அணு உலை தொழில்நுட்ப நிபுணர்

5 Sep

சிவ்ராம் போஜ்

அணு சக்தியே இன்றைய உலகின் மிகப்பெரும் வல்லமையாகக் கருதப்படுகிறது. இத்துறையில் மிகத் தாமதமாக இந்தியா நுழைந்தபோதிலும், உலக அளவில் சிறந்த அணுசக்தி தொழில்நுட்பம் கொண்ட நாடுகளின் பட்டியலில் மிக விரைவில் இணைந்திருக்கிறது.

இன்று அதிவேக ஈனுலை தொழில்நுட்பம் கொண்ட ஏழாவது நாடாக இந்தியா விளங்குகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளை அடுத்து இப்பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றிருப்பது எளிய சாதனையல்ல. இதன் பின்புலத்தில் நூற்றுக்கணக்கான இந்திய விஞ்ஞானிகளின் அறிவும் கடின உழைப்பும் உள்ளன.

இந்தியாவில் டிராம்பே, தாராப்பூர், கல்பாக்கம், கூடங்குளம், நரோரா, கைகா உள்ளிட்ட இடங்களில் அணு உலைகளும், அணுமின் நிலையங்களும் உள்ளன.
2016}ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 22 அணு உலைகள் இயங்குகின்றன. இவை மூலமாக 6,780 மெ.வா மின்சாரம் உற்பத்தியாகிறது. மேலும் அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இவற்றுள் தமிழகத்தின் கல்பாக்கத்திலுள்ள அதிவேக ஈனுலை முதன்மையானதாகும். அணுமின் சக்தி மட்டுமல்லாது, அணு ஆயுத உற்பத்திக்குத் தேவையான அடிப்படைப் பணிகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டதுண்டு. இந்த அணு உலையின் வடிவமைப்பு மற்றும் நிர்மாணத்தில் பெரும் பங்கு வகித்தவர், விஞ்ஞானி சிவ்ராம் போஜ்.

வேக ஈனுலை தொழில் நுட்பத்தின் வடிவமைப்பு நிர்மாணம் மற்றும் இயக்கத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர் சிவ்ராம் போஜ். கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பிரதான வடிவமைப்பாளர் இவரே.

மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூர் மாவட்டம் கசாபா சாங்கோன் கிராமத்தில் 1942 ஏப்ரல் 9-இல் பிறந்தார். சிவ்ராம் போஜ் அங்குள்ள தாதா சங்கப் மகதும் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற அவர், கோலாப்பூர் ராஜாராம் கல்லூரியில் அறிமுக வகுப்பு படித்தார். பிறகு, புனா பொறியியல் கல்லூரியில், இயந்திரப் பொறியியலில் பி.இ. பட்டம் பெற்றார் (1965).

அதையடுத்து, மும்பையில் (டிராம்பே) பாபா அணுசக்தி ஆராய்ச்சிக் கழகத்தின் பயிற்சிக் கல்லூரியில் (BARC) ஓராண்டுப் பயிற்சி பெற்ற சிவ்ராம், அங்கேயே அறிவியல் அலுவலராக இணைந்தார். அங்கு பரிசோதனை வேக ஈனுலை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டார்.

இதனிடையே, பிரான்ஸ் நாட்டின் அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஓராண்டு காலம் பணியிடைப் பயிற்சி பெற்றார் (1969- 70). அங்கு 13 மெ.வா. வேக ஈனுலை வடிவமைப்புக் குழுவில் அங்கம் வகித்தார்.

நாடு திரும்பிய சிவ்ராம் போஜ், கல்பாக்கம், இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்துக்கு (IGCAR) அனுப்பப்பட்டார் (1971). அங்கு 40 மெ.வா. வேக ஈனுலை (Fast Breeder Test Reactor – FBTR) வடிவமைப்புக்கான பொறுப்பு அவரிடம் அளிக்கப்பட்டது. அவரது தலைமையிலான குழுவினர் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஈனுலையை நிறுவ தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர்.

ஈனுலையில் பயன்படுத்தப்படும் கார்பைடு எரிபொருளில் மாற்றம் செய்தார் சிவ்ராம். அவரது குழுவின் தொடர் உழைப்பில், 1985 அக்டோபரில் கல்பாக்கம் வேக ஈனுலை நிறுவப்பட்டு, உலக அணுசக்தி நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றது.

அந்த அணு உலை 40 மெ.வா. வெப்ப ஆற்றலையும், 13.2 மெ.வா. மின் ஆற்றலையும் அளித்தது. 1988-இல் கல்பாக்கம் ஈனுலையின் கண்காணிப்பாளராக சிவ்ராம் நியமிக்கப்பட்டார். அணுமின் உற்பத்தியில் நிலவிய சிக்கல்களை அவர் களைந்தார். 1997 ஜூனில் அந்த அணுஉலை மின் உற்பத்தி முறையாகத் தொடங்கியது. அதன் தொடக்க மின் உற்பத்தி 10 மெ.வா. 2002 வரையிலான இடைநில்லா தொடர் இயக்கத்தில் அந்த அணு உலை (FBTR) ஒரு டன் யுரேனியத்துக்கு ஒரு லட்சம் மெ.வா. என்ற உற்பத்தி இலக்கை எட்டியது. இது வேக ஈனுலை தொழில்நுட்பத்தில் ஒரு சாதனை ஆகும்.

தொடக்கத்தில் கல்பாக்கம் வேக ஈனுலையில் 50 கி.கி. புளூட்டோனியம் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. அது அணு ஆயுதத் தயாரிப்புக்கு உகந்த ஐசடோப்பு என்பதுடன் அதன் விலையும் அதிகமாகும். பிற்பாடு அந்த எரிபொருள் யுரேனியம்- 238 என்ற ஐசடோப்பைப் பயன்படுத்தி வருகிறது. இந்த அணு உலையைக் குளிர்விக்க நீர்ம நிலையிலுள்ள சோடியம் பயன்படுத்தப்படுகிறது.

இதன் அடுத்த நிலையான முதலுறு வேக ஈனுலை (Prototype Fast Breeder Reactor – PFBR) நிறுவுவதற்கான பணிகள் 1985-இல் தொடங்கின. அத்திட்டத்தின் அணு வடிவமைப்பு துறைத் தலைவராகவும் சிவ்ராம் பொறுப்பேற்றார். 1992-இல் அணு உலைகளின் இயக்குநர் ஆகப் பொறுப்பேற்றார்.

அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின்(Automic Energy Regulatary Board – AERB) நெறிமுறைகளுக்கு உள்பட்டு, முதலுறு வேக ஈனுலை (500 மெ.வா. உற்பத்தித் திறன்) அமைப்பதற்கான பாதுகாப்பான வடிவமைப்பை சிவ்ராம் போஜ் உருவாக்கினார்.

2000 ஆகஸ்டில் சிவ்ராம் மதிப்பிற்குரிய விஞ்ஞானியாக அறிவிக்கப்பட்டார். 2000 நவம்பரில் கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குநராகப் பொறுப்பேற்றார். இந்திய அணுசக்தி துறையின் பல்வேறு குழுக்களில் தலைவராகவும் உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார்.

சிவ்ராம் வடிவமைத்த முதலுறு வேக ஈனுலையை அமைக்க 2003}இல் அரசு அனுமதி அளித்தது. அதற்காக பாரதிய நபிக்கிய வித்யுத் நிகம் லிமிடெட்  (BNVNL) என்ற பொதுத்துறை நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் நிறுவன இயக்குநராக சிவ்ராம் போஜ் வழிநடத்தினார். அந்த அணு உலையின் நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

2004 ஏப்ரலில் சிவ்ராம் ஓய்வு பெற்றார். அதன் பிறகு, கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகத்தின் ஆலோசகராகவும், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

200-க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ள சிவ்ராம் போஜ், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) இந்தியப் பிரதிநிதியாக 1987 முதல் 1997 வரை செயல்பட்டுள்ளார். பல கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களிலும் சிவ்ராம் கௌரவ ஆலோசகராக உள்ளார்.

இந்திய அரசின் பத்மஸ்ரீ (2003), ஹெச்.கே.ஃபிரோடியா விருது (2006), வாஸ்விக் தொழில்துறை ஆய்வாளர் விருது (1992), விஸ்வேஸ்வரையா நினைவு விருது உள்ளிட்ட பல கௌரவங்களைப் பெற்றுள்ள சிவ்ராம் போஜ், இந்திய அணுசக்தி துறையின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து உறுதுணையாக உள்ளார்.

 

-தினமணி இளைஞர்மணி (05.09.2017)

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: