நம்பிக்கையாளர் நன்னன்

7 Nov

பேராசிரியர் மா.நன்னன்

இன்று (07.11.2017) இயற்கை எய்திய தமிழறிஞர் திரு. மா.நன்னன் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி…

தமிழ் மொழியில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் உடனடியாகத் தெளிவு பெற வாழும் அகராதியாகவும், கலைக் களஞ்சியமாகவும் விளங்கியவர் திரு. மா.நன்னன். கடலூர் மாவட்டம், சாத்துக்குடலில் பிறந்த திருஞானசம்பந்தம், திராவிட இயக்கத் தொடர்பால் நன்னன் ஆனார். ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்த அவர் தனது கல்வித் தேடலால் மாநிலக் கல்லூரி ஆசிரியராக உயர்ந்தார். அது மட்டுமல்ல, தனது தமிழ்ப் பற்றால், தமிழ் இலக்கியங்களில் மூழ்கி, அதன் வாயிலாக பேராசிரியராக முகிழ்த்தார்.

தமிழைப் பிழையின்றி பேசவும் எழுதவும் வேண்டும் என்பதை ஓர் இயக்கமாகவே அவர் முன்னெடுத்தார். அவர் எழுதிய ‘உரைநடையா, குறைநடையா? எல்லார்க்கும் தமிழ், தவறின்றி தமிழ் எழுதுவோம், தமிழ் எழுத்தறிவோம், கல்விக்கழகு கசடற எழுதுதல்’ போன்றவை எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் படிக்க வேண்டிய நூல்கள். எழுத்தறிவித்தலில் அவர் பயன்படுத்திய முறை ‘நன்னன் முறை’ என்றே அறியப்படுகிறது.

அரசியல்ரீதியாக அவர் திராவிடர் கழகம், தி.மு.க. சார்பைக் கொண்டிருந்தார். ஆயினும் எதிர்த்தரப்பினரும் அவருடன் எந்த உளவிலகலும் இன்றி உரையாட முடியும். அவரைப் பொருத்த வரை கொண்ட கொள்கையில் உறுதியானவர்; ஆனால் அதை பிறர் மீது திணிப்பவர் அல்ல.

எனது பெரிய தந்தையும் தமிழ் ஆசிரியருமான திரு. தங்கவேலு அவர்களுடன் அவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். பொள்ளாச்சியில் நிகழ்ந்த எனது அக்காவின் திருமணத்தில் அவர் கலந்துகொண்டார். அப்போது அவரை விடுதியில் உபசரிக்கும் வாய்ப்பு கிடைத்தது (1987 என்று நினைக்கிறேன்). நானும் எனது தம்பி இளங்கோவும் விடுதியில் அவருடன் சுமார் 2 மணிநேரம் இருந்தோம். அப்போது எனக்கு வயது 17. ஹிந்து இயக்கங்களுடன் தொடர்பு ஏற்பட்ட காலம் அது. பகுத்தறிவாளரான நன்னன் மீது எனக்கு சிறிது கோபம் இருந்தது. அவர் எங்களுக்கு சில அறிவுரைகள் கூறியபோது, அவரை மறுத்து நான் விவாதத்தில் ஈடுபட்டேன். அப்போதே அவருக்கு வயது 60-க்கு மேல் இருக்கும். ஆனாலும், என்னை சிறியவனாகக் கருதாமல், என்னுடன் தீவிரமாக விவாதித்தார். மிகவும் மரியாதையாக – சிறுவன் தானே என்ற எண்ணமின்றி- என்னுடன் பேசினார்.

எனக்கு அவரது பிராமண எதிர்ப்பில் சற்றும் உடன்பாடில்லை. பகுத்தறிவு என்ற பெயரில் ஹிந்து நம்பிக்கைகளை மட்டும் தி.க.வினர் கேலி பேசுவதையும் நான் கண்டித்தேன். அதேபோல தேசிய ஒருமைப்பாட்டுக்கு விரோதமான தமிழ்த் தேசியத்தையும், சமஸ்கிருத வெறுப்பையும் நான் ஏற்கவில்லை. மற்றபடி தமிழ்ப் பற்று எங்கள் இருவரின் பற்றுக்கோடாக இருந்தது.

சங்கப் பாடல்களிலும் பாரதீய அம்சம் இருப்பதை நான் சுட்டிக் காட்டியபோது வியப்புடன் பார்த்தபடி, நான் பேசுவதை அவர் அனுமதித்தார். என்னுடனிருந்த இளவல் இளங்கோவும் தீவிரமான ‘நாத்திக நம்பிக்கையாளர்’. ஒரே நேரத்தில் அவர்கள் இருவருடனும் சுமார் ஒரு மணிநேரம் விவாதித்தேன். இப்போது நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.

இறுதியில், “தம்பி, நீங்கள் ஒரு கருத்தை ஏற்றுவிட்டீர்கள். அதை நீங்களாக பொய்யென்று உணரும் வரை மாற மாட்டீர்கள். இளம் வயதில் இப்படித்தான் துடிப்பாக நானும் இருந்தேன். வயதாகும்போது நீங்கள் பக்குவப்பட்டால் உண்மையை உணர்வீர்கள்” என்றார். பிராமணர்களைத் தான் இதற்குக் காரணமாக அவர் மீண்டும் குற்றம் சாட்டினார். அவருடன் தேவையின்றி விவாதித்து அவருக்கு மனத்துயரை அளித்துவிட்டேனோ என்று நான் சற்றே துணுக்குற்றேன்.

ஆனால், காலம் திரு. நன்னன் சொன்னது பொய்யென்று நிரூபித்திருக்கிறது. கடவுளுக்கு நன்றி! இந்திய தேசியம் உடைக்கப்பட இயலாத இமயம் என்பதையும், தமிழ்நாடு அதன் உறுதியான அங்கம் என்பதையும் நன்னன் அவர்கள் தற்போது உணர்ந்திருக்கலாம். அது மட்டுமல்ல, அவர் நம்பியிருந்த திராவிட இயக்கம் சீட்டுக்கட்டு கோபுரம் போலச் சரிந்து சுயநலமிகளின் கூடாரமாக மாறிவிட்டதையும் அவர் உணர்ந்திருக்கலாம். ஆனால், அவரது இயல்புப்படி அதை வெளிப்படையாகக் கூற மாட்டார். மிகவும் மென்மையான தமிழ் உள்ளம் கொண்ட அவரது மரணம், நிச்சயம் தமிழ் உலகிற்கு மாபெரும் இழப்பே.

எனது பெரிய தந்தை தற்போது இருந்திருந்தால், அவருக்கு அஞ்சலி செலுத்த முதல் ஆளாகச் சென்றிருப்பார். எனவேதான் அவர் சார்பாக இந்த அஞ்சலியை இங்கு நான் எழுதுகிறேன்.

திரு. மா.நன்னன் அவர்களின் அரசியல் கருத்துகள் மாறுபட்டவையாக இருக்கலாம். ஆனால் அவரது தமிழ்ப் பற்று மாசற்றது. அதை வைத்து அவர் பிழைக்கவில்லை. தமிழை பிழையாக எழுதினால் மட்டுமே அவர் வருந்துவார். மகாகவி பாரதியிடமிருந்து தாய்மொழிப் பற்றை நான் பெற்றாலும், திரு. நன்னன் அவர்களிடமிருந்தே, கலப்பின்று தமிழ் பேசும் இலக்கைப் பெற்றேன். அவரது இருப்பு தமிழ் மொழிக்கு ஒரு மனசாட்சியாக இருந்தது. அவரது தமிழ் மொழி மீதான நம்பிக்கை மட்டும் என்றும் பொய்க்காது என்பதை இந்தத் தருணத்தில் கூற விழைகிறேன்.

அவரது ஆன்மா நற்கதி அடையட்டும். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

 

முகநூல் பதிவு (07.11.2017)

One Response to “நம்பிக்கையாளர் நன்னன்”

Trackbacks/Pingbacks

  1. நம்பிக்கையாளர் நன்னன் — வ.மு.முரளி – தமிழ்பண்ணை.நெட் www.tamilpannai.net - 26/11/2017

    […] via நம்பிக்கையாளர் நன்னன் — வ.மு.முரளி […]

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: