தூத்துக்குடியில் நடந்தது அறவழிப் போராட்டமா?

28 May

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டம் இறுதியில் துப்பாக்கிச்சூட்டுடன் 13 உயிர்களை பலி கொண்டுவிட்டது (மே 22, 23). இதற்கு காவல் துறையின் கவனமின்மையே காரணம் என்பதிலோ, தமிழக அரசின் செயலற்ற தன்மை காரணம் என்பதிலோ யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது; எனக்கும் தான். இதை எனது முந்தைய பதிவில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆனால், ஸ்டெர்லைட் விவகாரத்தில் நான் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக நண்பர் திரு சுந்தரபாண்டியன் போன்ற சிலர் கருத்துத் தெரிவித்தனர். தவிர, இந்த விஷயத்தை பாஜகவுக்கு எதிராக கட்டமைக்க விரும்பும் திரு. ரவிகிருஷ்ணன், திரு. கோகுலகிருஷ்ணன். திரு. ரகுகுமார் போன்றோர் எனது விளக்கம் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதாகக் குறை கூறினர்.

சகோதரர் திரு. இளங்கோ போன்ற இயக்கரீதியாக இயங்கும் நண்பர்கள் மிகவும் கோபத்துடன் எனது பதிவை அணுகினர். ’அவனவன் வீட்டில் இழவு விழுந்தால் தான் தெரியும்” என்பது போன்ற கருத்துகளையும் கண்டேன்.

துப்பாக்கிச் சூட்டால் 13 பேர் பலியான நிலையில், நடுநிலையாளர்கள் பலரும் முகநூலில் பொங்கினர். பாஜக ஆதரவாளர்கள் பலரும்கூட, பொதுக்கருத்தை உத்தேசித்து அமைதி காப்பது, அல்லது, தாங்களும் காவல் துறைக்கு எதிராகப் பொங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகையில், கூட்டத்தோடு கோவிந்தா போட்டிருக்கலாம் தான். ஆனால், என்னால், அவ்வாறு இருக்க முடியவில்லை.

ஏனெனில், ஸ்டெர்லைட் போராட்டத்தின் திசை கடந்த சில மாதங்களில் மாறி வருவதையும், அதன் கட்டுப்பாடு விஷமிகளிடம் சென்று சேர்வதையும் நான் கவனித்து வந்தேன். (இதுகுறித்து குமுதம் ரிப்போர்டரில் ஏற்கனவே செய்தி வெளியாகி இருந்தது நினைவிருக்கலாம்). எனவேதான், போராட்டம் திசை திரும்பிய கதையை முந்தைய பதிவில் எழுதினேன்.

அதிலுள்ள தகவல்கள் தவறானவை என்று நண்பர் சுந்தரபாண்டியன் சொன்னார். அவரவர் தரப்பை நியாயப்படுத்த ஒவ்வொருவரும் முயலும்போது, உண்மைகள் கசக்கவே செய்யும்.

இப்போது எனது முந்தைய பதிவுக்கு பின்னூட்டம் இட்டவர்களின் எதிர்வினைகளுக்கு முதலில் விளக்கம் அளிப்பது என் கடமை. தவிர, அப்போது, அடுத்த பதிவில் எனது நிலைப்பாட்டை விளக்கமாக எழுதுவதாக நான் குறிப்பிட்டிருந்தேன். இதோ அந்த விளக்கம்…

அ. முதலாவதாக, நான் அதிமுக ஆதரவாளன் அல்ல. ஸ்டெர்லைட் ஆலை தமிழகம் வர காரணமாக (1994) இருந்தவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர். அதேசமயம், பிரச்னை வந்தவுடன் அந்த ஆலைக்கு பூட்டு போட உத்தரவிட்டவரும் (2013) அவரே. இந்தத் தெளிவை திமுகவிடமோ, கருணாநிதியிடமோ நான் காணவில்லை. இதையே நான் குறிப்பிட்டேன்.

ஆ. அதேபோல, திமுகவின் ஆதரவின்றி ஸ்டெர்லைட் தூத்துக்குடிக்கு வந்திருக்க முடியாது என்பதையும் அனைவரும் அறிவர். அதன் இரண்டாவது யூனிட் அமைப்பது தான் இப்போது பிரச்னை ஆகி இருக்கிறது. அதற்கு மத்திய அரசின் அனுமதி, திமுக இடம்பெற்ற முந்தைய ஐ.மு.கூட்டணி அரசால் தான் (2009) வழங்கப்பட்டது. இன்று அதே காங்கிரஸ் கட்சியின் ராகுல் புது வேஷம் கட்டுகிறார். தவிர காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு மதவாத முலாமும் (ஆர்.எஸ்.எஸ். பூச்சாண்டி) பூசுகிறார்.

இ. நான் பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளன் என்பது ஒரு குற்றச்சாட்டு. அதற்காக என்னைச் சீண்டும் வகையில் காந்தி கொலை, கோட்சே, மனுதர்மம் போன்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன. அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். ஆர்.எஸ்.எஸ். குறித்த தவறான பிரசாரங்களுக்கு அந்த அமைப்பே கவலைப்படுவதில்லை. உண்மை மட்டுமே வெல்லும் என்று அந்த அமைப்புக்குத் தெரியும். நானும் உண்மை மட்டுமே நிலைக்கும் என்று நம்புவதால், இத்தகைய சீண்டல்களுக்குக் கவலைப்படுவதில்லை.

அதேசமயம், தேவையான விவாதத்திலிருந்தும், கவனிக்க வேண்டிய விஷயங்களிலிருந்தும் நம்மை திசை திருப்பவே இத்தகைய அவதூறுப் பிரசாரங்கள் உதவுகின்றன என்பதை மறக்கக் கூடாது. இத்தகைய திசை திருப்பல்களுக்கு எனது பதில் ‘ஹாஹாஹா’ மட்டுமே.

இப்போது விஷயத்துக்கு வருகிறேன். எனது முந்திய பதிவுக்கு வந்து விவாதித்த நண்பர்களுக்கு சில கேள்விகள்:

1. கடந்த ஆறு நாட்களில் தூத்துக்குடி கலவரம் தொடர்பாக வெளிவாமல் இருந்த பல தகவல்கள் வந்துவிட்டன. நான் ஏற்கனவே கூறியபடி, காவல் துறையினரை கலவரக்காரர்கள் தாக்கியது தொடர்பான ஆதாரங்கள் வெளியாகிவிட்டன. இப்போதும்கூட, காவலர்களை போராளிகள் காத்ததாக கூறுபவர்கள் இருக்கிறார்கள். ஆமாம், யாரிடமிருந்து காவலர்களை அந்தப் போராளிகள் காத்தார்கள்? இப்போதும் மருத்துவமனையில் குற்றுயிராக சிகிச்சை பெறும் 10-க்கு மேற்பட்ட காவலர்களுக்கும் குடும்பம் உள்ளது என்று தெரியுமா? அவர்களும் தமிழர்கள் தானே?

2. மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. தோழர் பாலபாரதி அவர்கள் நான் மதிக்கும் களப் போராளிகளுள் ஒருவர். அவரும்கூட, ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்களை காவலர்களே தீயிட்டுக் கொண்டதாக முகநூலில் கூறி இருக்கிறார். அதையும் நம்பி பலர் கொந்தளிக்கிறார்கள். சொல்லும் பொய்யில் சிறிதாவது நம்பகத்தன்மை வேண்டாமா? இப்போது ஆட்சியர் அலுவலக வன்முறைகள் தொடர்பான வீடியோ பதிவுகள் வெளியாகிவிட்டன. காவல் துறை மீது அபாண்டமாக குற்றம் சுமத்தியவர்கள் இன்று என்ன சொல்லப் போகிறார்கள்?

ஆட்சியர் அலுவலகத்தில் அடி வாங்காமல் தப்பிய ஊழியர்கள் பலரும்கூட மார்க்சிஸ்ட் சார்பு அரசு ஊழியர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் என்றேனும் திருமதி பாலபாரதி அவர்களுக்குத் தெரியுமா? அவர்களது பேட்டிகளும் ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

3. ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பில் வைக்கப்பட்ட தீ மற்றும் வன்முறையால் ரூ. 12 கோடி சேதம் ஏற்பட்டிருக்கிறது. ஆதாரம் கீழே:

// துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் அடுக்குமாடிக் குடியிருப்பு தீ வைக்கப்பட்டதில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் தீக்கிரையானது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மே 22-ல் நடந்த முற்றுகை போராட்டத்தின் போது, கலெக்டர் அலுவலகம் அருகே கட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் அடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்திலும் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அங்கிருந்த ஜெனரேட்டர், 24 கார்கள், பைக்குகளை தீயிட்டு கொளுத்தினர். இதில் கட்டட சேதத்தையும் சேர்த்து 12 கோடி ரூபாய் சேதமடைந்திருப்பதாக குடியிருப்பு காவலாளி வேல்முருகன் புகார் அளித்துள்ளார் (தினமலர் செய்தி- 26.05.18)//

ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்பவர்களும் தமிழர்கள் தானே? இந்த வன்முறையின்போது ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கியதில் ஊழியர் வீட்டில் சிறுவன் ஒருவன் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்துள்ளான். அதை அரசும் மூடி மறைப்பது ஏன்?

4. கலவரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டோரில் 8 பேர் தீவிர கம்யூனிஸ்ட் குழுக்களைச் சார்ந்தவர்கள் என்று அவர்களே தெரிவிக்கின்றனர். அவர்களை காவல் துறை திட்டமிட்டு சுட்டுக் கொன்றுவிட்டது என்று அவர்கள் கூறுகின்றனர். நான் இதனை ஆதரிக்கவில்லை. தவறு செய்யும் குற்றவாளியே ஆயினும் சட்டத்தின் முன் நிறுத்தித்தான் தண்டிக்க வேண்டும். காவல் துறை சட்டமீறல் செய்திருந்தால் நிச்சயமாகத் தவறு தான். (அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது). ஆனால், அதற்கான வாய்ப்பை போராளிகளே உருவாக்கி அளித்திருந்தார்கள் என்பதுதான் எனது புகார்.

ஆட்சியர் அலுவலகத்துக்குள்ளும் ஸ்டெர்லைட் குடியிருப்புக்குள்ளும் வன்முறைக் கும்பல் புகுந்தது ஏன்? அதுதானே துப்பாக்கிச் சூட்டுக்கு இட்டுச் சென்றது?
நூறு நாட்கள் அறவழியில் போராடிய மக்கள் கடைசி நாளில் எவ்வாறு வெறி கொண்டார்கள்? அதற்கு முதல் நாள் போராட்டக் குழுத் தலைவி திருமதி பாத்திமாவை போராட்டக் குழுவினர் நீக்கியது ஏன்? அவர் தடுத்தும் கேளாமல் போராட்டக் குழுவினர் வந்தது ஏன்?

5. தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களில் பலமுறை போராட்டக் காரர்களுடன் பேச்சு நடத்தி இருக்கிறது. (19 முறை என்கிறார் முதல்வர்). ஆனால், அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறுவது ஏன்?

6. ஸ்டெர்லைட் ஆலை இயங்கத் தேவையான மாசுக் கட்டுபாட்டு வாரிய அனுமதியை தமிழக அரசு நிறுத்தி வைத்திருந்தது. தவிர, நீதிமன்றத்திலும் ஆலைக்கு எதிராகவே மாநில அரசு வாதாடி வந்தது. இந்தத் தகவல்கள் முந்தைய பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன. ஆனாலும், அதை ஏற்க ஒரு குழுவினர் மறுத்தது ஏன்? அவர்களின் பின்னால் தூத்துக்குடி வட்டார மக்கள் சென்றது சரியா?

7. ஜனநாயக நாட்டில் போராட அனைவருக்கும் உரிமை உள்ளது. நாளை, ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றும் ஆயிரக் கணக்கான ஊழியர்களின் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி போராட வீதிக்கு வந்தால் இந்த டுமில் போராளிகள் சும்மா இருப்பார்களா? இப்போதே, தங்கள் போராட்டத்தை விமர்சிப்பவர்களை மிகக் கேவலமாக விமர்சிக்கும் பண்பாடான டுமில் போராளிகளும் அவர்களின் நண்பர்களும் அப்போது நாகரிகம் காப்பார்களா?

8. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் அறவழிப் போராட்டம் என்றும், அதை ஆயுத பலத்தால் (அரசு பயங்கரவாதமாம்!- ராகுலே கூறிவிட்டார்!) அரசு தற்காலிகமாக முறியடித்துவிட்டதாகவும் பலர் கூறுகின்றனர். அறவழிப் போராட்டம் என்றாலே வன்முறை அற்றதுதான். அப்படித்தான் இந்தப் போராளிகள் போராடினார்களா? அதை ஆதரிப்பவர்கள் மனசாட்சியுடன் சொல்லட்டும்.

சரித்திரத்திலிருந்து ஒரு நிகழ்வு…

விடுதலைப் போராட்டத்தின் போது ஒத்துழையாமை இயக்கத்தை 1920-இல் அறிவித்த மகாத்மா காந்தி, 1922, பிப்ரவரியில் உ.பி.யின் சௌரி சௌராவில் காவல் நிலையத்தையே போராட்டக் காரர்கள் தீயிட்டுக் கொளுத்தியவுடன், தனது போராட்டத்தையே கைவிடுவதாக அறிவித்தார். 22 காவலர்கள் உயிரிழக்கக் காரணமான அந்த வன்முறையை நிறுத்த உண்ணாவிரதமும் இருந்தார். அதனால்தான் பிரிட்டிஷ் அரசு அவரிடம் மண்டியிட்டது. அறவழிப் போராட்டம் என்பது அதுதான்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் காரர்கள் தூத்துக்குடியில் செய்தது என்ன என்பதை நாடு அறியும். நாம் எதை விதைக்கிறோமோ அது தானே அறுவடையாகும்?

9. மாநிலத்தில் ஆளும் அதிமுகவையும் மத்தியில் ஆளும் பாஜகவையும் சிறுமைப்படுத்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்த விழைகின்றன. அவர்கள், போராட்டக் களத்தில் இருந்து எவ்வாறு தாங்கள் லாவகமாக ஒதுக்கப்பட்டோம் என்பதை சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்களுடன் நேரடித் தொடர்புள்ள திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் எவருமே போராட்டத்தை வழிநடத்த அனுமதிக்கப் படாதது ஏன்? குறிப்பாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சட்டரீதியாகப் போராடி வரும் வைகோவின் கட்சியினரே பின்னுக்குத் தள்ளப்பட்டது எப்படி? இதுவே மாவோயிஸ்ட் நடைமுறை என்பதை அரசியல் கட்சிகள் இன்னமும் உணரவில்லையா, இல்லை நடிக்கின்றனவா?

10. எந்த ஒரு அசம்பாவிதத்தின்போதும் மனித மனங்கள் துடிப்பது இயற்கை. அதுவே மனித இயல்பு. இந்த வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டால் நேரிட்ட இழப்புகள், பலிகள்- எனக்கும் வருத்தத்தையே அளிக்கின்றன. அதனால் உணர்ச்சி மேலிட அரசையும் காவல் துறையையும் வசை பாடுவதில் மட்டுமே நான் வேறுபடுகிறேன். எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றுவது யாருக்கும் நல்லதல்ல என்பதே என் நிலைப்பாடு.

அரசுகள் தவறு செய்தால் ஜனநாயகரீதியாக தண்டிக்க வாய்ப்பு இருக்கிறது. அரசையே மக்கள் மாற்றி அமைக்கலாம். அரசு ஊழியர்கள் தவறு செய்தால் நீதித் துறை தலையிட்டு தண்டிக்கவும் வாய்ப்பிருக்கிறது. மக்களே தவறு செய்தால்? அதுவும் கூட்டமாகத் திரண்டதாலேயே அவர்கள் செய்யும் வன்முறையை நியாயப்படுத்த முடியுமா?

ஒப்பீட்டுக்கு அண்மைய நிகழ்வு ஒன்று…

குஜராத் மாநிலம், கோத்ராவில் கரசேவகர்கள் சென்ற ரயில் எரிக்கப்பட்டப்போது (2002) அம்மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நிகழ்ந்த மாபெரும் வன்முறைக்கு நாடெங்கும் எதிர்ப்புக் கிளம்பியது. அந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் பலர் இப்போது தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். அந்த வன்முறையைக் கண்டித்தவர்கள் தான் இப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்துகின்றனர் என்பது நகைமுரண்.

வன்முறைக்கு இரு வேறு விளக்கங்களோ, இருவேறு அளவுகோல்களோ சட்டத்தின் முன்னோ, மனசாட்சியின் முன்னோ கிடையவே கிடையாது.

கடைசியாக ஒரு குறள் (550):

கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல், பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

One Response to “தூத்துக்குடியில் நடந்தது அறவழிப் போராட்டமா?”

Trackbacks/Pingbacks

  1. தூத்துக்குடியில் நடந்தது அறவழிப் போராட்டமா? – TamilBlogs - 28/05/2018

    […] 5 mins ago பொது Leave a comment 1 […]

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: