மாமனிதரின் நினைவுகளில்…

24 Dec

ஜ.சுப்பா ராவ்

 

சங்க சக்தியை நான் வளர்ப்பேனென
முன்வருவோர் வேண்டும்-
மாபெரும் தியாகியர் படை வேண்டும்…

-என்ற சங்கப் பாடல் ஒன்று உண்டு. இதன் பொருளை உணர்த்திய மகத்தான மனிதர்கள் பலருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். நாட்டுக்காக வாழ்வதன் பெருமிதத்தை உணர்த்திய அவர்களுள் மறக்க முடியாதவர் ஸ்ரீ. சுப்பாராவ் ஜி.

நான் அவரை சென்னை, சேத்துப்பட்டிலுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகமான ‘சக்தி’யில் முதன்முதலில் சந்தித்தபோது நிகழ்ந்த வேடிக்கையான சம்பவம் ஒன்று.

அப்போது நான் ‘சக்தி’க்கு எதிரில் இருந்த விஜயபாரதம் அலுவலகத்திலேயே தங்கி துணை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தேன் (1998- 2000). ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இருந்த ஸ்ரீ வி.சண்முகநாதன் அவர்களைச் சந்திக்க நான் அங்கு சென்றேன். அப்போது வரவேற்புப் பகுதியில் இருந்த ஒரு பெரியவர்- காதுகளில் பொங்கி வழிந்த நரைமுடியுடன், நெற்றியில் சந்தனத் திலகத்துடன் – என்னை மறித்தார். “நீங்க விஜயபாரதத்தில சேர்ந்திருக்கீங்கன்னு சொன்னாங்க. உங்களை சுப்பராவ் பார்க்கணும்னு சொன்னான்” என்றார். “சரிங்கஜி. பார்த்துக்கிறேன்” என்று வேகமாகக் கடந்தேன். எனக்கு அவர்தான் சுப்பராவ் என்பது தெரியாது.

முதல் தளத்திலிருந்த சண்முகநாதன்ஜியைச் சந்தித்து அரை மணிநேரம் பேசிவிட்டுக் கிளம்புகையில், “நீங்கள் சுப்பராவ்ஜியைப் பாருங்கள். உங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்” என்றார் அவர். “ஆமாங்கஜி. கீழேகூட ஒரு பெரியவர் சுப்பராவ் பார்க்கணும்னு சொன்னதாகச் சொன்னார்” என்று, அவரது அடையாளங்களைக் கூறினேன். சண்முகநாதன்ஜி சிரித்தபடியே சொன்னார் “அவர்தான் சுப்பாராவ்ஜி. சங்கத்தின் மூத்த பிரசாரகர்”. திகைத்துப் போனேன்.

உடனடியாக கீழே வந்து அவரைச் சந்தித்தேன். அறிமுகம் இல்லாததால் முதலில் அவரிடம் பேசாததற்கு வருத்தம் தெரிவித்தேன். அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. “சொல்லப் போனால், நான் உங்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியிருக்க வேண்டும். தவறு என்னுடையதுதான்” என்றார். மேன்மக்கள் என்பவர்கள் யார் என்பதை பொட்டில் அடித்த்து போல எனக்குப் புரியவைத்த அனுபவம் அது.

அன்றுமுதல் அவரை அடிக்கடிச் சந்திக்கும் வாய்ப்பு இருந்தது. அப்போது அவர் கலை, பண்பாட்டு அமைப்பான ‘சமஸ்கார் பாரதி’யின் மாநில நிர்வாகியாக இருந்தார். ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும், குடும்பம் குறித்தும், விஜயபாரதம் பணிகள் குறித்தும் விசாரிப்பார். எனது கவிதைகளின் முதல் ரசிகர் அவர். ஏதேனும் ஒரு கவிதை பிரசுரமாகிவிட்டால், அதைப் பாராட்டும் முதல் நண்பராக அவர் இருந்தார். சில திருத்தங்களும் சொல்லி இருக்கிறார்.

அவரைப் பற்றி பிறர் சொல்லக் கேட்டு அறிந்தபோது, மிகவும் வியந்தேன். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆரம்பகாலத் தூண்களுள் அவரும் ஒருவர். ஸ்ரீ. ராம.கோபாலன் அவர்களால் தாக்கம் பெற்று முழுநேர ஊழியரானவர். தமிழக சங்க வளர்ச்சியில் அவரது பங்கு அளப்பரியது. தூய தமிழில் பேச வேண்டும் என்று எப்போதும் வலியுறுத்துவார்.

அவர் மிகவும் கோபக்காரர் என்றும் நண்பர்கள் பலர் என்னை எச்சரித்தனர். ஆனால் அவர் என்னிடம் கோபப்பட்டதில்லை. ஒருவேளை அந்த அளவுக்கு நான் அவரை நெருங்கவில்லையோ, என்னவோ.

அதுமட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள ஸ்வயம்சேவகர்களுக்கு கடிதங்களை அனுப்பிக்கொண்டே இருந்தார். அதற்காக அஞ்சல் அட்டைகளுடனேயே எப்போதும் காணப்படுவார். எதிர்ப்படும் நண்பர்களிடம் பத்து அஞ்சல் அட்டைகளைக் கொடுத்து எழுதித் தருமாறு ஒப்படைத்துவிடுவார். நானும்கூட பலமுறை கடிதங்களை எழுதித் தந்திருக்கிறேன். இந்தக் கடிதம் எழுதுவதை சுமையாகக் கருதும் நண்பர்கள் பலர், அவரைக் கண்டவுடன் தெறித்து ஓடுவதையும் கண்டிருக்கிறேன்.

சங்கத்தைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிய வேண்டுமானால் அவரை அணுகினால் போதும்; தகவல்கள் கொட்டும். ரயில்வே அட்டவணையை மனப்பாடமாக வைத்திருப்பார். ஊருக்குக் கிளம்புகையில் பல ஆலோசனைகள் சொல்வார். அவரிடம் நான் காட்டிய அன்பைவிட, என்னிடம் மிகவும் பிரியமாக இருந்தார். பத்திரிகை வேலையில் செலுத்திய கவனத்தை அவரிடம் கொஞ்சமேனும் காட்டியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

திருமணமானவுடன் சென்னையிலிருந்து கிளம்பியபோது மனைவியுடன் சென்று அவரிடம் ஆசி பெற்றேன். அப்போது என்னைப் பற்றி மிகவும் உயர்வாக என்னவளிடம் கூறினார்; எனக்கே கூச்சமாக இருந்தது. பல இல்லற அறிவுரைகளையும் கூறினார். எங்கிருந்தாலும் சங்கப்பணி செய்ய வேண்டும் என்று வாழ்த்தினார்.

எப்போது சென்னை சென்றாலும் அவரை நேரில் சந்திப்பது எனது வழக்கம். இடையே சிறிது காலம் அவர் சேலம் கார்யாலயம் சென்றுவிட்டபோது அவரைச் சந்திக்கவில்லை. மீண்டும் சென்னையில் பார்த்தபோது முதுமை அவரை வளைத்திருந்தது. ஆயினும் அதே கனிவுடன் பேசினார். கடைசி பத்தாண்டுகளாக முதுமையால் அவர் சிரமப்பட்டார். பத்திய உணவுதான். கடைசியாகச் சந்தித்தபோது, கூன் விழுந்து மிகவும் தளர்ந்திருந்தார்.

அவரது உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டதால், கோவையில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை எடுத்துவந்தார். அவர் கோவையில் இரண்டு மாதங்கள் இருந்தபோதும் அவரைச் சந்திக்க இயலவில்லை. அவர் திடீரென மறைவார் என்று நான் நினைக்கவில்லை. இனி அவரைச் சந்திக்க முடியாது என்று உணரும்போதுதான், எனது சோம்பேறித்தனத்தின் தவறு புரிகிறது.

சமுதாய நலமே வாழ்வின் இலக்காகக் கொண்ட அன்னாருக்கு கண்ணீீர் அஞ்சலி செலுத்தும் நேரம் இது. அவரது ஆசிகளை என்றும் வேண்டுகிறேன்.

இன்று அவரது உடல் தகனமாகிவிட்டது. அவரது விழிகள் வேறு இருவருக்கு பார்வையளிக்க உள்ளன. அவரது வாழ்வே தவ வாழ்க்கை. ததீசி முனிவரின் பரம்பரை இது. இத்தகைய மாமனிதர்கள் வாழும்வரை இந்த நாடு வாழும்.

***

ஸ்ரீ. ஜ.சுப்பாராவ் அவர்கள் குறித்து, ஹிந்து முன்னணி மாநில அமைப்பாளர் திரு. பக்தவத்சலம் அவர்களின் பதிவு கீழே…

***

சென்னை, சைதாப்பேட்டையில் 30.03.1933- இல் கல்லம்மாள்- ஜகதீஷ் தம்பதிக்கு, நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் சுப்பராவ். அவரது குடும்பத்தில் மொத்தம் ஏழு குழந்தைகள்.

தனது 9-ஆவது வயதில் சங்க (ஆர்.எஸ்.எஸ்.) ஸ்வயம்சேவகரானார். 1945-இல் தி.நகர் ராமகிருஷ்ணா பள்ளியில், அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ குருஜியின் சொற்பொழிவு நிகழ்ந்தது. அதைக் கேட்டு சங்கத்தின்பால் மேலும் ஈர்க்கப்பட்டார்.

1954 –இல் தாம்பரம், மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் பி.ஏ. (தற்போது பி.எஸ்சி.) கணிதம் முடித்தார். அதற்குப் பின் நுங்கம்பாக்கம் சுதந்திர தினப் பூங்கா அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளியில்6 மாதங்களும், காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் 4 மாதங்களும், கடலூர் மாவட்டம்- நெல்லிக்குப்பத்தில் ஒரு வருடமும் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

பின்னர், சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பி.டி. (தற்போது பி.எட்.) படித்து முடித்தார். அதன்பிறகு, ஆரணியில் இரண்டு ஆண்டுகளும் செங்கல்பட்டில் ஓராண்டும் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

1948-இல் சங்கம் தடைக்குப் பின்னர், மாநிலம் தழுவிய சங்கப் பத்திரிகை வெளிவராது இருந்தது. இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, ‘தியாக பூமி’ தொடங்கப்பட்டது. 1964-இல் பத்திரிகை நடத்த பணம் இல்லாத காரணத்தால், தமிழகம் முழுவதும் புதிய சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டு தியாகபூமியை மீண்டும் தொடக்கினார், சுப்பராவ்.

1965-இல் சங்கரன்கோவிலில் ஆசிரியராகச் சென்றார். அதுவரை ஷாகா பொறுப்பில் இருந்த அவர், தாலுகா கார்யவாஹ் (வட்டச் செயலாளர்) பொறுப்பேற்றார்.

1967-இல் சங்கத்தின் பிரசாரக் (முழுநேர ஊழியர்) ஆனார். அதே சங்கரன்கோவில் தாலுகாவில் பிரசாரக், 1968-இல் நெல்லை, குமரி மாவட்ட பிரசாரக், 1970-இல் சேலம், தருமபுரி மாவட்ட பிரசாரக், 1974-இல் சென்னை விபாக் பிரசாரக், 1977 முதியோர் கல்வி அமைப்பின் (அப்படி ஒரு விவித க்ஷேத்திரம் இருந்தது. அது சங்கத்தின் துணை அமைப்பு) பொறுப்பாளர்.

1978இல் திருச்சி விபாக் பிரசாரக், 1982 முதல் 1990 வரை தேசிய கல்விக் கழகத்தின் (வித்யாபாரதி) மாநில அமைப்புச் செயலராக இருந்தார்.

1990 முதல் 1996 வரை குருக்ஷேத்திரத்தில் (ஹரியாணா) இருந்துகொண்டு, வித்யாபாரதி பணியாற்றினார். பின்னர் மீண்டும் தமிழகம் வந்த அவர், 1997 முதல் 2000 வரை சம்ஸ்கார் பாரதியின் மாநில அமைப்பாளராக இருந்தார்.

1961-இல் கோவா மாநில மீட்பு வரலாற்றில் தமிழக ஸ்வயம்சேவகர்களுக்கு தலைமை தாங்கினார். (அவர் மறைந்தது, ஆங்கில காலண்டர்படி 19-ஆம் தேதி இரவு 2 மணி), கோவா விடுதலை நாள்- 19.12.1961).

1970-களில் வேடசந்தூர் வெள்ள நிவாரணப் பணி குறிப்பிடத்தக்கது. அதில் அவரது பங்களிப்பு முதன்மையானது.

வ்யவஸ்தா துறை (நிர்வாகம்) துவங்கும் முன்பே அதன் அகராதியாகத் திகழ்தார். தமிழகத்தின் GPRS ஆக வலம் வந்தார். சங்கத்தின் வரலாற்றுக் கலைக் களஞ்சியமாகவும் இருந்தார். மொத்த பாமாலைப் பாடல்களுக்கும் மாஸ்டர் காபியாக இருந்தார்

புதிர் விளையாட்டு, புதிர் கதை, புதிர்க் கணக்கு- இவற்றில் இளம் துடிப்போடு கடைசி வரை இருந்தார். அவரது போட்டோ அதிகமாகக் கிடைக்காது. ஆனால் அவரது கடிதங்கள் லட்சக்கணக்காகக் கிடைக்கும் – எடுத்து வைத்திருந்தால்.

இன்று (20.12.2017) அவரது உடல் மட்டுமே நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டது.

-முகநூல் பதிவு (21.12.2017)

.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: