ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

8 Aug

ஒரு மூத்த அரசியல் தலைவர் இறக்கும்போது நெக்குருகுவதும், அஞ்சலி செலுத்துவோர் வரிசையில் இடம்பிடிக்க அலைபாய்வதும் இயல்பானதே. அதுவும் அவர் சார்ந்த திமுக பல்லாண்டு காலம் மாநிலத்தை ஆண்ட கட்சி, வருங்காலத்தில் ஆள வாய்ப்புள்ள கட்சி என்னும்போது, அவருடன் தனது பந்தத்தை வெளிப்படுத்த பலரும் துடிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
.
இன்று உணர்ச்சிகளின் ஊர்வலம் சென்று கொண்டிருக்கும்போது, தெளிவான சிந்தனைக்கோ, அவரே பெயரளவிலேனும் வலியுறுத்திய பகுத்தறிவுக்கோ, அவர் பெரிதும் பிராபல்யப்படுத்திய சுயமரியாதைக்கோ எந்த வேலையும் இல்லை. ஆனால், எனது மானசீக குருநாதர் பாரதி உரைத்த அதே ‘நெஞ்சுக்கு நீதி’யைப் படித்து வளர்ந்த என்னால், பிறருடன் அந்த வரிசையில் நிற்க முடியவில்லை.
அதேசமயம், தமிழ்ச் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவர் என்ற முறையில், திருவாளர் திருக்குவளை முத்துவேல் கருணாநிதி அவர்களின் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திப்பது ஓர் இந்து என்ற முறையில் எனது கடமை.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

எந்த ஒரு மனிதரும் நல்லது, கெட்டது என்ற இரு வினைகளின் இடையே ஊடாடுபவர் தான். அவர் இயற்றிய நன்மைகளுக்கு நன்றி. அவர் செய்த தீமைகளுக்கு நான் நம்பும் இறையோ அல்லது அவர் நம்பிய இயற்கையோ பாடம் கற்பிக்கும். அதில் எனது பங்கு ஏதுமில்லை. இப்போதைக்கு, பண்பாடு கருதி, அவர்தம் குடும்பத்தினருக்கும், கழக சகோதரர்களுக்கும் இரங்கல் தெரிவிப்பது சக மனிதன் என்ற வகையில் எனது கடமை.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
அவர் காலமாவதற்கு முன் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்தபோது, அவரது குடும்பத்தினரும் வீட்டுப் பெண்களும் சூழ்ந்திருந்த காட்சி என்றும் நமது குடும்பங்களில் காணக் கிடைப்பது. அதற்கு அவரது முன்னோர் இயற்றிய தவம் காரணமாக இருக்கலாம். உண்மையிலேயே மிகவும் புண்ணியம் செய்த ஆத்மாக்களுக்கு மட்டும்தான் இத்தகைய சூழல் கிடைக்கும். வாழ்நாளெல்லாம் சாஸ்திர சம்பிரதாயங்களை ஏகடியம் பேசிய அவருக்கு- அவர் நம்பாத இறைவனை அவரது வீட்டுப் பெண்கள் வழிபட்டதாலும் கூட இந்தப் புண்ணியம் கிடைத்திருக்கலாம். அவர்களுக்காக, அவர்களது வீட்டுப் பெரியவரின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவது சக தமிழன் என்ற வகையில் எனது கடமை.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
அவரது அரசியல் கொள்கைகளுடன் நான் முற்றிலும் மாறுபட்டவன். இருப்பினும் அவர் சார்ந்த திமுகவுக்கு இருமுறை சட்டசபைத் தேர்தல்களிலும் இரு முறை நாடாளுமன்றத் தேர்தல்களிலும் நான் வாக்களித்திருக்கிறேன். அது அந்தந்த நேரச் சூழ்நிலைகளை அனுசரித்து எடுத்த முடிவு. அதேசமயம், அவரது தேசிய விரோத, ஹிந்து விரோத, இனத் துவேஷக் கருத்துகளை எதிர்த்து சிந்தித்ததால்தான் நான் வளர்ந்தேன்.
அவரை நான் கடுமையாக விமர்சித்து பலமுறை எழுதி இருக்கிறேன். அவரது நிர்வாகத் திறனையும், கடும் உழைப்பையும், நகைச்சுவை உணர்வையும் பாராட்டி சிலமுறை எழுதி இருக்கிறேன். ஒருவகையில் எனது சிந்தனையின் எதிர்த் துருவம் அவர்.
ஹிந்து மத துவேஷம் மட்டுமே மதச்சார்பின்மை என்ற கண்ணோட்டத்தை உருவாக்கியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. ஹிந்து மத வெறுப்பு மட்டுமே பகுத்தறிவு என்ற அபாய விஷத்தை பரப்பியதிலும் அவரது ஆற்றல் வெகுவாகக் கழிந்தது. அவரது சுய மரியாதையும் தமிழுணர்வும் போலித்தனமானவை என்பதை 2009-இல் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது தமிழக மக்கள் உணர்ந்தனர். அங்கு லட்சக் கணக்கில் சகோதர தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது நமது தமிழர் தலைவர் கோவையில் செம்மொழித் தமிழ் மாநாடு நடாத்திக் கொண்டிருந்தார். பொது வாழ்வில் தூய்மை- தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கம் என்ற கோட்பாட்டுக்கும் அவருக்கும் வெகுதூரம் என்று அவரது கட்சிக்காரர்களே அறிவார்கள். அவரது தமிழ் இலக்கியப் பங்களிப்பு என்பதும் அரசியல் மேலாண்மை காரணமாக அங்கீகரிக்கப்பட்டதே. ஆட்சி அதிகாரம் காரணமாகவே அவரது எழுத்துகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் ஊழலை ஓர் இலக்கணமாக வளர்த்தெடுத்ததில் அவரது பங்களிப்பு முதன்மையானது.
இதையெல்லாம், இந்த நாளில் சொல்ல வேண்டுமா என்று பலர் பூசி மெழுகக் கூடும். அல்லது, கட்சி அரசியல் சார்ந்தவர்களின் எதிர்வினையை அஞ்சி, பலரும் நமக்கென்ன என்று இருக்கக் கூடும். என்னால் அப்படி இருக்க முடியவில்லை.
‘நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்!’ என்று கூறிய சான்றோர் வழி வந்தவர்கள் நாம். நமது எதிர்காலத் தலைமுறைக்கு நாம் சிறிதேனும் நம்பிக்கையை விதைத்துச் செல்ல வேண்டும். செல்லரிக்காத சில வித்துக்களையேனும் நாம் சேமித்துவைத்துச் செல்ல வேண்டும்.
கூட்டத்தோடு கூட்டமாக ஒப்பாரி வைப்பவர்களாலோ, அறிவுவயப்படாமல் உணர்ச்சிவசப்படுவோராலோ உண்மைகளை உரக்கச் சொல்ல முடியாது. தவிர, இங்கு ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கொள்கையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்கள்தான். அதனால்தான் சமசிந்தனையின்றி, கருணாநிதிக்கு புகழ்ச்சியும் இகழ்ச்சியும் ஒருசேரக் கிடைக்கின்றன.
ஆன்மாவுக்கு மரணமில்லை என்பது பாரத நம்பிக்கை. கருணாநிதியின் ஆன்மா தனது பாத்திரத்தில் 94 ஆண்டுகள் மனிதக் காலக் கணக்கில் வாழ்ந்து மறைந்துவிட்டது. அவ்வாழ்க்கையில் அவர் செய்த நன்மை- தீமைகளை எடையிட்டு அதற்கேற்ப அவரை விமர்சிப்பதே தகுதிசார் மதிப்பு. அவ்வாறின்றி, போலித்தனமான கோஷங்களோ, அரசியல் லாபத்துக்காகப் பாடும் புகழ்மொழிகளோ, கடுமையான வெறுப்புடன் உமிழும் சாபங்களோ, நாயக வழிபாட்டுணர்வால் மிதமிஞ்சி வரையும் புராணங்களோ அவரை மதிப்பிட உதவாது. காலம் என்பது கங்கெனச் சுழன்று கீழ் மேலாகும், மேல் கீழாகும். அந்தக் காலம் நிச்சயம் ஒவ்வொருவரையும் மதிப்பிடும். திருவாளர் கருணாநிதியின் இடமும் அப்போது தெளிவாகும்.
எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவரை வாழ்த்திக் கொண்டிருக்கும் இன்றைய நாளில் எனது குரல் அபஸ்வரமாகத் தோன்றலாம். ஆனால் இது காலத்தின் தேவை. அண்ணாதுரைக்கு எதிராக அவரது இரங்கல் கூட்டத்திலேயே கடும் மதிப்பீட்டை முன்வைத்த ஜெயகாந்தன் போன்ற இலக்கியவாதிகள் இன்றில்லை. அந்தக் குறையைப் போக்கவேனும் இதை எழுதித் தீர வேண்டியிருக்கிறது.
அவரை அதிமானுடனாக உருவகிப்பதிலோ, சமூக நீதி காத்த தளகர்த்தராகப் புகழ்வதிலோ, மகத்தான தலைவராக முன்னிறுத்துவதிலோ எனக்கு சற்றும் உடன்பாடில்லை. ஆயினும் எனது சிந்தைக்கு உரமூட்டிய எதிர்த்துருவம் அவர் என்ற நினைவு என்றும் எனக்குண்டு. ஆகவே, அவரது ஆன்மா நற்கதி அடைய நான் பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

3 Responses to “ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!”

 1. Geetha Sambasivam 09/08/2018 at 6:20 AM #

  நல்லதொரு பகிர்வு. மிக்க நன்றி. விருப்பு வெறுப்பின்றி எழுதப்பட்டுள்ளது.

  Like

 2. வேகநரி 11/08/2018 at 7:38 PM #

  //அவரது சுய மரியாதையும் தமிழுணர்வும் போலித்தனமானவை என்பதை 2009-இல் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது தமிழக மக்கள் உணர்ந்தனர். அங்கு லட்சக் கணக்கில் சகோதர தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது நமது தமிழர் தலைவர் கோவையில் செம்மொழித் தமிழ் மாநாடு நடாத்திக் கொண்டிருந்தார்.//
  இலங்கையில் ஈழ விடுதலை புலிகள் என்ற தீவிரவாத அமைப்பு- LTTE இலங்கையை பிரித்து தமிழ்நாடு அமைப்பதற்காக தனது ஆயுத பலத்தில் இலங்கை தமிழர்களை பணயமாக வைத்து யுத்தம் செய்து கொண்டிருந்தது. அந்த அமைப்பு நடத்திய அழிவு யுத்தத்திற்கு கலைஞர் எப்படி பொறுப்பாக முடியும்?
  அவருடைய தமிழுணர்வும் எப்படி போலித்தனமாகும்?
  இஸ்லாமிய நாடு ஒன்றை அமைப்பதற்காக யுத்தம் செய்யும் அமைப்பை ISISசை இஸ்லாமியர்கள் எல்லோரும் ஆதரிக்க வேண்டுமா? (அவர்கள் அப்படி ஆதரிக்கவில்லை)
  ISIS அழிவு யுத்தம் செய்து கொண்டிருப்பதால் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய மகாநாடு ஒன்றை கோவையில் அல்லது சென்னையில் நடத்த கூடாதா?

  Like

Trackbacks/Pingbacks

 1. ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! – TamilBlogs - 08/08/2018

  […] 4 mins ago அரசியல் Leave a comment 1 […]

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: