பொருளாதார சீர்திருத்தத்தின் வழித்துணையாக ஆதார்

30 Oct

 

 

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது   “அரசு நலத் திட்டங்களுக்கு அளிக்கும் நிதியில் ஒரு ரூபாயில் 17 பைசா மட்டுமே உண்மையான பயனாளிகளைச் சென்று சேர்கிறது” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க விழையும் ஓர் அரசுக்கு இது முக்கியமான பிரச்னை. நாட்டை நிலைகுலையச் செய்யும் ஊழலுக்கும் இதுவே அடிப்படைக் காரணம்.

பிரச்னையின் காரணத்தைக் கண்டறிந்த ராஜீவ் காந்தியால் அதை சரிப்படுத்த முடியவில்லை. அதற்குள் அவரது பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. அடுத்து 1990-களில் அறிமுகமான உலக மயமாக்கலால் இந்தியா பல துறைகளில் அசுர வளர்ச்சி பெற்றது. தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புப் பெருக்கம், தொழில்நுட்ப மேம்பாடு, வாழ்க்கை வசதிகள் உயர்வு ஆகியவற்றுடன், கூடவே ஊழலும் பல மடங்கு வளர்ந்தது.

இது இயல்பான ஒன்றே. எந்த இடத்தில் வளர்ச்சி அதிகமாக இருக்கிறதோ, அங்கு உடன்விளைவாக முறைகேடுகளும் அதிகரிக்கும். உலகம் முழுவதுமே காணக் கிடைக்கும் காட்சிதான் இது. இன்று உலக அளவில் பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் சந்திக்கும் பிரதான சவால் இதுவே.

இதற்குத் தீர்வு என்ன என்பதை ஆராயும் முன், ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாது என்பதையும் நாம் உணர்ந்தாக வேண்டும். சாமானியருக்கு அரசு ஒதுக்கும் நிதியில் 17 சதவீதம் மட்டுமே பயனாகிறது என்ற கசப்பான உண்மையை ராஜீவ் காந்தி குறிப்பிட்டதன் காரணம் இதுவே.

ஆகவே பொருளாதார சீர்திருத்தம் என்பது புதிய விதிமுறைகளை எழுதுவதும், உலக மயமாக்கலும், நவீன மயமாக்கலும், வர்த்தகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதும், வரிவிகித சீரமைப்பும்  மட்டுமே அல்ல என்பது தெளிவாகிறது.

கசிவுகள் நிறுத்தப்படாத வரை,  பொருளாதார சீர்திருத்தம் அதன் முழுமையான பயனை அளிக்க இயலாது. இதனை உறுதிப்படுத்த, அரசின் கண்காணிப்பும்,  சட்டப்பூர்வமான கட்டுப்பாடுகளும் தேவைப்படுகின்றன.

ஆதாரின் பிறப்பு:

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்த நோக்கத்துடன்தான் மக்கள் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டைகளை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதற்கென தகவல் தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேகனி தலைமையில், 2009-இல் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) அமைக்கப்பட்டது.

2014-இல் காங்கிரஸ் ஆட்சி மாறி பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அதன் பணிகள் மேலும் வேகம் பெற்றன. குஜராத் முதல்வராக இருந்தபோது ஆரம்பத்தில் ஆதாரை சந்தேகத்துடன் எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானவுடன் ஆதாரின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொண்டார். முந்தைய அரசின் திட்டம் என்பதால் அதை நிராகரிக்காமல்,  ஆதாரை மக்கள் நலத்திட்டங்களைக் கண்காணிக்கும் துருப்புச் சீட்டாக அவர் மாற்றியமைத்தார்.  இது முந்தைய ஆட்சியாளர்களே எதிர்பாராதது.

இன்று நாட்டின் மக்கள்தொகையான 132 கோடியில் 117 கோடிப் பேருக்கு (2017, ஆகஸ்ட் 15 நிலவரம்) ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 18 வயது நிறைந்தோரில் 99 சதவீதம் பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுவிட்டது.  உலக அளவில் இது மாபெரும் சாதனை. இது குடிமக்களுக்கான அடையாள அட்டையல்ல; மக்களின் இருப்பிட அடையாள அட்டை மட்டுமே என்றும் அரசு அறிவித்துள்ளது.

கண் கருவிழி, கைரேகை உள்ளிட்ட உயிரியல் அடையாளங்கள் (பயோ மெட்ரிக்), புகைப்படம் ஆகியவற்றுடன் 12 இலக்க எண்ணும்,  கியூ.ஆர். குறியும் கொண்ட ஆதார் அட்டைகளை போலி செய்ய முடியாது. இருப்பிட முகவரி, மின்னஞ்சல் முகவரி,  செல்லிடப்பேசி எண்களை ஆதாரில் குறிப்பிட்டுள்ளதால், பொதுவான அடையாள அட்டையாக அது மக்களால் ஏற்கப்பட்டுவிட்டது.

கண்காணிக்கும் கருவி:

ஆதார் அட்டை மிக விரைவில் நாட்டு மக்களை ஒழுங்குபடுத்தும் கருவியாக மாறி இருக்கிறது. இருப்பினும், ஆதார் அட்டையை பிற சேவைகளுடன் இணைப்பது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்று அதிருப்தி எழுந்து, அதுதொடர்பாக உச்ச நீதிமன்ற அமர்வில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆதாருக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் உண்டா என்பதையும் உச்ச நீதிமன்றம் ஆராய்கிறது.

இதனிடையே,  ஆதார் கட்டாயப்படுத்தப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றன. ஆதார் உருவாகக் காரணமான காங்கிரஸ் கட்சியே, அரசியலுக்காகப் புகார் கூறுவதுதான் கொடுமை.

ஆயினும்,  அரசு தொடர்புள்ள அனைத்துச் சேவைகளிலும் ஆதாரை கட்டாயமாக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் விளைவுகள் தொடர்பான செய்திகள்,  ஆச்சரியமளிப்பவையாக உள்ளன (காண்க: பெட்டிச் செய்தி- 1).

குறிப்பாக, அரசு நலத்திட்டங்களில் புரையோடி இருந்த ஊழல்கள் கட்டுப்படுத்தப்பட்டு,  போலிப் பயனாளிகள் களையெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசுக்கு பல்லாயிரம் கோடி நிதி மிச்சமாகியுள்ளதும் தெரியவந்திருக்கிறது. உச்ச நீதிமன்ற வழக்கில் இதையே மத்திய அரசு தனது தரப்பு வாதமாக முன்வைத்து வருகிறது.

கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது  நாட்டு மக்கள் அதிருப்தி கொள்வது இயல்பு.  எனவேதான், தேர்தல் வெற்றிகளுக்காக மக்களைக் கட்டுப்படுத்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் விரும்புவதில்லை. ஆனால், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி,  அரசியல் லாப- நஷ்டங்களைப் பற்றிய அச்சமின்றி,  தனது அரசின் பொருளாதாரச் சீர்திருத்தத்துக்கு அடிப்படைக் கருவியாக ஆதாரை மாற்றி இருக்கிறார்.

முதலில் வருமான வரித் துறையின் நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் இணைக்கப்பட்டது. அடுத்து பொது விநியோகத் திட்ட ரேஷன் அட்டை,  சமையல் எரிவாயு இணைப்பு, வங்கிக் கணக்குகள், செல்லிடப்பேசி எண்கள் ஆகியவற்றுடன்  ஆதாரை இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இவை ஒவ்வொன்றுமே துறை வாரியாக பிரமாண்டமான பணிகள்.  பல்வேறு அரசியல் எதிர்ப்புகள், நடைமுறைச் சிக்கல்கள், நீதிமன்ற வழக்குகளை மீறி, ஆதார் இப்போது அனைத்துக்கும் ஆதாரமாகி வருகிறது.

உடனடி விளைவுகள்:

வருமான வரித் தாக்கலுக்கும் ஆதார் இப்போது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆதார் இணைப்பு வாயிலாக ஒருவரே பல நிரந்தரக் கணக்கு எண்களை வைத்திருந்தது தடுக்கப்பட்டுள்ளது முக்கியமான மாற்றமாகும். அதுபோலவே போலி பான் எண்கள் ரத்து செய்யப்பட்டதன் வாயிலாக, பெயரளவில் இயங்கிவந்த 1.75 லட்சம் போலி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுள்ளது. இதன் மூலமாக, கருப்புப் பணப் புழக்கம் முடக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்,  நிரந்தர கணக்கு எண், செல்லிடப்பேசி எண்ணை இணைக்கும் கே.ஒய்.சி. (வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்) நடவடிக்கையால்,  வங்கிச் செயல்பாடுகளை முறைகேடாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது.  இது கருப்புப் பண ஒழிப்புக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் நலம் விளைவிப்பதாகும்.

செல்லிடப்பேசி எண்களுடன் (சிம்)  ஆதார் எண்ணை இணைக்குமாறு அரசு தற்போது கட்டாயப்படுத்தி வருகிறது.  மொபைல் வங்கிப் பரிமாற்றம்  பெருகிவரும் நிலையில் அரசின் இந்த நடவடிக்கை உண்மையான வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உள்ளது. தவிர, போலி முகவரியில் செல்லிடப்பேசி வைத்துக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவோரையும் கட்டுப்படுத்த முடிகிறது.

மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள்  அனைத்துக்கும் படிப்படியாக ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுகிறது. இதன்மூலமாக  உண்மையான பயனாளிகளை மட்டும் நலத்திட்ட உதவிகள் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.  போலிப் பயனாளிகள் குறைவதால் அரசின் மானியச் செலவுகள் குறைந்துள்ளன (காண்க: பெட்டிச் செய்தி- 2).  வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களை மட்டும் கண்டறிந்து அவர்களைக் கைதூக்கிவிட ஆதார் அட்டை சிறப்பான ஆதாரமாகவே உள்ளது.

எனினும், அரசு சேவைகளுடன் ஆதாரை இணைக்க மக்கள் சிரமப்படுவதையும் காண முடிகிறது. குறிப்பாக ஆதார் இணைப்பு இல்லாததால் நலத்திட்ட உதவிகள் மறுக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. ஆதார் எண்ணை அரசு திட்டங்களில் இணைப்பதை அரசு நூறு சதவீதம் உறுதி செய்யும் வரை, நலத்திட்ட உதவிகள் யாருக்கும் மறுக்கப்படக் கூடாது. இல்லையேல், அரசின் நோக்கம் வீணாகிவிடும்.

ஆதார் அட்டை பெறவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும்,  நலத்திட்டங்களுடன் ஆதாரை இணைக்கவும் தாலுகா மையங்களில் பொது சேவை மையங்கள் இயங்குகின்றன. மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்கள் ஆங்காங்கே இயங்குகின்றன.  ஆயினும், மக்களுக்கு இன்னமும் சிரமங்கள் நீடிக்கின்றன. தவிர, மக்களுக்கு அரசு நடவடிக்கைகளின் நோக்கம் இன்னமும் முழுமையாகத் தெளிவுபடுத்தப்படவில்லை. இதுகுறித்த விழிப்புணர்வை அரசு உருவாக்குவதும் அவசியம்.

உலக வங்கியின் கவலை:

உலக மக்கள் தொகையான 760 கோடியில், சுமார் 110 கோடி பேர் எந்த இருப்பிடப் பதிவும் இல்லாதிருப்பதாக உலக வங்கி அண்மையில் (அக். 23) கவலை தெரிவித்தது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் வாழ்வோரில் பெரும்பகுதியினர் தங்களுக்கான எந்த அடையாள அட்டையோ,  அரசுப் பதிவுகளோ இல்லாமல் உள்ளனர் என்றும்,  இதனால் அந்த மக்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டை உறுதிப்படுத்த முடிவதில்லை என்றும் உலக வங்கி கூறுகிறது.

அந்த வகையில் மக்கள்தொகையில் உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில் 99 சதவீதம் பேர் ஆதார் அடையாள அட்டை பெற்றிருப்பதும், அதை அரசின் சேவைகளில் இணைத்து வருவதும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இதுவே உண்மையான பொருளாதார சீர்திருத்தமும் ஆகும். (காண்க: பெட்டிச் செய்தி- 3).

ஜி.எஸ்.டி. மூலமாக வரிச் சீர்திருத்தம் துவங்கியுள்ள நிலையில் வரும் நாள்களில் வருமான வரி வசூலிப்பதிலும் மாற்றம் நிகழ்வதற்கான காட்சிகள் காணக் கிடைக்கின்றன.  வங்கிப் பரிமாற்ற அடிப்படையிலான வரி விதிப்புகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளன.

மிக விரைவில், ஆதார் அடிப்படையில்  வாக்காளர் அடையாள அட்டையும் இந்தியக் குடிமகன் அட்டையும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கான பணிகள் ஏற்கெனவே துவங்கிவிட்டன.

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் (ரூ. 500, ரூ. 1000)  செல்லாததாக அறிவிக்கப்பட்டதன்  மூலமாக,  நாட்டு மக்களிடம் புழங்கிய ரொக்கப்பணம் அனைத்தும் வங்கி வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுவிட்ட நிலையில்,  இணையவழி பணப் பரிமாற்றங்கள்அதிகரித்து வருகின்றன. இணையதளப் பயன்பாடும், செல்லிடப்பேசிப் பெருக்கமும், வங்கிகளின் செயல்பாடும் அதிகரித்து வரும் சூழலில், ஆதார் மூலமாக மக்களின்  செயல்பாட்டைக் கண்காணிப்பதும்,  முறைகேடுகளைத் தடுப்பதும் எளிது; தேவையானதும்கூட.

இந்நிலையில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததாக,  பான் எண்-  வங்கிக் கணக்குகள்- செல்லிடப்பேசி எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்படுவது,  பத்திரமான எதிர்கால வர்த்தகத்துக்கும்  ஆக்கப்பூர்வமான பொருளாதார வளர்ச்சிக்கும்  வழித்துணையாக இருக்கும்.

 


பெட்டிச் செய்தி- 1:

ஆதார் விளைவித்த அடிப்படை மாற்றங்கள்:

 

* நாட்டில் 29 கோடி பேர் வருமான வரி  நிரந்தரக் கணக்கு எண் வைத்துள்ளனர் (ஆக. 1 நிலவரம்) .  பான்- ஆதார் இணைப்பு மூலமாக,  11.44 லட்சம்  போலி பான் (இரட்டை) அட்டைகள் முடக்கப்பட்டன.  இவற்றில் 1,566 பான் அட்டைகளின் உரிமையாளர்கள் யார் என்றே தெரியவில்லை.

* உயர் மதிப்பு ரூபாய்  நோட்டுகள் செல்லாததாக்கப்பட்ட நடவடிக்கையின்போது (2016 நவ. 8- டிச. 31) ஆதார் அட்டை நகலின்  இணைப்புடன் தங்களிடமிருந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்துமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதன்மூலமாக,  ஒவ்வொருவரிடமும் எவ்வளவு ரொக்கப்பணம் இருந்தது என்பதை தோராயமாகவேனும் கணிக்க முடிந்தது. அப்போது முறைகேடாக வங்கியில் பணம் செலுத்தியவர்களைக் கண்டறிய ஆதார் உதவியது.  அதில் சுமார் ரூ. 3.2 லட்சம் கோடி பணம் வருமான வரித் துறையின் தொடர் ஆய்வில் உள்ளது. அப்போது, பண மாற்ற மோசடியில் ஈடுபட்ட  பல போலி நிறுவனங்களும் கண்டறியப்பட்டன.

*  போலி பான் அட்டைகள் ரத்து மூலமாக, நாட்டில்  இயங்கிவந்த 1.75 லட்சம் போலி நிறுவனங்களின் உரிமப் பதிவு ரத்து செய்யப்பட்டது (ஆக. 15 நிலவரம்) . இவற்றில் ஒரே முகவரியில் 400 நிறுவனங்கள் இயங்கியதும் கண்டறியப்பட்டது. இதன்மூலமாக கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி வந்தவர்கள்  தடுக்கப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் 15.27 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன.

*  இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமாக மட்டும் நாட்டில்  8.8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இவற்றில் ஆதாரை இணைத்ததன் மூலமாக,  8 லட்சம் போலி இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டன (ஜூலை 15 நிலவரம்). பிற எண்ணெய் நிறுவனங்களிலும் சேர்த்து  35 லட்சம் போலி எரிவாயு இணைப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இவற்றின்மூலமாக, மத்திய அரசுக்கு ரூ. 15,000 கோடி மிச்சமானதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

*  நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தில் 25 கோடி பயனாளிகள் (குடும்பங்கள்) உள்ளனர்.  ரேஷன் அட்டைகளுடன் ஆதார் இணைப்பதைக் கட்டாயமாக்கியதால்,  கடந்த இரண்டாண்டுகளில்  3.95 கோடி போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. இத்தகவலை நாடாளுமன்றத்தில் (பிப். 7) பிரதமரே தெரிவித்துள்ளார்.  இதனால், ரூ. 14,000 கோடி மானியம் மிச்சமானது. தமிழகத்தில் மட்டும் 5.47 லட்சம் போலி ரேஷன்  அட்டைகள் ரத்தாகியுள்ளன.  தவிர, வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் பட்டியலில் இருந்த தவறான நபர்கள் 30 லட்சம் நீக்கப்பட்டுள்ளனர். இதனால், உண்மையான ஏழைகளை அரசின் நலத்திட்ட உதவிகள் சென்று சேர்வது உறுதியாகி உள்ளது.

*   அதுமட்டுமல்ல, ஆதார், செல்லிடப்பேசி எண்களுடன் கூடிய மின்னணு  (ஸ்மார்ட்) அட்டைகள் விநியோகம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பயனாளிகள் பட்டிலில் இடம்பெற்றிருந்த  போலிகள் நீக்கப்பட்டிருப்பதுடன்,  மக்கள் வாங்கும் பொருள்களின் விபரம் உடனடியாக செல்லிடப்பேசியில்  எஸ்எம்எஸ் வடிவில் வந்துவிடுகிறது. இதன்மூலம் ரேஷன் கடைகளில் நடைபெற்றுவந்த முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளன.

* நமது நாட்டின் மொத்த மக்கள்தொகை 132 கோடி.  ஆனால் இங்கு புழக்கத்திலுள்ள செல்லிடப்பேசிகளின் எண்ணிக்கையோ 131 கோடி (ஜூலை 17 நிலவரம்).  வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.  இந்நிலையில் செல்லிடப்பேசி எண்களுடன் ஆதார் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.  இது  உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அவசியமானது.

*  மத்திய அரசின் ஜாம் திட்டம் (ஜன்தன் வங்கிக் கணக்கு-ஆதார்- மொபைல் போன்)  வங்கிச் செயல்பாட்டில் பாதுகாப்பையும் ஆதரவான தன்மையையும் உறுதிப்படுத்துகிறது.  அதற்கு செல்லிடப்பேசியுடன் ஆதாரை இணைப்பது மிகுந்த பயனளித்துள்ளது.

* நாட்டில் 73.6 கோடி வங்கிக் கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டதால்,  போலி பெயர்களில் செயல்பட்ட லட்சக் கணக்கான கணக்குகள் செயலிழந்துள்ளன.  அவற்றில் புழங்கிய பல்லாயிரம் கோடி பணம் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

* பான் எண்ணுடனும், வங்கிக் கணக்குகளுடனும், செல்லிடப்பேசி (சிம்) எண்ணுடனும் ஆதாரை இணைக்க 2018 மார்ச் 31 கடைசித் தேதியாகும். ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்க இன்னும் கடைசித் தேதி அறிவிக்கப்படவில்லை.

 


பெட்டிச் செய்தி- 2:

நேரடி மானியம் சாத்தியமானது

அரசு நலத்திட்டங்களின் மானிய உதவி  பயனாளிகளுக்கு நேரடியாகச் சேர்வதை ஆதார் உறுதிப்படுத்தியுள்ளது என்கிறார், மத்திய நிதித் துறை செயலாளர் அசோக் லவாசா.

“நலத்திட்டச் செலவுகளைக் கட்டுப்படுக்கவும், திட்டப் பயன்பாடுகளை செம்மைப்படுத்தவும்,  வெளிப்படையான  நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும்,  அரசுப் பணிகளில் ஊழலை ஒழிக்கவும் ஆதார் இணைப்பு அற்புதமாக உதவி வருகிறது. பயனாளிகளுக்கு நேரடி மானிய உதவி அளிப்பதை (Direct Benefit Transfer – DBT)  ஆதார் வாயிலாக மேம்படுத்தியதால், மத்திய அரசுக்கு ரூ. 34,000 கோடி மிச்சமாகியுள்ளது. தற்போது மத்திய, மாநில அரசுகளின்  78 வகையான நலத்திட்டங்களுடன் ஆதார் இணைப்பு  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஏற்பட்டு வந்த விரயங்கள் இதனால் தடுக்கப்படும்” என்கிறார் அவர்.

 


பெட்டிச் செய்தி- 3:

மாபெரும் டிஜிட்டல் பொருளாதாரக் கட்டமைப்பு

அமெரிக்காவிலுள்ள சர்வதேச கடன் நிதியத்தில் (ஐஎம்எஃப்) அண்மையில் பேசிய யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பபை நிறுவிய நந்தன் நிலேகனி,  இந்தியாவில் ஆதார் எண் இணைப்பால்  மாபெரும் டிஜிட்டல் பொருளாதாரக் கட்டமைப்புக்கு வித்திடப்பட்டுள்ளதாகக்  குறிப்பிட்டார்.

“இந்தியாவில் 50 கோடி வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரே நேரத்தில்  12 பில்லியன் டாலர் (ரூ. 78,000 கோடி) பணப் பரிமாற்றத்தை ரொக்கமற்ற வகையில், மின்னணு முறையில் இந்திய அரசு பயனாளிகளுக்குச் செலுத்தியுள்ளது. உலக அளவில் இது மாபெரும் சாதனையாகும்.

ஆதார் பயன்பாடு மூலமாக போலி பயனாளிகள் நீக்கப்பட்டதால் 9 பில்லியன் டாலர் (ரூ. 58,500 கோடி) அரசு நிதி சேமிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தியதால் முறைகேடுகளைக் களைவது எளிதாகியுள்ளது. இது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

புதிய டிஜிட்டல் பொருளாதார யுகத்தில்,  அடையாள அட்டைகளை உறுதிப்படுத்துதல்,  எளிதான வரவு- செலவு- பண விநியோகம், குறைந்த காகிதப் பயன்பாடு ஆகியவை அடிப்படை அம்சங்கள். அதுவே இப்போது இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது” என்கிறார் அவர்.

 

தினமணி- வர்த்தகம் சிறப்புப் பக்கம் (30.10.2017)

.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: