கிராமிய வங்கி ஊழியர்களின் ஓய்வூதியப் போராட்டம்

28 Apr

-பி.எஸ்.எம்.ராவ்


கிராமிய வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள் கடந்த 20 ஆண்டுகாலமாக நடத்திவரும் உரிமைப் போராட்டம்,  நமது நாட்டின் அதிகாரவர்க்கம் எவ்வாறு கீழ்நிலையிலுள்ளவர்களைப் புறக்கணிக்கிறது என்பதையும்,  ஜனநாயகத்தின் அடிப்படையான மக்கள்நல அரசு  என்ற கோட்பாட்டை முழுமையாக நிராகரிக்கிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

இந்த வங்கிகளில் பணி புரிந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களின் கூக்குரல்கள் விழலுக்கு இறைத்த நீராயின. இந்த ஓய்வூதியர்கள் 25,000 பேரில் சுமார் 3,500 பேர் ஏற்கெனவே காலமாகிவிட்டனர். இவர்கள் 1990-களில் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்தனர். அது 2003-இல் சட்டப் போராட்டமாக வடிவெடுத்தது. ஆயினும் இதுவரை இவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இனிமேல் கிடைத்தாலும், ஓய்வூதியம் பெறாமலே இறந்துபோன ஆத்மாக்கள் நற்கதி அடையுமா என்று தெரியவில்லை.  

இந்த விவகாரம், முக்கியமான நான்கு கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்தக் கேள்விகளுக்கு பதில் கூற முற்படுவதற்கு, இந்த பிரச்னையின் வரலாற்றை முதலில் அறிந்தாக வேண்டும்.

ஊரக வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பிராந்திய ஊரக வங்கி (ஆர்ஆர்பி) என்ற வங்கி நடைமுறை மத்திய அரசால் 1975-இல் முன்னெடுக்கப்பட்டது. கிராமிண் வங்கி, கிராமிய வங்கி, கிராமீணா வங்கி, கிராம வங்கி, டெஹாட்டி வங்கி என, அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பெயர்களில் இவை இயங்குகின்றன. கிராமப்புற விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், கிராமக் கலைஞர்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிப்பதே இந்த கிராமிய வங்கிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம்.

இவையும் அட்டவணையிடப்பட்ட  அரசுத் துறை வங்கிகளே.   மத்திய அரசு இதற்கு 50  சதவீத மூலதனம் அளிக்கிறது. இதில் அரசுக்குச் சொந்தமான வர்த்தக வங்கிகளின் பங்களிப்பு 35 சதவீதம்; கிராமிய வங்கிகள் இயங்கும் மாநிலங்களின் அரசுகள் மீதமுள்ள 15 சதவீத மூலதனத்தை அளிக்கின்றன. இந்த வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பயன்களை மாநில அரசே  வழங்க வேண்டும். ஆனால், இந்த வங்கிகளின் ஊழியர்கள் பாதிப்புக்குள்ளானபோது, உச்ச நீதிமன்றத்தை  நாட வேண்டிய வந்தது. உச்ச நீதிமன்றமும், கிராமிய வங்கி ஊழியர்களின் குறைகளை உணர்ந்து, அதற்குத் தீர்வு காண தேசிய தொழிலக முத்தரப்புத் தீர்வாயத்தை (என்ஐடி) அமைக்குமாறு உத்தரவிட்டது.

அதையேற்று, ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி  ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஓபுல் ரெட்டி தலைமையில், 1987 செப்டம்பரில் என்ஐடி அமைக்கப்பட்டது. அந்தத் தீர்வாயம் 1990 ஏப்ரலில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. பிற வர்த்தக வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் பெறும் ஊதியப் பயன்களை கிராமிய வங்கி (ஆர்ஆர்பி)  ஊழியர்களும் பெற வேண்டும் என்ற அந்தப் பரிந்துரை, 1991 ஜனவரியில் காலதாமதமாக நடைமுறைக்கு வந்தது. அப்போது, வர்த்தக  வங்கிகளின் ஊதிய நிர்ணயத்தைக் கட்டுப்படுத்தும் ஐந்தாவது ஒத்திசைவு ஒப்பந்தம் அமலில் இருந்தது.

அடுத்து ஆறாவது  ஒத்திசைவு ஒப்பந்தம் வர்த்தகரீதியான பிற வங்கிகளில் அமலானபோதும், கிராமிய வங்கிகளில் அது அமலாகவில்லை. அதையடுத்து கிராமிய வங்கி ஊழியர்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் படிகளில் ஏறினர். வங்கி ஊழியர்களிடையே ஏற்றத்தாழ்வை அகற்றுமாறு  உச்ச நீதிமன்றமும்  அரசுக்கு உத்தரவிட்டது. அத்துடன் கிராமிய வங்கி ஊழியர்களின் துயரங்கள் குறைந்துவிடவில்லை.

வங்கித் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய வசதி 1995-இல் அறிமுகமானது. ஆனால், கிராமிய வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்டது. ஊழியர்கள் பணிபுரியும் வங்கிகளுக்கு நிதி அளிக்கும் திறன் இருந்தால் மட்டுமே அதன் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது சாத்தியம் என்று மாநில அரசுகள் வாதிட்டன. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 2003}லும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் 2005}லும் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

அந்த உயர் நீதிமன்றங்கள், கிராமிய வங்கி ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெற உரிமையுண்டு என்று 2011-இல் தீர்ப்பளித்தன. ஆயினும், அதை எதிர்த்து ராஜஸ்தான் மாநில அரசு உயர் நீதிமன்ற அமர்வில் மேல் முறையீடு செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டபோதும், 2012-இல் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்னமும் விசாரணை நிலையில் உள்ளது.

ஓய்வூதிய விவகாரத்தில் வங்கிகளின் அளிக்கும் திறன் குறித்த அரசின் வாதம் ஏற்கத்  தக்கதல்ல என்பது அரசுக்கே தெரியும். 1995-இல் இயங்கிய 19 வர்த்தக வங்கிகளில் 12 வங்கிகள் நஷ்டத்தில்தான் இயங்கின. என்றபோதும், அதன் ஊழியர்களுக்கு ஓய்வூதியம்  வழங்கப்பட்டது. 1990-இல் நாடு முழுவதும் செயல்பட்ட 196 ஆர்ஆர்பி வங்கிகளில் 152 வங்கிகள் நஷ்டத்தில் இயங்கியபோதும், என்ஐடி உத்தரவுப்படி ஊதியச் சமன் செய்யப்பட்டது. தவிர, கிராமிய வங்கிகளின் வர்த்தக நஷ்டம் என்பது ஊரக வளர்ச்சிக்காக அரசு செய்யும் முதலீடே. அதன் பணிகளை வெறுமனே லாப நோக்குடன் மட்டும் அணுகக் கூடாது.

சொல்லப்போனால், ஆர்ஆர்பி (கிராமிய) வங்கிகள் தற்போது நஷ்டத்தில் இயங்கவில்லை. அவை ஒருங்கிணைக்கப்பட்டு பெரிய வங்கிகளாகிவிட்டன. முன்னிருந்த 196 ஆர்ஆர்பி வங்கிகள் தற்போது 56 வங்கிகளாக உருமாறியுள்ளன. 2017 மார்ச் நிலவரப்படி இந்த வங்கிகளின் ஒட்டுமொத்த லாபம் ரூ. 4,096 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 2,573 கோடியாகவும் இருந்தது. மேலும் கிராமிய வங்கிகளின் மூலமாக ரூ. 1,414 கோடி வரி வருவாயையும் அரசு பெற்றது. அவற்றின் நிதியிருப்பு ரூ. 23,120 கோடியாகும். இந்த விவரங்களைப் பரிசீலிக்கும்போது, கிராமிய வங்கிகளின் ஒட்டுமொத்த நஷ்டம் ரூ. 1,233 கோடி மட்டுமே.

இந்த வங்கிகள் ரூ. 6 லட்சம் கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளன. இதில் வைப்புத்தொகையின் மதிப்பு ரூ. 3.72 லட்சம் கோடி; கடனளிப்புகளின் மதிப்பு ரூ. 2.28 கோடி. நாட்டிலுள்ள வங்கித் துறையின் ஒட்டுமொத்த வைப்புத்தொகையான ரூ. 110.55 லட்சம் கோடியுடனும், ரூ. 83.01 லட்சம் கோடி கடனளிப்புகளுடனும் ஒப்பிடும்போது இது சிறிய அளவே என்றபோதும், கிராமிய வங்கிகளின் சிறப்பம்சம், அவை  பரம ஏழைகளுக்கும் உகந்தவையாக இருப்பதுதான்.  அதன் நோக்கங்களும் தற்போது மாற்றப்படுகின்றன என்பது தனிக்கதை.

ஊரகப்பகுதிகளிலுள்ள வர்த்தக வங்கிகளில் 37 சதவீதம் கிராமிய வங்கிகளே. அனைத்து வங்கிகளின் ஊரகப் பகுதி வைப்புத்தொகையில் 19 சதவீதம் வகிப்பவை கிராமிய வங்கிகளே.  ஊரகப் பகுதியில் தனிநபர் வைப்புத்தொகையும் கடனளிப்பும் குறைவு என்றபோதும்,  கிராமிய வங்கிகள் அம்மக்களுக்கு சேவையாற்றுகின்றன. அதனால்தான், அனைத்து வங்கிகளின் ஊரக வைப்புத்தொகையிலும் கடனளிப்பிலும் பயனாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில், கிராமிய வங்கிகளின் பங்களிப்பு 37 சதவீதமாக உள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி அளிப்பதில் கிராமிய வங்கிகளின் பங்களிப்பு 30 சதவீதமாகும்.

இந்த நிலையில் தான், கிராமிய வங்கி ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கான போராட்டத்தை நாம் அணுக வேண்டும். அந்தப் போராட்டம் எழுப்பும் நான்கு அடிப்படைக் கேள்விகளுக்கு நாம் நியாயமான பதில் கண்டறிந்தாக வேண்டும்.

கேள்வி- 1:  நீதியைப் பெற கால வரையறை வேண்டாமா? 

தாமதிக்கப்படும் நீதியால் யாருக்கும் பயனில்லை. கிராமிய வங்கிகளில் ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியத்துக்காக நீதிமன்றங்களில் நடத்திய போராட்டமே இதற்கு உதாரணம். இந்த மனுதாரர்களின் வழக்குகள் தீர்வு காணப்படுவதற்கு முன்னதாகவே சுமார் 3,500 பேர் இறந்துவிட்டனர். இப்போதுஇந்த வழக்கில் நீதிக்காகக் காத்திருப்போரின் வயது 80}ஐத் தாண்டிவிட்டது. எனவே, நீதிமன்ற வழக்குகளில் ஒரு கால வரையறை நிர்ணயிப்பதன் தேவை உறுதியாகிறது. நீதித்துறை சீர்திருத்தங்களில் கவனம் கொடுக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம் இது.

கேள்வி- 2:  சாதாரண மனுதாரர்தானா அரசு?

ஆர்ஆர்பி ஊழியர்களின் ஓய்வூதிய வழக்கு,  அரசின் பொறுப்பற்ற தன்மையை சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்துகிறது. ஊழியர்கள் தொடர்பான தனது பொறுப்புணர்வைத் தட்டிக் கழித்து, நீதிமன்றங்களில் போராடும் சாதாராண மனுதாரராகவே அரசு மாறி இருக்கிறது. வங்கி ஊழியர்களிடையே ஊதிய முரண்பாடுகள், ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்ற என்ஐடி பரிந்துரையின் அடிப்படையை அரசு கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

வங்கி ஊழியர்களின் வழக்குகளுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்வதிலும், மேல் முறையீடு செய்வதிலும் பொதுமக்கள் பணத்தை அரசு வீணாக்குகிறது. நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் 3 கோடி வழக்குகளில் 46 சதவீத வழக்குகள் அரசு தொடர்பானவை என்கிறது ஒரு புள்ளிவிவரம். கிராமிய வங்கி ஊழியர்களின் ஓய்வூதியப் போராட்ட வழக்கு சந்தித்துவரும் அரசுத் தரப்பு எதிர்ப்புகளைக் காண்கையில், இந்தத் தகவல் வியப்பளிக்கவில்லை.

கேள்வி- 3: உயர் பதவியில் இருப்போரிடம் முறையிடுவது வீணா?

கிராமிய வங்கி ஊழியர்கள் தங்கள் குறைகள் தொடர்பாக உயர் பதவியிலுள்ள பலரிடம் முறையிட்டுள்ளனர். பிரதமர், மாநில முதல்வர்கள், உயரதிகாரிகள் எனப் பலரும் அவர்களிடம் குறைகளைக் களைவதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால் நடைமுறையில் எதுவும் சாத்தியமாகவில்லை. அதாவது, நமது அதிகார வர்க்கம், மனு அளிப்போரை அப்போதைக்கு அப்புறப்படுத்தினால் போதும் என்ற அலட்சிய மனநிலையில் தான் இருக்கிறதா?

உயர் பதவியில் உள்ளவர்கள் அனைத்து மனுக்களையும் நேரடியாகப் பரிசீலிக்க முடியாது என்பது உண்மையே. அதேசமயம், தங்களை நம்பி மனு அளிக்கும் மக்களின் குறை தீர்க்கத் தேவையான திட்டத்தை உருவாக்க,  பிறரது துயரைத் தனதாக  உணர்ந்தாலே போதுமே? இது எப்போது நடக்கும்?

கேள்வி- 4: ஓய்வூதியம் அரசின் பெருந்தன்மையா?

ஓய்வூதியம் என்பது பணியாளர்களின் உரிமை என்றும்,  அது அவர்களது வாழ்நாள் சேமிப்பு என்றும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். ஓய்வூதியம் அளிப்பது அரசின் பெருந்தன்மையால் அல்ல என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். உண்மையில் ஓய்வூதியம் என்பது பணியாளர்களின் சொத்துரிமை என்பதால், அரசியல் சாஸனத்தின் 300}ஏ பிரிவின்படி அந்த உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

நீண்ட காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் தங்கள் அந்திமக் காலத்தில் ஓய்வூதியமின்றி வாழ்வது சிரமம். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க மறுப்பது, அரசியல் சாஸனத்தின் 21}வது பிரிவு வழங்கியுள்ள வாழ்வதற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும்.

தவிர, ஓய்வூதியம் என்ற பெயரில் சொற்பமான தொகையை  அளிப்பதும் அவர்களது நயமான வாழ்க்கைக்கு உதவாது. ஆர்ஆர்பி ஊழியர்களுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) மூலமாக வழங்கப்படும் ஓய்வூதியத்தைப் பரிந்துரைப்பது முறையல்ல. அதனால் அவர்கள் சுமார் ரூ. 1,500 மாத ஓய்வூதியம் மட்டுமே பெற முடியும். ஆனால் அவர்களில் பலர் மாத ஊதியமாக ரூ.  ஒரு லட்சம் வரை பெற்றவர்கள். எனவே முந்தைய ஊதியத்தில் பாதியேனும் ஓய்வூதியமாக நிர்ணயிக்கப்பட வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக, நாட்டில் நிலவும் சூழல் வேறுவிதமாக இருக்கிறது. வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்தான் பரவலாக தற்போது முன்வைக்கப்படுகிறது. இதனால் மூத்த குடிமக்கள் பிறரைச் சார்ந்து வாழும் பரிதாப நிலையே ஏற்படும். எனவே அரசுகள் இந்த விஷயத்தை அகன்ற பார்வையுடன் அலசி ஆராய்ந்து தீர்வு காண்பது அவசியம்.

 

-தினமணி (28.04.2018)

One Response to “கிராமிய வங்கி ஊழியர்களின் ஓய்வூதியப் போராட்டம்”

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: