பிராந்தியக் கட்சிகளின் கூட்டணிக்கு அச்சாரம்?

21 Mar

-அருண் நேரு

(2012-இல் வெளியான பழைய கட்டுரை… காலத்தின் பொருத்தப்பாட்டால் மறுபதிவு செய்யப்படுகிறது. அப்போதும் மக்களை ஊடக அறிஞர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதற்கான சான்றும் கூட.)

அருண் நேரு

கூட்டணிக் குழப்பங்கள், கொள்கைத் தடுமாற்றங்கள், கிரேக்கப் பொருளாதார நெருக்கடி, பிரிட்டனில் நிலவும் தொழில் மந்தநிலை போன்ற எதிர்மறையான நிகழ்வுகளிடையே நமது பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்து வருவதாகத் தகவல்கள் வருகின்றன.

இந்த மோசமான நிலையிலும்கூட, நாட்டின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நம்மால் பிரணாப் முகர்ஜியைத் தேர்வு செய்ய முடிந்திருக்கிறது; விரைவில் அவர் தேர்ந்தெடுக்கப்படவும் இருக்கிறார்.

ஓர் அதிசயமான உண்மை என்னவென்றால், பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்வாக இருக்கவில்லை என்பதுதான். எந்த ஒருவரது தகுதியையும் வாய்ப்பையும் வழக்கமான சதிக் கோட்பாடுகள் குலைத்துவிடும். இந்நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் பிரணாப் முகர்ஜி அனைவரிடமும் நம்பிக்கை ஏற்படுத்துபவராகவும், எதிர்க்கட்சிகளிடமும் நடுநிலையாகச் செயல்படுபவராகவும் ஒரு நிலையான சக்தியாக விளங்கி வந்திருக்கிறார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆரம்பத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தைப் பற்றி சரிவரப் புரிந்துகொள்ளாமல் தான் இருந்தார். எனினும் ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம், சிவசேனா போன்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையை சட்டென்று புரிந்துகொண்டார்.

சோனியா காந்தி சரியான நேரத்தில் மிகச் சரியான முடிவெடுத்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். இப்போது பிரணாப் முகர்ஜியை அனைவரும் சேர்ந்து ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தால் நல்ல முன்னுதாரணமாக இருக்கும். அடுத்து குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அனைவரும் கவனம் செலுத்தலாம்.
நமது மக்களாட்சி முறையில் அரசியல் பிரதான அங்கம் வகிக்கிறது. எனவே, குடியரசுத் தலைவர் தேர்தல் போன்ற வாய்ப்புகளை ஒவ்வொருவரும் தங்கள் தேர்தல் களத்துக்கு சாதகமான வாய்ப்பாகப் பயன்படுத்தவே முயல்வர்.

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமை முன்னிறுத்திய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, அம்மாநிலத்திலுள்ள சிறுபான்மையினர் வாக்கு தான் குறி. முன்னாள் மக்களவைத் தலைவர் பி.ஏ. சங்மாவை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிறுத்துவதற்கு அம்மாநிலத்திலுள்ள பெருமளவிலான பழங்குடியினரின் வாக்குகள் தான் காரணம். இதில் தமிழ்நாடு முதல்வர் புதிய கூட்டாளியாகச் சேர்ந்திருக்கிறார்.

பா.ஜ.க.வில் நிலவும் குழப்பங்களிலிருந்து தள்ளி நிற்க ஐக்கிய ஜனதாதளம் முயற்சிக்கிறது. சிவசேனாவும் அகாலிதளமும் கூட இதே சேதியைத் தான் கூறி இருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நடைமுறைத் தேவை குறைந்திருப்பதையே இவை காட்டுகின்றன.

லோக் ஜனசக்தியும் ராஷ்ட்ரீய ஜனதாதளமும் காங்கிரஸýக்கு துணையாக நிற்கின்றன. இரு கட்சிகளுக்கும் மத்திய அமைச்சரவை மீது நோட்டம். பிகாரில் தனித்து விடப்பட்ட காங்கிரஸýடன் கூட்டணியைப் புதுப்பிக்கவும் இக்கட்சிகள் ஆவலாக இருக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சியோ பொறுத்திருந்து முடிவெடுக்கத் தீர்மானித்திருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி தடுமாறினால் அதன் பலன் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளுக்குத் தான் செல்லும்.

தற்போது பெரும்பாலானோர் சுறுசுறுப்பாகிவிட்டனர். விரைவில் நடைபெற உள்ள ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், குஜராத், இமாச்சல் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல்களை நோக்கி அனைவர் கவனமும் திரும்ப இருக்கிறது.

1980- 85 காலகட்ட அரசியல் நிகழ்வுகளை என் மனம் அசைபோடுகிறது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவை ஆலோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்க மாட்டார். அக்குழுவில் இருந்த மூத்த உறுப்பினர் ஆர்.வெங்கட்ராமன் குடியரசு துணைத் தலைவராகவும் பிற்பாடு குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தார். அதேபோல அக்குழுவில் இருந்த பி.வி.நரசிம்ம ராவ் பின்னாளில் பிரதமர் ஆனார்.

அக்குழுவின் உறுப்பினராக இருந்த பிரணாப் முகர்ஜி தற்போது குடியரசுத் தலைவர் ஆக இருக்கிறார். இதுவரை, முகர்ஜியை நாடி நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பல பதவிகள் வந்திருக்கின்றன; அனைத்தையும் திறம்பட அவர் நிறைவேற்றி இருக்கிறார். இந்திரா காந்தி இப்போது உயிருடன் இருந்திருந்தால், இவற்றைக் கண்டு மிகவும் மகிழ்ந்திருப்பார்.

*****

ஒவ்வொரு அரசியல் நிகழ்வும் ஒரு சேதியைக் கூறுகின்றன. தற்போதைய நிகழ்வைப் பொருத்தவரை, சரியான அரசியல் முடிவு எடுத்ததன் நற்பலனை காங்கிரஸýம் சோனியா காந்தியும் பெறுகின்றனர். அதேசமயம், பா.ஜ.க.வோ குழப்பத்தில் தத்தளிக்கிறது. இதையே, மத்தியில் காங்கிரஸும், மாநிலங்களில் பா.ஜ.க.வும் வலுவாக உள்ளன என்று ஏற்கெனவே நான் குறிப்பிட்டேன். இவ்விரு கட்சிகளில் காங்கிரஸýக்குத் தான் எதிர்காலத்தைக் கையாள்வதற்கான சாதகமான சூழல் காணப்படுகிறது.

பிராந்தியக் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. இதில், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி மட்டுமே சிரம திசையில் தென்படுகிறார். இப்போதும் அவர் நிலவரத்தைப் புரிந்துகொள்ளாவிடில் நஷ்டம் அவருக்குத்தான். அவர் போராளியாக இருக்கலாம். ஆயினும் அவருக்கு இன்னமும் வாய்ப்புகள் உள்ளன.

காங்கிரஸ் இந்த மோதலைத் தவிர்க்கவே விரும்பும். ஏனெனில், சட்டிக்குப் பயந்து அடுப்பில் குதிப்பதை அக்கட்சி விரும்பாது அல்லவா?

இப்போதும் கூட, அடுத்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 130 -140 இடங்களில் வெல்லும் என்றும் பா.ஜ.க. 110- 120 இடங்களில் வெல்லும் என்றும் மதிப்பிடுகிறேன். இந்த எண்ணிக்கை, பிராந்தியக் கட்சிகளின் சேர்க்கையைப் பொருத்து மாறுபடலாம். காங்கிரஸ் தனது எண்ணிக்கையை 140 -150 ஆக உயர்த்தவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், பா.ஜ.க.வுக்கு பிரகாசமான வாய்ப்பிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

*****

ந்திரப் பிரதேசத்தில் என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள். தற்போதைய சூழலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. எனினும் இந்த வெற்றிக்கு சி.பி.ஐ.யும், ஜெகன்மோகன் கைது, சிறை உள்ளிட்ட நாடகங்களும் தான் காரணம் என்றே நான் நினைக்கிறேன்.

விஷயம் தெரிந்தவர்கள் ஜெகன்மோகன் ரெட்டி எம்.பி.யின் சொத்துக்கள் கண்டு மலைக்கின்றனர். ஆனால், எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவரிடமும் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதே பொதுவான அபிப்பிராயமாக இருக்கிறது. நானும், அரசியல் போட்டிகளை அரசியல் ரீதியாகத் தான் அணுக வேண்டும்; சி.பி.ஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகியவற்றைக் கொண்டல்ல என்று நான் பலமுறை எழுதிச் சலித்துவிட்டேன்.

குலாம் நபி ஆசாத்தும் வயலார் ரவியும் மந்திரவாதிகளல்ல. தவிர, ஆந்திர மாநில காங்கிரஸ் குழுவுக்கு என்ன ஆனது? மாநிலத்தில் வெல்ல முடியாதபோது, அம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது?

அரசியல் என்பது யதார்த்தத்தை அனுசரித்து நடந்துகொள்வதில்தான் உள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸýக்கும் காங்கிரஸுக்கும் இடையே ஏன் கூட்டணி அமையக் கூடாது? ‘மறப்போம், மன்னிப்போம்’ பாணியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸýடன் சமரசமாகப் போவதுதான் காங்கிரஸýக்கு நல்லது.

தெலுங்கானா ராஷ்ட்ர சமிதிக்கு தெலங்கானா பகுதியில் நல்ல வரவேற்பு தெரிகிறது. அதேசமயம், தெலுங்குதேசம் கட்சியின் பிடி நழுவி வருகிறது. ஒரு காலத்தில் மாநிலத்தை கைக்குள் வைத்திருந்த சந்திரபாபு நாயுடு, இன்று ஜெகன்மோகன் ரெட்டியிடம் களத்தை இழந்து நிற்கிறார். ஆந்திரப் பிரதேசத்திலுள்ள 42 மக்களவை இடங்களில் 2009ல் 30க்கு மேற்பட்ட இடங்களை வென்ற காங்கிரஸ், அடுத்த தேர்தலில் 20- 25 இடங்களை இழக்க நேரிடலாம்.

*****

அடுத்து, மத்திய அமைச்சரவையில் செய்யப்படும் மாற்றங்களை நோக்கி உடனடியாக கவனம் திரும்பும். இது தேவையா? தற்போதைய அமைச்சரவைக் குழுவின் பலம், பலவீனங்களை ஆராய்ந்து சரிப்படுத்தினாலே போதும். எஸ்.எம்.கிருஷ்ணா, வீரப்ப மொய்லி, ஏ.கே.அந்தோணி, சரத் பவார், சுஷீல்குமார் ஷிண்டே, விலாஸ்ராவ் தேஷ்முக், குலாம் நபி ஆசாத், வீர்பத்ர சிங் ஆகியோர் மாநில முதல்வர்களாக இருந்து மத்திய அமைச்சர் ஆனவர்கள்; மூத்த அமைச்சர்களாகவும் இருப்பவர்கள். இவர்களை விடத் திறமையானவர்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டுமா என்ன?

2009க்குப் பின் வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2வது ஆட்சி உச்சபட்சத் தன்னிறைவில் திளைத்தது. 2ஜி ஊழல் விவகாரமோ அரசியல் தலைமையில் உச்சகட்டக் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தவிர, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, வெளி விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஆகியவற்றின் முடிவெடுக்கும் அதிகாரம் குறைக்கப்பட்டு, புதிய அமைச்சர் குழுக்கள் உருவாக்கப்பட்டு சமரசம் செய்துகொள்ளப்பட்டது. இக்குழுக்களில் நிபுணர்களும் வல்லுநர்களும் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அறிவாளிகளாக இருக்கலாம்; ஆனால், அவர்களால் குழப்பமும், கொள்கை உருவாக்கத்தில் தாமதம் ஏற்பட்டதும் தான் மிச்சம்.

*****

தப்போதைக்கு பிராந்தியக் கட்சிகளின் முனைப்பால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத முன்னணி உருவாவதற்கான வாய்ப்பு கனிந்திருக்கிறது. பிகார் முதல்வர் நிதீஷ்குமார் நரேந்திர மோடியைக் குறிவைத்து வீசியுள்ள குண்டு இதில் முதல் நடவடிக்கையாக உள்ளது. பிராந்தியக் கட்சிகள் ஒருங்கிணைவதில் குழப்பம் இருக்கலாம். ஆனால், அவர்களே எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறுவர்.

அடுத்த தேர்தலில் காங்கிரஸும் பா.ஜ.க.வும் சேர்ந்து 250 இடங்களைப் பிடித்து, பிற கட்சிகள் 280 இடங்களைப் பெறுமானால், பிராந்தியக் கட்சிகளின் கரமே ஓங்கும்.

எதிர்காலத்துக்கான அரசியல் விளையாட்டு முன்கூட்டியே துவங்கிவிட்டது. இதன் காரணமாக பிரணாப் முகர்ஜிக்கு கூடுதல் ஆதரவு கிட்டும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

நன்றி: தினமணி (25.06.2012)

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த கட்டுரையின் தமிழ் வடிவம். எனது மொழிபெயர்ப்பு.

 

One Response to “பிராந்தியக் கட்சிகளின் கூட்டணிக்கு அச்சாரம்?”

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: