அலட்சியத்தால் அதிருப்திக்குள்ளாகும் ஆடம்பர ரயில்!

25 Jun

கோவையிலிருந்து பெங்களூருக்கு அதீத எதிர்பார்ப்புகளுடன் அண்மையில் துவங்கிய இரண்டடுக்கு “உதய்’ எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயில் சேவை, அதன் சேவைக் குறைபாடுகள் காரணமாக பல புகார்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

இதுவரை, பெங்களூரு- சென்னை, பாந்ரா- ஜாம்நகர் (குஜராத்), விசாகப்பட்டினம்- விஜயவாடா (ஆந்திரம்) ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்ட உதய் எக்ஸ்பிரஸ் ஜூன் 10ஆம் தேதியிலிருந்து கோவை- பெங்களூரு இடையே இரு மார்க்கத்திலும் தனது சேவையைத் துவக்கியது (ரயில் எண்கள்: 22665, 22666).

இரண்டடுக்கு  ‘உதய்’ எக்ஸ்பிரஸ்:

இதுவரை இந்திய ரயில்வே அறிமுகம் செய்த இந்த உதய் எக்ஸ்பிரஸ் சேவை அந்தந்தப் பகுதிகளில் நல்ல வரவேற்பையே பெற்றுள்ளன. முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன், நவீன வசதிகளுடன் இயக்கப்படும் உதய் எக்ஸ்பிரஸ், மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

மற்ற ரயில்களிலிருந்து உதய் எக்ஸ்பிரஸ் வேறுபடுவது அதன் இரண்டு அடுக்குத் தள வடிவமைப்பாகும். தவிர, இதன் உள்புறம் கலைநயம் மிக்கதாகவும், வண்ணமயமாகவும், வழக்கமான ரயில் பெட்டிகளைப் போலல்லாது சிறப்பாகக் காட்சி அளிக்கிறது.

‘உத்கிரிஸ்ட் டபுள்டெக்கர் ஏர்கண்டிஷன்டு யாத்ரி’ என்பதன் சுருக்கமே உதய் (UDAY) என்பதாகும். இரண்டடுக்கு ஆடம்பர குளிர்சாதன ரயில் பயண சேவை என்பதே இதன் பொருள்.

இதில் 10 பெட்டிகள் இடம்பெற்றுள்ளன. உணவு அருந்தும் வசதியுடன் கூடிய 3 சேர் கார் பெட்டிகளும் (சி1, சி4, சி7- தலா 104 பயணிகள்), அந்த வசதி இல்லாத 5 சேர் கார் பெட்டிகளும் (சி2, சி3, சி5, சி6, சி8- தலா 120 பயணிகள்), இரு பவர் கார் பெட்டிகளும் கொண்டதாக உதய் எக்ஸ்பிரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக 912 பயணிகள் பயணிக்கலாம். முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட, முற்றிலும் குளிரூட்டப்பட்ட ரயில் சேவை என்பது இதன் பிரத்யேக அம்சம்.

திங்கள்கிழமை தவிர்த்த வாரத்தின் ஆறு நாள்களில், இரு நகரங்களிடையே இந்த ரயில் இயக்கப்படுகிறது. 419 கி.மீ. தொலைவை 7 மணி நேரத்தில் கடக்கும் அதிவிரைவு ரயிலாக தெற்கு ரயில்வே இதனை உருவாக்கி உள்ளது. அதற்கேற்றாற்போல கோவை- பெங்களூரு இடையே, திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய 5 நிலையங்களில் மட்டும் இந்த ரயில் நின்று செல்வதாக ரயில்வே அறிவிப்பு கூறுகிறது.

வைஃபை, ஜிபிஎஸ், நவீன உயிரிக் கழிப்பறை, உணவு/ தின்பண்டம் வழங்கும் இயந்திரம், எல்சிடி மூலம் ரயில் வழித்தடம் குறித்த அறிவிப்பு, உணவு விநியோகம் ஆகிய வசதிகள் கொண்டது என்று இந்த ரயில் விளம்பரப்படுத்தப்பட்டது.

மேற்கண்ட வசதிகள் காரணமாகவே, இந்த ரயிலில் கோவை} பெங்களூரு இடையே பயணிக்க அடிப்படைக் கட்டணம்- ரூ. 496, முன்பதிவுக் கட்டணம்- ரூ. 40, அதிவிரைவு ரயில் கட்டணம்- ரூ. 45, ஜிஎஸ்டி- ரூ. 29 சேர்த்து மொத்தக் கட்டணமாக ரூ. 610 வசூலிக்கப்படுகிறது.

காலை 5.45 மணிக்கு கோவையில் கிளம்பும் உதய் எக்ஸ்பிரஸ் மதியம் 12.40 மணியளவில் பெங்களூரை அடைகிறது. பிறகு மறுமார்க்கத்தில் பெங்களூரில் மதியம் 2.15 மணிக்கு கிளம்பும் உதய் எக்ஸ்பிரஸ் இரவு 9 மணியளவில் கோவையை அடைகிறது.

தொழில் நகரான கோவையையும், கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூரையும் இணைப்பதால், இந்த ஆடம்பர ரயில் சேவை, வர்த்தகரீதியான பயணிகளிடம் பெருத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரயில்வே நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் பயணிகளின் அதிருப்தியை சில நாள்களிலேயே உதய் எக்ஸ்பிரஸ் ஈட்டிவிட்டது. அண்மையில் (ஜூன் 17) இந்த ரயிலில் பெங்களூரிலிருந்து கோவை வந்தபோதுதான், ஓர் அற்புதமான பயண அனுபவத்தை எவ்வாறு தனது அலட்சியத்தால் ரயில்வே நிர்வாகம் அவலமானதாக்கி வருகிறது என்பது தெரியவந்தது.

அறிய வந்த குறைபாடுகள்:

1. பெங்களூரிலிருந்து ரயில் கிளம்பிய இரண்டு மணிநேரத்தில் குளிர்சாதன வசதி செயலிழந்து விட்டது. முழுவதும் அடைக்கப்பட்ட பெட்டிகளில் குளிர்சாதன வசதி இயங்காவிட்டால் பயணிகளின் நிலை என்னவாகும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் முறையிட்டும் பயனில்லை. அதிருப்தி அடைந்த பயணிகள் போராட்டத்துக்கு ஆயத்தமானபோது ரயிலின் காப்பாளர் விரைந்து வந்து சமாதானம் பேசினார்.

2. எனது சக பயணி ஒருவருக்கு சி5 பெட்டியில் 111, 112, 113 என்று இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்தப் பெட்டியில் 104க்கு மேல் இருக்கையே இல்லை. இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டபோது ரயில் பெட்டிகள் மாறியதால் இந்தச் சிக்கல் நேரிட்டதாகக் கூறினார். இதனால் சுமார் 30 பயணிகள் இருக்கையின்றி அலைக்கழிக்கப்பட்டனர்.

3. சி4 பெட்டியில் (கோச் எண்: 12894/சி) கழிப்பறைக்கு மேல் தண்ணீர்த்தொட்டியிலிருந்து தண்ணீர் ஒழுகிக்கொண்டே இருந்ததால், அதை பயணிகள் பயன்படுத்த முடியவில்லை.

4. ரயில் பெட்டிகளின் மின்கட்டுப்பாட்டுக் கருவிகளிடையே ஆபத்தான வகையில் மின்கம்பிகளை தற்காலிகமாக இணைத்து சில பெட்டிகளில் குளிரூட்டும் வசதி சரி செய்யப்பட்டது. இதற்காக ரயில் ஊழியர்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தனர்.

5. எந்தப் பெட்டியிலும் எல்சிடி ஸ்கிரீன்களில் அறிவிப்புகள் வெளியாகவில்லை.

6. மூன்று பெட்டிகளில் இருந்த தானியங்கி காபி இயந்திரங்களும் வேலை செய்யவில்லை.

7. ரயில் பெட்டிக்குள் தின்பண்ட விநியோகம் கிடையாது என்ற நிலையில், பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய தின்பண்டங்களும் உணவுப் பொட்டலங்களும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருப்பு வைக்கப்படாததால் 3 மணி நேரத்திலேயே அவை தீர்ந்துவிட்டன. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

8. அதிவிரைவு ரயில் என்று சொல்லப்பட்டாலும் மிதமான வேகத்திலேயே, பல இடங்களில் இடைநிறுத்தம் செய்யப்பட்டு உதய் எக்ஸ்பிரஸ் இயங்கியது. இது அதிவிரைவு ரயில் என்ற கோட்பாட்டையே கேள்விக்குள்ளாக்குகிறது.

9. கர்நாடக மாநிலத்தில் பட்டியலில் இடம்பெறாத சிறு ரயில் நிலையங்களில் கூட நின்று செல்லும் இந்த உதய் எக்ஸ்பிரஸ், தமிழகத்தின் முக்கியமான சந்திப்பான ஜோலார்பேட்டையில் நின்று செல்வதில்லை என்பது பெரும் குறை.

10. கோவை} பெங்களூரு இடையே இரவு நேர ரயில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உதய் எக்ஸ்பிரஸ் பகல்நேரப் பயணமாக அமைந்திருப்பது பிரதானமான குறைபாடாகும். இதன் இருக்கைகள் நல்ல முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து அமர்ந்து வருகையில் சற்று நெருக்கடியாகவே உள்ளன.

11. இருக்கைகளின் பின்புறம் மடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உணவுத்தட்டுக்கான குமிழ்கள் இப்போதே பல இடங்களில் உடைந்துவிட்டன. அந்த அளவுக்கு அவை தரக்குறைவாக அமைக்கப்பட்டுள்ளன.

தீர்வு என்ன?

ஆடம்பர ரயில் சேவையாக அறிவிக்கப்பட்டதால்தான் அதிக கட்டணம் செலுத்தி உதய் எக்ஸ்பிரஸில் செல்ல பயணிகள் விரும்புகின்றனர். ஆனால், ரயில் சேவை துவங்கி ஒரு வார காலத்துக்குள் அதன் சேவைகளில் தரமின்மையும், ஒழுங்கற்ற தன்மையும் காணப்படுவது நல்லதல்ல. இது, புதிய ரயில் அறிமுகம் செய்யப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்து விடும்.

இந்த புதிய ரயிலில், ஏற்கெனவே வேறு பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட பழைய பெட்டிகளே மெருகூட்டிப் பயன்படுத்துவதாக பயணிகள் புகார் கூறுகின்றனர். அதனால்தான் ஒரு வாரத்துக்குள் பல பிரச்னைகளை உதய் எக்ஸ்பிரஸ் சந்தித்துள்ளது என்பது அவர்களது குற்றச்சாட்டு.

இந்த ரயிலில் கேட்டரிங் சேவைகளுக்கு பிரபல தனியார் நிறுவனத்துடன் ஐஆர்சிடிசி ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் அந்த நிறுவனம், குறைவான பயணிகளைக் கருத்தில் கொண்டு ஆர்வமின்றி இயங்குவதாகத் தெரிகிறது. இதை முறைப்படுத்துவது அவசியம்.

சரியான விளம்பரமில்லாததால் உதய் எக்ஸ்பிரஸில் பெட்டிகள் முழுமையாக நிரம்புவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஆரம்ப சுணக்கத்தைப் போக்க கட்டணத்தைக் குறைக்கலாம்.

ஒரு புதிய சேவை துவக்கப்பட்டால் அதைத் தரமாகச் செயல்படுத்த வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் கடமை. இந்த விஷயத்தில் அதிகாரிகள், ஊழியர்களின் அலட்சிய மனோபாவம் தொடருமானால் ரயில்வேயின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுவிடும்.

‘நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ?’ என்ற பாரதியின் பாடல் வரிகளே, உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது நினைவில் வந்தன. இந்தக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டால், பயணிகளின் கனவுப்பயண வாகனமாக உதய் எக்ஸ்பிரஸ் மாற வாய்ப்பிருக்கிறது.

-தினமணி (சிறப்புப் பக்கம்)- 25.06.2018.

2 Responses to “அலட்சியத்தால் அதிருப்திக்குள்ளாகும் ஆடம்பர ரயில்!”

  1. உதய எக்ஸ்பிரஸ் பற்றிய குறை / நிறை பற்றிய கட்டுரை சிறப்பு. நல்ல மீள்பதிவு.

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: