கர்நாடகத்தில் பாஜக வெற்றி – தேசியத்துக்கு மகுடம்!

15 May

 

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. தேசியவாதிகள் எதிர்பார்த்தது போலவே பாஜக (தனிப்பெரும் கட்சி- 104 / 222) வென்றுவிட்டது.

சித்தராமையாவின் தோல்வியால் கர்நாடகத்தில் தேசியம் வென்றிருக்கிறது. அந்த அளவுக்கு இந்தத் தேர்தலை அவர் மாநில பிரிவினைவாதக் குரலுடன் சந்தித்தார். உண்மையான தேசியக் கட்சியாக இருந்திருக்க வேண்டிய காங்கிரஸ் கட்சி, தனது கட்சியின் முதல்வர் நடத்திய பிரிவினை சிந்தனையுடன் கூடிய நாடகங்களை ஊக்குவித்து, தானும் படுகுழியில் வீழ்ந்திருக்கிறது.

சித்தராமையாவின் தோல்விக்கு- அரசு மீதான அதிருப்தியும், அமித் ஷா தலைமையிலான பாஜக தொண்டர்களின் கடின உழைப்பும், பிரதமர் மோடியின் நிகரற்ற தலைமையும் மட்டுமே காரணங்கள் அல்ல. சித்து கையாண்ட பிரிவினை அரசியலே அவருக்கு சாவுமணி அடித்திருக்கிறது. கர்நாடக மக்கள் தாங்கள் மிகவும் பண்பட்டவர்கள் என்பதை, சித்துவின் சித்து விளையாட்டுக்கு எதிராக வாக்களித்து நிரூபித்திருக்கிறார்கள்.

லிங்காயத்து சமூகத்தை தனி மதமாக அறிவித்து, அதன் அடிப்படையில் அவர்களின் வாக்குகளைக் கவர அவர் நடத்திய நாடகம் லிங்காயத்து மக்களிடையே செல்லுபடியாகவில்லை. அதிகார பலம், பணபலம் முன்பு மண்டியிட்ட லிங்காயத்து மடாதிபதிகளின் கருத்துகளை அவர்களது சமூக மக்களே ஏற்கவில்லை என்பது, பெருவாரியான லிங்காயத்து தொகுதிகளில் பாஜக வென்றதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.

அதேபோல, கர்நாடக மாநிலத்துக்கு தனிக் கொடி என்ற சித்துவின் நாடகம், தேசிய சிந்தனையில் ஊறிய பெங்களூரு மக்களிடையே அதிருப்தியையே விளைவித்தது. ஆரவாரத்துடன் தான் அறிவித்த அந்த விஷயத்தை, அதனால்தான் தேர்தலின் போது சித்து பிரசாரத்தில் முன்வைக்கவில்லை. இருந்தபோதும், மக்கள் பிரிவினை சிந்தனைக்கு வேரிலேயே வெந்நீர் ஊற்றி இருக்கிறார்கள்.

ஹிந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தையும் சித்து இம்முறை கையாண்டார். கன்னடப் பெருமித உணர்வால் தான் கரையேறிவிட முடியும் என்று அவர் கனவு கண்டார். ஆனால், மங்களூரில் மோடியின் ஹிந்தி பிரசாரத்தை கன்னடத்தில் உள்ளூர்த் தலைவர்கள் மொழிபெயர்க்க முற்பட்டபோது, “எங்கள் பிரதமரின் உரையை எதற்கு மொழிபெயர்க்க வேண்டும்? அவரது ஹிந்தியே புரிகிறது. அதை மொழிபெயர்த்து பேச்சைத் தடை செய்ய வேண்டாம்” என்று கன்னட மக்கள் கோஷம் எழுப்பியதையும் காண முடிந்தது. கன்னட மக்களிடம் பாடம் கற்க தமிழக மக்களுக்கு நிறைய இருக்கிறது.

ஹிந்து சமயத்தினர்- ஹிந்து அல்லாதார் பிரிவினையைக் கொண்டே காங்கிரஸ் இப்போதும்கூட பல தொகுதிகளில் வெற்றி அடைய முடிந்தது. மதச்சார்பின்மை என்ற பெயரில், இஸ்லாமிய மௌலவிகளும், கிறிஸ்தவ பாதிரியார்களும் வெளிப்படையாகவே காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்கள். முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்ற பகிரங்கமான வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்மூலமாக, சில தொகுதிகளையும் காங்கிரஸ் வென்றுள்ளது. அதேசமயம், இந்தப் பிரசாரத்தின் எதிர் விளைவாக, எடியூரப்பா மீது அதிருப்தி கொண்டிருந்த ஹிந்துக்கள் கூட கடைசி நேரத்தில் பாஜகவை ஆதரித்தார்கள்.

தமிழகம் போலவே கடவுள் மறுப்பாளர்கள், பகுத்தறிவாளர்கள், இடதுசாரிகள் உள்ளிட்ட பாஜக எதிரிகள் காங்கிரஸை ஆதரித்தனர். இதற்கு மோசமான ஓர் உதாரணம் நடிகர் பிரகாஷ்ராஜின் அதிகப்பிரசங்கித்தனமான பேச்சு. இதுவும் காங்கிரஸ் கட்சிக்கு பக்க விளைவையே ஏற்படுத்தி இருக்கிறது.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய பாஜக அரசு சாமர்த்தியமாக தவிர்த்து வந்ததன் காரணம், காங்கிரஸ் கட்சி அதனைப் பயன்படுத்தினால், தங்கள் வெற்றி வாய்ப்பு பறிபோய்விடும் என்ற எச்சரிக்கை உணர்வே. அதற்கேற்றாற்போல, காவிரியில் சொட்டுத் தண்ணீர்கூட விட மாட்டோம்; காவிரி ஆணையத்தை ஏற்க மாட்டோம் என்றெல்லாம் பிரசாரத்தில் கூறி, கர்நாடக விவசாயிகளுக்கு பூடகமான சமிக்ஞையை சித்து தெரிவித்து வந்தார். ஆனாலும், காவிரிப் படுகை பகுதிகளில் தேவே கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் தான் அதிக இடங்களில் வென்றிருக்கிறது.

இப்போது மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைய உள்ள சூழலில், முதல்வராக உள்ள எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பாஜகவும், மத்திய பாஜக தலைமையும், மோடி அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, காவிரி விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காண முடியும். உண்மையில் இத்தேர்தல் முடிவுகள், தமிழகத்துக்கு மிகவும் நன்மை அளித்துள்ளது.

இத்தேர்தலின் மூலம், காங்கிரஸ் கட்சியின் ஆளுகையில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து மூன்றாகக் குறைந்துள்ளது (பஞ்சாப், மிசோரம், பாண்டிசேரி). ராகுல் பிரசாரம் செய்த 14 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோற்றிருக்கிறது. மாறாக, மோடி பிரசாரம் செய்த தொகுதிகளில் எல்லாம் பாஜக வென்றிருக்கிறது. அரசியல் தலைமையின் அர்த்தத்தை காங்கிரஸ் இப்போது புரிந்திருக்கும். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சியால் எப்படி ஈடு கொடுக்க முடியும் என்ற கேள்வியையும் வலுவாக எழுப்பி இருக்கிறது கர்நாடக தேர்தல் முடிவு.

பெரும்பாலான ஊடகங்கள் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுப்பதன் காரணம் புரியவில்லை. அவர்கள் அனைவருமே (90 %) கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் வெல்லும், அல்லது யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று பிரசாரம் செய்து வந்தன. கருத்துக் கணிப்புகளிலும் இந்தத் திணிப்பு சமயோசிதமாக செய்யப்பட்டது. இப்போது மக்களின் மனநிலைக்கும் தங்கள் அறிவுஜீவித்தனத்துக்கும் பல மைல் தொலைவு இருப்பதை அவர்களும் உணர்ந்திருப்பார்கள். இனியேனும் பாஜக விரோத மனநிலையிலிருந்து ஊடகத்தினர் வெளிவர வேண்டும். இல்லாவிட்டால நமபகத்தன்மை இழப்பால் நஷ்டம் அவர்களுக்குத்தான்.

இந்த தேர்தல் முடிவுகளிலிருந்து தமிழகம் கற்க வேண்டிய பாடம், தேசியத்தை எதிர்ப்போரை மக்கள் நிராகரிப்பர் என்பதே. தமிழக பாஜக இதிலிருந்து ஊக்கம் பெறுமானால் தமிழகத்துக்கு நல்லது.

சென்ற வாரம் எனது நண்பர்கள் சிலரே கூட கர்நாடகத்தில் பாஜக தேறுமா என்று சந்தேகம் எழுப்பினர். ஊடகத்தினரின் பொய்ப் பிரசாரத்தால் அவர்களும் சற்றே மயங்கி இருந்தனர். அப்போது அவர்களிடம், “பாஜக 140 தொகுதிகளைத் தாண்டும்; காங்கிரஸ் கட்சிக்கு மூன்றாமிடமே கிடைக்கும்” என்று சொன்னேன். ஆனால், எனது கணிப்புப் படி 140 தொகுதிகளை பாஜக வெல்லவில்லை என்பது ஏமாற்றமே. எனினும், மதச்சார்பற்ற ஜனதாதளம் தனது தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தனது நிலையை தக்கவைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி கடைசி நேரத்தில் செய்த சில தில்லுமுல்லுகள், பணப் பட்டுவாடாக்கள், (சிறுபான்மை) மதரீதியான பிரசாரங்கள் சில தொகுதிகளில் பலன் அளித்திருக்கிறது. இது கவலைக்குரியது. அக்கட்சி வென்ற தொகுதிகளின் நிலவரத்தை ஆராய்ந்தால் இது தெளிவாகப் புரியும். இது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் பாஜக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 20 கூடி இருக்கும். அப்போது காங்கிரஸ் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கும். அதைத் தவிர்ப்பதில் சித்து வென்றிருக்கிறார். இருப்பினும், மிக விரைவில் அவருக்கு காங்கிரஸ் கட்சி கல்தா கொடுக்கும் என்றே தெரிகிறது.

தேர்தல்கள் மூலமாக அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நிகழ்வதுதான் நமது ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்தத் தேர்தல் நடைமுறையிலும் பல குறைபாடுகள் இல்லாமல் இல்லை. பணநாயகமாகிவிட்ட தேர்தல் நடைமுறை, ஜாதி- மத- மொழி சார்ந்த பிரிவினை அரசியல், வெறுப்பூட்டும் பிரசார அணுகுமுறை போன்றவை கண்டிப்பாகக் களையப்பட வேண்டியவையே. ஆனால், பிற நாடுகளுடன் ஒப்புநோக்கினால் நமது தேர்தல் முறையின் சிறப்பு புலப்படும்.

வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துகள். தோல்வி அடைந்தோர் அதன் காரணத்தை அலசி ஆராய்ந்து, தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். அதுவே ஜனநாயகம்.

மேற்கு வங்கத்தில் மமதா போல வன்முறை மூலமாக ஆட்சியையும் வெற்றிகளையும் கைப்பற்றவில்லை பாஜக. ஜனநாயகப் போராட்டத்தை அக்கட்சி மோடி தலைமையில் சிறப்பாக முன்னெடுத்துச் சென்று வென்றிருக்கிறது. அக்கட்சியின் சாதனையை பிற கட்சிகள் கவனிக்க வேண்டும்.மாறாக, அதனைப் புறம் பேசிக் கொண்டிருந்தால், அக்கட்சியின் 2019 வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது.

 

-முகநூல் பதிவு (15.05.2018)

2 Responses to “கர்நாடகத்தில் பாஜக வெற்றி – தேசியத்துக்கு மகுடம்!”

 1. நல்ல அலசல். தமிழகம் இதன் மூலம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்..

  Like

 2. வேகநரி 21/05/2018 at 5:29 PM #

  நல்லதொரு பதிவு.
  //ஜாதி- மத- மொழி சார்ந்த பிரிவினை அரசியல் வெறுப்பூட்டும் பிரசார அணுகுமுறை போன்றவை கண்டிப்பாகக் களையப்பட வேண்டியவையே//.
  அவசியம்

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: