அறிய வேண்டிய பாரத அறிவியல் முன்னோடிகள்

12 Dec

கணாத மகரிஷி

அறிவியலிலும் கணிதத்திலும் உலக நாடுகள் முத்திரை பதித்து வருவது சுமார் 800 ஆண்டுகளாக மட்டுமே. ஆனால், பொது யுகத்துக்கு (2,000 ஆண்டுகளுக்கு) முன்னரே பாரதம் இத்துறைகளில் பாரதம் சிறந்து விளங்கியுள்ளது. இடைப்பட்ட காலத்தில் அந்நிய ஆக்கிரமிப்புகளால் பாரதத்தின் ஆராய்ச்சி வேகம் மட்டுப்பட்டது. அக்காலத்தில்தான் ஐரோப்பிய மறுமலர்ச்சியும் தொழில்புரட்சியும் உருவாக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகின் முன்னேற்றம் வேகம் பெற்றது.

நவீன அறிவியல் மேம்பாடு அடைந்த காலகட்டத்தில் பாரதம் அடிமைத்தளையில் கட்டுண்டிருந்ததாலும், இங்கு நிலையான அரசமைப்புகள் இல்லாததாலும், நமது அறிவியல் சிறப்புகளை நாமே அறியாமல் இருந்துவிட்டோம். இருப்பினும் நமது பாரம்பரிய அறிவியல், மருத்துவம், கணித நூல்கள் அரபி மொழிமாற்றம் வாயிலாக உலக நாடுகளுக்குப் பயணப்படுவதற்கு அந்தக் காலகட்டம் உதவியது.

பழங்காலத்திலிருந்தே இந்திய குருகுலக் கல்விமுறையில் கல்வி, ஆராய்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவந்தது. நாட்டில் பேரரசுகள் மறைந்தபோது குருகுலக் கல்வி முறையும் தேக்கம் அடைந்தது. இருப்பினும், நமது குருகுலக் கல்வி முறை உலகுக்கு அளித்த ஞானக் கருவூலம் அளப்பரியது. ஆரியபட்டர் முதல் பிரம்மகுப்தர் வரையிலான கணித மேதைகளும், சரகர், சுஸ்ருதர், வாக்படர் எனத் தொடர்ந்த ஆயுர்வேத மருத்துவர்களும் உலக விஞ்ஞானிகளால் மிகவும் மதிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் கோட்பாட்டு இயற்பியல் துறையிலும் இந்திய ரிஷிகள் பலர் அரிய தத்துவங்களை முன்வைத்துள்ளனர். பொது யுகத்துக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பரத்வாஜர், கபிலர், கணாதர், பதஞ்சலி, கெüதமர் ஆகியோரது பங்களிப்புகள் அவ்வகையில் முன்னோடியாக மிளிர்கின்றன.

ஷட் தரிசனங்கள்:

குருகுலக் கல்வி முறையில் பாரதத்தின் ஆறு தத்துவ தரிசனங்கள் கற்பிக்கப்பட்டன. சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், மீமாம்சை, வேதாந்தம் ஆகிய ஆறு தத்துவங்களும்   “ஷட் தரிசனங்கள்’ என்று அழைக்கப்பட்டன. இந்தத் தத்துவங்கள் ஆறுவிதமான தத்துவப் பள்ளிகளில் பயிலப்பட்டன. இவை அனைத்திலும் தேர்ச்சி பெறுபவரே பண்டிதராக மதிக்கப்பட்டார்.

இவற்றில் மீமாம்சையும் வேதாந்தமும் வேதத்தின் அடிப்படையில் அமைந்தவை. மற்ற நான்கும் பொருள் முதல்வாத அடிப்படையில் அமைந்தவை; கபிலரின் சாங்கியம், கௌதமரின் நியாயம், கணாதரின் வைசேஷிகம், பதஞ்சலியின் யோகம் ஆகியவை, அறிவியல் சிந்தனைகளைக் கொண்டவையாக விளங்கின. இவற்றில் கடவுள் மறுப்புக்கும் இடம் அளிக்கப்பட்டது.

கபில மகரிஷி:

கபில மகரிஷி, ரிக் வேதகால முனிவராக (பொ.யு.மு. 3,000 ஆண்டு) கருதப்படுகிறார். சரஸ்வதி நதியின் முகத்துவாரமான குஜராத்திலுள்ள சித்தாபூரில் பிறந்தவர். மிகப் பழைமையான ஸ்வேதாம்பர உபநிடத்தில் கபிலர் பற்றிய குறிப்புகள் உள்ளன. “ரிஷிகளில் நான் கபிலராக இருக்கிறேன்’ என்று கிருஷ்ணர் கூறுவதாக பகவத் கீதையில் சுலோகம் உள்ளது. அவரது சாங்கிய தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தவையே சார்வாகம், ஆஜீவகம், லோகாயதம் ஆகிய நாத்திக சிந்தனை மரபுகள்.

பிரபஞ்சத்தின் தோற்றம், உயிர்களின் தோற்றம், இயற்கையின் அமைப்பு ஆகியவற்றை விளக்கும் சாங்கிய தத்துவத்தை கபிலர் உபதேசித்தார். அவை வாய்மொழி மரபில் குரு பரம்பரையில் கற்பிக்கப்பட்டு, பின்னாளில் பிறரால் நூல்களாக எழுதப்பட்டன. இன்றைய அண்டவியலில் (Cosmology) ஆய்வு செய்யப்படும் பல கருதுகோள்களை 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே முன்வைத்தவர் கபிலர்.

அக்ஷபாத கௌதமர்:

பொ.யு.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படும் அக்ஷபாத கௌதம மகரிஷி, நியாயம் என்ற தத்துவத்தை முன்வைத்தவர். அவர் உபதேசித்த நியாய சூத்திரங்கள், ஆராய்ச்சியாளருக்குரிய நான்கு பிரமாணங்களை முன்னிலைப்படுத்துகின்றன. பின்னாளில் 5 நூல்களாகவும், 528 சூத்திரங்களாகவும் இவை தொகுக்கப்பட்டன.

நேரடிக் காட்சி, அனுமானம், ஒப்பீடு, உரைச்சான்று ஆகிய நான்கும் ஒரு பொருளை அறிய அடிப்படையானவை என்றும், வழிமுறை (Methodology), தருக்கம் (Logic), அறிவாராய்ச்சி (Epistemology) ஆகியவை அறிஞருக்கு அவசியம் என்றும் கூறுகிறது நியாயம். இது நவீன அறிவியல் கூறும் அளவையியலுடன் ஒத்துப்போகிறது. சமணமும் பெüத்தமும் நியாய தரிசனத்திலிருந்து விளைந்த மதங்களாகும். மீஇயற்பியல் (Metaphysics) சித்தாந்தமாக நியாயம் கருதப்படுகிறது.

கணாத மகரிஷி:

வைசேஷிகம் என்ற அணுவியல் தத்துவத்தை நிறுவியவர், பொ.யு.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான கணாதர். குஜராத்தின் துவாரகையில் பிறந்தவரான கணாதருக்கு உலூகர் என்ற பெயரும் உண்டு. “படைப்பிலுள்ள ஒவ்வொரு பொருளும் அணுக்களால் ஆனவை. அணுக்கள் அழிவற்றவை. அணுவின் மிகச் சிறிய அலகு பரமாணு. அணுக்கள் இணைந்து உருவான மூலக்கூறுகளால் உருவானதே உலகம்” என்பது வைசேஷிகத்தின் பிரதானக் கோட்பாடு.

கணாதரின் வைசேஷிக சூத்திரம், நவீனஅணுவியலில் குறிப்பிடப்படும் பல கோட்பாடுகளை 2,600 ஆண்டுகளுக்கு முன்னரே முன்வைத்துள்ளது. அணு கோள வடிவிலானது என்று நவீன அறிவியல் கூறுகிறது. இதையே “அணு நித்யம் பரிமண்டலம்’ என்று கூறுகிறது வைசேஷிக சூத்திரம் (7:1-20).

கணாதருக்குப் பிறகு இரு நூற்றாண்டுகள் கழிந்து, கிரேக்க தத்துவ ஞானியான டெமாக்ரடீஸ், அணுவின் வடிவத்தைப் பற்றி ஆராய்ந்தார். அதையடுத்து, பிரிட்டீஷ் விஞ்ஞானி ஜான் டால்டன் (பொ.யு. 1766} 1844) நவீன அணுவியல் கொள்கையை (Atomic physics) வடிவமைத்தார். ஆக, அணுவியலின் துவக்கம் கணாதரின் வைசேஷிக சூத்திரம் என்று கூறினால் மிகையில்லை.

பதஞ்சலி மகரிஷி

பதஞ்சலி மகரிஷி:

உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தும் இயற்கை மருத்துவ முறையான யோகத்தை செம்மைப்படுத்தியவர், பொ.யு.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பதஞ்சலி மகரிஷி. உத்தரப்பிரதேசத்திலுள்ள கோண்டா பகுதியில் பிறந்தவரான பதஞ்சலி, தனது காலத்துக்கு முன் பயன்பாட்டிலிருந்த யோகக்கலையைச் சீர்த்திருத்தி, ஒரு வடிவமைப்புக்குள் கொண்டுவந்தார். அவரது யோகத்தை சாங்கிய தத்துவத்தின் நீட்சியாகவே வியாசர் மதிப்பிடுகிறார். இதுவும் ஆறு தரிசனங்களுள் ஒன்றாகப் பயிலப்பட்டு வந்துள்ளது.

சமாதி, சாதனை, விபூதி, கைவல்யம் ஆகிய 4 பாதங்களில் 195 சூத்திரங்களுடன் எழுதப்பட்ட “பதஞ்சலி யோக சூத்திரம்’ நூலுக்கு போஜராஜன் விளக்க உரை எழுதியுள்ளார். இதில் 84 வகையான யோகாசன நிலைகளை பதஞ்சலி விவரித்துள்ளார். யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு நிலைகளைக் கொண்ட அஷ்டாங்க யோகத்தை பதஞ்சலி வடிவமைத்துள்ளார்.

யோகம் என்பது உடற்பயிற்சியல்ல. வாழ்க்கை நெறிமுறைகள், யோகாசனங்கள், தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றின் மூலம் உடலைக் கட்டுக்குள் வைப்பதன் வாயிலாக மனதையும் கட்டுப்படுத்தலாம். மூச்சுப் பயிற்சியாலும் தியானத்தாலும், மனமும் உடலும் ஒருங்கிணையும்போது வியக்கத்தக்க சக்தி உருவாகிறது. இதுவே யோக விஞ்ஞானத்தின் அடிப்படை. யோகம் அண்மைக்காலமாக சிறந்த இயற்கை மருத்துவ விஞ்ஞானமாக உலகில் பிரபலமடைந்து வருகிறது.

பரத்வாஜ மகரிஷி:

ரிக் வேத கால முனிவரான பரத்வாஜர், மகாபாரத காப்பியத்தில் இடம்பெறும் துரோணரின் தந்தையாவார். அவரது காலம் பொ.யு.மு. 3,000 ஆண்டாக மதிப்பிடப்படுகிறது. சப்தரிஷிகளில் ஒருவராகப் போற்றப்படும் பரத்வாஜர், ஆயுர்வேத நிபுணராகவும், ஆயுத வடிவமைப்பாளராகவும் திகழ்ந்தவர். அவர் எழுதிய “வைமானிக சாஸ்திரம்’ நூல், விமானவியலில் முன்னோடியாகக் கருதப்படுகிறது. இந்நூல், 8 அத்தியாயங்கள், 3,000 சூத்திரங்களுடன் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.

பூமியின் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கும், பூமியிலிருந்து பிற கோள்களுக்கும், விண்வெளி சஞ்சாரத்துக்கும் இயந்திர வாகனத்தைப் பயன்படுத்தலாம் என்று இந்நூலில் அவர் குறிப்பிடுகிறார். புராணங்களில் இடம்பெறும் புஷ்பக விமானம் உள்ளிட்டவற்றின் இயக்கத்தை அவர் விவரித்துள்ளார். எனினும் இந்நூலிலுள்ள பல கருத்துகள் ஆய்வுப்பூர்வமாக சாத்தியமானவையாக உறுதிப்படுத்தப்படவில்லை.

வைமானிக சாஸ்திரத்திலுள்ள சூத்திரங்களின் மறைபொருளை முழுமையாக உணர்ந்தால்தான், அவர் கூறியவை உண்மையா என்பது தெரியவரும். எனினும், இயந்திரம் மூலமாக விண்ணில் பறக்க முடியும் என்பதை முதன்முதலில் தெரிவித்தவர் பரத்வாஜர்தான்.

பரத்வாஜரும், கபிலரும், கணாதரும் கூறிய கருத்துகள் கற்பûனையே என்ற விமர்சனம் உண்டு. ஆனால், உலகில் தற்போதுள்ள பல நாடுகள் தோன்றியிராத காலகட்டத்தில் பாரதத்தில் தோன்றிய அறிஞர்களான அவர்கள், தங்கள் காலத்தை மீறி புதிய கருத்துகளை விதைத்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

-தினமணி இளைஞர்மணி (12.12.2017)

.

 

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: