தாவரவியல் பூங்காக்களை உருவாக்கியவர்

15 Aug

கைலாஷ் நாத் கௌல்

 

அரிய தாவரங்களின் ஒருங்கிணைந்த தாவரவியல் பூங்காக்கள், அருகி வரும் தாவரங்களைக் காப்பதில் முதன்மை வகிக்கின்றன. அத்தகைய தாவரவியல் பூங்கா அமைப்பதில் நிபுணராக விளங்கியவர்,  தாவரவியல் விஞ்ஞானியான கைலாஷ் நாத் கௌல். விவசாய விஞ்ஞானி, இயற்கை ஆர்வலர், சுதந்திரப் போராட்ட வீரர், தோட்டக்கலை நிபுணர், மூலிகையியல் வல்லுநர் எனப் பல பரிமாணங்களை உடையவர் கௌல்.

காஷ்மீரைப் பூர்விகமாகக் கொண்ட ஜவஹர்மல் கௌல் அடலுக்கும் ராஜ்பதிக்கும் 1905-இல் தில்லியில் மகனாகப் பிறநதார் கைலாஷ் நாத் கௌல். அவரது தாத்தா ஜெய்ப்பூரில் மன்னரின் திவானாக இருந்தவர். கௌலின் சகோதரி கமலா பின்னாளில் இந்தியாவின் முதல் பிரதமராக விளங்கிய ஜவஹர்லால் நேருவின் மனைவி. இவரது மனைவியான ஷீலா கௌல், கல்வியாளராகவும், காங்கிரஸ் கட்சியில் முன்னணி அரசியல்வாதியாகவும் இருந்தவர்.

செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த கைலாஷ் நாத் கௌல், தாவரவியலில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார். இளம் வயதிலேயே தாவரவியல் ஆராய்ச்சிக்காக பிரிட்டன் சென்ற அவர், கியூவில் உள்ள ராயல் பொட்டானிக் கார்டன் எனப்படும் உலகப் புகழ் பெற்ற தாவரவியல் பூங்காவில் பணியாற்றினார். அங்கு பணிபுரிந்த முதல் இந்திய விஞ்ஞானி அவரே.

லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திலும் அவர் பணிபுரிந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய அவர்,  காஷ்மீரில் மட்டுமே காணப்படும் ஆர்டிமீசியா பிரேவிஃபோலியா என்ற மூலிகைத் தாவரம் குறித்து 1929-இல் அவர் ஆய்வில் ஈடுபட்டார். அதிலிருந்து எடுக்கப்படும் சான்டோனின் (Santonin) என்ற வேதிப்பொருள் ஒட்டுண்ணிப் புழு எதிர்ப்பு மருந்தாக பயன்படுத்தப்பட்டது. அந்த மூலிகையிலிருந்து எடுக்கப்படும் சாண்டோனின் அளவை ஆறு மடங்காக்க்கும் ஆராய்ச்சியில் கௌல் வெற்றி பெற்றார்.

1930-இல் அவர் நாடு திரும்பினார். அப்போது, நாட்டில் மகாத்மா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி நட்த்திய சுதந்திரப் போராட்டம் தீவிரம் அடைந்திருந்தது. ஆரம்பத்தில், பான்னு, பெஷாவர் மாவட்டங்களில் சுதந்திரப் போராட்ட வீரர் (எல்லை காந்தி) கான் அப்துல் கபார்கான் செயல்படுத்திய ஊரக வளர்ச்சித் திட்டங்களில் அவருடன் இணைந்து கௌல் செயல்பட்டார். பிறகு, 1930-இல் தில்லியில் நடத்தப்பட்ட சட்ட மறுப்பு இயக்கத்தில் ஆஸப் அலியின் வழிகாட்டலில் அவர் ஆர்வத்துடன் பங்கேற்றார். 1931-இல் கைது செய்யப்பட்ட கௌலுக்கு ஆறுமாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறைக்குள் ‘சி’ வகுப்பு கைதிகளுக்காக தனிப் பள்ளியை அவர் நடத்தினார்.

சுதந்திரப் போரில் அவரது குடும்பம் முழுவதும் பங்கேற்றது. அவரது தாய் ராஜ்பதி கௌலும் சகோதரி கமலா நேருவும் லக்னோவில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். லக்னோ நகரில் தீண்டாமை ஒழிப்புப் பணிகளிலும் கௌல் ஈடுபட்டார். கௌலின் சுதந்திரப் போராட்ட ஈடுபாட்டால் அதிருப்தி அடைந்த ஆங்கிலேய அரசு, அவரது உவர்தன்மை நிலங்கள் குறித்த ஆய்வேட்டை பறிமுதல் செய்தது.

பறவையியல் நிபுணரான சலீம் அலி, ஆப்கானிஸ்தானில் ஓர் ஆராய்ச்சியை நடத்தியபோது தனக்கு தாவரவியலில் உதவ, கைலாஷ் நாத் கௌலை நியமித்துக் கொண்டார். அவர்கள் இருவரும் இணைந்து அந்த ஆராய்ச்சியை சிறப்பாக நிறைவேற்றினர்.

ராஜஸ்தான் பகுதியின் தார் பாலைவனத்தில் உள்ள ஜோத்பூரில் கடும் குடிநீர்ப் பஞ்சம் 1947-இல் நிலவியது. அப்போது மகாராஜா உமைத் சிங்கின் தனி விமானத்தில் தார் பாலையில் நிலத்தடி நீர்ப்படுகை குறித்து கௌல் ஆய்வு மேற்கொண்டார். அச்சமயத்தில் அவர் உருவாக்கிய ஜோத்பூர் வறட்சி நிவாரனத் திட்டம், பாலைவனத்தை பசுமையாக்குவதற்கான வழிமுறைகளை அளித்தது. ஜெய்ப்பூரிலும் 1949-50-களில் ராஜஸ்தான் நிலத்தடி நீர் வாரியப் பணிகளை அவர் நடைமுறைப்படுத்தினார்.

1948-இல் தேசிய தாவரவியல் ஆராய்ச்சிக் கழகம் என்ற அமைப்பை லக்னோவில் (ஆரம்பத்தில் அதன் பெயர், இந்திய தேசிய தாவரவியல் பூங்கா) நிறுவினார். அதன் இயக்குநராக 1965 வரை இருந்து வழிகாட்டிய கௌல், அதனை உலகின் சிறந்த தாவரவியல் பூங்காக்களுள் ஒன்றாக வளர்த்தெடுத்தார்; பிரிட்டனின் கியூ, பிரான்ஸின் பாரிஸ், அமெரிக்காவின் நியூயார்க் ஆகிய இடங்களில் உள்ள தாவரவியல் பூங்காக்களுடன் லக்னோ பூங்காவும் இடம் பெறச் செய்தார்.

1953 முதல் 1965 வரை, நாடு முழுவதும் உள்ள தாவர வகைகள் குறித்த மாபெரும் கணக்கெடுப்பை கௌல் தலைமையிலான குழுவினர் நிகழ்த்தினர். வடக்கே இமயத்தின் காரகோரம் மலைத்தொடர்களில் துவங்கி, தெற்கே குமரி முனை வரையும், கிழக்கே அருணாசலில் இருந்து, மேற்கே கட்ச் வளைகுடா வரையிலும் பிரமாண்டமாக இந்தக் கணக்கெடுப்பு நடைபெற்றது. அந்த ஆவணங்கள் இன்றும் தாவரவியல் நிபுணர்களுக்கு ஆதாரமாக விளங்குகின்றன.

இதனிடயே, இலங்கையின் பெரடேனியா, சிங்கப்பூர், இந்தோனேசியாவின் போகர், ஹாங்காங், ஜப்பானின் டோக்கியோ, பிலிப்பைன்ஸின் மணிலா ஆகிய இடங்களில் தாவரவியல் பூங்காக்களின் நிர்மானத்திலும் வளர்ச்சிப் பணியிலும் கௌல் வழிகாட்டினார். தென்னை, கமுகு, பனை, ஈச்சை போன்ற பனைக் குடும்ப மரங்கள் (Arecaceae) குறித்த ஆய்வில் உலக அளவில் நிபுணராக கௌல் மதிக்கப்பட்டார்.

பாரிஸ் (1954), மாண்ட்ரீல் (1959) ஆகிய இடங்களில் நடைபெற்ற சர்வதேச தாவரவியல் காங்கிரஸ் மாநாடுகளில் இந்தியப் பிரதிநிதியாக கௌல் பங்கேற்றார். இந்தியாவின் தொல் தாவரவியல் சங்கத்தின் தலைவராக 1968-இல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1975-இல் கான்பூரில் நிறுவப்பட்ட சந்திரசேகர ஆசாத் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அவர் நியமிக்கப்பட்டார்.

1969-இல், ஜம்மு காஷ்மீர் மாநில அரசால், தோட்டக்கலை, பூங்காக்கள் வாரியத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அப்போது, பன்முகத்தன்மை கொண்ட மலர் சாகுபடியிலும், முகல் தோட்டங்களின் மறு நிர்மானிப்புப் பணிகளிலும் அவர் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயனற்றுக் கிடந்த பல்லாயிரம் ஏக்கர் உவர் தரிசு நிலங்களை சாகுபடிக்கு உகந்ததாக சீரமைத்ததிலும் கௌலின் பங்கு இன்றியமையாதது (1953). அதற்காக பாந்த்ரா திட்டத்தை அவர் துவங்கினார். தரிசு நிலங்களுக்கு ஏற்ற இயற்கையான சீர்திருத்தப் பணிகளுடன், மூலிகைத் தாவரங்கள், புதர்ச்செடிகள், வறட்சியைத் தாங்கும் மர வகைகளை வளர்த்ததன் மூலமாக அப்பகுதியை பசுமை ஆக்கினார்.

1948-இல் கௌல் அமைத்த விஞ்ஞான் மந்திர் -அறிவியல் கல்வி திட்டத்தை இந்திய அரசே ஏற்று நடத்தியது. அதன்மூலமாக நாட்டில் அறிவியல் கல்வி பெருகவும் கௌல் காரணமாக இருந்தார். பாரம்பரிய சிற்பக் கலை, ஓவியக் கலைகளிலும் நாட்டம் மிகுந்தவராக கௌல் இருந்தார். உ.பி.யின் லலித் கலா அகாதெமியின் தலைவராகவும் அவர் செயல்பட்டார் (1965).

1977-இல் பத்மபூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 1983-இல் அவர் மறைந்தார். அரசியலில் பிரபலப் பின்னணி இருந்தபோதும், அதை தனது தனிப்பட்ட வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ளாமல், விஞ்ஞானியாகவே கைலாஷ் நாத் கௌல் வாழ்நாள் முழுவதும் இயங்கினார். தாவரவியல் பூங்கா நிபுணராக உலக அளவில் அவர் இன்றும் மதிக்கப்படுகிறார்.

 

-தினமணி இளைஞர்மணி (15.08.2017)

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: