பத்திரிகையாளர் மணாவுக்கு ஒரு கடிதம்…

6 Feb

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து: குற்றம் சாட்டுவதற்கு முன் சில கேள்விகள் – என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் திரு. மணா சில செய்திகளை  தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டு, கோயில் முன்பு போராடிய பக்தர்களை விமர்சித்துள்ளார்.

https://www.facebook.com/manaanatpu/posts/1675859942470391

அவருக்கு எனது பதிலை அவரது முகநூல பக்கத்தில் இட முயன்றேன். அளவில் பெரிதாக இருப்பதாலோ என்னவோ, இது அங்கு வெளியாவதில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே அதனை இங்கு பதிகிறேன். அவரது தனிப்பட்ட முகநூல் டப்பிக்கும் இதனை அனுப்பி இருக்கிறேன்…

 

அன்புள்ள திரு. மணா அவர்களுக்கு,

உங்கள் பத்திரிகைப் பணிகள் குறித்தும், எழுத்தாற்றல் குறித்தும் ஒரு சக பத்திரிகையாளானாக நான் அறிவேன். சில ஆண்டுகளுக்கு முன் உங்களை ஒருமுறை சந்தித்திருக்கிறேன்.

மதுரை மீனாட்சி கோயிலில் நடந்த தீவிபத்து தொடர்பான உங்கள் முகநூல் பக்கக் கருத்து கண்டேன். உடனடியாக அதற்கு ‘நல்ல செம்பு’ என்று பதிலும் கொடுத்து விட்டேன். ஆனால், உங்கள் இடுகைக்கு வந்துள்ள பின்னூட்டங்களைக் கண்டபின், சில விஷயங்களை விரிவாக எழுதத் தோன்றியது. அதற்காகவே மீண்டும் இந்த பதில்…

  1. முதலில் நீங்கள் நடுநிலையாளரா என்பதே, உங்கள் பதிவு வெளிப்படுத்தும் சந்தேகம். இதழாளர்கள் எந்தத் தலைவரையும் புனிதப் பெயருடனோ மரியாதைப் பெயருடனோ சுட்டுவது வழக்கமில்லை. நீங்கள் கருணாநிதியை ‘கலைஞர்’ என்று குறிப்பிடுகையிலேயே உங்கள் அரசியல் சார்பு தெரிகிறது. உங்கள் அரசியல் சார்பு எனக்கு பெரிய விஷயமில்லை. ஆனால் நீங்கள் நடுநிலை என்று சொல்லிக்கொள்ளக் கூடாது.
  2. மதுரை கோயிலில் குண்டு விவகாரம் தொடர்பாக நீங்கள் சந்தித்த இதழாளரும் ஆகச் சிறந்த ஹிந்து எதிர்ப்பாளர். சின்னக் குத்தூசியைப் பொருத்த வரை, அவர் கொண்ட கொள்கையை மறைக்க எந்நாளும் முயன்றதில்லை. அவர் ஒரு லட்சியவாதி. ஆனால், அதுவே அவரை ஒருசார்பாளர் ஆக்கியது. அவரிடம் சென்றபோதே நீங்களும் ஒருசார்பாளர் என்பது உறுதியாகிறது. உங்களிடம் ஹிந்து அமைப்பினர் நியாயமான கருத்தை எதிர்பார்க்க இயலாது.
  3. உங்கள் பதிவுக்கு வந்துள்ள பின்னூட்டங்களில் பல அப்பட்டமாக பிராமண/ ஹிந்து வெறுப்பைக் கக்குகின்றன. உதாரணங்கள்:

//எல்லாம் அவாள் அவாளின்றி ஒரு அனுவும் கண்டுபிடிக்க முடியாது.//

 //இங்கு தீய சக்தி வழக்கம் போல் குரல் தருகிறது. முகவரியே இல்லாதவன் மத்தியில் ஆட்சி இருப்பதால் கூச்சலிடுக்கிறது. அடிமை அரசு வழக்கம்போல்…//

//ஆரியத்துவா சக்திகள் ஒரு முடிவோடு இருக்கிறார்கள்.//

அநேகமாக நான் உள்பட சிலர் மட்டுமே உங்கள் கருத்துக்கு எதிராக விமர்சித்திருக்கிறோம். உங்கள் நட்பு வட்டாரம் எப்படிப்பட்டது என்பதையும் இந்தப் பின்னூட்டங்கள் புரிய வைக்கின்றன.

நீங்களும் உங்கள் நட்பு வட்டாரமும் எதை ஆராதிப்பது என்பதை நான் தீர்மானிக்க முடியாது. ஆனால், நடுநிலை என்ற பெயரில் உங்கள் அபிமானிகளுடன் சேர்ந்துகொண்டு, கோயிலைக் காக்கப் போராடுபவர்களுக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டாமே!

பி.கு: நான் ஆரியனுமல்ல, பிராமணாளும் அல்ல.

  1. இதே மதுரை மீனாட்சி கோயிலுக்குள் கடைகளை அகற்ற வலியுறுத்திப் போராடிவந்த இந்து முன்னணியின் மாநிலத் தலைவராக இருந்த ராஜகோபாலன், 1994-இல் அவரது வீட்டுக்கு முன்னாலேயே வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து நீங்கள் அறிவீர்களா? அந்த (சி.பி.ஐ.) வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் யார் (சீனி நயினார் முகமது, ஷாகுல் அமீது, ராஜா உசேன், ஜாகிர் உசேன், அப்துல் அஜீஸ், முகம்மது சுபையா) என்பது உங்களுக்குத் தெரியும் என்றே நான் கருதுகிறேன். இதைச் சொல்வதால் மதப்பூசலை நான் தூண்டிவிடுவதாக உங்கள் அபிமானிகள் கூற மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.

காண்க: https://tamil.oneindia.com/news/2011/09/09/lifer-6-accused-rajagopalan-murder-case-aid0091.html

தவறான குண்டுவைப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்களின் விடுதலைக்காக நீங்கள் ஒரு பத்திரிகையாளராகப் போராடியது எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால், வழக்கறிஞர் ராஜகோபாலன் கொல்லப்பட்டபோது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? ஹிந்துக்கள் நலனுக்காகவும் கோயிலுக்காகவும் குரல் கொடுப்பதே பாவம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

  1. இப்போது மதுரை கோயில் தீவிபத்து குறித்து ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவிப்பதை உள்நோக்கம் கொண்டதாக நீங்கள் விமர்சித்துள்ளீர்கள். காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் 2014 அக்டோபரில் தீவிபத்துக்குள்ளானதே. அதன் காரணம் என்ன தெரியுமா? அப்போதும் ஹிந்து அமைப்பினர் தான் கோயிலுக்காகப் போராடினர். அந்த வழக்கு என்ன ஆனது?

காண்க: http://www.dinakaran.com/News_Detail.asp?nid=112588

  1. அவிநாசியிலுள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலின் தேர் தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய தேராக இருந்தது. அது 1990-இல் எரிந்துபோனது. அதற்கு சட்டசபையில் அப்போதைய முதல்வர் ‘கலைஞர்’ கூறிய காரணம் என்ன தெரியுமா? யாரோ புகைபிடித்து வீசிச் சென்ற துண்டுப்பீடி தான் தேர் எரிந்துபோகக் காரணம் என்றார் அவர். உண்மையில் அந்த தீவிபத்தே உள்ளூர் ‘பகுத்தறிவாளர்களால்’ நிகழ்த்தப்பட்டது என்பது உள்ளூர் மக்கள் அறிந்த உண்மை. அப்போதும் இதே ஹிந்து அமைப்புகள் தான் கோயில் தேருக்காகப் போராடின. அங்கு தெருவில் இறங்கிப் போராடியவர்களில் 99 சதவீதம் பேர் ‘அவாள்’ அல்ல என்பது, உள்ளூர்க்காரனான எனக்குத் தெரியும். இதுபோல பல கோயில் தேர்கள் தாமாகவே எரிந்து போயிருப்பது உங்களுக்குத் தெரியுமா?
  2. ஹிந்துக் கோயில்களுக்காக ஹிந்து அமைப்புகள் தான் குரல் எழுப்பும். இது இயல்பானதே. அவை போராடுவதே தவறு என்கிறீர்களா மணா? இந்தப் போராட்டம் இல்லாவிட்டால் நமது ஆமை அரசு என்ன செய்யும் என்பது நீங்கள் அறியாததா? மதுரை மீனாட்சி கோயிலில் கடை விரித்திருந்தவர்கள் யார் என்ற பட்டியலை முதலில் வாங்க முடியுமா என்று பாருங்கள். அவர்களில் இதர சமயத்தவருக்கு அங்கு என்ன வேலை என்று கேட்க முடியுமா என்று முதலில் சிந்தியுங்கள் (இதேதான் ஸ்ரீரங்கம் உள்பட பல கோயில்களில் நிலவரம்). பல கடைகள் பல்லாண்டுகளாக குறைந்தபட்ச வாடகையில் அங்கு நடத்தப்படுவது எப்படி என்று ஆராயுங்கள். அதன் அரசியல் பின்புலத்தில் உள்ள திமுக- அதிமுக ஆதிக்கத்தையும் வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள்!
  3. கடைசியாக ஒரு கேள்வி. நமது அரசு மதச்சார்பற்ற அரசு என்று சொல்லிக் கொள்ளும் அரசு. ஆனால், ஹிந்து கோயில்களும் அவற்றின் சொத்துகளும் மட்டும் அரசு வசம் இருப்பது எப்படி சரியானது? மதச் சார்பற்ற அரசுக்கு கோயில்களில் என்ன வேலை? இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள் அவர்களின் பொறுப்பிலேயே உள்ளன. கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்களும் அவ்வாறே. ஆனால், ஹிந்து கோயில்கள் மட்டும் அரசு பிடியில் இருக்கலாமா? அண்ணா துரை பிறந்த நாளில் சமபந்தி விருந்து போடத்தான் திருக்கோயில்களை நமது முன்னோர் கட்டி வைத்தனரா? அதுவும் கடவுள் நம்பிக்கையற்ற பலர் கோயில் அறங்காவலர்களாக முடிந்தது எப்படி? இந்தக் கேள்விக்கு நேர்மையான பதிலை அளிப்பீர்களானால் நீங்கள் நடுநிலையானவர் என்று கொள்ளலாம்.

சைவ, வைணவ மடங்கள் மிகுந்த மாநிலம் தமிழகம். நீங்களோ உங்கள் பின்னூட்ட அபிமானிகளோ வெறுக்கும் ‘அவாள்’ இல்லாமலே திருக்கோயில் நிர்வாக அமைப்பு ஒன்றை துறவியரைக் கொண்டு உருவாக்க முடியும். அவர்களிடம் திருக்கோயில்களை ஒப்படைக்க தமிழக அரசு முன்வருமா? அதற்கு உங்கள் பத்திரிகையாளர் என்ற சிறப்புத் தகுதியைப் பயன்படுத்துவீர்களா மணா?

-உங்கள் அன்பன்

வ.மு.முரளி

 

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: