கவனச் சிதறல் ஏற்படுத்தும் தலைவர்களின் சிலைகள்!

9 Mar

“திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகத்திலும் ஈ.வெ.ரா. சிலைகள் அகற்றப்படும்” என்று தனது டிவிட்டர் சமூக ஊடகத் தளத்தில் ஓர் இடுகையை அண்மையில் வெளியிட்டார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.

இது முற்றிலும் தவறானது என்பதை மறுநாளே அவர் உணர்ந்துவிட்டார். அதனால்தான் அதை அவர் தனது தளத்திலிருந்து சத்தமின்றி நீக்கிவிட்டார்.

ஆயினும், இந்தத் தவறுக்கு தான் காரணம் இல்லை என்றும், தனது தளத்தை நிர்வகித்து வந்தவர் ஆர்வமிகுதியால் அவ்வாறு செய்துவிட்டதாகவும், அவரை பணியிலிருந்து நீக்கி விட்டதாகவும் அதற்கு அடுத்த நாள் ராஜா விளக்கமும் அளித்தார்.

என்னைப் பொருத்த வரை, இந்த மூன்று நிகழ்வுகளுமே தவறானவை. முதலில் ராஜாவின் தளத்தில் அவ்வாறு வெறுப்பூட்டும் வாசகம் வந்திருக்கக் கூடாது. மாநிலம் முழுவதும் எதிர்ப்பு எழுந்தவுடன் அதை அவசரமாக நீக்கியதும் தவறு. ஏனெனில் அப்போது அதற்கு அவர் உரிய விளக்கம் அளிக்கவில்லை. மூன்றாவதாக, தனது தளத்தில் வெளிவரும் ஒரு விஷயத்துக்கு தான் பொறுப்பில்லை என்று ராஜா போன்ற பெரியவர்கள் சொல்வது சிறுபிள்ளைத்தனம். அவர் ஒன்றும் மு.க.ஸ்டாலின் அல்ல.

இந்த விவகாரத்தில் ராஜா செய்தவை அனைத்துமே அவசரக் கோலம். திரிபுராவில் லெனின் சிலையை உடைத்ததே தவறு என்னும்போது, தமிழகத்தில் பெரியார் (எ) ஈ.வெ.ரா. சிலையை உடைப்பதாகக் கூறுவது நிச்சயம் ஏற்கத் தக்கதல்ல. இத்தகைய கருத்துகளால், மோடி அரசு மேற்கொண்டுவரும் நல்ல பணிகள் குறித்த தகவல்கள் மக்களிடையே பரவாமல், பாஜக குறித்த எதிர்மறைப் பிம்பமே ஏற்படும். இது அக்கட்சிக்கோ, அரசுக்கோ நல்லதல்ல.

திரு.ஹெச்.ராஜா அவர்களை தனிப்பட்ட ரீதியாகவும் நான் அறிவேன். மிகச் சிறந்த பேச்சாளர்; ஹிந்து உரிமைப் போராளி. சமூக வாழ்க்கைக்காக சொந்த வாழ்க்கையில் பல கஷ்டங்களை அடைந்தவர். மேடையில் தலைவர்களின் ஆங்கிலப் பேச்சுகளை எளிதிலும் விடுபடாமலும் தமிழில் மொழிபெயர்க்கும் வல்லமை கொண்டவர். திருக்கோயில்களை அரசின் பிடியிலிருந்து மீட்க இயக்கம் நடத்தி வருபவர். தமிழக பாஜக தலைவர் ஆகி இருக்க வேண்டியவர்.

ஆனால், அவரது முன்கோபமும், முதிர்ச்சியற்ற பேச்சுகளும் பலமுறை அவருக்கும் கட்சிக்கும் சிக்கலை ஏற்படுதியுள்ளன. ஆண்டாள்- வைரமுத்து விவகாரத்திலும் இப்படித்தான் சிக்கலை ஏற்படுத்தினார். ராஜா போன்ற உயர் தலைவர்கள் நா காப்பது அவசியம். அது அவரது உயர்வுக்கும் நாட்டு நலனுக்கும் வழிகோலும்.

எனினும், ராஜாவின் கருத்தை வைத்துக்கொண்டு தமிழகத்தில் பொங்கித் தவிக்கும் அரசியல் தலைவர்களைக் காணும்போது பரிதாபமாக இருக்கிறது. ஈ.வெ.ரா. என்று சொல்வதே தவறு; அவரை பெரியார் என்றுதான் சொல்ல வேண்டுமென்ற அளவுக்கு இங்கு தனி மனித வழிபாடு உச்சத்தில் இருக்கிறது. ராஜாவை மிகக் கேவலமாக விமர்சிக்கும் (உம்: எச்சக்கலை- குஷ்பூ) தலைவர்களின் கருத்துகளைக் கேட்கையில் உண்மையிலேயே இவர்களுக்கு பகுத்தறிவு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

* முதலில் ஒரு தன்னிலை விளக்கம்:

எனக்கு பெரியார் என்று அவரது தொண்டர்களால் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி மீது, அவர்கள் அளவுக்கு பெரிய மரியாதை எதுவும் இல்லை என்பதை இங்கு தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இதைச் சொல்வதால் வசவுகளுக்கு ஆளாவேன் என்றால், அந்தப் பெரியவர் வாழ்நாளெல்லாம் பகுத்தறிவு குறித்து முழங்கியது உண்மையல்ல என்று அவர்கள் உறுதிப்படுத்துவார்கள்.

ஈ.வெ.ரா.வை அவரது வயதுக்காக நான் பெரியவர் என்று மதிக்கிறேன். அவரது சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆயினும் தலைவாழை இலையில் சைவச் சாப்பாடு போட்டுவிட்டு அதன் ஓரத்தில் பன்றிக்கறியை (நாகரிகம் கருதி வேறொரு பொருளை இங்கு தவிர்க்கிறேன்) வைத்தால் சைவர்கள் சாப்பிட முடியாது. அதுபோன்ற நிலையில்தான் நான் இருக்கிறேன்.

அவரது ஆரம்பகால காங்கிரஸ் வாழ்க்கை மட்டுமே மதிக்கத் தக்கது. அங்கும் அவர் ஜாதி எண்ணத்துடன் செயல்பட்டிருக்கிறார். ஆனால் அது கட்டுக்குள் இருந்தது. நான் மதிக்கும் பல பெரியோருடன் – ராஜாஜி, வரதராஜுலு நாயுடு, வ.வே.சு.ஐயர், ஜி.டி.நாயுடு, டாக்டர் மூஞ்சே, சுவாமி சகஜானந்தர், அம்பேத்கர், சுவாமி சிரத்தானந்தர் போன்ற பலருடன் அவர் நட்புப் பாராட்டி இருக்கிறார். காங்கிரஸில் இருந்து வெளியேறிய பிறகு அவரது தேசிய வெறுப்பு உச்சத்தை எட்டியது ஏன் என்பது ஆராயப்பட வேண்டிய புதிர்.

அவர் திராவிடர் கழகம் துவங்கிய பிறகு அவர் பேசியது, எழுதியது, செயல்பட்டது அனைத்துமே, பிராமண வெறுப்பு, ஹிந்து வெறுப்பு ஆகிய இரண்டு அம்சங்களின் அடிப்படையில் மட்டுமே. இந்திய தேசியத்தை நிராகரிக்க ஆங்கிலேயரின் ஆட்சியே நீடிக்க வேண்டும் என்று கூறிய மகராசன் அவர். அவர் விதைத்த வெறுப்பு வித்துகள், இன்றும் பூணூல் அறுக்கும் கயவர்களின் மூலமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

*மற்றொரு தன்னிலை விளக்கம்:

நான் பூணூல் அணியும் பிராமணன் அல்ல.

அவரது பிராமணத் துவேஷம், ஹிந்து எதிர்ப்பாக மாறியது. அவரது காங்கிரஸ் துவேஷம் தேசிய எதிர்ப்பாக மாறியது. அன்றைய சமூகச் சூழலில், அவரது கருத்துகளை அரசியல்ரீதியாக எதிர்க்க காங்கிரஸ் கட்சிக்குத் தெரியவில்லை. பசும்பொன் தேவர் போன்றோர் அவருக்கு எதிராகக் குரல் கொடுத்த போதும், அப்போது ஜனநாயகம் இருந்தது. ஈ.வெ.ரா.வின் கருத்துகளுக்காக அவரை யாரும் சிறுமைப்படுத்தவில்லை.

அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பல தகவல்கள் உள்ளன. அவற்றை நான் பொருட்படுத்தவில்லை. ஒவ்வொரு மனிதரும் இருவேறு ஆளுமைகள் கொண்டவரே என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் என்பதால், அவரது தனிப்பட்ட வாழ்வின் மறுபக்கத்தைக் காண நான் விரும்பவில்லை. நான் சுட்டுவது அவரது பொது வாழ்வை மட்டுமே.

ஆயினும், 1949-இல் தனது 72 வயதில் 26 வயதுடைய பெண்ணை அவர் திருமணம் செய்ததை ஏற்க முடியவில்லை. அதுவே அண்ணாதுரை அவரிடமிருந்து பிரியவும் காரணமானது. திமுக-வின் உதயத்திற்கு அதுவும் ஒரு காரணம்.

மேடையில் கீழ்த்தரமான வசைகளையும், வேசைச் சொற்களையும் கணக்கின்றி தெளிப்பதில் அவர் விற்பன்னராக இருந்தார். அவர் எதிலுமே நம்பிக்கை அற்றவர். எனவே பலரும் அவரது தூற்றலுக்கு ஆளாயினர். எனவேதான் அண்ணாதுரை அவரை திமுக ஆட்சி அமைக்கும் வரை தள்ளிவைத்தார்.

நாம் எதை விதிக்கிறோமோ அதுவே வளரும்; அதுவே விளையும். ஈ.வெ.ரா தமிழகத்தில் வெறுப்பையே தீவிரமாக விதைத்தார். அதன் பலனாகவே, ஆக்கப்பூர்வச் சிந்தனையின்றி, வெறுப்புக் கூச்சலிடும் கும்பல்களாகவே தமிழகம் நிறைந்திருக்கிறது.

கடவுளுக்கு எதற்கு சிலை என்று கேட்ட அவருக்கு ஊர்தோறும் சிலை வைத்து தங்கள் அரசியல் அதிகார உச்சத்தை அவரது கோட்பாட்டாளர்கள் வெளிப்படுத்துகின்றனர். அரசியல் அதிகாரம் காலப்போக்கில் மறையக் கூடியது. இதற்கு உலக வரலாறு எண்ணற்ற சான்றுகளைத் தந்திருக்கிறது. இன்று ஈ.வெ.ரா. சிலைக்கு எதிராக ஹெச்.ராஜா தெரிவித்திருக்கும் கருத்து அவருடையது மட்டுமல்ல. இத்தகைய அதிருப்தி எழுவது மக்களாட்சி முறையில் ஓர் அங்கமே.

தலைவர்களின் சிலைகள் வாழ்வது அதிகாரத்தால் அல்ல, அவர்களின் உயர் கருத்துகளின் பரவலால் மட்டுமே. அந்த அளவுக்கு ஈ.வெ.ரா. அவர்களை அனைத்துத் தரப்பினரின் தலைவராக முன்வைக்க முடியுமா?

தமிழகம் பெரியார் மண் என்று வெற்று முழக்கம் இடுவோர், தமிழகத்தில் ஏற்கனவே பாஜக தனது வெற்றிக் கணக்கை துவக்கிவிட்டது என்பதை மறந்துவிடுகிறார்கள். சொல்லப்போனால், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே பாஜகவின் தோழமைக் கட்சிகளாக இருந்தவைதான். இங்கும் அரசியலில் மாற்றம் ஏற்படும். ஏனெனில் மாற்றம் ஒன்றே மாறாத உலக நியதி. அதை மறுத்து முஷ்டி மடக்குவோரை எண்ணி பரிதாபம் கொள்ளவே முடியும்.

எனது உறவினர்கள் பலர் தீவிர நாத்திகர்கள்; திக, திமுக அனுதாபிகளும் கூட. சுமார் 25, 30 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களிடம் விவாதிக்கையில் என்னிடம் அவர்கள் பலமுறை சவால் விட்டிருக்கிறார்கள். உங்கள் ஆர்.எஸ்.எஸ். பருப்பு இங்கு வேகாது என்பார்கள். அவர்களுக்குப் பதிலடியாக நான், இந்தியாவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். வெல்லும் காலம் விரைவில் வரும் என்பேன். அப்போது பாஜக பெயர் சொல்லும் அளவிலான கட்சியாகக் கூட இல்லை. இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது.

ஆனால், அவர்கள் கண்ணெதிரிலேயே தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள் நிகழ்ந்தன. தேசிய அளவில் வாஜ்பாயும் (1998) மோடியும் (2014) பிரதமர் ஆனதைப் பார்த்த பிறகும், தமிழகத்தில் மாற்றம் வராது என்று யாராவது பகல் கனவு கொண்டிருந்தால், அதற்கு வாஜ்பாயோ, மோடியோ பொறுப்பில்லை.

*இங்கு மற்றொரு தன்னிலை விளக்கம்:

இப்போதும் நான் எந்த ஒரு அரசியல் கட்சியையும் (பாஜக) சார்ந்தவன் அல்ல. எனக்கு அதன் கொள்கைகள் பிடித்தால் அதற்கு ஆதரவு அளிப்பேன். பிடிக்காத கருத்துகளை கண்டிப்பாக எதிர்ப்பேன். இதுவே எனது சுய மரியாதை என்று கருதுகிறேன். இடதுசாரிகள் போலவோ, திராவிட இயக்கத்தினர் போலவோ, கண்ணை மூடிக்கொண்டு எதையும் என்னால் ஆதரிக்க முடியாது. அதனால்தான் ஹெச்.ராஜாவை என்னால் விமர்சிக்க முடிகிறது.

இப்போது நீண்ட இக் கட்டுரையின் முடிவுக்கு வருகிறேன்.

சிலைகள் அதிகாரச் சின்னங்களாக கருதப்படும் வரை அவற்றை காவல் துறையால் மட்டுமே காத்து நிற்க முடியும்.

நான் சிலைகளை உடைப்பதை நியாயப்படுத்தவில்லை. அதே சமயம், மிரட்டல்கள் மூலமாகவோ, அதிகார அச்சுறுத்தல் மூலமாகவோ, எந்தச் சிலைகளைையும் யாரும் நீண்ட காலம் காத்துக்கொண்டிருக்க முடியாது. அரசியல் லாவணிக்காக ஆவேசக் கூச்சல்களை வேண்டுமாயின் எழுப்பலாம். இதனை எனது நண்பர்களான, தலைவர் சிலை வழிபாட்டாளர்கள் உணர வேண்டும்.

அதேபோல, சிலைகளின் எதிர்காலத்தை வருங்காலம் பார்த்துக்கொள்ளும் என்று விட்டுவிட்டு, மக்கள் நலப்பணிகளில் ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக நண்பர்கள் இறங்கவேண்டும். சமூக ஊடகங்களில் திடீர் ஹிந்துப் போராளிகளின் அரவம் அதிகமாக இருக்கிறது. அந்த நண்பர்களுக்கு, சமூகத்தை ஒருங்கிணைப்பதே இப்போதைய தேவை- அதைப் பிளப்பதல்ல என்று சொல்ல விழைகிறேன்.

கோயிலில் கடவுள் சிலையை வழிபடும் ஆன்மிகவாதிக்கு அந்தச் சிலையில் இருப்பது தெய்வத்தின் உருவகம் மட்டுமே என்று நன்றாகவே தெரியும். அவர்கள் பிள்ளையார் சிலைகளை 1960-களில் திக.வினர் தெருவில் உடைத்தபோது அமைதியாக இருந்ததன் அர்த்தம், இப்போது விளங்கியிருக்கும். இன்று தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியன்று வலம் வரும் லட்சக் கணக்கான விநாயகர் சிலைகளே அதற்கான சரியான பதில்.

ஆகவே, கருத்துகளால் மக்களை வெல்வதே ஆன்மிகவாதிகளின் இலக்காக இருக்கட்டும். அவர்கள் தங்கள் கவனங்களை தெருச்சந்திகளில் நிற்கும் சிலைகள் திசை திருப்புவதற்கு அனுமதிக்க வேண்டாம்!

Advertisements

One Response to “கவனச் சிதறல் ஏற்படுத்தும் தலைவர்களின் சிலைகள்!”

Trackbacks/Pingbacks

  1. கவனச் சிதறல் ஏற்படுத்தும் தலைவர்களின் சிலைகள்! – TamilBlogs - 09/03/2018

    […] 1 min ago அரசியல் Leave a comment 1 […]

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: