ஸ்டெர்லைட் ஆலை முடக்கம்: தொழில் துறைக்கு எச்சரிக்கை!

4 Jun

தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை அண்மையில் பொதுமக்களின் எதிர்ப்பால் மூடப்பட்டுவிட்டது. இந்நிலையில், தாமிர உற்பத்தி- தேவை- வர்த்தகம் குறித்த மறுபரிசீலனை தற்போது அவசியமாகி உள்ளது.

நமது நாட்டின் தாமிரத் தேவையில் சுமார் 35 சதவீதம் பங்களித்து வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பது, வரும் நாட்களில் உற்பத்தித் துறையிலும் நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவையும் உற்பத்தியும்:

இந்தியாவில் தாமிரத் தாது மிகக் குறைவாகவே கிடைக்கிறது. உலக அளவில் தாமிரத் தாது இருப்பு இந்தியாவில் 2 சதவீதம் மட்டுமே. சுமார் 60,000 ச.கி.மீ. பரப்பளவில் இங்கு தாமிரத் தாது உள்ளது. இதிலும் 0.2 சதவீதம் மட்டுமே பயன்பாட்டிலுள்ளது (2012-ஆம் ஆண்டு நிலவரம்).

அதேசமயம், தாமிரத் தாதினை இறக்குமதி செய்து உருக்கி, தூய தாமிரத்தை உற்பத்தி செய்வதில் இந்தியா உலக அளவில் நான்காமிடம் வகிக்கிறது. தாமிரப் பயன்பாட்டில் உலக அளவில் எட்டாவது இடத்தை இந்தியா வகிக்கிறது.

மின்சாதனங்கள்,  மின்னணு சாதனங்கள், மின்சாரக் கம்பி, தொலைதொடர்பு வடம், ஆயுதங்கள்,  நாணயங்கள், குளிர்சாதனம், வீட்டு உபயோகக் கலன்கள், வால்வுகள் போன்றவற்றைத் தயாரிப்பதிலும், போக்குவரத்து, பொறியியல், கட்டுமானத் துறைகளிலும் தாமிரத்தின் தேவை முக்கியமானது. நமது தாமிரத் தேவை கடந்த பத்தாண்டுகளில் 6 சதவீதம் சீராக வளர்ச்சி கண்டுள்ளது.

2016}17இல் நமது நாட்டின் தாமிரப் பயன்பாடு 6.65 லட்சம் டன் ஆகும் (ரூ. 3,325 கோடி). இதில் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனங்களின் தேவை மட்டுமே 50,000 டன் ஆகும்.

தாமிர உற்பத்தி ஆலைகள்:

1996 ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் அரசு பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் மட்டுமே  தாமிரத்தை உற்பத்தி செய்து வந்தது. எனவே பெருமளவில் தூய தாமிரம் இறக்குமதி செய்யப்பட்டது.

பொருளாதார தாரளமயமாக்கலின் விளைவாக,  1996-இல் இரு பெரும் நிறுவனங்கள்  தாமிர உற்பத்தியில் இறங்கின. உலக அளவில் பிரபலமான வேதாந்தா நிறுவனத்தின் இந்தியக் கிளையாக ஸ்டெர்லைட் காப்பர் லிமிடெட் தமிழகத்தின் தூத்துக்குடியில் 1996}இல் துவங்கப்பட்டது. அதேபோல, பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனம் குஜராத் மாநிலம், தாஹேஜில் தாமிர உருக்கு ஆலையை நிறுவியது.

மிக விரைவிலேயே இவ்விரு நிறுவனங்களும் இந்தியாவின் தாமிர உற்பத்தியில் 90 சதவீதத்தைக் கைப்பற்றின.

இவை அல்லாது, ஸ்விஸ் கூட்டுறவு நிறுவனமான ஜஹாடியா காப்பர் லிமிடெட் (5 சதவீதம்), ஹிந்துஸ்தான் காப்பர்  (5 சதவீதம்) ஆகியவையும் தாமிர உற்பத்தியில் பங்களிக்கின்றன.

இவற்றில் ஹிண்டால்கோவின் உற்பத்தி அளவு ஆண்டுக்கு 5 லட்சம் டன். ஸ்டெர்லைட்} 4.02 லட்சம் டன்; ஹிந்துஸ்தான் காப்பர்} 51,500 டன்; ஜஹாடியா காப்பர்} 50,000 டன். 2016}17இல் இந்தியா 9.11 லட்சம் டன் தாமிரத்தை உற்பத்தி செய்தது. பல்வேறு காரணங்களால் இது 2017}18இல் 8.43 லட்சம் டன்னாகக் குறைந்தது.

இருப்பும் மதிப்பும்:

ஒரு பொருளின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே பெருத்த வேறுபாடு இல்லாத வரை அந்தப் பொருளின் விலை சீராக இருக்கும். தேவை அதிகரித்தால் விலை உயர்வதும் உற்பத்தி அதிகரித்தால் விலை குறைவதும் பொதுவான இயல்பு. அந்த வகையில் நமது தேவைக்கு மிகுதியாக தாமிரம் உற்பத்தியானதால், அதன் விலை சரிந்தது.

எனவே நமது நாடு தாமிர  ஏற்றுமதியில் கவனம் செலுத்தத் துவங்கியது. அதன்மூலமாக நாட்டுக்கு அந்நியச் செலாவணி கிடைத்தது.
2016}இல் இந்தியா 2.3 பில்லியன் டாலர் மதிப்புக்கு (ரூ. 1,553 கோடி) தாமிர ஏற்றுமதி செய்தது.  இதுவரை  நமது தேவை போக மீதமுள்ள தாமிரம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

ஆனால் வரும் மாதங்களில் தாமிர ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதே காரணம். நாட்டின் மொத்த தாமிர உற்பத்தியில் 4 லட்சம் டன் திடீரெனக் குறைவதன் விளைவு இது.

மே இறுதி நிலவரப்படி ஒரு கிலோ தூய தாமிரம் ரூ. 455 என்ற விலையில் இருந்தது. ஸ்டெர்லைட் ஆலை முடக்கம் காரணமாக தாமிரத்துக்கு கிராக்கி அதிகரிக்கும் என்பதால் அதன் விலை வரும் நாட்களில் உயரக் கூடும்.

தவிர, இதுவரை சுமார் 2 லட்சம் டன் வரை தாமிரம் ஏற்றுமதி செய்யப்பட்டுவந்த நிலை மாறி,  சுமார் 3 லட்சம் டன் தூய தாமிரம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறது இந்திய தாமிர உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு.

தொழில் துறை பாதிப்பு:

தாமிரத் தாதினை இறக்குமதி செய்து அதை உருக்கி சுத்திகரித்து தூய தாமிரமாக உற்பத்தி செய்வதில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளதுடன், உலக அளவில் முதல் பத்து நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இத்தொழிலைச் சார்ந்து நேரடியாக சுமார் 50 ஆயிரம் பேரும் மறைமுகமாக 10 லட்சம் பேரும் வாழ்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலையில் மட்டும் 3,000 பேர் நேரடி வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர். தவிர, 30,000}க்கு மேற்பட்டோர் மறைமுக வேலைவாய்ப்பு பெற்றனர். இவர்கள் அனைவரும் ஸ்டெர்லைட் முடக்கத்தால் உடனடியாக பாதிப்புக்குள்ளாவர்.

தவிர, தாமிரம் சார்ந்த பிற தொழில் துறைகளிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும். உதாரணமாக, மின்கம்பி, குளிர்சாதனப் பொருள்கள், ரேடியேட்டர் தயாரிப்பில் இதன் தாக்கம் கூடுதலாக இருக்கும்.

ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்துக்கு இதனால் சுமார் 5  சதவீத பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது. இப்போதே அதன் பங்குகள் சந்தையில் வீழ்ச்சி கண்டுவிட்டன.

2020}இல் தனது உற்பத்தித் திறனை 8 லட்சம் டன்னாக உயர்த்தத் திட்டமிட்டு, அதற்காக ரூ. 484 கோடி முதலீட்டில் இரண்டாவது உருக்காலையை தூத்துக்குடியில் அமைக்கும் பணியில் ஸ்டெர்லைட் ஈடுபட்டது. இதுவரை ரூ. 127 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில்தான், சுற்றுச்சூழல் பிரச்னைகளால் மக்களின் எதிர்ப்புக்கு அந்நிறுவனம் ஆளானது.

இத்தகைய சூழலில் பெரும் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் முதலீட்டுக்குத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு தொழில் துறையிலும் அரசு எடுத்தேன்- கவிழ்த்தேன் என்ற ரீதியில் செயல்படக் கூடாது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களின் எதிர்ப்பு அடிப்படைக் காரணமாகக் கூறப்பட்டாலும்,   மக்களுக்கு உண்மை நிலையை விளக்குவதில் அரசு தோல்வி கண்டுவிட்டது என்பதே தொழில் துறையினரின் ஆதங்கமாக உள்ளது.

கவலையும் எதிர்பார்ப்பும்:

பொதுமக்களின் எதிர்ப்பு காரமமாக, இப்போது தமிழக அரசு வேறு வழியின்றி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது. 1996}97 இல் இந்த ஆலையை தூத்துக்குடியில் திறக்க ஏற்பாடு செய்ததும் இதே மாநில அரசுதான்.

அப்போது மாநிலத்தின் வேலை வாய்ப்பு பெருக்கம், தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்பட்டது. இப்போது சுற்றுச்சூழல் பாதிப்பையும் மக்கள் எதிர்ப்பையும் காரணம் காட்டி இந்த ஆலை முடக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு தொழில் வளர்ச்சிக்குப் பின்புலத்திலும் சாதகமான அம்சங்களும் பாதகமான அம்சங்களும் இருக்கவே செய்யும். இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து, எது அதிகமோ அதைக் கருத்தில் கொண்டே, அந்தத் தொழிலை அல்லது ஆலையை ஆதரிப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும்.

அதுவும் பல்லாயிரம் கோடி முதலீடு செய்து, பல்லாயிரம் போருக்கு வேலைவாய்ப்பை அளித்துவரும் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முன் தீர விசாரிக்க வேண்டும். மேற்படி தொழில் நிறுவனத்தின் தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளிப்பதும் அவசியம். அந்த வகையில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையை அணுக, மக்களின் அதிரடிப் போராட்டம் அனுமதிக்கவில்லை.

எனினும், உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டு தங்கள் ஆலையை மீண்டும் திறக்க வாய்ப்பிருப்பதாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் (வேதாந்தா) அதிபர் அனில் அகர்வால் கூறுகிறார். அநேகமாக, இந்த விவகாரத்தில் நீதிமன்றமே இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை முடக்கம் தொழில்துறையிடம் பெரும் அவநம்பிக்கையை விதைத்துள்ளது. இதைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கும், நீதிமன்றங்களுக்கும் உண்டு. தொழில்வளர்ச்சியின் முக்கியத்துவத்தை மக்கள் திரளுக்கு உணர்த்தும் கடமையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளுக்கு உண்டு.

**********

பெட்டிச்செய்தி- 1

சரித்திரத்தை மாற்றிய உலோகம்:

உலக வரலாற்றை ஆய்வு செய்யும் மானுடவியலாளர்கள், கற்காலம், செம்புக் காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் என்று, அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் அடிப்படையில் வரலாற்றைப் பகுக்கின்றனர்.  உலோகப் பயன்பாடே உலக நாகரிக வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளது என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

சுமார் 6,300 ஆண்டுகளுக்கு முன் துவங்கி, 5,000 ஆண்டுகளுக்கு முன் முடிவடைந்த காலமே செம்புக்காலம் என்று குறிக்கப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில்தான் செம்பு உலோகம் பிரித்தெடுக்கப்பட்டு ஆயுதம், கலன்களாகப் பயன்படுத்தப்பட்டது.

கற்காலத்தை அடுத்து நாகரிக வளர்ச்சியின் இடைப்பட்ட காலமாக இக்காலம் குறிக்கப்படுகிறது. இத்தகைய பல்வேறு படிநிலைகளைத் தாண்டிய பிறகே இன்றைய நவீன உலகம் உருவாகியுள்ளது.  இந்தியாவில் உலோகவியல் மிகச் சிறப்பாக மிளிர்ந்ததற்கு அடையாளமாக பழமையான செம்புச் சிலைகளும் வெண்கலச் சிலைகளும் காட்சி அளிக்கின்றன.

நவீன உலகிலும் உலோகங்களின் ஆதிக்கம் தொடர்கிறது. இன்று உலகப் பொருளாதாரத்தை இயக்குபவையாக கனிம வளங்களும் நிலக்கரியும் பெட்ரோலியமும் விளங்குகின்றன. குறிப்பாக, மின்னியல், மின்னணுவியல், பொறியியல் துறைகளில் அடிப்படையான பொருளாக தாமிர உலோகம் (செம்பு) உள்ளது.

***********

பெட்டிச் செய்தி- 2

தாமிர உருக்கு ஆலைகள் விவரம்:

வ.எண். / நிறுவனம்/ இடம்/ உற்பத்தித்திறன்

1 / ஹிந்துஸ்தான் காப்பர் / கேத்ரி (ராஜஸ்தான்), கட்ஷிலா (ஜார்கண்ட்)/ 51,500 டன்
2 / ஹிண்டால்கோ / தாஹேஜ் (குஜராத்) / 5 லட்சம் டன்
3 / ஸ்டெர்லைட் / தூத்துக்குடி (தமிழ்நாடு) / 4.02 லட்சம் டன்
4 / ஜகாடியா காப்பர் / ஜகாடியா (குஜராத்) / 50,000 டன்

-தினமணி (சிறப்பு வர்த்தகம் பக்கம்)- 04.06.2018.

 

One Response to “ஸ்டெர்லைட் ஆலை முடக்கம்: தொழில் துறைக்கு எச்சரிக்கை!”

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: