லக்‌ஷ்மி: நல்லதோர் வீணை செய்தே…

10 Nov

‘லக்‌ஷ்மி’ குறும்படம் குறித்த எனது விமர்சனம் இது…

‘விருது வாங்கிய குறும்படம் லக்‌ஷ்மியைப் பார்த்தீங்களா?’ என்று அலைபேசியில் கேட்டார் பத்திரிகையாளரான நண்பர். எல்லை மீறுவதே பெண்ணியம் என்று கூறும் குறும்பட இயக்குநர், அதற்கு மகாகவி பாரதியின் வரிகளை ஆதரவாகப் பயன்படுத்தியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

ஆனால், என்னால் அதை உடனே பார்க்க முடியவில்லை. வேறு அத்தியாவசியப் பணிகளில் நான் மூழ்கிவிட்டேன். இதனிடையே குடும்ப நண்பரின் மகளான கல்லூரி மாணவி ஒருவரும் இதுகுறித்து என்னிடம் வருத்தம் தெரிவித்தார். பெண்ணியம் என்ற பெயரில் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும், பெண்களை எளிதில் மயக்கிவிட முடியும் என்பதுபோல படம் இருப்பதாகவும் அவர் குறை கூறினார்.

இந்நிலையில், முகநூலில் அதை சிலர் ஆதரித்தும், கண்டித்தும் எழுதியிருப்பதைப் பார்த்தபோது, அதைப் பார்ப்பதன் அவசியத்தை உணர்ந்தேன். இப்போதுதான் யு-டியூபில் அதைப் பார்த்தேன். எனது பத்திரிகை நண்பரும், நண்பரின் மகளும் கூறிய கருத்துகள் உண்மைதான். இதற்கு ஏன் விருது கொடுத்தார்கள்?

‘புதுமைப்பெண்’ குறித்த மகாகவி பாரதியின் கவிதையில் 8 வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அதையும் தனக்கு சௌகரியமான விதத்தில் புரிந்துகொண்டு படம் எடுத்திருக்கின்றனர் படக் குழுவினர். பாரதியின் அந்த வரிகள்:

‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில்
அவலமெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!’

இங்கு பாரதி செம்மை மாதர் என்று குறிப்பிடுவது கற்புடைப் பெண்டிர். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, திமிர்ந்த ஞானச் செருக்கு, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளைக் கொண்ட பெண்கள் திறம்ப (வழுவ) மாட்டார்கள் என்பது பாரதியின் வாக்கு. அதேசமயம் அடிமைத்தனம் என்ற இருளில் அவர்கள் உழல மாட்டார்கள்; அப்படிப்பட்ட சூழலை காரி உமிழ்ந்து முன்னேறுவார்கள் என்றும் கூறுகிறார் அவர்.

ஆனால் இந்தக் குறும்படத்தில், கணவனின் ஆணாதிக்க மனநிலையால் மறுகும், வேலைக்குச் செல்லும் நடுத்தர வர்க்கத்துப் பெண் ஒருத்தி, ஆதரவாகப் பேசும் மற்றொரு ஆண்மீது ஈர்ப்படைந்து அவனுடன் ஒரே இரவில் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள். இதுதான் பெண் விடுதலை என்கிறார்களா படக் குழுவினர்? பாடலில் பாரதி கூறும் கலையை பிழையாகப் புரிந்துகொண்ட படக் குழுவினர் மீது கோபம் வருகிறது. பாரதி இன்றிருந்தால் தனது பாடலை இத்துணை மோசமாகப் பயன்படுத்தியவர்களை எங்ஙனம் கண்டித்திருப்பார்?

இந்தக் குறும்படத்தின் வரைபடம் இது:

வீட்டு வேலைகளைச் செய்துகொண்டே அச்சுக்கூடம் ஒன்றில் வேலை செய்பவள் லக்‌ஷ்மி. காலையில் உணவு சமைத்து, குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பி, கணவனை வேலைக்கு அனுப்பிவிட்டு, இயந்திரகதியாக, உண்ணக் கூட நேரமின்றி ரயிலைப் பிடிக்க ஓடும் நடுத்தர வர்க்கப் பெண். வேலை முடிந்து திரும்பினாலும், வீட்டு வேலைகள், இரவில் கணவனின் உடல் தேவையை நிறைவேற்றல் என, உறங்கவும் அவளுக்கு நேரமில்லை. இவை நித்தியப் பணிகள். ஆனால், அவளது மனதைப் புரிந்துகொண்டவனாக அவளது கணவன் இல்லை. மாறாக, அவனுக்கு பெண் நண்பர் ஒருவர் இருப்பது அலைபேசி அழைப்பின் மூலம் தெரிய வருகிறது. அவள் யார் என்று சொல்ல மறுக்கிறான், ஆதிக்கவாதியான கணவன். லக்‌ஷ்மியின் மனம் திரிபடைகிறது. அவளும் ஒரு முடிவெடுக்கிறாள்.

பணிக்குச் செல்கையில் ரயிலில் தன்னை உற்றுக் கவனிக்கும் ஓர் ஆடவனை அவளும் பார்க்கிறாள். எதிர்பால் ஈர்ப்பால் தவிக்கும் மனத்தின் மெல்லிய தன்மையையும் ஊசலாட்டத்தையும் இக்காட்சிகளில் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அந்த ஆண், சிற்பக் கலைஞன் கதிர்; பாரதி பாடல்களை அறிந்த- இலக்கிய நுண்ணுணர்வு கொண்ட- துடிப்புள்ள இளைஞன். அவனும் சராசரி ஆண் தான் என்பதை படத்தின் பின்பகுதி காட்டுகிறது.

ஒருநாள், காவிரி விவகாரத்தால் ரயில்கள் நிறுத்தப்பட, வீடு திரும்ப முடியாமல் தவிக்கிறாள் லக்‌ஷ்மி. அவளை அழைத்துச் செல்ல கணவன் வரத் தயாரில்லை என்பது அலைபேசி உரையாடலால் தெரிய வைக்கப்படுகிறது. பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் லக்‌ஷ்மியை அங்கு வரும் கதிர் எளிதாக நெருங்குகிறான். பேச்சினிடையே அவளது அழகைப் புகழ்கிறான். “எனது கணவரும் இப்படித்தான் சொல்வார்” என்று அதை அவள் சமாளிக்கிறாள். ஆனால், வேலைக்குச் சென்றுகொண்டே வீட்டையும் கவனிக்கும் அவளுடன் ஒப்பிடுகையில் தனது சிற்பக்கலை ஒருபொருட்டே இல்லை என்று சொல்லி, அவளைப் பாராட்டுவதாகக் கூறி இன்னும் நெருங்குகிறான் அவன். கூடவே, அவளது கரத்தை குலுக்குவதன் மூலமாக ஆண்- பெண் சமத்துவத்தை (?) அவளுக்குப் புரிய வைக்கிறான் கதிர்.

இத்தனைக் காலம் வீட்டில் கிடைக்காத பாராட்டு, கணவனின் பொறுப்பின்மையும் ஆணாதிக்க மனப்பான்மையும் கலந்த போக்கு, எதிர்பால் ஈர்ப்பால் அமைந்த புதிய நட்பு ஆகியவை அவளை தடுமாறச் செய்கின்றன. அதேசமயம், இரவு நெடுநேரமாகியும் தன்னை அழைத்துச் செல்லத தயாராக இல்லாத கணவன் மீது கோபமும் வருகிறது. தான் என்ன இயந்திரமா என்று சிந்திக்கிறாள். எனவே அம்மா வீட்டுக்குச் செல்வதாகக் கூறுகிறாள். அப்போதும்கூட, காலை உணவுக்கு என்ன செய்வது என்பதே அவனது பிரதானக் கவலையாக இருப்பதையும் அலைபேசி உரையாடல் காட்டுகிறது. கணவனுக்குப் பாடம் (?) கற்பிக்க முடிவு செய்கிறாள் லக்‌ஷ்மி.

பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் கதிருடன் அவனது வீட்டுக்கு அந்த இரவில் செல்கிறாள் அவள். அங்கு அவன் சமைத்துக் கொடுத்த உணவைச் சாப்பிடுகிறாள்; அவனது சிற்பக் கலையைக் கண்டு வியக்கிறாள். அப்போது, கதிர் அவளது கூந்தலை விரித்து அவளது அழகை வெளிப்படுத்துகிறான். சில நொடிகளில் பூடகமான காட்சியாக கட்டில் காட்டப்படுகிறது. அங்கிருந்து காலையில் திருப்தியுடன் வெளியேறுகிறாள்.

இந்த இடத்தில் ஒரு கவிதை (எழுதியவர்: சிவா ஆனந்த்) பின்னணியில் வாசிக்கப்படுகிறது:

மெல்லச் சிரி மௌனத் தாரகையே,
வேறொருவனின் வானில் ஒளிர்ந்தது அன்றி
வேறொரு குற்றமும் உன் கணக்கில் சேராது.
கிரகணத்தை நோக்கி நீ ஓடலாம்.
ஆனால் மறக்காதே கண்மணியே,
நீ மிளிர்ந்த இந்நாளை
மனதில் கொண்டு கும்மியடி.

வீடு திரும்பி வீட்டுவேலைகளை முடித்துவிட்டு அச்சுக்கூட வேலைக்குக் கிளம்பும் அவள், பேருந்திலேயே செல்வதாக கணவனிடம் கூறுகிறாள். கதிரைத் தவிர்க்கவே ரயில்ப் பயணத்தை அவள் தவிர்க்கிறாள் என்பது புரிகிறது. லக்‌ஷ்மியின் பயணம் தொடர்கிறது.

பிக் பிரின்ட் பிக்சர்ஸ் புரொடக்‌ஷன் தயாரித்துள்ள இக் குறும்படத்தின் இயக்கம்: கே.எம்.சர்ஜூன். லக்‌ஷ்மிப்ரியா சந்திரமௌலி, நந்தன், லியோ சிவதாஸ் ஆகியோரின் நடிப்பு இயல்பாக உள்ளது. கடந்த நவ. 1-இல் யு-டியூபில் பதிவேற்றப்பட்ட இக் குறும்படத்தை, இதுவரை 3.85 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்; பல விருதுகளை இப்படம் பெற்றிருக்கிறது. படத்தின் டைட்டிலே கஜலக்‌ஷ்மி. மரபை மீறும் பெண்மை என்பதுதான் படத்தின் உள்பொருள்.

ஆனால், பெண்மை கற்புப் பிறழ்வதுதான் புதுமையா? இந்த இடத்தில் கதிரை அன்பு நெஞ்சம் கொண்ட சகோதரர் போலவோ, சக மனுஷியாக பெண்ணை மதிக்கும் ஒரு தோழராகவோ ஏன் சித்தரிக்க முடியவில்லை? ஒரே நாளில் பெண்ணை- அதுவும் மற்றொருவரின் மனைவியை படுக்கையில் வீழ்த்துவது எந்த வகையில் முறையானது? அந்த அளவுக்கு மிகவும் எளிய பொருளா பெண்மை? உண்மையில் இக்குறும்படத்தை பெண்ணியவாதிகள் எதிர்க்க வேண்டும். இந்தக் கழிசடைக் காட்சிக்காகவா விருது?

‘கற்பு நெறியென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’

-என்று பாடிய பாரதியின் வரிகளை மறந்து, ‘ஆண்கள் நிலை பிறழ்ந்தால் பெண்மையும் கெட்டிடாதோ?’ என்று கேள்வி எழுப்பிய அந்த மகத்தான கவிஞரின் வரிகளை மறந்து, அவரது புதுமைப் பெண்களின் இலக்கண வரிகளையே மனம்போன போக்கில் பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

‘புதுமைப் பெண்கள்’ கவிதையின் இறுதிப் பகுதியில் பாரதி குறிப்பிடுபவையே, நிமிர்ந்த நன்னடை கொண்ட பெண்மையின் அடையாளம். அவளுக்கு ஆணின் கீழ்மைக்குப் போட்டியாக கீழ்மை புரியத் தெரியாது என்பது மட்டுமல்ல, அவளது இயல்பும் அல்ல அது.

இதோ அந்த வைர வரிகள்:

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி, இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

-என்று கூறும் பாரதி, ஞான நல்லறம் என்றும், வீர சுதந்திரம் என்றும் குறிப்பிடுபவையே, எனது தேசத்தை கட்டமைத்த பெண்களின் இலக்கணம். அவளுக்காகவே,

போற்றி போற்றி! ஜய ஜய போற்றி!
புதுமைப் பெண்ணொளி வாழி பல்லாண்டிங்கே!

-என்று பாடல் முழங்கினார் பாரதி. நாணமும் அச்சமும் பெண்களுக்கு அல்ல- நாய்களுக்கே வேண்டும் என்று சொன்ன பாரதி, நாய்கள் போல கட்டற்ற உறவு கொள்ளுமாறும் கூறிவிடவில்லை. இதை பெண்ணியவாதிகள் புரிந்துகொண்டதாகக் தெரியவில்லை. இப்படத்தை எடுத்தவர்களும் ஆண்கள் தானே?

மகளிர் சுதந்திரம் மிகுந்த ஸ்வீடனில்தான் பதின்பருவப் பெண்கள் தாயாவது அதிகம் என்று ஒரு விபரீதமான செய்தி உண்டு. அதாவது, பெண் சுதந்திரம் எல்லை மீறினாலும், பாலியல் கட்டுப்பாடுகளை பெண்களே தாண்டினாலும், அதன் லாபத்தை ஆணே பெறுகிறான்; பாதிக்கப்படுவோர் பெண்களே என்பதுதான் அந்தச் செய்தியின் பொருள்.

அதனால்தான் நமது நாட்டில் குடும்ப அமைப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளது. அதைக் குலைப்பதாக குறும்படங்கள் அமையக் கூடாது. கலை- சமுதாய நலனுக்கானது; அதைச் சீரழிப்பதற்கானது அல்ல.

மிகவும் திறமையாக எடுக்கப்பட்ட ‘லக்‌ஷ்மி’ குறும்படம், வேலி தாண்டுவதாலேயே விருதுகளைப் பெறலாம். ஆனால், ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ என்ற பாரதியின் பாடலே மீண்டும் நினைவுக்கு வருகிறது.

-முகநூல் பதிவு (10.11.2017)

 

 

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: