் கலந்த மருந்துக்கு பதிலாக ஆன்டிமனியிலிருந்து தயாரிக்கப்பட்ட வேதிப் பொருளைப் பயன்படுத்தலாம் என்பதை அவர்தான் முதலில் கண்டறிந்தார். அதன்மூலமாக காலா அஸார் கட்டுப்படுத்தப்பட்டாலும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில் மருத்துவ ஆராய்ச்சிக்காக இந்திய ஆராய்ச்சி நிதி அமைப்பின் உதவி 1919-இல் அவருக்குக் கிடைத்தது. அதைக் கொண்டு, கேம்பல் கல்லூரி வளாகத்தில், தனது வீட்டிலேயே அமைந்த எளிமையான ஆய்வகத்தில் இரவும் பகலும் அவர் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அப்போது பொட்டாசியத்துக்குப் பதிலாக சோடியம் உப்பைச் சேர்ப்பதன் மூலமாக பின்விளைவற்ற முழுமையான தீர்வை அடையலாம் என்பதை அவர் கண்டறிந்தார். தான் கண்டறிந்த வேதியியல் கலவைக்கு ‘யூரியா ஸ்டிபமைன்’ என்று பெயரிட்டார் (1920). அது பாரா அமினோ பினைல் ஸ்டிபனிக் அமிலத்தின் யூரியா உப்பாகும். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் அலோபதி மருந்து என்ற பெருமையை ‘யூரியா ஸ்டிபமைன்’ (Uria Stibamine)  பெற்றது.

இதனை ஊசி மூலமாக நோயாளியின் உடலில் செலுத்தியதில் காலா அஸார் நோய்க்கு பூரண குணம் கிடைத்தது. அந்த நோய் வங்க மாகாணத்திலிருந்து விரைவில் முழுமையாக மறைந்தது. இந்திய அரசால் அமைக்கப்பட்ட காலா அஸார் ஆணையத்தின் இயக்குநரான கலோனில் ஹெச்.இ.ஷார்ட், “காலா அஸார் நோய்க்கு யூரியா ஸ்டிபமைன் சிறந்த மருந்து என்பது உறுதியாகியுள்ளது. அதன்மூலமாக அந்நோய் முழுமையாக கட்டுக்குள் வந்துவிட்ட்து”  என்று 1932-இல் அறிவித்தார்.

இந்த மருந்து கண்டுபிடிப்பால் உபேந்திரநாத் பிரம்மச்சாரியின் புகழ் உலக அளவில் பரவியது. அதையடுத்து பல விருதுகள் அவரை நாடி வந்தன. சர் வில்லியம் ஜோன்ஸ் பதக்கம், மின்டோ பதக்கம் (1921), கெய்ஸர் தங்கப் பதக்கம் (1924), பிரிட்டன் அரசின் சர் கௌரவம் (1934), ராய் பகதூர் பட்டம் ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டன. மருத்துவக் கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசுக்காக 1929-இல் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. லண்டன் ராயல் சொஸைட்டி, தேசிய அறிவியல் கல்வி நிலையம் உள்ளிட்ட பல அறிவியல் அமைப்புகளில் அவர் கௌரவ உறுப்பினராக இருந்தார்.

சமூகப் பணிகளிலும் உபேந்திரநாத் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டார். இந்தியாவின் முதல் ரத்த சேமிப்பு வங்கியை துவக்கியதில் அவரது பங்கு இன்றியமையாதது. செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் சங்கத்தின் வங்க மாகாண துணைத் தலைவராகவும், ரத்த தான சேவை அமைப்பின் தலைவராகவும், செஞ்சிலுவை சங்கத்தின் தலைவராகவும், ஆசியாட்டிக் சொஸைட்டியின் வங்கத் தலைவராகவும் அவர் விளங்கினார். ஜாதவ்பூர் சானட்டோரியம், மத்திய கண்ணாடி மற்றும் உருகாப்பொருள் ஆராய்ச்சி நிலையம், இந்திய உடலியல் சங்கம், கொல்கத்தா மருத்துவ கல்லூரி, இந்திய அறிவியல் காங்கிரஸ் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு அவரது நிதியுதவி உறுதுணையாக இருந்தது.

1946, பிப். 6-இல் உபேந்திரநாத் பிரம்மச்சாரி மறைந்தார். கொல்கத்தா மாநகராட்சி, அவரது பெயரை மாநகர சாலை ஒன்றுக்குச் சூட்டியுள்ளது. அவர் எழுதிய 9 நூல்களும் இன்று மருத்துவ மாணவர்களுக்கு ஆதார நூல்களாக உள்ளன. காலா அஸார் நோயை ஒழித்த இந்தியர் என்று உலக அளவில் அவர் நினைவுகூரப்படுகிறார்.

-தினமணி இளைஞர்மணி (01.08.2017)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: