குழம்பிய குட்டையும் அரசியல் நிர்பந்தங்களும்

26 Mar

-அருண் நேரு

(2012-இல் வெளியான மற்றொரு பழைய கட்டுரை… காலத்தின் பொருத்தப்பாட்டால் மறுபதிவு செய்யப்படுகிறது. அப்போதும் மக்களை ஊடக மேதாவிகள் புரிந்துகொள்ளவில்லை என்பதற்கான சான்றும் கூட).

கூட்டணி நாடகம் மீண்டும் அரங்கேறிவிட்டது. இதில் தவறொன்றும் கூற முடியாது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதிக்கும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விஷயங்களில் கருத்து வேறுபாடு இருப்பது கூட்டணியில் சகஜம்தான். காங்கிரஸ் கட்சிக்குச் சொந்த அபிலாஷைகள் இருக்கத்தான் செய்யும். அதை நிறைவேற்றவே அக்கட்சி போராடும். அதுபோல திரிணமூல் காங்கிரஸுக்கும் சமாஜ்வாதிக்கும் சொந்தத் திட்டங்கள் இருக்கும். இப்போது ஐ.மு.கூட்டணி- 2 ஆட்சியிலும் காங்கிரஸிலும் நிலவும் குழப்பங்களுக்குத் தீர்வு காணும் பொறுப்பு சோனியா காந்திக்குத்தான் இருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயர் அடிபடுவதில் அதிசயமில்லை. எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட யதார்த்தமான அரசியல் களத்தில் இது இப்போது பேசும் பொருளாகி இருக்கிறது. எண்ணிக்கையை எட்ட பிராந்தியக் கட்சிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பிராந்தியக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படுத்தினால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு இப்பிரச்னையிலிருந்து மீள முடியும். ஆனால் இப்போதைக்கு காங்கிரஸ் கட்சிக்கு இது அறிவுப்பூர்வமான செயலாக இருக்காது.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலும் அடுத்து காத்திருக்கிறது. அதைவிட முக்கியமானது, நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என்பதே.

எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பார்த்துக்கொண்டு வாழ முடியாது. உலகம் மாறிவரும் சூழலில், சூழ்ந்திருக்கும் நிர்பந்தங்களிடையே நாம் மட்டும் தனித்து நிற்க முடியாது. நமது பிரச்னைகள் அனைத்திற்கும்  ‘வெளியிலிருந்து’ திணிக்கப்பட்ட சதிக் கோட்பாடுகளை குறை கூறித் தப்ப முடியாது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல நிர்வாகத்திறன் கொண்ட அரசை நாம் காணவில்லை; பல திசைகளிலிருந்தும் நம்மைக் காயப்படுத்தும் தாக்குதல்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தபோதும், பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் எதுவும் நடக்காததுபோல காட்சி அளித்தனர். தற்போது பிரச்னை காலடியில் வந்து நிற்கிறது.

கருத்து வேறுபாடுகளை அவதூறு பேசுவதன் மூலமாகவோ, பரிகாசம் செய்வதன் மூலமாகவோ, தலைமையைக் குஷிப்படுத்தலாம்; பிரச்னையைக் கட்டுப்படுத்த முடியாது. கூட்டணிக் கட்சிகளிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததை பாபா ராம்தேவ் விவகாரத்திலேயே பார்த்துவிட்டோம். உண்ணாவிரதம் இருக்க தில்லி வந்திறங்கிய அவரைச் சமாதானப்படுத்த விமான நிலையத்துக்கே அமைச்சர்களும் அமைச்சரவைச் செயலரும் ஓடியதை மறக்க முடியாது.

இப்போதும் பொருளாதாரம் முழுவதுமாகக் கட்டுக்கடங்காத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடவில்லை. ஐ.மு.கூட்டணி-2க்கு இப்போதும் சிறிது நம்பிக்கை வெளிச்சம் இருக்கிறது. பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரானால் அரசின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க முடியும். பிரதமர் நிதியமைச்சகப் பொறுப்பை ஏற்பாரானால், நல்ல விளைவுகள் ஏற்படும். ஒருவரை ஒருவர் வசை பாடிக்கொண்டிருக்க இது நேரமல்ல; இந்த நெருக்கடியை அனைவரும் சமாளிக்கட்டும்.

 * * * *

 இந்த வாரத்தின் பிரதான செய்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் பாபா ராம்தேவைச் சந்தித்ததுதான். எனினும், செய்தியாளர் சந்திப்பில் மத்திய அரசைக் குறைகூற ராம்தேவ் துவங்கியவுடன் முலாயம் அந்த இடத்தைக் காலி செய்துவிட்டார். இது மிகச் சரியான நடவடிக்கை. இதில் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் அறிய வேண்டிய சேதி இருக்கிறது.

யோகா குரு ராம்தேவ் தனது நிறுவனங்களின் நிதிப் பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அவர் கூறுவதுபோல பழிவாங்கும் நடவடிக்கை ஏதுமில்லை என்றே நான் நினைக்கிறேன். அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் பேசினாலும் ஆச்சரியம்தான். அவருடன் சகவாசம் கொண்டிருப்பது எதிர்காலத்தில் அரசியல் தற்கொலையாகவே முடியும்.

அண்ணா ஹஸாரேவும் பல்வேறு குரல்களில் பேசி வருகிறார். அவரது தார்மிகப் பேச்சுகளைக் கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது. நமது இப்போதைய தேவை ஆன்மிகவாதியோ ஒழுக்கத்தைப் போதிக்கும் சர்வாதிகாரியோ அல்ல. சிந்தனையிலும் செயலிலும் தாக்கம் ஏற்படுத்தும் வல்லமை கொண்ட அரசியல் தலைமையே நமது தேவை.

 * * * *

தனிப்பட்ட தலைவர்கள் கசியவிடும் தலைப்புச்செய்திகளுக்காக மின்னணு ஊடகங்கள் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றன. நிதர்சனம் என்னவென்றால், முடிவுகளை எடுக்க வேண்டியவர்கள் உச்சபட்சக் குழப்பத்தில் உள்ளார்கள் என்பதுதான். சரத் பவார், முலாயம் சிங், ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், மாயாவதி, நிதீஷ்குமார் ஆகியோரின் அரசியல் நடவடிக்கைகளும், எண்ணிக்கை விளையாட்டும் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மறுபுறத்தில் காங்கிரஸும் பாஜகவும் பகடைகளுடன் காத்திருக்கின்றன.

குடியரசுத் தலைவர் யார் என்பதை பிராந்தியக் கட்சிகள் தீர்மானித்துவிட்டால் அதை காங்கிரஸும் பாஜகவும் வழிமொழிய வேண்டியதுதான். எதிர்காலத்தில் இது பிரதமரைத் தேர்ந்தெடுக்கவும் முன்னோடியாக அமையக்கூடும்.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவுக்குப் பெருமை அளித்த பலரை நாம் பெற்றிருக்கிறோம். பிரணாப் முகர்ஜி, சோம்நாத் சட்டர்ஜி, டாக்டர் கரண் சிங், மீரா குமார், ஹமீத் அன்சாரி, கோபாலகிருஷ்ண காந்தி, பி.ஏ. சங்மா ஆகியோரை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளர்களாக ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இவர்கள் அனைவருமே மரியாதைக்குரியவர்கள் மட்டுமல்ல, கவனத்தில் கொள்ள வேண்டியவர்கள்தான்.

இந்தத் தேர்தல் பல எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே காட்டுகிறது எனலாம். ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ தலைவர்களைக் கொண்ட பிராந்தியக் கட்சிகள் காங்கிரஸ் மற்றும் பாஜகவைவிட அதிக இடங்களில் வருங்காலத்தில் வெல்லக் கூடும். இதையே நான் பல காலமாகக் கூறியும் வருகிறேன்.

எண்ணிக்கையே அரசியல் முடிவுகளைத் தீர்மானிக்கிறது. எனது கணிப்பின்படி அடுத்த தேர்தலில் காங்கிரஸ் 130- 140 இடங்களில் வெல்லலாம்; பாஜகவுக்கு 110- 120 இடங்கள் கிடைக்கலாம். இந்த கணிப்பு காங்கிரûஸப் பொருத்தவரை மேலும் குறையக் கூடும். மகாராஷ்டிரத்திலும் ஆந்திரத்திலும் காங்கிரஸ் கட்சி பலத்த அடி வாங்க வாய்ப்பிருக்கிறது.

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்பிருப்பதாகவே நான் நினைக்கிறேன். எனினும், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உதவியுடன் பிராந்தியக் கட்சிகள் வெற்றி பெற்றுவிட்டால், இடைத்தேர்தலை மிக விரைவிலேயே எதிர்பார்க்கலாம்.

எண்ணிக்கை பலமும் தொடர் நிகழ்வுகளும் பல முடிவுகளைத் தீர்மானித்தால் வியக்க ஏதுமில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் நடந்தேறும் நிகழ்வுகள் குறித்தும், மக்களிடையே அதிருப்தி உணர்வு பெருகிவருவது குறித்தும் நான் ஆச்சரியப்படவில்லை.

இப்போதைக்கு காங்கிரஸ் பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளது. அடுத்துவரும் நாள்கள் ஒவ்வொருவருக்கும் முக்கியமானவை. எதிர்காலத் திட்டமிடல்களும் குழப்பங்களும் சில நேரங்களில் சோர்வும் அரசியல் கட்சிகளை ஆட்கொள்ளலாம். இதுபோன்ற சூழலில்தான், பல தரப்பிடையே சுமுக முடிவுகளை ஏற்படுத்தும் தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் போன்ற நிபுணர்களின் தேவையை உணர்கிறேன்.

சரத் பவார், மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, முலாயம் சிங் ஆகியோரைக் கவனிக்கும்போது, சத்தமின்றி இருக்கும் நிதீஷ்குமாரை மறந்துவிடக் கூடாது. கூட்டணி நிர்பந்தங்கள் மாறும் நிலையில், தோல்வியை எட்டும் நிலையும் வெற்றிக்கான சந்தர்ப்பமாக மாற்ற ஒவ்வொருவருக்கும் வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்வு கூட்டணிக் கட்சிகளையும்  ‘நண்பர்’களையும் திருப்திப்படுத்துமானால் சூழல் மாறிவிடும்.

தொலைக்காட்சி சேனல்கள் அரசியல் கணக்குகளுடன் பரபரப்பாக இயங்கும். எனினும் கூட்டல், கழித்தல் கணக்குகளைவிட சூழல் சிக்கலாகவே இருக்கும். ஏனெனில், பலரும் பல திசைகளில் செல்லும்போது, அவர்களது இறுதி ஆதரவு யாருக்கு என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இப்போதைய குழப்பமான அரசியல் நிலவரத்தைக் காணும்போது நல்ல ஹிந்தி திரைப்படம் பார்க்கச் செல்வதே நல்லது என்று தோன்றுகிறது.

தினமணி  (18.06.2012)
தி நியூ இந்திய எக்ஸ்பிரஸ் கட்டுரையின் தமிழாக்கம்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: