இந்தியாவின் முதல் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கியவர்

8 Aug

டாக்டர் சுபாஷ் முகர்ஜி

பதினாறு செல்வங்களுள் முக்கியமானது மக்கள்பேறு. தம்பதியர் சிலருக்கு உடலியல் குறைபாடுகளால் குழந்தைப்பேறு அமைவதில்லை. அத்தகையோருக்காக நவீன மருத்துவம் அளித்துள்ள வரப் பிரசாதமே செயற்கை கருத்தரிப்பு முறையில் பிறக்கும் சோதனைக்குழாய் குழந்தை.

ஆணின் விந்தணுவையும் பெண்ணின் கருமுட்டையையும் வெளிப்புறத்தில் செயற்கை முறையில் (In Vitro Fertilization- IVF) இணையச் செய்து கருவுயிரை உருவாக்கும் மகத்தான சாதனையை மருத்துவ அறிவியல் நிகழ்த்தியுள்ளது. இந்தச் சாதனையை இந்தியாவில் முதல் முறையாக நிகழ்த்தியவர் டாக்டர் சுபாஷ் முகர்ஜி. 1978-இல் அவரால் உருவாக்கப்பட்ட குழந்தை  ‘துர்கா’ உலக அளவில் இரண்டாவது சோதனைக்குழாய் குழந்தையும் கூட.

ஆனால், மாபெரும் சாதனையை நிகழ்த்திய அவருக்கு பாராட்டுகள் குவிவதற்குப் பதிலாக கண்டனங்களும் அரசுரீதியான துன்புறுத்தல்களுமே மிஞ்சின. அதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டார்.

மருத்துவ அறிவியலின் சாதனைப் பக்கத்தில் பிரம்மாவாக மலர்ந்திருக்க வேண்டிய அவர், அரசின் புறக்கணிப்பால் யமனுக்கு இரையானார். ஆயினும் உண்மைகள் உறங்குவதில்லை.

அவரது சாதனையை மற்றொரு மருத்துவ விஞ்ஞானி பல ஆண்டுகளுக்குப் பின் நிரூபித்தார். அதன் விளைவாக, டாக்டர் சுபாஷின்அர்ப்பணமயமான வாழ்வும் மருத்துவ சாதனையும், பின்னர் வந்த அரசாலும் உலக மருத்துவ விஞ்ஞானிகளாலும் 2002-இல் அங்கீகரிக்கப்பட்டன.

அன்றைய பிகாரின் (தற்போதைய ஜார்கண்ட் மாநிலம்) ஹஸாரிபாக்கில் 1931, ஜனவரி 16-இல் பிறந்தார் சுபாஷ் முகர்ஜி. மருத்துவத் துறையில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராக அவர் விளங்கினார்.
கொல்கத்தாவிலுள்ள தேசிய மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். (1955) பயின்ற சுபாஷ், மகப்பேறியலில் முதலிடம் பெற்றதால் ஹேமாங்கினி கல்வி உதவித்தொகை பெற்றார்.
அடுத்து கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் உடலியலில் பி.எஸ்சி. (ஹானர்ஸ்) பட்டம் பெற்ற அவர், இனப்பெருக்க உடலியலில் (Reproductive Physiology), 1958-இல் பிஎச்.டி. பட்டமும் பெற்றார்.

1960-இல் நமிதாவை அவர் மணந்தார். ஆயினும் கல்வி ஆராய்ச்சிக்காக அதே ஆண்டு பிரிட்டன் சென்றார். இனப்பெருக்க உட்சுரப்பியலில் (Reproductive Endocrinology) இரண்டாவது பிஎச்.டி. பட்டத்தை எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் 1967-இல் சுபாஷ் பெற்றார். அப்போது இனப்பெருக்கத்துக்கு அடிப்படையான லூட்டினைசிங் ஹார்மோனை (LH) மதிப்பிடும் புதிய முறையை அவர் உருவாக்கினார்.

1967-இல் நாடு திரும்பிய சுபாஷ், கொல்கத்தா, என்.ஆர்.எஸ். மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியேற்றார். அப்போது இனப்பெருக்கக் குறைபாடுகள் குறித்த பல ஆய்வுகளில் அவர் ஈடுபட்டார்.

பெண்களின் கருவகம் சரியான இடைவெளியில் உற்பத்தி செய்யும் கருமுட்டை நிறைவானதாக இருக்க வேண்டும். அதேபோல அதனுடன் இணையும் விந்தணுவும் தகுதியுடன் இருக்க வேண்டும். இவ்விரண்டிலும் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஆண், பெண் உடல்களில் சுரக்கும் இயக்குநீர்களின் (Harmones) மாறுபாடும் காரணம் என்று சுபாஷ் கூறினார். ஆரம்பகால ஆராய்ச்சியில், சூலகத்தைத் தூண்டும் ஹார்மோன்களால் கருமுட்டைப் பெருக்கத்தை அதிகரிப்பதிலும், விந்தகத்தைத் தூண்டும் ஹார்மோன்களால் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் அவர் கவனம் செலுத்தினார். மன அழுத்தமும்கூட மகப்பேறு குறைபாட்டுக்கு காரணமாக இருப்பதை அவர் ஆதாரப்பூர்வமாக நிறுவினார்.

பி.எம்.எஸ்.ஜி, ஹெச்.எம்.ஜி, ஆண்மை இயக்கு நீர் (Testosterone), மனிதக்கரு வெளியுறை கருவக ஊக்கி இயக்குநீர் (human Chorionic Gonadotropin- hCG) உள்ளிட்டவை குறித்த அவரது ஆய்வு முடிவுகள் முக்கியமானவை. 1978-இல் தில்லியில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் காங்கிரஸ் மாநாட்டிலும், 1979-இல் ஹைதராபாதில் நடைபெற்ற இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டிலும், இயக்குநீர்கள் குறித்த தனது கண்டுபிடிப்புகளை அவர் முன்வைத்தார். அவை மருத்துவ விஞ்ஞானிகளால் பாராட்டப்பட்டன.

கோனோடோட்ராபின் (Gonadotropin) என்ற இயக்குநீரால் கருமுட்டை உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதன்மூலமாக, பெண்களின் மலட்டுத்தன்மையைப் போக்க முடியும் என்பதையும் அவர் கண்டறிந்தார்.

அதேபோல, செயற்கைமுறையில் கரு வளர வேதி வினையூக்கியை முதல்முறையாகப் பயன்படுத்தியவரும் சுபாஷ் தான். உறைபனி நிலையில் கருவை சேதமின்றிப் பாதுகாக்க முடியும் என்பதை முதன்முதலில் கண்டறிந்தவரும் அவரே.

தனது ஆராய்ச்சியின் உச்சமாக, கருக்குழாய் அடைப்பால் மகப்பேறை இழந்த பெண் ஒருவரது கருமுட்டையை அவரது சூலகத்திலிருந்து எடுத்து வெளிப்புறத்தில் அவரது கணவரின் விந்தணுவைச் சேர்த்து செயற்கைக் கருத்தரிப்பை நிகழ்த்தினார் டாக்டர் சுபாஷ். அதை சோதனைக்குழாயில் குறிப்பிட்ட தட்பவெப்பத்தில் கருவாக வளரச்செய்து மீண்டும் அந்தப் பெண்ணின் கருப்பையில் சேர்த்து, முறைப்படியான பராமரிப்பில் குழந்தையைப் பிறக்கச் செய்தார். அந்தச் சாதனை 1978, அக்டோபர் 3-இல் நிகழ்ந்தது. அவரது குழுவில் நுண்ணுயிரிக் குளிர்விப்பு வல்லுநரான சுனித் முர்ஜியும், மகப்பேறு நிபுணர் சரோஜ் காந்தி பட்டாச்சார்யாவும் இடம் பெற்றிருந்தனர்.

சுபாஷுக்கு முன்னதாக பிரிட்டனில் டாக்டர் ராபர்ட் எட்வர்டும் பாட்ரிக் ஸ்டெபோனும் 1978, ஜூலை 25-இல் முதல் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கியிருந்தனர். அதற்காக 2010-இல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார் எட்வர்டு. அந்த வகையில் சுபாஷின் சாதனை உலக அளவில் இரண்டாவதாகும்.

பிரிட்டன் மருத்துவர்கள் சூலகத்திலிருந்து லேப்ராஸ்கோபி முறையில் கருமுட்டையை எடுத்தனர். கருப்பையிலும் அதே முறையில் வைத்தனர். அந்த முறையில் வெற்றி விகிதம் குறைவு. ஆனால் சுபாஷோ, இயல்பான பிறப்புறுப்பு (Transvaginal) வழியாகவே இந்த நிகழ்வுகளைச் செய்ய முடியும் என்று நிரூபித்தார். இன்று சுபாஷின் முறையே உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது.

தனது புதிய சாதனையை சுபாஷ் அறிவித்தபோது, ஆசாரவாதிகளின் எதிர்ப்புக்கு ஆளானார். அவர்களது எதிர்ப்புக்கு அஞ்சிய மேற்கு வங்க மாநில அரசு, டாக்டர் சுபாஷின் சாதனையை ஏற்க மறுத்தது. அது மட்டுல்ல, அவரது விளக்கங்களைக் கேட்கவும் அரசு தயாராக இல்லை. இது நடைமுறை சாத்தியமற்றது என்று இந்த புதிய துறைபற்றி எதுவுமே அறியாத பலர் புலம்ப ஆரம்பித்தனர்.

சுபாஷ் தனது மருத்துவ ஆராய்ச்சியை அரசிடம் விளக்கி பல வகைகளில் போராடினார். ஆனால் 1978 டிசம்பரில் மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுவால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு, டாக்டர் சுபாஷின் மருத்துவ சாதனையை மோசடி என்று அறிவித்தது. தவிர, ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச மகப்பேறியல் கருத்தரங்கிற்குச் செல்ல விடாமலும் அரசு தடுத்தது. அநீதியின் உச்சகட்டமாக, அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டு மருத்துவக் கல்லூரியின் கண் சிகிச்சைப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

தொடர்ச்சியான மிரட்டல்கள், அவதூறுகள், அலட்சியமான பணியிட மாற்றம், சக மருத்துவர்களின் பாராமுகம் போன்றவற்றால் மனமுடைந்த அவர், 1981, ஜூன் 19-இல் தற்கொலை செய்துகொண்டார்.

மறுபிறப்பு:

சோதனைக்குழாய் குழந்தை சாத்தியமானது என்பது புரிபட இந்தியாவுக்கு மேலும் பல ஆண்டுகளாயின. மும்பையில் இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய டாக்டர் டி.சி.அனந்தகுமார் 1986-இல் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கினார். அப்போது சுனித் முகர்ஜி மூலமாக, டாக்டர் சுபாஷுக்கு நேர்ந்த அநீதியை அறிந்த அவர், தனக்கு கிடைக்க வேண்டிய பெருமைகளை ஒதுக்கிவைத்து, சுபாஷின் ஆராய்ச்சி முடிவுகளையும், முதல் சோதனைக்குழாய் குழந்தை உருவான வரலாற்றையும் வெளிப்படுத்தினார்.

சுபாஷின் கையெழுத்துப் பிரதிகளை ஆய்வு செய்து, அவரது கண்டுபிடிப்புகளைப் பட்டியலிட்ட டாக்டர் அனந்தகுமார், ஆதாரப்பூர்வமான ஆவணத்தை 1997-இல் வெளியிட்டார். அப்போது டாக்டர் சுபாஷ் முகர்ஜியின் மேதைமையை உலகம் அறிந்தது.

அதையடுத்து 2002-இல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்,   “செயற்கைக் கருத்தரிப்பு முறையில் உலகின் இரண்டாவது குழந்தையை உருவாக்கியவர் சுபாஷ் முகர்ஜி” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதன்பிறகு, உலக அளவிலும், தேசிய அளவிலும் சுபாஷ் பல வகைகளில் கெüரவிக்கப்பட்டார்.
உலக அளவிலான மருத்துவ மேதைகள் 1,100 பேர் அடங்கிய மருத்துவ கலைக் களஞ்சியத்தில் டாக்டர் சுபாஷ் முகர்ஜியின் பெயர் தற்போது இடம்பெற்றுள்ளது.

சுபாஷின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு பிரபல வங்க இயக்குநர் தபன் சின்ஹா எடுத்த ‘ஏக் டாக்டர் கி மவுத்’ என்ற திரைப்படம், மரத்துப்போன அரசையும் நமது மக்களின் மனசாட்சியையும் உலுக்கியது.

தன்னை உருவாக்கிய டாக்டர் சுபாஷுக்கு நன்றி கூறும் விதமாக துர்கா என்று அவரால் பெயரிடப்பட்ட கனுப்பிரியா அகர்வால் 25-வது பிறந்த நாளில் ஊடகங்களிடம் தனது வரலாற்றை எடுத்துரைத்தபோது, அரசின் கண்மூடித்தனத்தால் மாய்க்கப்பட்ட அந்த மருத்துவருக்காக தேசமே கண்ணீர் சிந்தியது.

ஐ.வி.எஃப். முறை இதுவரை பல லட்சம் குழந்தைகளை உருவாக்கியிருக்கிறது. பல லட்சம் பெற்றோரின் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய டாக்டர் சுபாஷ் முகர்ஜி என்ற மகத்தான மருத்துவர் மரணமுற்றிருக்கலாம். அவர் கண்டறிந்த இனப்பெருக்க மருத்துவ முறைகளும், ஐ.வி.எஃப். முறையும் காலம் உள்ளவரை வாழும்.

 

-தினமணி இளைஞர்மணி (08.08.2017)

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: